பால் வெலரி-Paul Valery:An introduction-Brammarajan

பால் வெலரி (1871-1945)*

கவிதையை விட கவிதை உருவாகும் முறை பற்றிய ஓய்வற்ற சிந்தனைக்காகவும் மனம் இயங்கும் முறைக்காகவும் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன பால் வெலரியின் கருத்துக்கள். வெனிஸ் மற்றும் கார்சிகப் பாரம்பரியத்தல் வந்த குடும்பம் ஒன்றில் பிறந்தார் வெலரி. Mantpelliers உள்ள Lyceeயில் படித்தார். கலை மற்றும் பண்டை நாகரிகங்களில் ஈடுபாடு கொண்டார். தனது பதினேழாவது வயதில் சட்டம் பயிலச் சென்றார். ஆனால் பிரதான ஈடுபாடுகளாக  அவருக்கு இருந்தவை கணிதம், இயற்பியல் மற்றும் இசை. முதன் முதலில் Mallarme வை 1891ஆம் ஆண்டு பாரிஸில் சந்தித்த போது தீவிரமாய் பாதிக்கப்பட்டார். 1920 ஆம் ஆண்டு வரை தொகுக்கப்படாமல் இருந்த இவர் கவிதைகள் பல ஏடுகளில் வெளிவந்தவை. 1892 ஆம் ஆண்டு ஜெனோவாவில் வசிக்கும் போது மல்லார்மேவைப் பின்பற்றி எழுத முயன்று ஏற்பட்ட மனக்குலைவில் கவிதையைக் கைவிட்டார். அடுத்து இருபது வருடங்களை மிகக் கடுமையான அறிவார்த்தத் தேடல்களில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார். 1921 ஆம் ஆண்டு நாவலாசிரியர் Andre Gide, வெலரியின் கவிதைகளை மறுபிரசுரம் செய்ய அனுமதி கேட்டபொழுது கவிதைத் துறைக்குத் திரும்பும் உத்வேகம் மீண்டும் கிடைத்து வெலரிக்கு. 1917இல் La Jeune Parqueஎன்ற நீண்ட மிகக் கடினமான கவிதையை வெளியிட்டு மிகக் குறுகிய காலத்தில் பிரபலமானார். 1922இல் Charmes  கவிதைத் தொகுதியை வெளியிட்ட பொழுது தன் இலக்கிய ஸ்தானத்தை ஸ்திரமாக்கிக் கொண்டார். தன் இறுதி வாழ்வின் இருபத்தைந்து வருட காலத்தை உரைநடை, உரைநடைக் கவிதைகள் எழுதுவதிலும், மறைவிக்குப் பின் வெளிவந்த Note Book ஐ எழுதுவதிலும் செலவிட்டார். பிரெஞ்சு அகாடெமிக்கு 1927 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ஆம் ஆண்டு College of France இன் chair of poetry பதவியில் அமர்த்தப்பட்டார். இதற்குள் ஐரோப்பிய இலக்கியவாதிகளில் மிகவும் மதிக்கப்பட்ட ஒருவராக ஆகியிருந்தார். அவர் எழுத்துக்கள் சமகால பிரெஞ்சு அறிவுலக வாழ்க்கையின் மீது பாதிப்பு செலுத்தின. மிகத்தகுதியாகவும், பொருத்த மாகவும் அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவ்விருதைப் பெறாமலேயே 1945ல் வெலரி காலமானார்.

பால் வெலரியின் கவிதைக் கோட்பாடுகள்

கவிதையில் சிந்தனையின் பங்கினைப் பிடிவாதத்துடன் வலியுறுத்திச் சொன்ன நவீன பிரெஞ்சுக் கவிஞர்களில் வெலரி முதன்மையானவர். டி. எஸ். எலியட் வெலரியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்:

” He is perpetually engaged in solving an insoluble puzzle – the puzzle of how poetry gets written” வெலரியின் பிரதான சாதனை எனக் கருதப்படுவது ”கவிஞன்” என்ற நபரைப்பற்றி அவர் உருவாக்கிய புதிய சித்திரம்: கவிஞன் ஒரு இலக்கிய விஞ்ஞானி ஒரே சமயத்தில் கனவு காண்பவனாகவும், algebraist ஆகவும் இருப்பவன். தன் கவிதைகளுக்கான காரணங்களையும் சொல்பவன். அவன் தன் கவிதையைத் தற்காப்பவன்.

