Osip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்

NKVD_Mandelstam
Osip Mandelstam_photo after the second arrest

ஓசிப் மெண்டல்ஷ்டாம்–(1891-1938) சமகாலத்தவர்கள் இல்லாத கவிஞன்

 

“No, I was no one’s contemporary–ever.

That would have been above my station.”

-Osip Mandelstam

 

நவீன ரஷ்யக் கவிதை என்றவுடன் சிலருக்கு அலெக்ஸாண்டர் ப்ளாக்கும் ஏனையோருக்கு நோபல் பரிசு பெற்ற ஜோசப் பிராட்ஸ்கியும் நினைவுக்கு வரலாம். புஷ்கினுக்குப் பிறகு தோன்றிய கவிஞர்களிலேயே மகத்தானவர் ப்ளாக் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கூர்ந்த இலக்கிய வரலாறு அறிந்தவர்களுக்கு இருபதாம் நூற்றாண்டு ரஷ்யக் கவிதையில் முதலில் நினைவுக்கு வரவேண்டியது ஓசிப் மெண்டல்ஷ்டாமின் பெயர். மெண்டல்ஷ்டாமை சரியான வகையில் இன்னும் தமிழில் எவரும் அறிமுகம் செய்யவில்லை. மெண்டல்ஷ்டாமின் கவிதைகள் மொழிபெயர்க்கச் சிரமம் தரக்கூடியவை என்பதும் கூட இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். மிக முக்கியமான காரணங்களாகத் தோன்றுபவை மெண்டல்ஷ்டாமின் கம்யூனிச எதிர்ப்பும் அவருடைய கவிதைகளின் கடினத்தன்மையும். குறிப்பாக ஸ்டாலினை விமர்சித்து அவர் எழுதிய ஒரு கவிதை அவர் தலை எழுத்தையே மாற்றியது. பிராட்ஸ்கியும் கம்யூனிச எதிர்ப்பாளராக உருவானவர்தான் என்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசின் மூலம் அவரது கம்யூனிச எதிர்ப்பு குறைபாடாகப் பார்க்கப்படவில்லை.  நல்ல வேளை இந்தக் கட்டுரை  சோவியத் ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசம் தோற்ற பிறகு எழுதப்படுகிறது. கவிஞர்கள் என்றுமே தீர்க்தரிசிகள்தான் என்பதை ஓசிப் மெண்டல்ஷ்டாமின் கவிதைகளும்  அவர் வாழ்ந்த வாழ்க்கையும் நிறுவுகின்றன. மெண்டல்ஷ்டாமின் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரார்ந்த சம்பவங்களே அவருடைய கவிதைகளைப் படிக்கத் தூண்டுகின்றன என்ற கருத்து கொண்டிருக்கிற ஒரு சாரார் இருக்கின்றனர். வாழும் சொல்லுக்குத்  (the living word)) தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கவிஞர்களில் மிகப் பிரதானமானவர் மெண்டல்ஷ்டாம். இதுவன்றி சிம்பாலிசத்திற்கு எதிராகத் தோன்றிய அக்மேயிசம் (Acmeism) என்ற கவிதை இயக்கத்தின் விசேஷமான கவிஞராகவும் கோட்பாட்டாளராகவும் இருந்திருக்கிறார். Acmeism   த்தின் பிதாமகராகக் கருதப்பட்ட Nikolai Gumilev வும் அவரது ஒரு காலத்திய மனைவியும் நவீன  ரஷ்யப் பெண் கவிஞர்களில் ஒருவருமான அன்னா அக்மதோவாவும், மெண்டல்ஷ்டாமும்தான் அக்மேயிசத்தை வளர்த்தவர்கள். முதல் உலகப் போரின் போது ராணுவத்தில் சேர்ந்து விட்ட குமிலேவுக்குப் பிறகு அதை முன்னெடுத்துச் செல்ல மெண்டல்ஷ்டாமால்தான் முடிந்தது.  தொடக்க காலத்தில் மெண்டல்ஷ்டாம் எழுதிய கவிதைகள் சிம்பாலிஸ்டுகளில் ஒருவரான மல்லார்மேவை (Mallarme)ஞாபகப்படுத்தின.  துல்லியமான தெளிவுபடுத்தல்கள் செய்ய வேண்டுமானால் ஆங்கில-அமெரிக்க இமேஜிசத்தை அக்மேயிசத்துடன் ஒப்பிட்டுச் சொல்லலாம். எஸ்ரா பவுண்ட் இமேஜிஸ்டுகளுக்கு சில கூடாதுகள்  என்ற பட்டியலை உருவாக்கினார். பவுண்ட் உருவாக்கிய அத்தனை சட்டதிட்டங்களும் அக்மேயிஸ்டுகளுக்கும் பொருந்திப் போகக் கூடியவையே. இருப்பினும் இமேஜிசத்திலிருந்து பிறந்ததல்ல அக்மேயிசம் என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

வாழும் சொல்லுக்குத் தன்னை அர்ப்பணம் செய்து கொண்ட மெண்டல்ஷ்டாம் தனது கடைசிகட்ட கவிதைகளை பள்ளிப் பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களிலும் அவரது மனைவியின் ஞாபகத்திலும் எழுதி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மெண்டல்ஷ்டாமின் மனைவி நாடெஷ்டா மெண்டல்ஷ்டாம் எழுதிய இரு தொகுதி வாழ்க்கைச் சரிதமான Hope Against Hope(1970)  Hope Abandoned ( 1974 ) நூலில் இருந்து நமக்குக் கிடைக்கும் மெண்டல்ஷ்டாம் பற்றிய சித்திரம் மனசாட்சி உள்ள சகல ஸ்டாலிஸ்டுகளையும் தலை குனியச் செய்து விடும். இதையும் கூட நாடெஷ்டா அவருடைய ஞாபகத்திலேயே பொதிந்து வைத்திருந்து ஸ்டாலினின் இறப்புக்குப் பிறகு எழுதி, கையெழுத்துப் பிரதிகளாக கார்பன் தாளில் எழுதி வெளியிட்டார். கூட்டன்பர்க்கின் காலத்திற்குப் பிறகும் கூட இந்த விதமாக ஒரு புத்தகத்தின் பிரதி விநியோகிக்கப்படும் முறைக்கு samizdat   என்று பெயர். இலக்கியத்தின் மீதான தணிக்கை சோவியத் யூனியனில் மிகக் கடுமையாக இருந்த காலகட்டத்தில் ஒரு இலக்கியப் பிரதி சோவியத் யூனியனுக்குள்ளாகவும் பிற நாடுகளிலும் சுற்றுக்கு வருவதற்கு samizdat  முறைதான் ஏதுவாக இருந்தது. மேலும் அன்றைய கம்யூனிச ரஷ்யாவில் எழுத்தாளர்கள் எல்லோரும் சோஷலிச யதார்த்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பொழுது ஒரு தனிக் கவிஞன் எப்படி அக்மேயிசத்தைக் கடைபிடித்துத் தப்பிக்க முடியும்?

வார்சாவில் ஒரு யூதத் தோல் வியாபாரியின் மகனாகப் பிறந்தார் மெண்டல்ஷ்டாம். மெண்டல்ஷ்டாமின் தாயாரின் இசைக்கான கூர்ந்த விருப்பம் மெண்டல்ஸ்டாமுக்கும் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும். புனித பீட்டர்ஸ்பர்க் என்றழைக்கப்பட்ட பெட்ரோகிராடில் (பிறகு லெனின்கிராடாக மாறியது) மிகவும் பெயர் பெற்ற டேனிஷேவ் பள்ளியில் பேரிலக்கியப் படிப்பை மேற்கொண்டார் மெண்டல்ஷ்டாம். பொதுவாக யூதர்களுக்கு எளிதில் கிடைத்து விடாத சலுகையாக பார்க்கப்பட வேண்டும் அது. 1907ஆம் ஆண்டு பாரிசுக்குச் சென்ற போது பிரெஞ்சு சிம்பாலிசக் கவிஞர்களின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். பிறகு 1911இல் புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் ரோமானிய–ஜெர்மானிய தத்துவங்கள் பயின்றார். 1913ஆம் ஆண்டு வெளியான Stoneஎன்ற தொகுதியின் மூலம் பீட்டர்ஸ்பர்க் இலக்கிய வட்டாரங்களில் பிரபலமானார்.

