Henry David Thoreau- A brief introduction

 

ஹென்ரி டேவிட் தோரவ் என்கிற இயற்கையியல்வாதிThoreau-feat

இந்தப் பூவுலகிற்கான பேராபத்துக்கள் அதிகரித்து வரும் இந்நாட்களில்தான் ஹென்ரி டேவிட் தோரவ்_இன் பாதிப்பு அதீத முக்கியத்துவமடைகிறது. சமகால சூழலியல் பற்றிய கருத்தாடல்களுக்கு புத்துயிர்ப்பு தரக்கூடிய முன்னோடியாகத் திகழ்பவர் தோரவ் மட்டுமே. வரலாற்றியல் ரீதியாகப் பார்ப்போமானால் அவரது ஒத்துழையாமை இயக்கக் கருத்துக்கள் மகாத்மா காந்தி மற்றும் அமெரிக்க கருப்பின விடுதலைப் போராட்ட வீரரான மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் போன்ற மகத்தான ஆளுமைகளை கருத்தியல் ரீதியாகப் பாதித்த கட்டுரையை (ஆன் சிவில் டிஸ்ஒபிடீயன்ஸ்) முதன்மைப்படுத்த வேண்டும் என்று கூறுபவர்கள் உண்டு. ஆனால் தோரவ்வின் நீண்டகாலத் தாக்கமாக இருக்கப்போவது அவரது சூழலியல் தீர்க்கதரிசனப் பார்வையே என்பதை இன்று சகலரும் உணரத் தொடங்கியுள்ளனர்.

தோரவ் ஒரு கவிஞர், கட்டுரையாளர், இயற்கையியல்வாதி, பொருந்தா வளர்ச்சியின் விமர்சகர், அடிமை ஒழிப்பு இயக்கத்தின் வலுவான ஆதரவாளர். மேலும் அவர் அமெரிக்க “ட்ரேன்ஸ்டன்ட்டலிஸ்டுகள்’ என்று 19ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இலக்கியக் குழுவில் அங்கத்தினராய் இருந்தவர். அவர்கள் நடத்திய இலக்கிய பத்திரிகையில் (டயல்)  தொடர்ந்து தன் இலக்கிய கருத்துக்களையும் கவிதைகளையும் வெளியிட்டவர். இந்த இயக்கத்தின் குருவான இலக்கியகர்த்தா ரால்ஃப் வால்டோ எமர்சன் (1803-1882) என்ற தத்துவவாதிக்கு சீடராக இருந்தவர். தோரவ் என்ற வாழ்க்கைப் பயணி எழுதிய குறிப்பிடத்தக்க புத்தகமாக இன்று நீடித்து படிக்கப்பட்டு பாதிப்பு செலுத்திக் கொண்டிருப்பது அவரது நூலான “வால்டன்’. இந்த நூலை எழுத அவர் தன்னை  ஒரு பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொண்டார். கன்கார்ட் நகரத்தில் அவரது குரு எமர்சனுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் இருந்த வால்டன் என்ற ஏரிக்கரையில் ஒரு சிறு வீட்டைக் கட்டிக் கொண்டார். இந்த மரவீட்டினைக் கட்டுவதற்கு காட்டுக்குள் சென்றபோது எந்த ஒரு ஆயுதமோ கருவியுமோ இல்லாதுதான் சென்றார். பக்கத்துப் பண்ணைவாசியிடம் ஒரு கோடறியைக் கடன் வாங்கி பழைய மரங்களின் பாகங்களைக் கொண்டு தனக்கான சிறு வீட்டினைக் கட்டிக்கொண்டார். அந்தக் கோடறியைத் திருப்பித் தந்தபோது முன்பிருந்ததை விடக் கூர்மையாக்கித் தந்ததாகக் குறிப்பிடுகிறார். அந்த இருப்பிடத்தில் தனி ஒருவராக அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பதிவு செய்து “வால்டன்’ என்ற நூலை எழுதினார். அவர் அங்கிருந்த நாட்கள் இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்கள் இரண்டு நாட்கள் என்று கச்சிதமாக நாம் கணக்கிட்டாலும் அது ஒரு வருடமாகவே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. அங்கிருந்த காலங்களில் அவர் செய்தது வேலையும் படிப்பும் மட்டுமே.

ஹென்ரி டேவிட் தோரவ் 1817ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அமெரிக்காவின் மாஸாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள கன்கார்ட் நகரில் பிறந்தார். தோரவ் பல சமயங்களில் ஒரு “அராஜகவாதி’ என குறிப்பிடப்படுகிறார். அவரது “சிவில் டிஸ்ஒபீடியன்ஸ்’ கட்டுரை ஒரு அரசாங்கத்தை சிறப்பாக ஆக்குவதற்கான அழைப்பு விடுக்கிறதேயொழிய அழிப்பதற்காக அல்ல. “சிறப்பாக நிர்வாகம் செய்யும் அரசாங்கம் அது இல்லாததற்கு சமமானது” என்ற மேற்கோளை வியாக்கியானப்படுத்தி அவரது கருத்து அராஜகத்தன்மை கொண்டது என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்க முடியும். டால்ஸ்டாய் ஏன் தன் அந்திமக் காலங்களில் அராஜகவாதியாகத் தன்னை அறிவித்துக் கொண்டார் என்பதை நாம் தோரவ்வின் வழியாகவும் புரிந்து கொள்ள முடியும்.