நவீன கவிதைக் கோட்பாட்டின் மையமான முரண் வெலரியிடம் விளக்கம் பெறுகிறது. வெலரி கவிதையை Versdonnesஎன்றும் Vers Calcules  என்றும் பிரிக்கிறார். Vers donnes க்கு வெலரி அதிகம் சிறப்பளிப்பதில்லை. தானாகக்  கிடைப்பது, அல்லது தரப்படுவது என்று Vers donnes கவிதையைக் குறிப்பிட லாம். Vers Calcules என்பதே கவிஞனின் மெய்யான செயலாக்கம் என்றும், இத்தகைய கவிதைகளையே கவிஞன் உணர்ச்சிபூர்வ மாக ஆராய வேண்டும் என்றும் வெலரி கருதினார். Vers Calcules வகைக் கவிதையை புத்தியின் செயல்பாடு என்பது சரியாக இருக்கும். வெலரி இங்கு தனக்கு நேர்ந்த அனுபவத்தை அழுத்தமாகக் கூறுகிறார். அவருக்கு ஒரு சமயம் இசையின் உந்துதல் உணர்வு கிடைத்தது. இந்த உந்துதல் உணர்வை கலையாக்கும் அல்லது விரிவாக்கும் சக்தியும் திறனும் அப்போது அவருக்கு இருக்கவில்லை. இந்த மாதிரியான ஒரு ”கச்சாப் பொருளை”, அடித்து திருத்தி, எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பிரதிகள் வழியாக கவிதை உருப் பெறச் செய்யக்கூடிய சக்தி கவிஞனிடம் மாத்திரமே உள்ளது. முடிவற்ற முறைகளில் முழுமையாக்கப்படக்கூடிய, ஆனால் என்றைக்குமே முழுமையடையாத கவிதையையும், அதன் சொற்கள் பொருந்து முறைகளையும் தேடிக்கொண்டே இருப்பது கவிஞன் வேலை என்றார் வெலரி.

இங்கு பிரயோகமாகும் பிரக்ஞைபூர்வமான ”தேர்வு” மற்றும் ”கணக்கிடுதல்” பற்றியும் நாம் கவனமாக இருக்க வேண்டும். தேர்வின் மூலம் (Choice) ”குழப்பமான யதேச்சைத்தன்மை”யை கவிஞன் ”வெளிப்படையான நன்கு வரையறுக்கப்பட்ட யதேச்சைத்தன்மை”யாக மாற்றுகிறான். இதில் ”புத்தி”யின் செயல்பாடு கவிதையை வெறும் கனவு காணுதல் என்னும் வீழ்ச்சி நிலைக்குச் சரிந்து விடாமல் தடுக்கிறது. மேலும் அது கவிதைக்கு சுற்றுச்சுவர் போன்ற பாதுகாப்பளித்து, வேறு தவறான அறிவின் வகைகளிடமிருந்தும் வேறுபடுத்துகிறது.

கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் உருவாக்கும் படைப்புலகம் அதற்குள்ளாகவே முழுமையுற்றதாக முடியும் போது அங்கே Impersnolity உண்டாகிறது. அதாவது சுயத்தின் நசிவு நிலை. கவிதையிலிருந்து, அதை எழுதுகின்ற மனிதன் மறைந்துவிட வேண்டும். இங்கு ஸ்பெயின் நாட்டைச் சோந்த சமூக விமர்சகரும் தத்துவவாதியுமான Ortega Y Gassetவின் “de-humanisation of art” பற்றிய கருத்தாக்கத்தை நினைவுப்படுத்திக் கொள்வது அவசியம். எல்லாவிதமான அழகியல் தூய்மைப்படுத்தல்களும்  ”மனிதமை அற்றநிலை” யில் முடியும் என்றார் ஒர்த்தேகா. கவிதையில் கவிஞனின் தலையீடு இருக்கக் கூடாது. கவிஞனின் சோகத்திற்கு கவிதையில் இடமில்லை.    அப்படிக் கவிதையில் நேரடியாகக் கவிஞன் இடம் பெறுவானால் அது ”மனிதமை”யைக் உள்ளடக்கியதாகி விடும் என்கிறார் வெலரி: “I must declare myself inhuman” என்றும் கூறினார். கவிதைகளை எவ்வளவு சுத்தமாக உருவாக்க முடியுமோ அவ்வாறு செய்த பின் (இதை T.E. Hulme ‘Exact curve of the thing’என்பார்.) அவற்றை எழுதிய கவிதை பற்றிய குறிப்பீடு எதுவும் இல்லாமல் முழுமையான தனிமையில் விட்டுவிட வேண்டும். ஒரு கலைப்படைப்பின் நிரந்தரம் அதன் ஆசிரியன் என்ன நினைத்து உருவாக்கினானோ அதற்கு மாறாக அது இயங்கும் சக்தியில்தான் உள்ளது. ஆசிரியனின் நோக்கத்தைப் புறக்கணித்தல் என்பது வெலரியின் கோட்பாட்டுக்கு மிக மையமானது. மேலும் அக்கலைப் படைப்பு ”விளக்கம் அளித்தலை” (Interpretation) பொறுத்துக் கொண்டாலும், என்றுமே விளக்கத்திற்கு உட்படாததது. ஒரே சமயத்தில் வெலரி விளக்கம் தரும் விமர்சகர்களைக் கண்டனம் செய்வதோ டல்லாமல், கவிஞனின் கவிதை மீதான உரிமைகளையும் மறுக்கிறார். கவிஞன் சொல்வதில்லை. உருவாக்குகிறான். கவிதைக்கு அர்த்தம் என்பது இல்லை. அதற்கான வாழ்வு இருக்கிறது. இந்த இடத்தில் ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் எழுதிய ”கவிதைக் கலை” என்ற கவிதை நம் நினைவுக்கு வரும். மேக்லீஷ் கவிதை:

ஒரு கவிதை இருக்க வேண்டும்

உணர முடிவதாய்

உருண்டு திரண்ட பழம் போல மௌனமாய்

பேச்சற்று

புராதனப் பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்

பாசி வளர்ந்து படிந்த

கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்

போல மௌனமாய்

ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்

பறவைகளின் பறத்தல் போல

நிலா உயர்வதைப் போல்

காலத்தினுள் கவிதை இயக்கமில்லாதிருக்க வேண்டும்

இரவு பின்னலிட்ட மரங்களை குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா

விடுவிப்பது போல,

ஒரு கவிதை இருக்க வேண்டும்

உணர முடிவதாய்

உருண்டு திரண்ட பழம் போல மௌனமாய்

பேச்சற்று

புராதனப் பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்

பாசி வளர்ந்து படிந்த

கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்

போல மௌனமாய்

ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்

பறவைகளின் பறத்தல் போல

நிலா உயர்வதைப் போல்

காலத்தினுள் கவிதை இயக்கமில்லாதிருக்க வேண்டும்

இரவு பின்னலிட்ட மரங்களை குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா

விடுவிப்பது போல,

பனிக்காலத்து இலைகளின் பின்புறமிருந்து நிலா

ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல

ஒரு கவிதை காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்

நிலா உயர்வது போல்

ஒரு கவிதை சமானமாய் இருக்க வேண்டும்

நிஜத்திற்கு இணையாய் அல்ல

எல்லாத்துயரத்திற்கும்

ஒரு வெற்று வாசலைப் போல

மேப்பிள் மர இலையைப் போல

காதலுக்கு

தலைசாயும் புற்கள் மற்றும் கடலுக்கு மேலாக இரண்டு வெளிச்சங்களைப் போல

ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது

கவிதையாக இருக்க வேண்டும்

கவிதைகளை உரத்து வாசிக்கும்போது அவற்றின் அர்த்தங்களை தவறாக்கிவிடாமல் வாசிக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் வெலரி எழுப்புகிறார். கவிதைகள் சொற்களை பயன் படுத்துகின்றன. இதன் காரணமாக உண்டாகும் பிரச்சனைகள் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே கவிதைக் கோட்பாடுகளைப் பின் தொடர்ந்து வருகின்றன. கவிஞன் இன்றொரு புராதன உருவமாகக் காட்சி தருகிறான்- மொழி எந்தெந்த நோக்கங்களுக்கு துல்லியமாகப் பொருந்த வில்லையோ அவற்றுக்கும் கூட பயன்படுத்தியபடி. நவீன காலத்தில் கவிதை தன் வாழ்வை காப்பாற்றிக் கொண்டது சற்று அதிர்ஷ்டவசமான செயல் என்று வெலரி நினைத்தார். வியர்த்தமான உணர்வுகள் மேலோங்கி நிற்கிறபோதும் கவிதை எழுதுவதைத் தொடர்வது பயனுள்ள காரியமே. ஏனெனில் எப்போதாவது ஒரு மனிதன் ஒரு கவிதையின் மதிப்பீடுகளுக்கு  உணர்வுபூர்வமாய் எதிர்வினை தந்து, நவீன உலகம் மறந்து போய்க் கொண்டிருக்கிற