Stone தொகுதி ஒரு வித விநோத பாதிப்பையும் எதிர்வினைகளையும் அன்றைய ரஷ்ய இலக்கிய வட்டங்களில் ஏற்படுத்தியது. அன்று ரஷ்யாவில் ஆட்சி செலுத்திய ரஷ்ய சிம்பாலிசத்திற்கு மத்தியில் மெண்டல்ஷ்டாம் திடீரென்று எங்கிருந்து வந்து முளைத்தார் என்கிற மாதிரியான, அவர் பற்றிய ஒரு மர்மமான உணர்வுப் பதிவினை உண்டாக்கியது. அப்போது ரஷ்ய சிம்பாலிசத்தின் மிகத் தீவிர பயன்பாட்டாளராக இருந்தவர் அலெக்ஸாண்டர் ப்ளாக். இருபதாம் நூற்றாண்டு ரஷ்யக் கவிதையின் மிகச்சிறந்த கவிஞர் என்ற இடத்தைப் பிடிப்பதற்கான சரிசமமான தகுதிகள் கொண்டிருந்த இன்னொரு கவிஞர் அவர். மெண்டல்ஷ்டாமின் தொடக்க காலத்தில் முக்கிய கவிதை இயக்கமாக இருந்த சிம்பாலிசம் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கம் என்ற அளவிலான அதன் செயல்பாட்டுக் காலம் அப்போது முடிந்து போயிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யக் கவிதைக்குப் பிறகு, ஒரு உடனடி பயிற்சிக் களமாக பல கவிஞர்களுக்கு சிம்பாலிசம் இருந்ததை மறுக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் சிம்பாலிசத்தின் கவித்துவ உணர்வுகள் மற்றும் உத்திகள் பற்றிய சீர்திருத்தக் குணம் சிதைவுற்றது. மாயகோவ்ஸ்கி(1894-1930) மற்றும் க்ளெப்னிகோவ் (Velimir Khlebnikov (1885-1922 )ஆகியோர் ஃபியூச்சரிஸ்டுகளாக மாறினார்கள். ஃபியூச்சரிசம் 1909ஆம் ஆண்டு இதாலியில் F.T.Marinetti என்ற கவிஞரால்  தொடங்கப்பட்டது. ஃபியூச்சரிச இயக்கத்தில்  நிறைய ஓவியர்களும் கட்டிடக் கலைஞர்களும் முனைப்பான பங்கேற்றுக் கொண்டனர். 1910 ஆம் ஆண்டு தொடங்கி ஓவியத்திற்கென்றும், சிற்பத்திற்கென்றும், இசைக்கென்றும், பிறகு சினிமாவுக்கும், புகைப்படத்திற்கும், கட்டிடக் கலைக்கும் என தனித்தனிப் பிரகடனங்களை வெளியிட்டனர்.  ஃபியூச்சரிசம் சிறிது சிறிதாகப் பரவி ரஷ்யாவுக்கும் வந்து சேர்ந்தது. அதன் பெயரில் தொனிக்கிற அர்த்தப்படி அது பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்வின் எல்லாவித அம்சங்களுக்கும் எதிராகக் கிளம்பிய கலகம். இன்னும் கொஞ்சம் தயங்கித் தயங்கித் தலைகாட்டிய ரொமாண்டிசிசத்தின் செண்ட்டிமென்டலிசத்திற்கும், சிம்பாலிஸ்டுகளின் சிக்கல்மயமான மனோவியலுக்கும் கடுமையான கண்டனத்தையும் மறுப்பினையும் தெரிவித்தது. ரஷ்யாவில் ஃபியூச்சரிசம் சிறிது காலமே ஆட்சி செலுத்தியதிற்குக் காரணம் அது பிற இலக்கிய இயக்கங்களுடன் இணைந்து போய்விட்டதுதான்Ego Futurism  என்றும் Cubo Futurism  என்றும் மாறுதலடைந்து அதன் முனைப்பை இழந்தது.

இலக்கிய இயக்கங்களும் செயல்பாடுகளும்  பல முனைகளிலும் திசைகளிலும் மாறுதலடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில்தான் நிக்கலொவ் குமிலியேவ் அக்மேயிசம் என்னும் கவிதை இயக்கத் திட்டத்தை முன் வைத்தார். ஆனால் அக்மேயிசம் என்ற பேனரில் ஒன்று சேர்ந்த ஒவ்வொரு கவிஞனும்(கவிஞையும்?) ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டிருந்தான்.  சிம்பாலிஸ்டுகளைப் போல கவிதையில் பிற உலகங்களுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று பிரகடனம் செய்தனர் அக்மேயிஸ்டுகள். ஒரு வித பொதுப் புத்தி சார்ந்த தர்க்கவியல் அம்சங்களை குமிலேவ் அக்மேயிசக் கவிதைக்கு முன் வைத்தார். குமிலேவின் மரணத்திற்குப் பிறகுதான் மெண்டல்ஷ்டாம் அக்மேயிசத்தை வளர்த்தெடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார் என்று சொல்வது சரியாக இருக்க முடியாது. 1910ஆம் ஆண்டு பிரெஞ்சு கவிஞர் ஃபிரான்சுவா விலோன்(1431-1463) பற்றி எழுதிய கட்டுரையிலேயே மெண்டல்ஷ்டாம் அக்மேயிசக் கவிதைக் கோட்பாடுகளுக்கான ஒரு வரையறையைக் கொடுத்து விட்டார் என்று சொல்லலாம். அக்மேயிசத்தின் நான்கு மூதாதையர்களில் ஒருவர் என்று குமிலேவ் ஃபிரான்ஸ்வா விலோனைக் குறிப்பிட்டது மட்டுமன்றி விலோனின்  Grand Testamentலிருந்து சில பகுதிகளை ரஷ்ய மொழியில் மொழி பெயர்ப்பு செய்திருந்தார். யாரோ ஒரு விஷமி, கிண்டல் செய்யும் நோக்கத்துடன் அக்மேயிசம் பற்றிய வரையறையைக் கேட்ட பொழுது மெண்டல்ஷ்டாம் இப்படி ஒரு சலிப்பான, களைப்பான பதிலைத் தந்ததாக அன்னா அக்மதோவா தெரிவிக்கிறார். மெண்டல்ஷ்டாமின் அக்மேயிசம் பற்றிய வரையறை. “a home-sickness for world culture.”

அக்மேயிசத்தின் தட்டையான கவிதைக் கோட்பாடுகளுக்கு கூடுதல் பரிமாணங்களைக் கொடுத்தார் மெண்டஷ்டாம். அவர் சுயம் கலவாத கவிஞன் மட்டுமன்றி வார்த்தைக்கு அதனளவிலான மரியாதையை அளித்தவரும் கூட. மறைமுகக் குறிப்பீடுகள் நிறைந்தவையாக இருக்கின்றன அவர் கவிதைகள். ஸ்தூலமானவையாகவும் பிற பொருள்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் தன்மை வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. கச்சிதத்தன்மையையும் தெளிவையும் வேண்டி ஏற்கனவே இமேஜிஸ்டுகள் கவிதைப் பிரகடனம் செய்திருக்கின்றனர். அக்மேயிஸ்டுகள் “சொல்” ஒரு குறியீடாக்கப்படுவதை விரும்பவில்லை. “ஒரு சொல் அது இருக்கிறபடியே, அதன் வாழ்நிலையிலேயே அப்படியே” பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவரது கவிதைக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்தி அவரது கட்டுரையான The Morning of Acmeism த்தில்  எழுதினார் மெண்டல்ஷ்டாம். வார்த்தைகளே வஸ்துக்கள் என்று கோரியதில் குமிலேவ் சொன்னதிலிருந்து ஒரு படி மேலே சென்று விட்டார் என்று சொல்லாம். வார்த்தைகள் தமக்குள்ளாகவே வாழ்கின்றன, அவைகளுக்காகவே பேசுகின்றன என்று வாதிட்டது மட்டுமின்றி தன் கவிதைகளில் அப்படியே சித்தரிக்கவும் செய்தார். ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு கவிதையாகப் பார்க்க முடியும் என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க கவிஞரான எமர்சன் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.  கருத்தாக்கத்திற்கு கீழ்ப்படிந்ததாக சொல்லை ஆக்க விரும்பவில்லை மெண்டல்ஷ்டாம். “வார்த்தை–வஸ்து” என்பதின் ஒரு விதமான நடனமாக ஆகின்றன அவரது கவிதைகள். எனவே, ஆகவே, மற்றும் பிறகு, நாம் இதற்கு அப்பால், ஆனால், பிறகென்ன போன்ற சொற்களை நாம் சகஜமாக அவருடைய கவிதைகளில் பார்க்க முடியும்.