தோரவ் திருமணம் செய்துகொள்ளவில்லை. மது, புகையிலை பயன்படுத்தாதவர். தோரவ் பற்றி எமர்சன் எங்கு குறிப்பிட்டாலும் “துறவி” என்ற சொல்லையே பயன்படுத்தினார். அவர் தனது “தனிமையான சுதந்திரத்தை”ப் பெற நண்பர்கள் மற்றும் குடும்பநபர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டியிருந்தது. தோரவ்வின் படைப்புக்கள் 19ஆம் நூற்றாண்டின் நெருக்கடிகளுக்கு மறுஉயிர்ப்பு கொடுப்பவை அல்ல. மாறாக அடுத்த நூற்றாண்டின் சமூகக்  கொந்தளிப்பையும் அமைதியின்மையையும்  முன்னோக்கியவை.

இயற்கையைக் கூர்மையாகவும் நுண்மையாகவும் அணுகிப் பார்த்தார் தோரவ். இந்த அணுகல் ஒரு ஒரிஜினல் கவிஞனுக்கு மாத்திரமே வாய்க்கும் என்று நதானியல் ஹாத்தான்(1804-1884) என்ற அமெரிக்க நாவலாசிரியர் ஒரு முறை எழுதினார். இயற்கை தன் மீது செலுத்தப்பட்ட வாஞ்சைக்கு இணையாக தோரவ்வைத் தன் விசேஷக் குழந்தையாக ஸ்வீகரித்துக் கொண்டது. சிலருக்கு மாத்திரமே காட்சிதரும் ரகசியங்களை அவருக்குக் காட்டித் தந்தது. அவர் ஒவ்வொரு நாளும் காட்டினூடாய் முடிவற்ற நடைப் பயணங்களைக் மேற்கொண்டார். அவருக்குப் புத்தக ரீதியான தாவரவியலில் ஈடுபாடு கிடையாது. அது போலவே விலங்குகளைப் பற்றிய அவரது பார்வையும் அனுபவங்களும்  கல்வித்துறை துறைசாராதவை. அவரது கல்வியைப் பற்றிச் சொல்வதானால்: அவரது அடிப்படைக் கல்வியைப் போஸ்டனில் பொது லத்தீன் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை ஹார்வர்டு கல்லூரியிலும் கற்றார்.

அளவீடுகளுக்கான இயற்கையான திறன் அவரது கணிதவியல் அறிவிலிருந்து பிறந்தது. வஸ்துக்களுக்கிடையே உள்ள தூரங்களின் அளவுகளைத் தீர்மானிப்பது அவருக்குப் பிடித்தமான பழக்கமாக இருந்ததால் அவரால் மரங்களின் உயரம், நதிகள் மற்றும் ஏரிகளின் விஸ்தீர்ணங்களையும் ஆழங்களையும் எளிதாய் அளவிட்டுக் கூற முடிந்தது. இரண்டு சிகரங்களின் காற்று வெளியிடைத் தூரங்களைக் கூடக் கணக்கிட முடிந்தது.

தனது தேவைகளைக் குறைத்தே பணக்காரராக இருந்தவர் அவர்  என்று சொல்பவர் உண்டு. ஒரு அழகிய வீடு, நேர்த்தியான உடைகள், கலாச்சார அளவில் உயர்மட்டத்து மனிதர்களின் பேச்சுகள் போன்றவை அவரைப் பொருத்தவரை அர்த்தமற்றவை. அவர் எப்போதாவது நீண்ட தூரங்களைக் கடக்க வேண்டிய அவசியம் வந்தால் மாத்திரமே ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தினார். மற்ற நேரங்களில் நூற்றுக்கணக்கான மைல்களை நடந்தே கடப்பார். விடுதிகளில் தங்குவதைத் தவிர்த்து விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வீடுகளில் தங்க இடம் கேட்டுப் பெறுவார். இவ்வாறு அவரால் சிறந்த மனிதர்களைச் சந்திக்க முடிந்தது மட்டுமல்லாமல் தேவையான தகவல்களையும் பெற முடிந்தது. அடக்கிவிட முடியாத, ஏதோ ஒரு ராணுவத்தன்மையான ஆண்மை அவரிடம் நிலைபெற்றிருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாவலான “ரிமம்பரென்ஸ் ஆஃப் திங்ஸ் பாஸ்ட்’ நாவலை எழுதிய பிரெஞ்சு எழுத்தாளரான மார்செல் புரூஸ்(த்)(1871-1922) எமர்சனின் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டவர். “வால்டன்’ நூலைப் பற்றி அறிந்து அதை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருந்தார். இயற்கை மற்றும் தனிமை குறித்த அனுபவப் பதிவுகளைக் கொண்ட காரணத்தினாலும் அந்த நூல் புரூஸ்த்தைப் பாதித்திருக்கக் கூடும். தோரவ் உண்மையைக் கூறும் சிறந்த பிறவிப் பேச்சாளர். டால்ஸ்டாய் மீதும் மிக வலுவான பாதிப்பினை தோரவ்வின் படைப்புகள் ஏற்படுத்தியிருக்கின்றன. அரசாங்கப் பொதுநிதி தவறான காரியங்களுக்காகப் (மெக்ஸிகோவின் மீதான அமெரிக்கப் போர்) பயன்படுத்தப்படுவதை எதிர்த்து அவருக்கு விதிக்கப்பட்ட நகர வரியை செலுத்த மறுத்தார். இதன் காரணமாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை அவரது ஒத்துழையாமை இயக்கத்தின் முதல்கட்ட செயல்படுத்துநிலை என்று சொல்லலாம். அவரது ஆட்சேபணைகளை மீறி நண்பர்கள் அவருக்காக வரியைச் செலுத்தி அவரை விடுதலை செய்தனர். ஒருமுறை பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று ஓரிரு நூல்களை தனக்குப் படிக்கக் கேட்டார். நூலகர் மறுத்தார். பத்து மைல் சுற்றளவில் வசித்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பாதிரிமார்கள் போன்றோருக்கு மாத்திரமே நூல்கள் அளிக்க முடியும் என்பது சட்டம் என்றார் நூலகர். நேராகக் கல்லூரிப் பிரதானத் தலைவரைச் சந்தித்த தோரவ் புதிதாய் அமைக்கப்பட்ட ரயில் பாதையால் தூரம் அர்த்தமற்றுப் போய்விட்டதென்றும் அதன் விதிகளின்படியே கல்லூரியும் பிரதானத் தலைவரும் பயனற்றவர்கள் ஆகிவிட்டனர் என்றும் வாதிட்டார். தனது புத்தகத் தேவை தலையாயது என்றும் அவருக்கு ஏகப்பட்ட நூல்கள் தேவை என்றும் சொன்னவர் மேலும்  நூலகரைவிடத் தானே அப்புத்தகங்களின்  சிறந்த பாதுகாவலன் என்றார். சக்திவாய்ந்த அந்த முறை யீட்டாளரின் முன்னால் குறிப்பிட்ட சட்ட திட்டங்கள் அபத்தமானவையாய் இருப்பதை உணர்ந்த பிரதானத் தலைவர் அதற்குப் பிறகு எத்தனை நூல்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் அனுமதியை தோரவ்வுக்கு அளித்தார்.

