ஜாஸ் இசை-சில குறிப்புகள்/ Jottings on Jazz for the Tamil audience/Brammarajan

ஜாஸ் இசை-சில குறிப்புகள்

பிரம்மராஜன்


piano-gatoமுதல் உலகப்போருக்கு முந்தைய வருடங்களில் நடந்த இசைத்துறையின் வளர்ச்சியில் ஒருவித அவசரமும் மாறுதல் குறித்த பதற்றமும் காணப்பட்டது.  காலமே முடிந்துவிடப் போகிறது என்பது போன்ற பிரக்ஞையுடன் சாகித்தியகர்த்தாக்கள் செயல்பட்டனர்.  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கலைத்துறைகள் அனைத்துமே தொழில் துறையின் கண்டுபிடிப்புகளால் பாதிக்கப்பட்டன.  டி.வி,  கம்ப்யூட்டர்கள், ஜெட் விமானங்கள்  DDT  பூச்சிகொல்லி, ஜெராக்ஸ் என தினசரி வாழ்வின் ஒவ்வொரு பக்கமும் தொழில் நுட்பத்தினால் மாற்றமடைந்து கொண்டிருந்தது.  எல்லா வற்றுக்கும் மேலாக இசை வடிவத்தின் பொதுவான களத்தில் புதிய உருவாக்கல்கள் நடந்து கொண்டிருந்தன.  ஒரு ட்யூனின்  ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கான அர்த்தமுள்ள நகர்வு, முதல்கள்-மத்தியங்கள்-முடிவுகள் ஆகியவை கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. ஒரு ஒலி மற்றொன்றைத் தொடரும் விதம், மற்றொன்று பிறவற்றிற்கு முன்பாக இடம்பெறும் விதம் போன்றவை எந்த காரண ரீதியான அடிப்படையிலும் இயங்கவில்லை என்ற வாதங்களை, இசைக் கேட்பாடுகளை உருவாக்கிய இந்நாள் இசைக்கலைஞர்கள் கேட்கத் தொடங்கினர்.  ஒரு இசை ஏன் இசையாக இருப்பதற்குப் பதிலாக மௌனமாக இருக்கக் கூடாது என்ற கேட்டார்  John Cage என்ற அமெரிக்க சாகித்யகர்த்தா.

வினோதமான படைப்புகளில் ஈடுபடுவதை விட்டு விட்டு ஒரு இசைக்கலைஞன் ஏன் சாதாரணமான ஒரு ட்யூனை – எல்லோரும் ரசிக்கக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய – எழுதக் கூடாது? இந்தக் கேள்விக்குப் பின்னால் கலைக்கும் தப்பித்தலுக்கும் இடையில் உள்ள குழப்பம் தெளிவாக்கப்படாது நிலவியது. யதார்த்தங்களில் ஈர்ப்பற்ற உறுத்தலான தன்மையிலிருந்து தப்பிக்காது அவற்றின் மீதான அவசியமான விமர்சனமாகவே இசை இருக்கவேண்டும் என கலைஞர்கள் விரும்பினர். சரி, வாழ்க்கை அவ்வளவு உவப்பில்லாமல் இருந்தால், யாருக்கு வேண்டும். அதே உவப்பில்லாத வாழ்வை பிரதிபலிக்கும் இசை. இந்தக் கேள்விக்கு இரண்டுவிதமான பதில்கள் உண்டு.

1. மனிதப் பிரக்ஞையின் ஆழமானதும், அத்தியாவசியமானதுமான தேவைகளை இசை பூர்த்தி செய்கிறது என்ற அடிப்படை உண்மை – மனிதன் கலையை உருவாக்கவும் அதை நுகரவும் வேண்டும்; விளையாடவும் காதல் செய்ய விரும்புவதும்போல.