“ஆசீர்வாதம் மிகுந்த அர்த்தம் எதுவுமில்லாத வார்த்தைகள்”

என்ற வரியை 118வது கவிதையில் பார்க்கலாம். எனவே மெண்டல்ஷ்டாமின் கவிதைகளில் வார்த்தைகள் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தப் பயன்படுவதில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் தொட்டு உணர்ந்து விடலாம் என்கிற மாதிரி எழுதப்பட்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக ஸ்டோன் தொகுதியின் முதல் கவிதை:

ஒரு தற்காலிகமான உள்ளீடற்ற ஸ்வரம்

ஒரு பழம் மரத்திலிருந்து விழுகிறது

காட்டின் ஆழ்ந்த அமைதியின்

இடைவிடாத லயத்தன்மையில்

 

புறவயமான வஸ்துக்களைக் கொண்டு–சேதனமோ அசேதனமோ–அதில் கவிஞனின் சிந்தனா ரீதியான, மனோவியல் ரீதியான, உணர்ச்சி ரீதியான பங்கேற்பின்றியே ஒரு கவிதையை வெற்றிகரமாக உருவாக்க முடியும் என்பதற்கு இந்தக் கவிதை எடுத்துக்காட்டாகிறது.  இதே காரணத்தினால்தான் மெண்டல்ஷ்டாமின் கவிதைகள், அவர் அனுவித்த ஏழ்மையையும் துயரங்களையும் மிஞ்சியும் சுயபச்சாதாபத்தில் உழலாமல் இருக்கின்றன. தன்மை ஒருமையில் தொடங்குபவை கூட சென்டிமெண்டலிசத்தின் எவ்வித கலப்புமில்லாதிருக்கின்றன:

 

கூர்ந்த காது விறைப்பாக்கி இழுக்கப்பட்ட பாய்மரக்  கித்தானாக இருக்கிறது

கண்கள் வெறிச்சோடியிருக்கின்றன தூரத்தை அலசிப் பார்த்து

இரவுப் பறவைகளின் கூட்டிசைக் குழுவொன்று கடந்து பறந்து   செல்கிறது

நிசப்தமாக, நிசப்தத்தின் ஊடாக.

நான் இயற்கையைப் போலவே ஏழையாக இருக்கிறேன்s

வானத்தைப் போல எளிமையாக.

எனது சுதந்திரம் இரவுப் பறவையின் கத்தலைப் போல

கோட்டுருவாயிருக்கிறது.

முதல் உலகப் போரின் இன்னல்களும், ரஷ்யப் புரட்சியும் மெண்டல்ஷ்டாமை ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் இருந்த க்ரீமியாவுக்கு செல்லக் கட்டாயப்படுத்தின. உள்நாட்டுப் போர்க்காலத்தின் போது போல்ஷெவிக் உளவாளி என்று தவறாகக் கணிக்கப் பட்டு கைது செய்யப்பட்டு சிறிது காலம் சிறையில் வைக்கப்பட்டார். உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் தன் இடத்திற்குத் திரும்பிய மெண்டல்ஷ்டாம் புதிய கவிதைத் தொகுதி ஒன்றுடன் வந்தார். Tristia என்ற அந்தத் தொகுதி 1922ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  ட்ரிஸ்டியா தொகுதியில் சிம்பாலிஸ்டுகளிடம் தனது ஆரம்ப பாடங்களைக் கற்றுக் கொண்ட ஆனால் அந்த வளர்ச்சிக் கட்டத்தை கடந்து வந்து விட்ட மெண்டல்ஷ்டாமை நம்மால் பார்க்க முடியும். இந்த இரண்டாவது தொகுதி மெண்டல்ஷ்டாம் பிற ரஷ்யக் கவிஞர்களிடத்திலிருந்து மட்டுமின்றி பிற அக்மேயிஸ்டுகளிடமிருந்தும்  வேறுபட்டு தனக்கானதொரு தனித்துவமான இடத்தைப் பெற்றுவிட்டதைக் காட்டுகிறது. டிரிஸ்டியா, அதன் தலைப்பு உணர்த்துவது போல, மிகவும் சோகமான விஷயங்களைக் கொண்டது. அதன் தலைப்பு லத்தீன் மொழியில் இருந்தாலும் கிரேக்கத் துன்பவியல் பாத்திரங்களே மெண்டல்ஷ்டாமின் மனதை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. தொகுதி முழுவதிலும் கிரேக்கப் புராணிக பாத்திரங்களான ஒடீசியஸ், ஆன்டிகனி, பெனிலோப்பி, ஹெலன், யூரிடைஸ் ஆகியோர் பற்றிய குறுக்குக் குறிப்பீடுகள் நிறைந்திருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வருகிறது பெர்ஸிஃபோன் பற்றிய குறிப்பு. இந்தத் தொகுதியில் இடம் பெரும் நிறைய கவிதைகள், அவற்றின் கிளாசிக்கல் மறைமுகக் குறிப்பீடுகள் உணர்த்துவது போல மெண்டல்ஷ்டாமுக்கு நெருக்கமாக இருந்த பெண்களை முன் நிறுத்திப் பேசுகின்றன. இவற்றில் மூன்று கவிதைகள் மெண்டல்ஷ்டாமின் சமகாலத்துப் பெண் கவிஞரான மரீனா ஸ்வெட்டேயேவாவுடனான உறவுகளைச் சித்தரிப்பவை.  1914ஆம் ஆண்டிலிருந்து 1916வரை மெண்டல்ஷ்டாம் ஸ்வெட்டேயேவாவுடன் மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். மற்றெரு கவிதை Olga Arbenina என்ற நடிகையுடனான மெண்டல்ஷ்டாமின் உணர்ச்சி ரீதியான பிணைப்பைப் பதிவு செய்கிறது. Olga Arbenina  இன் தொடர்பு மெண்டல்ஷ்டாமின் திருமணத்தையே பாதிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது.  இலக்கியத்திலிருந்தும் புராணிகத்திலிருந்தும் அவர் எடுத்தாள்கிற பாத்திரங்கள் அவரது தனிமனித உணர்வுகளுக்கு ஒரு வித பாதுகாப்பினை அளித்து சுயம் கலவாத தன்மையையும் அளித்தன. வெறுமையும் இல்லாமையும் அவரது கவிதைகளின் பிரதான அம்சங்களாக மாறிவிட்டபடியாலும் தனக்கென்று அதிகாரத்துவமளிக்கும் ஒரு ஆளுமையை மெண்டல்ஷ்டாம் மறுத்தே இயங்கினார். எனவே ஆறுதல் அளிப்பதற்கு மர்மமான, மேலாதிக்கமான ஒரு சக்தியே சாத்தியமளிக்கும். இந்த அம்சத்தில் Hymns to the Night  கவிதைகள் எழுதிய பிரெஞ்சுக் கவியான நோவாலிஸ் உடன் ஒப்புமைப்படுகிறார் மெண்டல்ஷ்டாம்:

.  .  .    .   .   .                          .  .   .                       .  .   .

என்ன செய்வதிந்த உடைந்த பறவையை வைத்து?

உயிரற்ற பூமியும் சொல்வதற்கு   ஏதுமில்லாதிருக்கிறது.

மணிக் கூண்டினை மறைத்து விட்டது பனி.

எவரோ மணிகளையும் எடுத்துச் சென்று விட்டார்.

 

உயரங்கள் நாதியற்றும் வெறிச்சோடியும் நிற்கின்றன

இன்னும் வீழ்ச்சியுற்றும்

வெண்ணிற கைவிடப்பட்ட கோபுரம்

பனிப்புகையிலும் நிச்சலனத்திலும்.

.  .  .        .  .  .        .  .  .                        .  .  .

(கவிதை எண்.21.)