அடிமை ஒழிப்புக்காக தன் ஆதரவினை அளவின்றித் தந்த அவர் வரிகளையும் அரசாங்கங்களையும்  ஒழிக்க வேண்டும் என்ற கருத்தியல்வாதியாக இருந்தார். சகலவிதமான சீர்திருத்தவாதிகளையும் வெறுத்தார். ஆனால் அடிமை ஒழிப்புக் கட்சிக்காக மற்றும் அவர் விதிவிலக்களித்தார். அடிமை ஒழிப்புக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த கேப்டன்  ஜான் ப்ரௌன்-உடன் நட்பு பேணினார்.

தோரவ் என்ற மனிதனுள் உடலும் மனமும் அற்புதமான ஒன்றியைபில் இயங்கின. இயற்கையுடனான தோரவ்வின் உறவில் பல காட்சி ரூபமானமானவை, சில தொடு உணர்வு சார்ந்தவை. இன்னும் அரியது அவரது நுகர் உணர்வு. தோரவ்வின் சொந்தக் கணக்குப்படியே அவருக்கு குறைந்தபட்சம் நானூறுக்கும் மேற்பட்ட கன்கார்ட் பிரதேச மலர்களைத் தெரிந்திருந்தது. அதுபோன்றே அவற்றின் வாசனைகளையும். இந்த மலர்கள் மலர்ந்த பிறகல்ல-மாறாக அவை சிறு குருத்துக்களாக இருக்கும்போதே அவருக்குப் பிரித்தரிந்து அடையாளம் காணத் தெரிந்திருந்தது. சில மலர்களின் வாசனைகள் ஒரு துப்பறிவாளனுக்கே சவால் விடக்கூடியவை. “மஞ்சள் வயலட்” மலரைத் தேடி நீரில் இறங்கிய தோரவ்வின் அனுபவத்தை அவருடன்  “சா மில் நீரூற்று’க்கு நடைப்பயணம் மேற்கொண்ட எமர்சன் கவித்துவமாக நினைவு கூர்கிறார். “சில செடிகளிடம் விசேஷ மரியாதையும் தனிப்பட்ட வாஞ்சையும் கொண்டவராய் இருந்தார்(தோரவ்). குறிப்பாக குளத்து அல்லி, ஜென்ஷியன் மலர் மற்றும் “மிக்கானியா ஸ்கேன்டன்ஸ்’ என்ற தாவரம். ஜூலை மாத மத்தியில் மலர் விரிக்கும் “பாஸ்’ மரத்தை ஒவ்வொரு வருடமும் அது இருக்குமிடம் சென்று பார்த்து வருவார்.”

அவரால் ஒரு தோட்டத்தையோ, ஒரு வீட்டையோ, அல்லது ஒரு தானிய சேமிப்புக்கிடங்கையோ திட்டமிட முடியும். அதே சமயத்தில் அவரால் “பசிபிக் சமுத்திர ஆய்வுப் பயணம்’ ஒன்றிற்கான தகுதியான தலைமையையும் எடுத்து நடத்த முடியும். தவிர தனிப்பட்ட அல்லது மிகவும் கவனத்தைக் கோரும் பொதுவாழ்வின் சிக்கல்களுக்கு கூர்மையான அறிவுரை வழங்க இயலும். அவரால் செலவழிக்க முடியக்கூடிய நேரத்திற்கு மிக உயர்ந்த மதிப்பீடு வைத்திருந்தார். ஆனாலும் அந்த நகரிலேயே அதிக ஓய்வு நேரம் கொண்டவராகவும் அவரால் இருக்க முடிந்தது. மரியாதைக்குரிய விருந்துகளுக்கு அவருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் அவர் அவற்றை ஏற்கவில்லை. வியந்து போற்றும் நண்பர்கள் அவரை “யெல்லோ ஸ்டோன் தேசீயப் பூங்கா’வுக்கோ, தென்னமெரிக்காவுக்கோ, மேற்கிந்தியத் தீவுகளுக்கோ தங்கள் சொந்த செலவில் அழைத்துச் செல்லத் தயாராக இருந்தனர். ஆனால் அவரின் இயல்பின்படியே அவற்றை மறுத்துவிட்டார்.அவருடன் கூட நடப்பதென்பது ஒரு விசேஷ சலுகையாகவும் இனிமையான சந்தோஷமாகவும் இருந்ததாக எமர்சன் குறிப்பிட்டார். தோரவ் காட்டையும் நாட்டுப்புறத்தையும் ஒரு பறவை போலவோ அல்லது ஒரு ஓநாய் போலவோ அறிந்திருந்தார். தரையிலும் பனியிலும் படிந்திருக்கும் தாரையை வைத்து அவர்களுக்கு முன் அப்பாதையைப் பயன்படுத்திய விலங்கைப் பற்றி அவரால் கூற முடிந்தது. அவரது வழிகாட்டுதலுக்கு ஒருவர் ஒப்புக் கொடுத்துவிட்டால் அதனால் கிடைக்கும் சன்மானங்கள் அளவற்றவையாக இருக்கும். தாவரங்களை அழுத்திக் காய வைத்துப் பக்குவப்படுத்தும் பொருட்டு அவரது கையிடுக்கில் ஒரு பழைய இசைப்புத்தகத்தை வைத்திருப்பார். குறிப்பெடுக்க ஒரு பென்சில் மற்றும் சிறு நோட்டுப் புத்தகம், தூரத்துப் பறவைகளைப் பார்ப்பதற்கு ஒரு பைனாகுலர், ஒரு நுண்ணோக்கி, சிறிய பேனாக் கத்தி மற்றும் நூல் கண்டு ஆகியவற்றை எப்போதும் வைத்திருப்பார். பல பறவைகளின் குரல்கள் மற்றும் கூவல்களை அடையாளப்படுத்தத் தெரிந்திருந்த அவர் “நைட் வார்ப்ளர்’ என்ற பறவையைத் தேடி 12 வருடங்களைச் செலவழித்ததாகக் கூறினார்.