இனிமையான நவீன அனுபவ மொன்றில் பங்கேற்கலாம்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் கவிதைத்துறையில் மொழியைக் கையாள்வது கொஞ்சம் அசாத்தியமான செயலாகத் தோன்றுகிறது. தினசரி வாழ்வின் மொழி என்பது பிரதானமாய் நடைமுறை சார்ந்தது: முடிவற்ற மாறுதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருக்கிறது. அசுத்தமடைகிறது: இருக்கும் துல்லியத்தையும் இழந்த வண்ணம் இருக்கிறது. எல்லா வேலைகளையும், காதுகளை உறுத்தாத, மிகவும் உறுத்தாத, ”மிகவும் எளிதில் சிதைந்து விடக்கூடிய கவித்துவ பிரபஞ்சத்தை உடைத்துவிடாத”, கவிஞனின் சுயத்தை விட அதீத சுயம் கொண்டதான ஒரு மொழியை உருவாக்க வேண்டும் என்றார் வெலரி. கவிஞனின் மொழிப் பயன்பாட்டை non   usage என்று குறிப்பிட்டார். இங்கு அவரின் பிரபலமான ஒப்புமையைப் பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும். கவிதையின் தனித்துவ குணாம்சத்தையும், மதிப்பீட்டையும் அழுத்தமாகக் கூறவே இந்த ஒப்புமையை வெலரி உருவாக்கினார். உரைநடையை நடப்பது என்னும் மனிதச் செயலுக்கு ஒப்பிடலாம். கவிதையை நாட்டியத்திற்கு ஒப்பிடலாம். ஆனால் கவிதைக்கும் உரைநடைக்கும் இடையிலான முழுமுற்றான தொடர்ச்சியின்மை சர்ச்சைக்குரியது. ஆங்கில இலக்கிய உலகிற்கு வெலரியை அறிமுகப்படுத்தக் காரணமாக இருந்த எலியட் இந்த ஒப்புமையை ஏற்கவில்லை. வெலரியைப் பொருத்தவரை உரைநடை ஒரு கருவியைப் போன்றது. தன் செயலில் முடிவு கொண்டது. ஆனால் கவிதை நாட்டியத்தைப் போல தனக்கு வெளியில் எந்தப் பயனையோ, முடிவையோ கொண்டிருப்ப தில்லை. usage என்பதிலிருந்து non-usageக்கு மொழியைக் கொண்டுவரும் முறையை சில சமயங்களில் வெலரி ”இசைமய மாக்கல்” என்று அறிவித்தார். ஆனால்  இந்தக் கோட்பாடு புதியதல்ல. பழைய ரொமாண்டிக்-சிம்பலிஸ்ட் இயக்கக் கவிஞர்கள், கவிதையை இசையைப் போல ஆக்க வேண்டுமென்று கொண்டிருந்த பேராவலையே வெலரி இங்கு தெளிவாக்கி, கூர்மைப்படுத்துவதாகத் தெரிகிறது.

இசையின் கருத்து வெளிப்பாட்டுச் செயலை (discourse)  இசை அல்லாத கருத்து வெளிப்பாட்டுச் செயல்களுடன் குழப்பிக் கொள்ள முடியாது. ஆனால் கவிதையின் மொழி அக்கவிதை எந்த நாட்டில் எழுதப்படுகிறதோ அந்நாட்டின் பொது மொழியுடன் குழம்பிப் போவதற்கு சாத்தியங்கள் ஏராளமாய் உள்ளன. ஆனால் இசையை நம்மால் இயற்கையான சப்தங்களிலிருந்து வேறுபடுத்தி உணர முடியும். வெலரியைப் பொருத்தவரை கவிதைகள் ஓசைமைக்குள் ஒன்றுபட வேண்டும்-புறவயக் குறிப்பீடுகளின் உதவியின்றி. மேலும் இசைக்கலை தவிர, வெலரி கட்டிடக்கலையைப் பார்த்தும் பொறாமை கொண்டார். பார்வைக்குத் தெரிந்தபடி, தேய்மானங்களைச் சரிசெய்துவிட முடியக்கூடிய வடிவங்களாக, காலத்திலிருந்தும் பெருமளவு விடுதலை யடைந்து நின்றது கட்டிடக்கலை.