“பெட்ரோபொலிஸில் நாம் இறப்போம்”(கவிதை எண் 89) என்று தொடங்கும் கவிதையும், “நாம் மீண்டும் சந்திப்போம் பீட்டர்ஸ்பர்கில்”(கவிதை எண் 118) என்று தொடங்கும் கவிதையும் டிரிஸ்டியா தொகுதியின் மிகப் பிரசித்தமான கவிதைகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் இடம் பெறும் “நாம்” பீட்டர்ஸ்பர்கில் இருந்த சுயப் பிரக்ஞை மிகுந்த அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும். பீட்டர்ஸ்பர்க் ஒரு குளிர்காலத்தைக் கடந்து செல்கிறது என்பதற்கு மேலாக  கல்லாகவே  மாறிவிட்டது  என்பது உணர்த்தப்படுகிறது. பெட்ரோபொலிஸ் ஒரு விதமான பாதாள நகரமாக மாற்றமடைந்திருக்கிறது–பெர்சிஃபோனின் உலகத்தினைப் போல. கவிதைக்கும் கவிஞனுக்கும் எதிரான மௌனம் நிலவுகிறது அங்கே. அதனால்தான் மெண்டல்ஷ்டாம் “நான் சொல்ல விரும்பிய வார்த்தையை மறந்து விட்டேன்”(கவிதை எண் 113) என்று தொடங்குகிறார் ஒரு கவிதையை. மௌனத்துவம் என்ற தலைப்பிலான கவிதையும் மெண்டல்ஷ்டாமின் தனிப்பட்ட படைப்பு ரீதியான வெளிப்பாட்டுப் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார் என்பதை விளக்குகிறது. இத்தகைய மௌனமாக்கும் சந்தர்ப்பங்களில்தான் அவர் “ஆசீர்வதிக்கப்பட்ட அர்த்தம் எதுவுமற்ற வார்த்தை”யை வைத்து திருப்தி அடைய வேண்டியிருக்கிறது.

மிகச் சிக்கனமாக சொற்களைப் பயன்படுத்தியவர் மெண்டல்ஷ்டாம். சொற்களின் ஸ்தூலத்தன்மை பற்றியும் அவை பிற சொற்களுடன் ஏற்படுத்தும் தொடர்புபடுத்தல்கள் பற்றியும், அவற்றின் அர்த்தம் உண்டாக்காத மௌனத்துவம் பற்றியும் மிக ஆழ்ந்த கவனம் கொண்டிருந்தார் என்பதை அவர் எழுதிய கட்டுரைகள் தெளிவாக்குகின்றன. 1920க்கும் 1925க்கும் இடைப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகளில் முக்கியமானவை: (1)The Word and Culture (2)On the nature of the Word.  வேறு எந்த மொழிக் கவிதையை விடவும் ரஷ்யக் கவிதையில், சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றனவா என்கிற சந்தேகம் கூடுதலாக எழுப்பப்பட்டிருக்கிறது என்று எழுதுகிறார் மெண்டல்ஷ்டாம். இந்தக் கட்டுரையில் க்ளெப்னிகோவின் ஃபியூச்சரிச வார்த்தைத் தேடல்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

1923ஆம் ஆண்டு டிரிஸ்டியா மற்றும் ஸ்டோன் ஆகிய இரண்டு தொகுதிகளும் ஒரே நூலாகத் தொகுத்து வெளியிடப்பட்டன. இந்த சமயத்தில் ஒரு கவிஞன் என்ற அளவிலான கணிசமான பெருமை வந்து சேர்ந்தது மெண்டல்ஷ்டாமுக்கு. நாடஷ்டா என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் பிழைப்பு நடத்துவதென்பது சிரம காரியமாகவே இருந்தது. இதற்கு முன்பும் கூட அது எளிதாக இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது காரணங்கள் வேறாக இருந்தன. எல்லா ரஷ்ய அறிவு ஜீவிகளைப் போலவே அவரும் புரட்சியை வரவேற்றார். ஆனால் ஆரம்ப காலங்களில் இருந்தே போல்ஷெவிக்குள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. 1921ஆம் ஆண்டு  குமிலேவ்  புரட்சிக்கு எதிராக உளவு வேலையில் ஈடுபட்டார்  என்று  குற்றம் சாட்டப்பட்டு  புதிய  கம்யூனிச அரசாங்கத்தின் துப்பாக்கி ஏந்திய வீரர்களால் சுடப்பட்டார். குமிலேவ் சந்தேகத்திற்குரியவராக ஆனதால் எல்லா அக்மேயிஸ்டுகளுமே சந்தேகத்திற்கு உரியவர்களானார்கள். புரட்சிக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்குத்தான் புரட்சிக்குப் பின் வந்த அரசாங்கத்தில் வேலை கிடைத்தது. வெளியீட்டு நிறுவனங்களும், பத்திரிகை ஆசிரியர்களும் “வர்க்க எதிரி” பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டார்கள். தன்னுடைய கருத்துக்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்திய காரணத்தாலும் மெண்டல்ஷ்டாமுக்கு பொருத்தமான நல்ல வேலைகள் கிடைக்கவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்டவை  பத்திரிகை எழுத்துக்களும், அரசுக்குத் தேவைப்பட்ட துண்டு மொழிபெயர்ப்புகளும்தான். இது தவிர குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியும் தன் பிழைப்பை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.

1928ஆம் ஆண்டு மெண்டல்ஷ்டாமின் மூன்று தனித் தனிப் புத்தகங்கள் வெளிவந்தன. oems, On Poetry, The Egytian Stamp.  1921க்கும் 1925க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் எழுதப்பட்ட மெண்டல்ஷ்டாமின் கவிதைகளை உள்ளடக்கியது Poems விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக இருந்தது On  Poetry . மெண்டல்ஷ்டாமின் ஒரே நாவல்தான் பட்ங் ஊஞ்ஹ்ற்ண்ஹய் நற்ஹம்ல்.

இவ்வளவு சாதனைகளை புரிந்திருந்தும் கூட சோவியத் அரசு மெண்டல்ஷ்டாமை அதிகரிக்கும் பகைமையுடனும் சந்தேகத்துடனும்தான் பார்த்தது. இருப்பினும் மெண்டல்ஷ்டாமுக்கு அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் ரட்ஷகராக இருந்தார். அவர் Nikolai Bukharin(1888-1938) .புக்காரின் மெண்டல்ஷ்டாமின் கவிதை மீது சிறந்த மதிப்பு வைத்திருந்தார். ஒரு மனிதர் என்ற முறையிலும் மெண்டல்ஷ்டாமை அவருக்குப் பிடித்திருந்தது. மெண்டல்ஷ்டாமுக்கு எதிரான ஒரு சதியை முறியடிக்க புக்காரின் உதவியாக இருந்தார். அரசாங்க வெளியீட்டகம் Charles de Costerஇன் Thyl Ulenspiegel  என்ற புத்தகத்தை,  ஏற்கனவே இருந்த இரண்டு ரஷ்ய மொழிபெயர்ப்புகளின் அடிப்படையில் பதிப்பிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டார் மெண்டல்ஷ்டாம். வேறு மொழிபெயர்ப்பாளர்களும் அவருடன் வேலை பார்த்த போதிலும் தலைப்புப் பக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் என்று மெண்டஷ்டாமின் பெயர் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் ஒரு சக மொழிபெயர்ப்பாளர் மெண்டல்ஷ்டாமின் மீது இலக்கியத் திருட்டு என்ற குற்றத்தைச் சாட்டினார். இது சாதாரணமான விஷயம் போலத் தெரிந்தாலும் பிற்பட்ட காலத்தில் மெண்டல்ஷ்டாமுக்கு வெளியிடும் உரிமையையே ரத்து செய்து விடும் அளவுக்கு அபாயம் மிகுந்திருந்தது. எனினும் இந்த அவதூறுகளுக்கு  ஒரு முற்றுப் புள்ளி  வைத்தார்  புக்காரின். மெண்டல்ஷ்டாமையும் அவரது மனைவி நாடெஷ்டாவையும் ஆர்மீனியாவுக்கு அனுப்பி வைத்தார். வெளிப்படையான நோக்கம் என்னவோ சோவியத்மயமாக்கலின் பயனை எந்த அளவுக்கு ஆர்மீனியா அடைந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து அறிவிக்க. ஆனால் நிஜமான நோக்கம் மெண்டல்ஷ்டாமை ஆபத்திற்கு வெகு தூரத்தில் வைப்பதுதான். ஆனால் இதற்குள்  மெண்டல்ஷ்டாமை அந்த இக்கட்டான வருடங்கள் வேண்டிய அளவு துன்புறுத்தியிருந்தன. அவரது கவிதையின் தோற்றுவாய்கள் வறண்டு போயிருந்தன.

இந்த 5 வருட காலத்தினை மெண்டல்ஷ்டாமே “செவிட்டு–ஊமை” வருடங்கள் என்று குறிப்பிடுகிறார். 1930இல் ஆர்மீனியாவிலிருந்து திரும்பியதும் மெண்டல்ஷ்டாம் தானாகவே  தன்னை  சரிசெய்து கொண்டு  Journey to Armenia என்ற உரைநடை நூலை எழுதினார். சோவியத் அரசாங்கத்தால் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்த நூல் இது. சுயசரிதம், விமர்சனம் மற்றும் பயணக் குறிப்புகள் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய “நான்காவது உரைநடை”யாக இது கருதப்படுகிறது.