தோரவ்வின் கவிதைகள், கட்டுரைகள், டயரிக் குறிப்புகள், பத்திரிகைகளுக்காக எழுதியவைகள், எல்லாம் சேர்த்தால் மொத்தம் 20 தொகுதிகளில் அடங்குகின்றன. அவற்றில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது “இயற்கை வரலாறு பற்றிய பதிவுகள்” என்ற நூல். “சூழலியல் வரலாறு’ என்ற தொகுதியுடன் சேர்த்து இன்றைய சூழலியல் இயக்கத்திற்கு இந்த இரு நூல்களும் கிரியா ஊக்கிகளாக அமைந்துள்ளன. மனிதனுக்கு விரோதமான சூழ்நிலைகளில் தாக்குப்பிடித்து வாழ்தல், எளிமையாகவும் சிறப்பாகவும் வாழ்தல், தன்னைத்தான் சார்ந்திருத்தல் போன்ற கருத்தாக்கங்களை அவர் பிரத்யேகமானவையாய்க் கருதினார்.

பறவைகளிலும் மலர்களிலும், மரங்களிலிலும், விதைகளிலும்  அவருக்கிருந்த ஆழ்ந்த ஈடுபாடு அவரது இதய ஆழங்களிலிருந்து கிளம்புகிறது. அதன் சங்கிலித் தொடரான பிணைப்புகள் இயற்கையில் உறைகின்றன. அவரது நுணுக்க அவதானிப்புகளை “நேச்சுரல் ஹிஸ்டரி  சொசைட்டி’க்கு அனுப்ப விரும்பவில்லை. “”நான் ஏன் செய்ய வேண்டும்?” என்று கேட்டவர் அந்த விவரணைகளை தனியாகப் பிரித்ததெழுதுவ தென்பது அவற்றுக்கு அவர் தன் மனதில் வைத்துள்ள முழுமையைச் சிதைப்பதற்கு சமமாகும் என்றார். அவரது அவதானிப்புகள் சாதாரண மனிதர்களுடையதை விட மேலதிகக் கூர் உணர்வு மிக்கவையாய் இருந்தன. அவர் இயற்கையைப் பார்ப்பது ஒரு நுண்ணோக்கி வழியாகப் பார்ப்பதைப் போலிருந்தது. அவரது கேட்டல், காதில் வைத்துக் கேட்கும் “இயர் ட்ரம்பெட்”டைக் கொண்டு கேட்டதைப் போல் தெளிவாய் இருக்கும். அவரது ஞாபகம் ஒரு புகைப்படப்பதிவினை ஒத்திருந்தது- கேட்டதெல்லாம் பார்த்த தெல்லாம் அச்சாகப் பதிவாகிவிடும். இயற்கை வரலாற்றுக்கான அவரது சரளமான விழைவு அவர் உடலுடன் பிறந்தது. தான் ஒரு வேட்டை நாயோ அல்லது சிறுத்தையோ என்று அவருக்குத் தோன்றுவதாக அவர் மனம் திறந்து கூறியுள்ளார். செவ்விந்தியர்களுடன் பிறந்திருந்தால் அவர் ஒரு காட்டுத்தனமான வேட்டைக்காரராக ஆகியிருப்பார் என்றும் மனந்திறப்பு செய்திருக்கிறார். ஓநாய்களை வேட்டைக்காரர் களிடமிருந்து காப்பாற்றினார். பாம்புகள் அன்புடன் அவர் கால்களைச் சுற்றிக் கொள்ளும். அவர் கைக்குழிக்குள் மீன்கள் பயமின்றி நீந்தின. அவருக்கு அத்யந்தமான விலைமதிப்பற்ற தாவரவியல் சதுப்பு நிலங்களுக்கு உங்களை அழைத்துச் செல்வார். தோரவ் என்ற இயற்கையியல்வாதியிடம் எந்த ரகசியங்களும் கிடையாது.