மல்லார்மே (Mallarmae) வைப் போலவே, விரும்பத்தகுந்த கவிதையின் மிகத் திருப்தியான முத்திரையை நாட்டியத்தில் கண்டார். வெலரி தன் Dialogues நூலில் மீண்டும் மீண்டும் நாட்டியமாடுபவரின் பிரதிமைக்குத் திரும்பினார். ரிச்சர்ட் வேக்னருக்குப் பிற்பட்ட கவிதைக் கோட்பாட்டின் சாரம்சத்தை Dialogues நூலில் காணலாம். நவீன கவிதைக் கோட்பாடுகளுக்கு பாரிஸ் நகரின் நாட்டியக்காரர்கள் பெரிதும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஆனால் வெலரி நாட்டியமாடுபவரின் முத்திரை அல்லது சின்னத்தைத் தனக்கு உகந்த வகையில் மாற்றம் செய்து கொண்டார். இரவில் விளக்குகளுடன் நாட்டியமாடும் கலைஞர்களின் புகைப்படங்களின் தொடர் ஒன்றினைத் தன் மன விருப்பப்படி அமைத்தார். அவை பல வெள்ளைக் கோடுகளின் சுழற்சியினால் அமைந்த ஒரு அமைப்பைக் கொண்டிருந்தன. இந்த அமைவு பல நோக்கமற்ற கவிதைச் செயல்களின் அமைவுகளை நினைவூட்டியது.

இயல்பெழுச்சியை(spontaneity)மறுத்து,பிரக்ஞை பூர்வமானதும், திட்டமிட்டுச் செய்யப் படுவதுமான கவிதையாக்கல் முறை பற்றிய கருத்துக்கள் அவரின் ஏனைய சிந்தனைகளைப் போலவே முரண்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றன. திறன்கவிதை பற்றி (Skilled Verse) வெலரி பின்வருமாறு எழுதினார் :

”ஆழ்ந்த நம்பிக்கையின்மைவாதியின் கலை, நம் எல்லாக் கருத்துருவங்கள் மற்றும் உணர்வுகள் குறித்து அது ஒரு மாபெரும் சுதந்திரத்தை முன்தேவை ஆக்குகிறது. கடவுளர்கள் தம் பெரும் கனிவில் எப்போதாவது ஒரு முதல் வரியை இலவசமாக தருகிறார்கள்: முதலாவதின் ஓசையுடன் ஒருங்கிணைந்து ஒலிக்கும் படியும், இயற்கை கடந்த அவ்வரிக்கு தகுதியில் குறைவில்லாதபடியும் இரண்டாவது வரியை உருவாக்குவது நம் பொறுப்பு. பரிசு எனத் தரப்பட்ட வரியுடன் ஒப்பிடப்படும் அளவுக்கு இரண்டாவது வரி எழுதப்பட, மனம் மற்றும்  அனுபவத்தின் எல்லா சேகரங்களும் அதிகபட்ச மானவையல்ல.”

இந்த மேற்கோள் வரிகளில் தொனிக்கும்  நம்பிக்கையின்மையில் கடடாயம் ஏதுமில்லை. மாறாக, விவாதிப்பதற்கும், அறிவார்த்த மாக்குவதற்கும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரமும், திறந்த மனமும், கவிதையின் விநோதக் கோரிக்கைகளுக்குத் தேவையாகும் என ஒருமையும் சேர்த்து நமக்கு ஒன்றைத் தெரிவிக்கின்றன. இயல்பெழுச்சி ”மனம் மற்றும் அனுளபவத்தின் எல்லா சேகரங்களும்” என்று குறிப்பிடும் போது வெலரி இயல்பெழுச்சி பற்றி உணர்ந்திருக்க வேண்டும். மேற்கோளின் இந்த வரிகள் “எழுதுவது” writing என்ற செயலின் நனவிலி unconscious அம்சங்களுக்கு மறைமுக பாராட்டுதலாய் அமைகின்றன. இந்த விஷயத்தை மறைமுகமாக வைக்கவேண்டிய அவசியம்? ஒரு சிந்தனையாளன் என்ற வகையிலும், விமர்சகன் என்ற முறையிலும் நனவிலி பற்றி வெலரிக்கு அச்சம் இருந்தது. கவிதையைப் பற்றி வெலரியின் வரையறை:

“a kind of machine for producing the poetic state of mind by means of words.”