1934ஆம் ஆண்டு ஸ்டாலினைக் கிண்டல் செய்து ஒரு கவிதை(The Stalin Epigram) எழுதிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். “க்ரெம்ளினின் மலையேறி” என்று அதில் ஸ்டாலின் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு மனோவியல் ரீதியான, உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வாழ்வில் அக்கறை கொண்ட நண்பர்களின் தலையீட்டினால் சுடப்படாமல் தப்பித்தார். இல்லையென்றால் குமிலேவ்வுக்கு ஏற்பட்ட கதி மெண்டல்ஷ்டாமுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.

பிறகு யூரல் மலைப் பிரதேசத்திலிருந்த ஒரு சிற்றூருக்கு நாடுகடத்தப்பட்டார். அதன் பிறகு வெரோனா என்ற சிறிய நகரத்திற்கு மாற்றப்பட்டார். நாடுகடத்தப்பட்ட இந்த நாட்களின் தொடக்கத்திலிருந்தே அவரது மனைவி நாடெஷ்டா அவருடன் இருந்தது அவருக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. நண்பர்கள் அனுப்பிய உதவித் தொகையை வைத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த காலகட்டத்தில் இருந்த உடல் ரீதியான துன்பங்களுக்கு இணையான அளவில் மனரீதியான உளைச்சல்கள் தலை தூக்க ஆரம்பித்திருந்தன. எப்போது வேண்டுமானாலும் நிகழ்ந்து விடலாம் என்கிற பேராபத்து பற்றி சர்வசதா மனப்பிடியில் சிக்குண்டிருந்தார். 1937ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாடு கடத்தல் காலம் முடிந்து மெண்டல்ஷ்டாமும்  நாடெஷ்டாவும் மாஸ்கோ திரும்பினார்கள். ஆனால் வாழும் இடத்திற்கான உரிமையை இருவரும் இழந்து விட்டிருந்தனர். வீடின்றியும், வேலை கிடைக்காமலும் மாஸ்கோவில் பீதியுடன் நாடோடி வாழ்க்கை வாய்த்தது. இரண்டாவது முறை மீண்டும் மெண்டல்ஷ்டாம் கைது செய்யப்படலாம் என்ற வதந்தி இருந்தது. இந்த சமயத்தில் அவரது மேலிடத்து நண்பரும்  ரட்ஷகருமான  புக்காரின் ஸ்டாலினின் முதல் களையெடுப்பில் (Purges)  மரணத்தைச் சந்தித்தார்.  தத்துவார்த்த ரீதியில் ஸ்டாலினுடன் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருந்தார் புக்காரின். குறிப்பாக  Super Industrialization  ரஷ்ய விவசாயிகளுக்குக் குந்தகம் விளைவித்து விடும் என்று புக்காரின் எச்சரித்தார். புக்காரினை முன் மாதிரியாக வைத்தே நவீன ஹங்கேரிய நாவலாசிரியரான ஆர்தர் கெஸ்லரின் Darkness at Noon  என்ற நாவலின் பிரதான கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது என்பதையும் நாம் நினைவு கொள்வது அவசியம்.

மெண்டல்ஷ்டாமின் உடல் நலம் இரண்டு மாரடைப்புகளால் பெரும் சீர்குலைவுக்கு உள்ளாகியிருந்தது. இறுதியாக மே மாதம் 1938ஆம் ஆண்டு அவர் எதிர்பார்த்த கைதாணை வந்தது. புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று இப்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு 5 வருட கட்டாய கடும் உழைப்பு தண்டனையாகத் தரப்பட்டது. அவரைக் கைது செய்த போது அவர் பரிதாபமான முறையில் ஒரு கிராமப்புற சானிடோரியத்தில் உடல் நலம் தேறிக் கொண்டிருந்தார். ஐரோப்பிய ரஷ்யாவிற்கும் அதன் தூரக் கிழக்கு பிரதேசங்களுக்கும்  இடையே ஓடிக் கொண்டிருந்த கைதிகளுக்கான ரயிலில் ஏற்றப்பட்டார். அப்போது  மெண்டல்ஷ்டாமின் மனநலம் கெட்டு பேதலிப்பில் இருந்தார். 1938 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குளிருக்கான ஆடைகள்  கேட்டும் பணம் வேண்டியும் அவரிடமிருந்து ஒரு ப்ரௌன்  நிற துண்டுக் காகிதத்தில் ஒரு கடிதம் வந்தது.  அதுதான்  உயிருடனான மெண்டல்ஷ்டாம் என்ற கவிஞனைப் பற்றிய கடைசி செய்தியாக இருந்தது. பிறகு 1938ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி மெண்டல்ஷ்டாம் இதய நோயினால் இறந்ததாக அவருடைய சகோதரர் அலெக்ஸாண்டர் மெண்டல்ஷ்டாமுக்கு (3வருடங்கள் கழித்து) அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்தது.

3581

இந்தக் கவிதைத் தேர்வில் இரண்டு கவிதை நூல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன. 1.பென்குவின் வெளியீடாக நவீன ஐரோப்பிய கவிஞர் வரிசையில் வந்த(1977) 1. Osip Mandelstam : Selected Poems(1991),Tr.Clarence Brown& W.S.Merwin.

2.Stone-Mandelstam:Tr.Robert Tracy.முதலாவது புத்தகம் மெண்டல்ஷ்டாமின் எல்லாக் கவிதைத் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கியது.

இரண்டாவது புத்தகம் மெண்டல்ஷ்டாமின் ஸ்டோன் என்ற கவிதைத் தொகுதியின் முழுப்புத்தகம்.

 

 


 

 கவிதைகள்

கவிதை எண் .23

 

இன்றைய நாள் ஒரு மோசமான நாள்

சிக்கடா பூச்சிகளின் கோரஸ் தூங்குகிறது

சிகரத்தின் இருண்ட நிழல் பரவல்

இருளார்ந்திருக்கிறது சவக்குழிகள் போல.

 

ஒலிக்கும் அம்புகள் மின்னுகின்றன

பெரும் துன்பக்குறிகளின் அடையாளமான அண்டங்காக்கைகள் கத்துகின்றன. . .

நான் தூங்கும்போது தீவினையான விஷயங்களை கண்ணுறுகிறேன்

ஒன்றடுத்து ஒன்றாக அவை மின்னி மறைவதை.

 

உயிர்ப்பின் சுவர்களை உடைத்தெறி

பூமியின் சிறையை நொறுக்கு

வன்முறையான கீதங்கள் பாடட்டும்

கலகத்தின் செருக்குமிக்க மர்மங்களை

 

ஆன்மாக்களுக்கான தராசு பிசகுவதில்லை,

அது கண்மூடித்தனமாக நேராய்ச் சரிகிறது,

மேலும் பூட்டப்பட்ட நமது கதவுகளின் மீதாக

விதியின் உணர்ச்சி கிளர்ந்த தட்டல்கள் . . .

 

 

கவிதை எண் 25.

 

ஏன் அப்படிப்பட்ட பாடல்கள் என் ஆன்மாவில் இருக்கின்றன

மேலும் ஏன் அவ்வளவு குறைவான அன்புமிக்க பெயர்கள்?

ஒரு லயத்தின் கணம் ஏன் வெறும் சந்தர்ப்பவசமாய் இருக்க வேண்டும்

அக்விலோன் எனும் வடக்குக் காற்று திடீரென வரும்பொழுது?

 

அது ஒரு புழுதி மேகத்தைக் கிளப்பி விடும்,

காகித இலைகளை முணுமுணுத்து முன்னும் பின்னுமாய் அசையச் செய்யும்,

மேலும் திரும்ப வரவே வராது–அல்லது வரும்

ஒவ்வொரு விதத்திலும் வேறுபட்டதாக.

 

ஆர்ஃபிக் காற்றே, நீ வீசுகிறாய் தூரமாகவும் அகண்டமாகவும்.

நீ நுழைவாய் கடலின் பிரதேசங்களில்.

இன்னும் உருவாக்கப்படாத ஒரு வார்த்தையை சீராடினேன் நான்

நான் துறந்தேன் பயனற்ற “நானை”.

 

நான் ஒரு சிறிய வடிவ காட்டில் திரிந்தேன்

வானத்தின் நிறத்தில் ஒரு குகையைக் கண்டேன். . .

நான் நிஜம்தானா? நான் இருக்கிறேனா?