எந்த ஒரு கல்லூரியும் அவருக்கு ஒரு டிப்ளோமாவும் வழங்கவில்லை. அல்லது ஒரு பேராசிரியர் பதவி அளிக்கவில்லை. எந்த ஒரு அகாதெமியும் அவருக்கு ஒரு செயலர் பதவி தரவில்லை. ஆனால் தோரவ் அளவுக்கு இயற்கையின் ரகசியங்களை ஒரே இடத்தில் சேகரித்து வைத்திருந்த எந்த கல்வி நிறுவனமும் அன்று இருந்திருக்க முடியாது என அறுதியிட்டுக் கூறலாம்.

ஒரு தொழில் அல்லது வேலையின் பொருட்டு அவரது பெரும் அறிவுத்தாகத்தை தியாகம் செய்வது அவருக்கு ஒப்புதலாய் இருக்கவில்லை. ஆனால் இக்காரணத்தினால் அவர் சோம்பித் திரிந்தார் என்று எவரும் கூறிவிட முடியாது. அவர் விரும்பினால், அல்லது அவருக்குப் பணம் தேவைப்பட்டால் எப்போதும் உடல் உழைப்பையே தேர்ந்தெடுத்தார்: ஒரு படகினைத் தயாரிப்பது, வேலி கட்டுவது, தோட்டம் போடுவது, ஒட்டுக் கட்டுவது, நில அளவை செய்வது போன்றவை அவருக்கு உவப்பாக இருந்தன. அவரால் உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வாழ்ந்துவிட முடியும். 1862ஆம் ஆண்டு அவரது 44ஆம் வயதில் தோரவ் காலமானார்.

 

 

Advertisements

எஸ்ரா பவுண்ட்_ ஒரு மீள் பார்வை

20ஆம் நூற்றாண்டின் சர்ச்சை மிகுந்த இலக்கியவாதி என்று பெயர் பெற்ற எஸ்ரா பவுண்ட் அமெரிக்க பிரஜையாகப் பிறந்தவர்.(1885_1972) அவருடைய தாக்கம் கவிதையில் தொடங்கி, ஓவியம் (பிக்காஸோ), சிற்பம் (பிரான்குஸி), இசை(ஸ்ட்ராவின்ஸ்கி) என பல்துறைகளை ஊடறுத்துச் செல்கிறது. மூத்த கவிஞர்களான வில்லியம் பட்லர் யேட்ஸ்_லிருந்து இளைய தலைமுறை நாவலாசிரியரான எர்னஸ்ட் ஹெமிங்வே வரையில் பல ஆளுமைகளைப் பாதித்து வழிப்படுத்தியுள்ளார். ஒரு ஐரோப்பிய இலக்கிய இதழுக்கென்று யேட்ஸிடமிருந்து அவர் சேகரித்த கவிதைகளைத் திருத்தி வெளியீட்டுக்கு அனுப்பினார் என்ற குற்றச்சாட்டு இருந்ததும் உண்மை. இருபதாம் நூற்றாண்டின் புரியாத புதிர்கள் நிறைந்த நவீன கவிதையான ட்டி.எஸ்.எலியட்டின் “பாழ்நிலம்’ தட்டச்சுப்பிரதி நிலையிலேயே எலியட்டால் பவுண்டிடம் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான “எடிட்டிங்’ செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டது. இதற்கான நன்றிக் கடனாக எலியட் தன் பாழ்நிலம் காவியத்தின் முதல் பக்கத்தில் அதை பவுண்டுக்கு சமர்ப்பணம் செய்தார்: “”சிறந்த தொழில்பட்பனுக்காக”(Il miglior fabbro) என்ற இதாலிய மொழி வார்த்தைகளில். தவிரவும் எலியட் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் பெற்றார். பவுண்டின் இணைந்த செயல்பாடு இல்லாதிருந்திருந்தால் இமேஜிசம் என்றழைக்கப்பட்ட படிமக்கவிதை இயக்கம் இன்றின் நிலையை அடைந்திருக்காது. பவுண்டைப் பொருத்தவரை அமெரிக்க இலக்கியத்திற்குப் பாரம்பரியம் கிடையாது. கலாச்சாரம் என்னவென்று தெரியாத காட்டுமிராண்டி களுக்கானது அமெரிக்கா. எனவே குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் வாழ்வதை அவர் பிரக்ஞாபூர்வமாகத் தவிர்த்தார். அவருடைய மாணவப் பருவத்தில் கல்லூரியில் அவர் பகைத்துக் கொள்ளாத அல்லது முரண்படாத ஒரு பேராசியரும் இல்லை என்று சொல்லலாம்.