(Poetry and Abstract Thought. p. 79)

யந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுபவை. குறிப்பிட்ட வகையில் நிர்மானிக்கப்பட வேண்டுமென்று தயாரிக்கப்படுபவை. எனி னும் வெலரியின் கவிதை மீதான ஈடுபாடு உணர்ச்சி மிக்கது. தர்க்கவியலாளனைப் பற்றியும், கவிஞனைப்பற்றியும் 1939 ஆம் ஆண்டு Oxford Lectrue இல் பேசும் போது, அரூப சிந்தனையும் கவிதையும் ஒத்துபோகக் கூடியவையே என்று வாதிட்டார். ”ஒவ்வொரு மனிதனும் தன்னுடையதைத் தவிர பல வேறு வாழ்வுகளை வாழமுடியாமல் போகும்” என்று தான் நிஜமாக நம்புவதாகவும் கூறினார். வெலரியின் முதல் கட்டக் கவிதைகள் தந்த ”முகமூடிகள்” அவரின் வாழ்வைத்தவிர, பிறர் வாழ்வுகளையும் கற்பனையில் வாழ ஏதுவாக்கின. இதற்கு மேலும், தன் உரைநடை எழுத்துக்களில், தர்க்கக்காரனையும் (Logician)யும் கவிஞனையும் ஒன்றுபடுத்தி விவாதிக்கிறார். அவருக்குள் இருக்கும் தர்க்கக்காரன், அரூப சிந்தனையாளனுடன் சில நேரங்களில் முரண்பாட்டால் இந்த முரண்பாட்டையும் வாழ்க்கைச் சரித்திரத்தை வைத்து புரிந்து கொள்ள முடியும் என்கிறார். இந்த சுயமுரண்பாடுகள், அரூப சிந்தனையாளனும், கவிஞனும் எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரியாக இருக்கவில்லையோ அந்த இடங்களில் தோன் றுகின்றன. ஆனால் வெலரியின் பிறர் வாழ்வுகள் பற்றிய குறைவான அறிதல் அவரை கலைஞன் மற்றும் அரூப சிந்தனையாளன் என்பதற்கும் அப்பாற்பட்டு செல்ல அனுமதிக்கவில்லை. இந்த அம்சம் அவருடைய எழுத்துக்களை எல்லைப்படுத்துகிறது.

வெலரியின் கவிதையிலும், உரைநடையிலும் பிறர் வாழ்வுகள் பற்றிய அறிதல் எல்லைக் குட்பட்தாயிருந்தது என்று கூறினோம். அவர் Oxford Lecture இல் கூறியதைப் போலவே இதற்கான காரணத்தையும் ”வாழ்க்கைச் சரிதம்” மூலம் கண்டுபிடிக்கலாம். மல்லார்மே இலக்கிய அந்தஸ்தின் உச்சத்தில் இருந்த போது பல இளம் கவிஞர்கள் மீது பாதிப்பு செலுத்தினார். பாரிஸ் நகரில் செவ்வாய் மாலைக்கூட்டங்களில் மல்லார்மேவைப் பார்க்கச் சென்றார் இளம் வெலரி. சிம்பலிசக் கவிஞர்கள் எல்லாருமே பொதுவாகக் கொண்டிருந்த யதார்த்தத்தின் மீதான அதிருப்தியை வெலரியும் அப்போது பகிர்ந்து கொண்டார்.

1892ஆம் ஆண்டு தன் இருபத்து ஒன்றாவது வயதில் வெலரி கவிதை எழுதுவதைக் கைவிட்டார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது: ”லட்சிய” கவிதையை சிருஷ்டிக்கும் பயணத்தில் மல்லார்மே நெடுந்தொலைவு சென்றுவிட்டார் என வெலரி நம்பினார். வெலரியின் ஆரம்பகாலக் கவிதைகள் புத்தி பூர்வமாய் இல்லாமல், உணர்ச்சியைச் சார்ந்தவையாய் இருந்தது இரண்டாவது காரணம் : கவிதை எழுதுவதைக் கைவிட்ட பிறகு தன் கவனங்களை கருத்துதுருவங்களின் உலகினை ஆராய்வதற்குத் திருப்பினார்.