மேலும் நான் மெய்யாகவே இறந்து விடுவேனா?

 

கவிதை எண்.31

இல்லை, நிலா இல்லை, ஆனால் ஒரு கடிகாரத்தின் முகம் விகசிக்கிறது,

எனக்கு–நானா பொறுப்பு

வெளிறிய நட்சத்திரங்கள் எனக்கு பால்போலத் தெரிந்தால்?

நான் பாத்யுஷ்கோ*வின் திமிரை வெறுக்கிறேன்

இப்பொழுது என்ன நேரம்?” அவர்கள் அவனிடம் கேட்டனர் ஒரு முறை

அதற்கவன் பதில் அளித்தான், “நித்தியத்துவம்.”

 

 

*Konstantin Batyushkov(1787-1855) புஷ்கினின்சமகாலத்துக்கவிஞர். புஷ்கின்அளவுபிரபலமாகவில்லைஎனினும்ஒருநல்லகவிஞர். நவபேரிலக்கியநடையில்உணர்ச்சிகரமாகக்கவிதைகள்எழுதியவர். ரஷ்யஎழுத்தாளர்கள்மத்தியதரைக்கடல்நாடுகளின்இலக்கியத்தைநன்குஅறியவேண்டும்என்பதற்கானமுயற்சிஎடுத்துக்கொண்டவர். Greek Anthology  யை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தவர். 1821ஆம் ஆண்டு முற்றிலும் பைத்தியமாகிப் போனார்.

கவிதை எண் 40*1

நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது தர்மசங்டமான நிசப்தத்தின் அழுத்தத்தை–

என்றாலும்  ஒரு ஆன்மா  நலமில்லாதிருப்பது  நம்மை வருத்துகிறது.

மேலும் அந்தப் பொதுவான குழப்பத்தில்,

ஒரு மனிதன் வெளியில் வருகிறான் கவிதை சொல்ல.

அவர்கள் அவனை வரவேற்றனர் சந்தோஷமான கூச்சலுடன்: “ஆரம்பி”

கண்ணுக்குப் புலனாகா மனிதன் அங்கே நின்று கொண்டிருந்தான்–அவனை நான் அறிவேன்.

பீதி இரவின் மனிதன் ஒருவன் வாசித்துக் கொண்டிருந்தான் உளாலுமே*2

அர்த்தம் தற்பெருமையானது சொற்கள் வெறும் ஒலிகள்

பேச்சொலியியலோ தேவதைகளின் கைப்பாவை.

 

எட்கர் ஆலன் போ அவனது யாழினை வாசித்து உஷரின் வீடு*3 பற்றிப் பாடினான்,

பைத்தியக்காரன் தண்ணீர் பருகினான், தன்னிலை அடைந்தான், நின்றான் ஊமையாக.

நான் வெளியே அந்தத் தெருவில் இருந்தேன். இலையுதிர்காலத்தின் பட்டுப் போன்ற விசில்–

எனது கழுத்தைச் சுற்றி கதகதப்பாக, ஒரு சில்க் கைக்குட்டையின் குறுகுறுப்பு. . .

 

*1.பீட்டர்ஸ்பர்கில்ஒருமாலைநேரத்தைப்பற்றியஇந்தக்கவிதைVladimir Pyast என்கிறரஷ்யக்கவிஞன், எட்கர்ஆலன்போவின் உளாலுமேக விதையை வாசித்தபடி பைத்தியமானதைச் சொல்கிறது. இதேகவிதையைW.S.Merwin & Clarence Brown(Osip Mandelstam:Selected Poems,1977)  ஆகியோர் வேறு மாதிரி பாடபேதத்துடன் மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனினும் 1991இல்வெளிவந்தRobert Tracy (Osip Mandelstam:Stone) யின் மொழிபெயர்ப்பேமு ழுமையானதாயும்சி றந்ததாயும்தெரிகிறது.

*2.அமெரிக்க புனைகதைஎழுத்தாளரும் கவிஞருமான எட்கர்ஆலன்போவின் கவிதைத்தலைப்பு (Ulalume(1847).

*3.எட்கர் ஆலன் போவின் ஒருகதையின்தலைப்பு. The Fall of the House of Usher (1840)

 

கவிதை எண் 45.

 

. . . நள்ளிரவுப் பெண்களின் துணிச்சல்,

எரிநட்சத்திரங்களின் அபாயத்திற்கஞ்சாத வீழ்ச்சி.

ஒரு நாடோடி என் மேல்கோட்டினைப் பிடித்திழுக்கிறான்–இன்றிரவு தங்குவதற்கு

ஒரு படுக்கைக்கு காசிருக்கிறதா என்று கேட்கிறான் என்னிடம்?

 

சொல் எனக்கு யார்தான் என் பிரக்ஞையை

மறக்கடிப்பார்கள் மதுவைக் கொண்டு?

யதார்த்தம் என்பது பீட்டரின் கண்டுபிடிப்பாக இருந்தால்:

இந்த கிரானைட், வெண்கலக் குதிரை வீரன்*?

கோட்டையிலிருந்து அடிக்கப்படும் சல்யூட் கேட்கிறது எனக்கு

அது எப்படி கதகதப்பாய் மாறுகிதென்பதையும் கவனிக்கிறேன்.

ஒரு வேளை கீழே நிலவறைகளில் இருப்போரும்

இந்த சப்தத்தைக் கேட்க முடியும்.

என் காய்ச்சல் மிகுந்த மூளையின் கோர்வையின்மைக்கு

அடியில்

இருக்கின்றன நட்சத்திரங்களும் அர்த்தம் கூடிய பேச்சும்,

நெவா நதியின் மேற்கில் மீண்டும் காற்று.

 

கவிதை எண் 14. அமைதித்துவம்*1.

அவளுடைய பிறப்பே இனிமேல்தான்.

அவளும் வார்த்தையும் இசையும் ஒன்று

எனவே வாழ்வு முழுவதிலும்

ஒருமையைக் காப்பாற்றுகிறாள் அவள் தொடர்ச்சி உடையாமல்.

சமுத்திரத்தின் மார்பகங்கள் மென்மையாக உயர்ந்து தாழ்கின்றன

ஆனால் பகலோ பைத்தியக்காரனைப் போல ஒளிர்கிறது

கடல்நுரை வாடிய லைலாக் மலரைப் போலிருக்கிறது

ஒரு மேகம் சூழ்ந்த வானின் நீலத்துக் குவளையில்.

 

என்னுடைய உதடுகள் கண்டுபிடிப்பதாக இருக்கட்டும்

எது ஒன்று எப்பொழுதுமே பேச்சற்றிருந்ததோ அதை,

புதிதாய் பிரப்பெடுத்ததும் பரிசுத்தமானதுமான

ஒரு படிக ஸ்ருதியைப் போல.

 

அஃப்ரோடைட்டி*2, நுரையாகவே இருந்து விடு.

வார்த்தை மறுபடியும் இசையாக மாறட்டும்.

என் இதயமே. நீ இதயங்களைத் தூக்கி எறிய வேண்டும்

அதில் பிணைந்துதான் எல்லா விஷயங்களுமே வருகின்றன.

 

  1. இதேதலைப்பில்மெண்டல்ஷ்டாமுக்குமுந்தியதலைமுறைக்கவிஞரானTyutchev  வின்கவிதை(1830) ஒன்றுஇருக்கிறது.

2*கிரேக்ககாதல்கடவுளானவீனஸ், கடல் நுரையிலிருந்து பிறந்ததான ஒரு ஐதீகம் உண்டு. அஃப்ரோஸ் என்ற கிரேக்க சொல்லுக்கு நுரை என்றுபொருள். வீனஸின் பிறப்பு பற்றி Botticelli  என்ற ஓவியர் Birth of Venus என்றதலைப்பிலானஓவியமும்இந்தக்கவிதைக்குதூண்டுதலாகஇருந்திருக்கவாய்ப்பிருக்கிறது.

 

கவிதை எண் 11.

பேச்சுக்கு அங்கே அவசியமில்லை

போதிப்பதற்கு ஒன்றுமில்லை.

எவ்வளவு சோகமானது ஆயினும் அழகானது

இந்த இருண்ட காட்டுமிராண்டித்தனமான ஆன்மா.

 

அது எதையுமே போதிப்பதற்கு விரும்புவதில்லை

பேசும் திறனையும் இழந்ததாய் இருக்கிறது,

ஒரு இளம் டால்ஃபினைப் போல நீந்துகிறது

உலகின் புகைநிறத்து ஆழங்கள் வெளிச்சமற்றிருக்கும் இடங்களில்.