இமேஜிசம் ஆங்கில_அமெரிக்க கவிதை இயக்கமாகத் தொடங்கினாலும் அது இருபதாம் நூற்றாண்டுக் கவிதையை புரட்சிகரமாய் வடிவமைக்கும் உத்வேகமாகமாய் மாறியது, குறிப்பாக, மொழிக் கூர்மையிலும் படிமச் சிக்கனத்திலும். அது ஒரு கவித்துவப் பாணியாக நவீனத்துவ இயக்கத்திற்கு அதன் ஆரம்பக் கட்டங்களில் ஒரு உந்துவிசையை அளித்தது. ரொமாண்டிக் மற்றும் விக்டோரியக் கவிதைப் பாணிகளின் செண்டிமென்டலிசத்தையும் சுற்றிவளைத்துச் சொல்லும் விவரணைத்தன்மையையும் நிராகரித்தது. இது இலக்கிய முன்னணிப்படையின்(அவென் கார்ட்) சமகால வளர்நிலைப் போக்கு களையும் ஸ்வீகரித்துக்கொண்டது_குறிப்பாக க்யூபிசத்திலிருந்து. இமேஜிசம் ட்டி.ஈ.ஹியூம் என்பவரின் இரண்டு கவிதைகளில் ஆரம்பம் கண்டது(1909). ஹியூம் ஒரு கணிதவியல்_தத்துவம் பயின்ற நபர். இவருடன் எஃப்.எஸ்.ஃபிளின்ட் இணைந்தார். பவுண்ட்டுக்கு இவர்களின் அறிமுகம் 1909ஆம் ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்டது. இமேஜிஸ்ட்டுகளை பிரெஞ்சு சிம்பலிஸ்ட் கவிதை இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும் என்று சில பிரெஞ்சு விமர்சகர்கள் கூறியதை பவுண்ட் மறுத்து அவருக்கே உரித்தான வியாக்கியானங்களைத் தந்ததுடன் இமேஜிசத்தை ஜப்பானிய ஹைக்கூவுடனும் பிற சுருக்கமான ஜப்பானியக் கவிதை வடிவங்களுடனும் இணைத்தார். பவுண்டின் “மெட்ரோ ரயில் நிலையத்தில்” என்ற படிமக் கவிதை குறிப்பிடத்தக்க இமேஜிசக் கவிதைக்கான முன்னோடியாகத் திகழ்கிறது. பல சமகால அமெரிக்க ஆங்கிலேயக் கவிஞர்களின் படிமக் கவிதைகளைத் தொகுத்து 1914ஆம் ஆண்டு ஒரு தொகுதியாய் (த இமேஜிஸ்ட்ஸ்) பவுண்ட் வெளியிட்டார்.

பவுண்டின் முயற்சிகள் இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிஸிஸ் நாவல் பற்றி நாம் அறிய முடியாமல் போயிருக்கும். ஜேம்ஸ் ஜாய்ஸையும் ட்டி.எஸ்.எலியட்டையும் “கண்டுபிடித்தது” பவுண்ட்தான் என்று சொல்வது மிகையாகாது. பவுண்ட்டின் முயற்சி இல்லாது போயிருக்குமானால் யூலிஸிஸ் வெறும் கையெழுத்துப்பிரதியாக நின்று போயிருக்கும். மார்கரெட் ஆண்டர்சன் என்ற பெண்மணி “தி லிட்டில் ரெவ்யூ’ என்ற இலக்கிய ஏட்டை அமெரிக்காவில் 1914இல் தொடங்கி 1929ஆம் ஆண்டுவரை நடத்தினார். இதற்கு மார்கரெட் ஆண்டர்சன் எஸ்ரா பவுண்டின் உதவியையும் நாடினார். அமெரிக்க, ஆங்கில, ஐரிஷ் பங்களிப்பாளர்கள் தவிர சர்வதேச அளவிலான படைப்பாளர் களைப் பெற்றுத் தர பவுண்ட் உதவினார். குறிப்பாக நவீனத்துவர்களின் பரிசோதனைப் படைப்புகள் லிட்டில் ரெவ்யூவில் இடம்பெற வைத்தார் பவுண்ட். ஆரம்பகட்ட ஸர்ரிஸலிஸ மற்றும் டாடாயிச படைப்புகள் இந்த ஏட்டில் வெளிவந்தன. பவுண்டின் முயற்சியால் லிட்டில் ரெவ்யூ 1918ஆம் ஆண்டிலிருந்து ஜாய்ஸின் யூலிஸிஸ் நாவலை தொடராக வெளியிட்டது. இந்த வெளியீட்டில் ஏற்பட்ட சட்டச் சிக்கல்கள் உலகப் பிரசித்தமானவை. எலியட்டின் “பூரூஃபிராக்கின் காதல் பாடல்” கவிதையை அவர் இங்கிலாந்தில் இருந்த எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிப் பார்த்து சலித்துப் போன நிலையில், பவுண்ட் அந்தக் கவிதையைப் பெற்று “ஈகோயிஸ்ட்’ என்ற இலக்கிய ஏட்டில் வெளிவரச் செய்தார்.

பவுண்ட் போரினால் மிக ஆழமான வகையில் பாதிக்கப்பட்டார். முதல் உலகப் போர் தொடங்க 2 வருடங்களுக்கு முன்பே காதியர் ப்ரெஸ்கா என்ற நவீன சிற்பியிடம் தன் மார்பளவு சிற்பத்தை செய்து தருமாறு கேட்டிருந்தார் பவுண்ட். அது தொடங்கப்பட்டு முடிக்கப்படாத நிலையில் இன்றும்  உள்ளது. ஆனால் சிற்பி பிரெஸ்க்கா 1915ஆம் ஆண்டு போரின் பதுங்கு குழியிலேயே மரணமடைந்தது பவுண்டை வெகுவாகப் பாதித்தது. பவுண்டுக்கு நவீன மேற்கத்திய நாகரீகத்தின் மேலிருந்த நம்பிக்கையை சிதறடித்தது. போரை வெறுத்த பவுண்டுக்கு சிறிது சிறிதாய் பாசிச ஈர்ப்பு ஏற்பட்டது. வோர்ட்டிசிச ஓவிய இயக்கம் முடிவுக்கு வந்தவுடன் அவர் தன் கவிதை ஆற்றலின் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார். ஆனால் பின்னணியில் இந்த நூற்றாண்டின் மகத்தான கவிதைப் படைப்பாக இருக்கப் போகிற கேண்ட்டோஸ்_கள் அப்பொழுதைக்கப் பொழுது எழுதப்பட்டு வந்தன. சில கேண்டோக்கள் “பொயட்ரி’ இதழில் வெளியாயின.