தத்துவம், கணிதம், இயற்பியல் போன்ற துறைகள் அவரை ஈர்த்தன. இப்படிப்பட்ட ஈடுபாடுகளால் சுமார் 20 வருட காலத்திற்குப் பொது வாழ்விலிருந்தும், கவிதை எழுது வதிலிருந்தும், யதார்த்தத்திலிருந்தும் தன்னை முற்றிலுமாய்த் துண்டித்துக்கொண்டார். எனினும் இந்த காலகட்டம் சிருஷ்டியற்றதெனக் கூறிவிட முடியாது. இந்த காலகட்டத்தில் இரண்டு குறிப்பிடத் தகுந்த உரைநடை நூல்களை வெலரி  எழுதினார். 1894ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Monsieur Testeஎன்ற நூல் ஒன்பது பகுதிகளைக் கொண்டது. M.Teste என்ற பாத்திரத்தை இந்த நூலில் உருவாக்கினார். பங்ள்ற்ங் என்ற பெயர் பிரெஞ்சு வார்த்தையான ”தலை” என்பதிலிருந்து பெறப்படுவது. M.Teste என்ற இந்த மனிதன் சக்தி வாய்ந்த அறிவைக் கொண்டவன். மனித மனம் இயங்கும் விதங்களின் விதிகளை முதன் முதலாகக் கண்டுபிடிக்கிறான். Testeவும் முற்றிலுமாய் தினசரி வாழ்வின் யதார்த்தங்களில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டவன். Testeவை முற்றிலும் வெலரியுடன் ஒப்புமைப்படுத்துவது முடியாதெனினும் கூட, வெலரியின் யதார்த்தத்திலிருந்து விலகல் மற்றும் அறிவுவாத தியானங்கள் போன்றவை பங்ள்ற்ங் வுக்கு அளிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. 1920இல்  வெளியிடப்பட்ட கவிதை ஒன்று இந்தக் காலகட்டத்தின் மனோ நிலையைச் சிறப்பாக விளக்குகிறது.

மகிழ்ச்சிக்குள் கனி கரைகையில்

ஈர்த்து இன்பமாய் மாறும்போது

வாயில் அங்கு அதன் இருத்தல் இல்லாமல் ஆக

சாம்பலும் தூசியுமாய் நான் ஆவேன்

எனும் முன் ருசியை அவ்வாறே அறிகிறேன்

நான் இங்கு

(Le Cimeterie Marin)

Teste என்ற பாத்திரத்திற்கும், அதன் படைப்பாளனுக்கும் வாழ்வின் உணர்ச்சி சார்ந்த பகுதி, யதார்த்தத்தினோடு தொடர்பு, புலன் உணர்வுகளின் உலகுடன் ஆன தொடர்பு போன்றவை என்றென்றைக்குமாக கைவிடப்படவோ, அடக்கப்படவோ முடியாது என்பது தெரிந்தது.

1895ஆம் ஆண்டு எழுதப்பட்ட உரைநடை நூல் Introduction to The Method of Leonardo da Vinci. இந்த நூலுக்கு இருபத்தைந்து வருடங்கள் கழித்து ஒரு முகவுரை எழுதினார். இந்த முன்னுரை கள் அவற்றின் உள்ளார்ந்த தகுதிகளுக்கு மேல், அவை பால் வெலரியின் முறைமைகளுக்கே (methods) முன்னுரைகளாக  அமைகின்றன. இவை இயங்கு முறை மற்றும் அறிவுபூர்வமான செயல்பாடு ஆகியவை பற்றிய பிரத்யேகமான முன்மாதிரிக ளை ஸ்தாபிக்கின்றன. இவற்றை வெற்றிகரமாக அடைதலின் சாத்தியமின்மை பற்றிய தொடச்சியான பிரக்ஞை இருந்த  போதிலும் கவிஞன் எப்போதும் அதற்கான அதீத முயற்சிகளைச் செய்து கொண்டேயிருப்பான்.

தன் இருபது வருட கவித்துவ மௌன காலத்தில் மனக்குலை வும், தீர்மானமின்மைகளும் இருந்தன  என்பதைப் பின்னர் வெலரி ஒப்புக் கொண்டார். இப்படிப்பட்ட மனோ நிலைகள், அவர் மேற்கொண்டது போன்ற அதீத அறிவார்த்த நிலைப்பாட்டின் விளைவுகளேயாகும். நம்பிக்கையின்மையும் கூடவே தொடர்ந்து வந்திருக்கிறது. எனினும் 1921 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாலாசிரியர் Andre Gide, வெலரி தன் கவிதைகளைத்  தொகுத்து வெளியிட வேண்டும் என்று வேண்டிய பிறகே கவிதைகளைத் தொகுக்க வேண்டும் என்ற  உணர்வு வெலரிக்கு ஏற்பட்டது. மேலும் இந்த முடிவு அவருக்கு வேறு ஒரு கண்டுபிடிப்பையும் தந்தது. அவருக்கு மிக முதன்மையாய்த் தோன்றிய இரண்டு செயல்பாடுகளான கவிதையும் அரூப சிந்தனையும் அவர் முன்பு எண்ணியிருந்ததைவிடத் தற்போது மாறுபாடுகள் குறைந்து தெரிந்தன.