கவிதை எண் 24*.

தெளிவற்ற இலைகளின் ஒரு விதைப்புடன்

கருத்த காற்று சலசலத்துக் கடந்து செல்கிறது.

துடித்தொளிரும் ஊர்க்குருவி இருண்ட வானத்தின்

பின்னணியில் ஒரு வட்டத்தை வரைகிறது.

 

மென்மையாய்ச் சாகும் என் இதயத்தில்

நெருங்கி வரும் அந்தி மயக்கத்திற்கும்

முடிவுறும் பகல் வெளிச்சத்திற்குமிடையே

ஒரு மௌனமான விவாதம்

 

மேலே ஒரு தாமிர நிலா.

இரவால் இருளால் நிரப்பப்பட்ட காடுகள்.

ஏன் அவ்வளவு குறைவான சங்கீதமே இருக்கிறது?

மேலும் ஏன் அவ்வளவு நிச்சலனம்?

 

*இதேகவிதையைW.S.Merwin & Clarence Brown(Osip Mandelstam:Selected Poems,1977) ஆகியோர்பாடபேதத்துடன்மொழிபெயர்த்திருக்கிறார்கள். இருப்பினும் Robert Tracyயின்மொழிபெயர்ப்பேசிறந்ததாகத்தெரிகிறது.

 

கவிதை எண் 66*.

பூ மலரும் நகரங்களின் பெயர்கள்

காதுகளை வருடட்டும் அவற்றின் குறுகிய காலத்துப் பெருமையுடன்.

நூற்றாண்டுகளின் ஊடாக வாழ்ந்திருப்பது ரோம் நகரமல்ல

ஆனால் பிரபஞ்ச அமைப்பில் மனிதனின் இடம்.

மன்னர்கள் கைப்பற்றப் பார்க்கின்றனர் அதை, பாதிரியார்கள் பயன்படுத்தமுயல்கின்றனர் அதை, ஒரு போரை நியாயப்படுத்த வேண்டிய போது

அது இல்லாமல் போகையில், வீடுகளும் பலிபீடங்களும் வெறுப்புக்கு உகந்தவையாயிருக்கின்றன

ஒரு மோசமான குப்பைக் குவியலைப் போல, அதற்கு மேல் ஒன்றுமேயில்லை.

 

*Robert Tracyமொழிபெயர்ப்பு.

 

கவிதை எண் 73

நெருப்பு தன் பிழம்பு நாக்குகளால்

என் உலர்ந்த வாழ்வினை இல்லாமல் ஆக்குகிறது.

பாறைப் பாடல்களே இனி கிடையாது,

நான் இன்று மரம் பற்றிப் பாடுகிறேன்.

 

அது கனமற்றும் ஒழுங்கற்றும் இருக்கிறது

ஒரே ஒரு துண்டிலிருந்து, வேறு ஒன்றுமில்லை.

ஓக் மரத்தின் இதயம்

மீனவனின் துடுப்பு இரண்டும்.

 

அடுக்குகளை கூடுதலான உறுதியுடன் உள் செலுத்து,

சுத்திகள், இறுக்கமாக தாக்கு.

ஓ, மரத்தாலான சொர்க்கமே

அங்கே எல்லாப் பொருள்களுமே லகுவே.

கவிதை எண்.101

 

பயங்கர உயரத்தில் ஒரு அலையும் நெருப்பு

அப்படி மின்னுவது ஒரு நட்ஷத்திரமாக இருக்க முடியுமா?

ஒளி ஊடுருவித் தெரியும் நட்ஷத்திரமே, அலையும் நெருப்பே,

உனது சகோதரன், பெட்ரோபொலிஸ்*, இறந்து கொண்டிருக்கிறான்.

 

பூமியின் கனவுகள் ஒரு பயங்கர உயரத்தில் கொழுந்து விட்டு எரிகின்றன,

ஒரு பச்சை நிற நட்ஷத்திரம் மின்னுகிறது.

ஓ, நீ ஒரு நட்ஷத்திரமாக இருந்தால், இந்த தண்ணீரின், ஆகாயத்தின் சகோதரன்,

உன் சகோதரன், பெட்ரோபொலிஸ், இறந்து கொண்டிருக்கிறான்.

 

ஒரு பிரம்மாண்ட கப்பல் ஒரு அசுர உயரத்திலிருந்து

பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது, தன் சிறகுகளைப் பரப்பியபடி

பச்சை நிற நட்ஷத்திரமே, அற்புத ஏழ்மையில்

உன் சகோதரன், பெட்ரோபொலிஸ், இறந்து கொண்டிருக்கிறான்.

 

கறுப்பு நிற நெவா நதிக்கு மேலாக ஒளி ஊடுருவித் தெரியும் வசந்தம்

வந்து விட்டது, இறவாமையின் மெழுகு உருகிக்கொண்டிருக்கிறது.

ஓ, நீ ஒரு நட்ஷத்திரமாக இருந்தால், பெட்ரோபொலிஸ், உனது நகரம்,

உன் சகோதரன், பெட்ரோபொலிஸ், இறந்து கொண்டிருக்கிறான்.

 

*வேறுசிலகவிஞர்களைப்போல (எடுத்துக்காட்டாகDerzhavin) மெண்டல்ஷ்டாம் புனிதபீட்டர்ஸ்பர்க்கை பெட்ரோபொலிஸ்எ ன்றேகுறிப்பிடுகிறார். பெட்ரோஎ ன்பது பீட்டர் என்றுஅர்த்தப்படும். பொலிஸ் என்பது நகரத்துக்கான லத்தீன்சொல்

 

கவிதை எண்.89

 

ஒளி ஊடுருவித் தெரியும் பெட்ரோபொலிஸ் நகரில் நாம் இறப்போம்,

நமது அரசி பெர்சிஃபோன் முன்பாக.

நாம் பெரு மூச்சு விடுகையில் நாம் மரணத்தின் காற்றினை விழுங்குகிறோம்

ஒவ்வொரு மணி நேரமும் நமது கடைசி கணங்களைக் கொண்டாடுகிறது.

 

கடலின் பெண் கடவுள், கண்டிப்பான எத்தேனா

உனது பெரும் பாறையிலான தலைக் கவசத்தினைத் மேலே தூக்கு.

நாம் இறப்போம் ஒளி ஊடுருவித் தெரியும் பெட்ரோபொலிஸ் நகரில்,

நீயல்ல, அங்கே பெர்சிஃபோன்*தான் அரசி.

 

*பாதாள உலகத்தின் தேவதை. ஒருவருடத்தின் மூன்றில்ஒ ருபகுதியில் பாதாள உலகத்திலும் ஒரு பகுதியில் பூமியிலும் வாழ்கிறாள், கிரேக்கப்புராணிகத்தின்படி.

ரோமானியர்கள் Prosperina  என்று இவளை அழைத்தனர். விதைகள் பூமியில் முளைக்கக் காரணம் என்று கருதப்படுகிறவள். எனினும் விதை முளைப்புச்சடங்குகளில் பெர்சிஃபோனின் பெயரைச் சொல்லக்கூடாது என்றஐதீகம் இருந்தது.

 

பீதோவனுக்கு ஒரு பாடல்

சில சமயங்களில் ஒரு கறாரான இதயம் இருக்கிறது

அதை நீங்கள் காதலித்தாலும் அருகில் வரத் துணியமாட்டீர்கள்.

ஒரு இருட்டாக்கப்பட்ட அறை அதில் நெருப்பு எரிகிறது

கேட்கும் சக்தியை இழந்த பீதோவனின் அறை.

துன்புறுத்துபவனே. நான் என்றுமே அறிய முடிந்ததில்லை

பொங்கி வழியும் உன் மனமகிழ்வைப் பற்றி.

மேலும் இப்போது ஏற்கனவே இசை நிகழ்த்துபவன்

இசைச் சுவடியை தூர வீசுகிறான், சாம்பலாக எரிக்கப்பட்டு.

 

பூமியே கூட இடியினால் குமுறிக் கொண்டிருக்கும் பொழுது

மேலும் ஆற்றின் குமுறல் காட்டுத்தனமாக ஊளையிடும்பொழுது

புயல்களைவிடவும் மரங்களை உடைக்கும் காற்றுக்களை விடவும் அதிக வன்முறையுடன்

வெளியே நடந்து செல்லும்  வியக்கத் தகும் மனிதன் யார்?