எனினும் இந்த மனத்தளர்ச்சியிலிருந்து விடுபட்டு 1921லிருந்து 1924ஆம் ஆண்டு வரை பவுண்ட் பாரிஸ் நகரில் வாழ்ந்தார். இப்போது அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் மார்செல் ட்யூஷேம், ட்ரிஸ்ட்டின் ஸாரா, பெர்னான்ட் லெஜர், எர்னஸ்ட் ஹெமிங்வே மற்றும் பிற ஸர்ரியலிஸ ஆளுமைகள். ஹெமிங்வேவுக்கும் பவுண்ட்டுக்கும் 20வயது வித்தியாசம் இருந்த போதிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மதிப்பும் அன்பும் வைத்திருந்தனர். தன்னுடைய கதைகளையும் திருத்தித் தர வேண்டும் என்று ஹெமிங்கே பவுண்டிடம் வேண்டினார்.

பவுண்டுக்கு ஒரு அற்புதமான இசை மனம் இருந்தது பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. மேலும் ஓல்கா ரட்ஜ் என்ற பெண் வயலின் கலைஞருடன் நீண்ட காலக் காதல் கொண்டிருந்தார். பவுண்ட் இரண்டு ஓபராக்களையும் தனிவயலினுக்கான சாகித்யங்கள் இரண்டையும் எழுதினார்(இதில் ஒன்று பிரெஞ்சுக் கவிஞர் பிரான்ஸ்வா விலோன் பற்றியது). இவை ஓல்கா ரட்ஜினால் வாசிக்கப்பட்டன.

பாரிஸில் வாழ்வதில் சந்தோஷமாக இல்லாத உணர்வு நிலை ஏற்பட்டவுடன் இதாலியில் அதிக இடைஞ்சல் இல்லாத ஒரு இடத்தில் வாழத் தீர்மானித்து ரேபல்லாவுக்குச் சென்றார். முதல் உலகப் போருக்கான அடிப்படைக் காரணம் வட்டி அடிப்படையில் நிதிப்பரிமாற்றம் நடப்பதே காரணம் என்று நம்பத் தலைப்பட்டார் பவுண்ட். ஹெச்.சி.டக்ளஸ் என்பவரின் “சமுதாயக் கடன்’ என்ற கருத்தாக்கத்தினால் பவுண்ட் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். அவரைச் சந்தித்து நிறைய விவாதிக்கவும் செய்தார். இதன் தொடர்ச்சியாக பொருளாதராரம் தொடர்பாக நிறைய உரைகளை நிகழ்த்தினார். இறுதியாக முஸோலினியைச் சந்திப்பதென முடிவு செய்தார். இது குறித்த சாதக பாதகங்களைப் பற்றி வேண்டிய அளவு ஹெமிங்வே எச்சரித்திருந்தாலும் ஜனவரி மாதம் 30ஆம் தேதி 1933ஆம் ஆண்டு பெனிட்டோ முஸோலினியைச் சந்திக்கவே செய்தார். ஆனால் முஸோலினி பவுண்டின் பொருளாதாரக் கருத்தாக்கங்களைப் பொருட் படுத்தவே இல்லை.

1939ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்பதைத் தடுக்க முயற்சி மேற்கொண்டார். வாஷிங்டன் டி.சி.க்கு சென்று பல செனட்டர்களைச் சந்தித்துப் பேசியும் எந்தப் பலனும் இருக்கவில்லை. பவுண்டைத் தெரிந்தவர்கள் அவர் முழுப்பிரக்ஞையுடனும் உலக அமைதிக்கான பொறுப்புடன்தான் நடந்து கொண்டார் என்றும் அதற்குக் காரணம் “மெகலோமேனியா” இல்லை என்று கூறியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். 1940களில் வேறு எந்த ஒரு அமெரிக்க அல்லது ஆங்கிலேயக் கவிஞனை விடவும் மிகவும் பரபரப்பான செயல்பாட்டாளராய் பவுண்ட் இருந்திருக்கிறார். 1930களில் தொடங்கி அவர் ஆயிரக்கணக்கான கடிதங்களையும் அவரது தலைசிறந்த படைப்பான கேண்ட்டோக்களையும் எழுதிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் அவரது யூத எதிர்ப்பு பட்டவர்த்தனமாய் வெளிப்பட ஆரம்பித்தது. அமெரிக்கா வையும் அப்போதிருந்த அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்ட்டையும் கண்டனம் செய்து இதாலிய ரேடியோவில் 100க்கும் அதிகமான ஒலிபரப்புகளைச் செய்தார். இந்த ஒலிபரப்புகள் அமெரிக்க அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் ரோம் நகர் சென்று பவுண்ட் அளித்த உரை ஒவ்வொன்றுக்கும் அவருக்கு 17 டாலர்கள் வழங்கப்பட்டதாய்த் தெரிகிறது. போர் முடிந்து இதாலி சரணடைந்த போது பவுண்ட் ரோம் நகரில் இருந்தார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தினர் பவுண்டைக் கைது செய்தனர். பிசா நகரில் அவர் 6க்கு6 அடி எஃகினால் அமைந்த “மரண கூண்டில்” அடைக்கப்பட்டார். 3 வாரங்கள் தனிமையிலும் கடுமையான வெப்பத்திலும் வைக்கப்பட்டு வெறும் சிமெண்ட் தரையில் உறங்க வைக்கப்பட்டார். உடற்பயிற்சி, வெளியுலக செய்தித் தொடர்பு ஆகியவை மறுக்கப்பட்டன. மனம் சிதைந்த நிலையில்தான் அவரது வதைப்பு நின்றது. மனோவியல் வல்லுநர்கள் அவரைப் பரிசோதித்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சான்றளித்து பிறகு அமெரிக்காவின் புனித எலிஸபெத் மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ மனையின் உள்ளேயும் ஒரு கைதியாகவே நடத்தப்பட்டார்.