1880களில் மல்லார்மே இருந்ததுபோல அல்லாமல், வெலரி யதார்த்ததிற்குத் திரும்பினார். தனக்குள்ளாகவே இயங்குவதற்கு முடுக்கி விடப்பட்ட மனம் அப்படியே இருக்க முடியாது என் பதை உணர்ந்து கொண்ட வெலரி, புலன் உணர்வுகளின் உலகின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டார். மல்லார்மே தன் கவிதை என்ற ஊடகத்தின் வழியாக நிர்மானிக்க நினைத்த ”லட்சிய” உலகம் பற்றிய இலக்கைக் கடைசியில் கைவிட்டார். வெலரியின் விநோதமாய்ப் தூர விலகி நின்ற மனம் யதார்த்தத்தின் பால் ஈர்க்கப்பட்டதைவிட, யதார்த்தத்திற்கு மீண்டது என்றும் நிஜத்தின் பால் ஈர்க்கப்பட்டது என்றும் சொல்வதே சரியாக இருக்கும்.

1912ஆம் ஆண்டிற்குப் பிறகு உணர்வுகள் நிறைந்த உலகின் அனுபவத்தாக்குதல் வெலரியின் மீது அதிகரிக் தொடங்கியது.  வெலரியின் உணர்வுகளால் ஆன சுயம் (emotional self) இயங்குவதை அவரின் அறிவார்த்த சுயம், விலகி அப்பால் நின்று கவனிக்க முடிந்தது. தேவையான சமயங்களில் உணர்வின் சுயத்துடன் இணைந்து செயலாற்றி, அதன் போக்கைக் கட்டுப்படுத்தி, சில குறிப்பிட்ட வழிகளில் திசைப்படுத்தவும் செய்தது. 1917க்கும் 1922க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பான Charmes,, பல வேறு கோணங்களில், சிக்கலான பிரச்சனையான மனம்-உடல் இரண்டும் இணைந்து படைப்பின் ஆக்கமுறைக்கு  (creative  process)பங்களிப்பு செய்கின்றன என்பது பற்றிய கவிதைகளும் Charmes  தொகுதியில் உள்ளன. ஒரு விதத்தில் இந்த முழுத் தொகுதியும் Poetic Artஎன்று கூறப்படும் அளவுக்கு இருக்கின்றன. மேலும் அவை கவிதை எவ்வாறு எழுதப் படுகிறது என்கிற முறைமை பற்றிவையாகவும் அமைந் திருக்கின்றன. ‘Hour’, ‘Eqiunox’ ‘Show’ போன்ற கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கவிதைக்கு வெளியில் வெலரி ஒரு word-scepticஆக இருந்தார். கலை வெளிப்படுத்த விரும்பிய அதீதத்தன்மை பற்றிய அதே பிரக்ஞையிலிருந்து தோன்றியதுதான் ”சொற்களைச் சந்தேகிக்கும் தன்மை”. சொற்களின் தப்பிக்கவியலாத சாதாரணத்துவ த்தை வெளிப்படுத்த கலை முயலும் போதும் word-scepticism தோன்றுகிறது. இந்த நிலையை ”வார்த்தைகள் வெளிப்பாடு செய்யக் கூடுமானால்” வெலரியின் Le Solitarie தன் இருப்பிடம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறான்:

”அது அதிகமாக இருக்காது. சொல்லப்படக் கூடியது எல்லாமே வெறுமை. வெளிப்படுத்தக் கூடியதை வைத்துக் கொண்டு மானுடர்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். எல்லாமே மிகச் சிறப்பாக. அவர்கள் அதை கீழ் மையான நாணயங்களாக மாற்றுகிறார்கள்: துல்லியத்தைக் காப்பாற்றாத கருவியாக: ஒரு ஏமாற்றும் கவர்ச்சியாக: சுரண்டலுக்கும் ஆள்வதற்காக சிக்க வைக்கும் ஒரு பொறியாக, யதார்த்தம் முழுமுற்றாய்ப் பரிமாற்றம் செய்யப்பட முடி யாதது..”

தூய கவிதையின் (Pure Poetry) விசுவாசமான, நேர்மையான கவிதைக் கோட்பாட்டாளராகவும் இருந்தார் வெலரி. இருப் பினும் தன் சுயமுரண்பாடு காரணமாக 1928 இல் இவ்வாறு அறிவித்தார்.

“Pure Poetry is in fact a fiction deduced from observation”

016

*
இந்தக் கட்டுரை மீட்சி இதழ் 31இல்(ஜுலை 1989) வெளிவந்தது

Advertisements