அவன் அடியெடுத்து வைக்கிறான் அந்த கட்டுக்கடங்காத இயக்கங்களில்

அவனுடைய உயர்ந்த பச்சை நிற தொப்பியை கையில் பிடித்தபடி,

அவனது தளர்வான அங்கியைக் காற்று படபடக்கச் செய்கிறது

மேலும் அவனது இடைஞ்சலான ஃபிராக் கோட்டின் மார்ப்புப் புற மடிப்புகளையும்.

 

யாரிடம் நாம் உணர்ச்சிப்பாடுகளின் கோப்பையிலிருந்து அதிகமாகக் குடிக்க முடியும், தீர அதன் கடைசிச் சொட்டு வரை?

யார்தான் அதிக ஆர்வத்துடன் பிழம்புகளை ஒளிவிடச் செய்ய முடியும்?

கூடுதலான தீவிரத்துடன் சுதந்திரத்திற்கு புனிதமளிக்க முடியும்?

என்ன மனிதன் அவன், எந்த ஃபிளெமிஷ் பிரதேசத்து விவசாயியின் மகன் அவன்

உலகோர் அனைவரையும் நடனத்தில் பங்கு கொள்ள வரவழைத்தது

சகல குடிகார வன்முறையையும் வெளியே எடுக்கும் வரையில்

குரல்களுக்கிடையில் மீண்டும் மீண்டும் தலையெடுக்கும் கருவிக்கான இசை முடிந்ததென்று சொல்லாதிருந்தது எவர்?

 

ஓ டயோனிஸிஸ்! ஏமாற்றே இல்லாத ஒரு மனிதன் போல

ஒரு குழந்தையால் இருக்க முடியும் அளவுக்கு நன்றியால்  நிறைந்து.

சில சமயம் கடுங்கோபத்தில், சில சமயம் ஒரு புன்னகையுடன்,

உனது வியப்படையச் செய்யும் தலை விதியைப் பொறுத்துக் கொண்டு.

எவ்வளவு கோபமான தற்பெருமையை நீ அடக்கி வைத்தாய்

அரசகுமாரப் புரவலர்களிடமிருந்து உனக்கான உதவிகளைப் பெறுகையில்,

அல்லது ஒரு மறதியான அரசவைத்தன்மையுடன்

நீ சென்றாய் அன்றைய நாளின் பியானோப் பாடங்களைச் சொல்லித் தர.

 

ஒரு பிக்குவின் சிறிய அறைதான் நீ இருப்பதற்குப் பொருத்தமானது–

அங்கே பிரபஞ்ச ஆனந்தம் உறைகிறது.

உனக்கு, அவற்றின் முன்கூட்டி உரைக்கும் மகிழ்கிளர்ச்சியுடன்

நெருப்பை வழிபடுபவர்கள் பாடுகிறார்கள்.

மனித இனத்துக்குள்ளாக ஒரு பராக்கிரம தீப்பிழம்பு,

எவரும் என்றுமே அதை அடக்கி வைத்துவிட முடியாது.

புராதன கிரேக்கர்கள் உன் பெயரை அழைக்கப் பயந்தனர்

ஓ! கருணையில்லாத கடவுளே, ஆனால் அவர்கள் யாவரும் உனக்கு மரியாதை செய்தனர்.

கம்பீரமான தியாகத்தின் தீப் பிழம்பே!

பாதி வானம் வரை தீ பரவுகிறது–

கந்தல்களாகப் பிய்க்கப்பட்ட பட்டான கூடார முகட்டுத் திரை

புனித ஆலயம் நம் தலைகளுக்கு மேலாக சிதைக்கப்படுகிறது.

தீப்பிழம்புகளின் ஒரு திறந்த வெளியில்

அங்கே நமக்கு பார்ப்பதற்கு எதுவுமே இல்லை–

நீ அரியாசன அறையில் இருந்தாய், மேலும் வெளிப்படுத்தினாய்

ஒளிவிடும் புகழின் வெற்றியை.

 

கவிதை எண்.49

 

ஒரு விடுதியில் திருடர் கும்பல் ஒன்று

விடியும் வரை தாயம் ஆடிக் ஆடிக்கொண்டிருந்தது.

உபசரிக்கும் பெண் ஒரு ஆம்லெட்டினைக் கொணர்ந்தாள்

கிறித்தவப் பிக்குகள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

 

கார்காயில்*கள் கோபுரத்தின் மீதாக விவாதித்துக் கொண்டிருந்தன.

அவற்றில் எது அதிகம் பீதியூட்டுவதாய் இருக்கிறது?

காலையில் ஒரு மடமையான பிரச்சாரகன்

தனது அரங்கிற்கு வரும்படி ஜனங்களுக்கு அழைப்பு விடுத்தான்.

 

சதுக்கத்தில் நாய்கள் விளையாடிக் கொண்டிருந்தன,

நாணயம் மாற்றும் கருவியை இயக்கும் சாவியின் கிளிக் சத்தம்.

நித்தியத்துவம் சகலராலும் சூறையாடப்படுகிறது

ஆனால் நித்தியத்துமோ கடலில் இருந்து வந்த மணல் போலிருக்கிறது.

 

*ஐரோப்பியகட்டிடக்கலையில், மழைநீர் ஒழுகுவதற்கான, கற்பனையான பயங்கர மிருக முகங்கள் போன்ற அமைப்புகள்.

தமிழ்நாட்டுக் கோயில்களின் யாளிகளுக்கு ஒப்பானவை.

 

பாரவண்டியின் பின்முனையில் சிந்திக்கொண்டு–

மூட்டைகளை மூடுவதற்கு மிகக் குறைவான பாய்களே உள்ளன.

ஒரு கிறித்தவ பிக்கு தான் எவ்வளவு மோசமான முறையில் முந்திய இரவு தங்க வேண்டி வந்ததென்ற அவதூறான கதையைச் சொல்கிறான்.

 

கவிதை எண்.5

 

மென்மையைக்  விடக் கூடுதலான மென்மை

உனது முகம்,

தூய்மையை விடத் தூய்மையானதாக

உனது கரம்.

உன்னால் இயன்ற வரை இந்த உலகிலிருந்து

தொலைவாக வாழ்ந்து கொண்டு

மேலும் உன் தொடர்பான யாவுமே

எப்படி இருக்க வேண்டுமோ அப்படி.

 

இதுவெல்லாம் இப்படி இருக்க வேண்டும்.

உனது துயரம்

மேலும் உனது ஸ்பரிசம்

என்றுமே குளிர்ந்து விடாது,

மேலும் அந்த அரவமற்ற பிடிப்பு

நீ சொல்லும் விஷயங்களில்

புகார் இன்றி சொல்வது,

மேலும் உனது கண்கள்

தொலை தூரத்தில் பார்த்துக் கொண்டு.

 

கவிதை எண்.320

 

நான் திருப்பித் தர விரும்புகிறேன் கடன் பெற்ற இந்தப் புழுதியை

ஒரு வெண்ணிற பட்டாம்பூச்சியின் மென்துகள் போலல்ல அது.

இந்த முதுகெலும்புடையது, தன் நீளத்தை ஒரு காலத்தில்

அறிந்திருந்த எரிக்கப்பட்ட, இந்த சிந்திக்கும் உடல்

எல்லோருக்குமான பொது சாலையாக,

ஒரு தேசமாக மாற்றப்பட வேண்டும் என

நான் விரும்புகிறேன்.

 

கருத்த ஊசியிலைகள் அலறுகின்றன.

கிணறுகள் போல ஆழமாக தழை வளையங்கள்

சிவப்புக்கொடி ஊசிகளின் வளையங்கள்

மரணத்தின் லேத்துகளின் மேல் சாய்ந்திருக்கின்றன,

ஆங்கில அரிச்சுவடியின் “ஓ” க்கள்,

ஒரு சமயம் விரும்பப்பட்ட காலத்தை, ஒரு வாழ்க்கையை

நீட்சிப்படுத்துகின்றன.

 

சமீத்தில் படையில் சேர்க்ப்பட்டவர்கள்

கெட்டித்துப் போன வானத்தின் கீழ் ஆணைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

தரைப்படை கடந்து சென்றது, அவர்களின் ரைஃபில்களுக்கு கீழ்ப்புறத்தில்–

ஏராளமான மௌனமான வியப்புக் குறிகள்.

 

நீலநிறக் கண்கள், பழுப்பு நிறக் கண்கள்,

காற்றில் இலக்கு வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள்,

குழப்பத்தில்–மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள்–

யார் வருவார் இவர்களுக்கு அடுத்து?

367

 

 

 

 

Advertisements