இதற்கிடையில் இலக்கிய நண்பர்கள் அவரை விடுதலை செய்ய பெரும் யத்தனங்கள் செய்தனர். 1954இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஹெமிங்வே “கவிஞர்களை விடுதலை செய்ய இது ஒரு நல்ல ஆண்டாக இருக்கும்” என்றார். கவிஞர் ஆர்க்கிபால்ட் மேக்லீஷ், பவுண்ட் சார்பாக ஒரு கடிதத்தை எழுதி வெளியிட்டார். 1957ஆம் ஆண்டு பல பத்திரிகைகள் மற்றும் வெளியீடுகள் பவுண்ட் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்தத் தொடங்கியதால் 1958ஆம் ஆண்டு இறுதியாக முடிவற்ற விசாரணைகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளியேறி பிறகு நேப்பிள்ஸ் நகரில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பவுண்ட் கூறினார்: “”நான் மருத்துவ மனையை விட்டு வெளியே வந்த பின்னும் அமெரிக்காவிலேதான் இருந்தேன். காரணம் முழு அமெரிக்காவுமே ஒரு மனநோய் விடுதிதான்.” பவுண்ட் 1972ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார். அவர் இறக்கு முன் எமர்சன்_தோரோ விருது அவருக்கு வழங்கப்பட இருந்து பெரும் ஆட்சேபணைகளுக்கும் கருத்து முரண்பாடுகளுக்குமிடையில் கைவிடப்பட்டது.

Ezra Pound-A Retrospect

Recent Posts

Ezra Pound-A Retrospect

எஸ்ரா பவுண்ட்_ ஒரு மீள் பார்வை   20ஆம் நூற்றாண்டின் சர்ச்சை மிகுந்த இலக்கியவாதி என்று பெயர் பெற்ற எஸ்ரா பவுண்ட் அமெரிக்க பிரஜையாகப் பிறந்தவர்.(1885_1972) அவருடைய தாக்கம் கவிதையில் தொடங்கி, ஓவியம் (பிக்காஸோ), சிற்பம் (பிரான்குஸி), இசை(ஸ்ட்ராவின்ஸ்கி) என பல்துறைகளை ஊடறுத்துச் செல்கிறது. மூத்த கவிஞர்களான வில்லியம் பட்லர் யேட்ஸ்_லிருந்து இளைய தலைமுறை நாவலாசிரியரான எர்னஸ்ட் ஹெமிங்வே வரையில் பல ஆளுமைகளைப் பாதித்து வழிப்படுத்தியுள்ளார். ஒரு ஐரோப்பிய இலக்கிய இதழுக்கென்று யேட்ஸிடமிருந்து அவர் சேகரித்த கவிதைகளைத் … Continue reading Ezra Pound-A Retrospect

Michael Ondaatje’s Ceylon viewed through his “Running in the Family”

மைக்கேல் ஓன்யாட்டேவின் சிலோன்   தேசவரைபடங்களில் ஒரு கண்ணீர்த்துளியின் வடிவத்தில் வரைகோட்டுருவம் கொண்ட சிலோன் எல்லா ஐரோப்பிய நாடுகளையும் கவர்ந்திழுக்கக்கூடியதாய் இருந்திருக்கிறது. காரணம் அதன் வாசனைத் திரவியங்கள். போர்த்துகீசியர் களும் டச்சுக்கார்களும் ஆங்கிலேயேர்களும் தொடர்ந்து இந்தத் தீவின் கரையில் இறங்கியவுடன் தமது வாளின் அல்லது வேதாகமத்தின் அல்லது மொழியின் சக்தியைக் கொண்டு தீவில் உள்ள சகலமும் தம்முடையதென அறிவித்தனர். இத்தீவின் பெயர் எத்தனை விதமாய் மாறியிருக்கிறது: செரண்டிப், ரத்னபீடம், டேப்ரோபேன்,ஸெலோன், ஸெய்லன், ஸெய்லான் மற்றும் சிலோன். (இறுதியில் … Continue reading Michael Ondaatje’s Ceylon viewed through his “Running in the Family”

Henry David Thoreau-A brief introduction

ஹென்ரி டேவிட் தோரவ் என்கிற இயற்கையியல்வாதி இந்தப் பூவுலகிற்கான பேராபத்துக்கள் அதிகரித்து வரும் இந்நாட்களில்தான் ஹென்ரி டேவிட் தோரவ்_இன் பாதிப்பு அதீத முக்கியத்துவமடைகிறது. சமகால சூழலியல் பற்றிய கருத்தாடல்களுக்கு புத்துயிர்ப்பு தரக்கூடிய முன்னோடியாகத் திகழ்பவர் தோரவ் மட்டுமே. வரலாற்றியல் ரீதியாகப் பார்ப்போமானால் அவரது ஒத்துழையாமை இயக்கக் கருத்துக்கள் மகாத்மா காந்தி மற்றும் அமெரிக்க கருப்பின விடுதலைப் போராட்ட வீரரான மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் போன்ற மகத்தான ஆளுமைகளை கருத்தியல் ரீதியாகப் பாதித்த கட்டுரையை (ஆன் சிவில் … Continue reading Henry David Thoreau-A brief introduction

Poems of Pazhanivel in English_Translated by Brammarajan

  POEMS OF PAZHANIVEL IN ENGLISH_Translated by Brammarajan All the poems of Pazhanivel has been chosen from his first and only collection called Thavalai Veedu. The body woven by hands-Pazhanivel   Till the fishermen prepare to go The fish turn into stars on the catamarans. The catamarans resemble the lute that strums the night. Its varying … Continue reading Poems of Pazhanivel in English_Translated by Brammarajan

More Posts