2. கலை எந்தவித சிக்கலான காலகட்டத்திலும் வியக்கத்தகுந்த அளவுக்கு தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. கலை ரீதியான ஒவ்வொரு புரட்சிக்குப் பிறகும் எதிர்பார்க்கமுடியாத கலாநிகழ்முறைகளும் அசிங்கத்திலிருந்து புறப்படும் அழகுகளும் தோன்றுகின்றன. ஒரு சைக்கிள் சீட்டையும், ஹாண்டில்பாரையும், வைத்து பிக்காஸோ உருவாக்கிய ‘சிற்பம்’ நமக்கு ஞாபகம் வரும்.

20 ஆம் நூற்றாண்டு இசையின் மிக முக்கியமான புரட்சி என்பது உருவ சிதைப்புக்கும் (distortion) அப்பாற்பட்டு  உருவான புதிய இசை மொழி, எலக்ட்ரானிக் இசை சகாப்தத்தை தொடங்கிய Stockhausen (ஜெர்மனி) John cageம்  தொழில் நுணுக்க ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ரொமான்டிசிசம் பயன்பட்டு தீர்ந்துவிட்டது என்பதை உலகுக்கு தமது புதிய சாகித்தியங்கள் மூலம் அறிவித்தனர். மேலும் ‘யதேச்சை இசை’ Random music என்ற ஒரு தீவிர எல்லையில் ஜென்புத்த தத்துவத்தை இணைத்து சம்பிரதாய விமர்சகர்களை சவாலுக்கு இழுத்தவர்  Johncage. இசை ‘யதேச்சை இசை’ என்பது ஏறத்தாள நவீன ஓவியம் போன்றது. அதன் படைப்பாளனே மீண்டும் அந்த இசையை நடத்தும்போது, அது மாறி ஒலிக்கவேண்டும். இந்த randomness மிக அதிக அளவில் ஜாஸ் இசையில் இருக்கிறது. 1910களில் பாப்புலர் இசையாக தொடங்கியது ஜாஸ். ஜாஸின் மறுபெயர் எல்லையற்ற சுதந்திரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதனுடன்  இணையும் எதனையும் தனது அங்கமாக மாற்றிக்கொண்டுவிடும். குறிப்பாக கறுப்பு இசைக்கலைஞர்களிடையே வளர்ந்து பிரபலமாகிய ஒரு இசை நிகழ்த்து முறையிலிருந்து ஆரம்பம் கண்டது. ஜாஸின் லயம்  (rhytham) Ragtime என்ற பியானோ இசையிலிருந்து பெறப்பட்டிருக்கிறது. Scot Joplin என்ற இசைக்கலைஞரால் பிரபலமாக்கப்பட்டது ragtime. இதற்கு ஜாஸ் கொடுத்த முக்கிய பங்களிப்பு swingம் improvisation. ஜாஸ் குழுவின் தனி இசைக்கலைஞர் soloist ஒரு பாடலை அவருக்கு எழுதி தரப்பட்ட மாதிரி வாசிப்பதில்லை. பாடலைச் சுற்றி அந்தக் கணத்தில் தோன்றும் கற்பனைகளை வைத்து improvise செய்து, பாடலின் பிரதான ஸ்வரங்களை பளிச்சிடச் செய்து, அதே சமயம் தனது சேர்ப்புக்களையும் பாடலுடன் இணைத்து விடுகிறார் அவர். அவருக்குத் தரப்பட்ட இசைக்குறிப்பின் மாறுபாடுகளை (Variations) சுய எழுச்சியுடன் அவர் வாசிக்கிறார்.

ஜாஸில் பியானோ, ஆர்கன், Vibraphone,  guitar மற்றும் கீழ் ஸ்தாயி நரம்பிசை கருவிகள் (string bass)  ஒரு பாடலின் அடிப்படை harmonyயை பின்னணியில் வாசிக்கின்றன. ஜாஸ் பிரத்தியேகமான நிகழ்த்துமுறையென்று முன்பே குறிப்பிட்டோம். இந்த நிகழ்த்து முறை பிரதானமாய் வாத்தியக் கருவிகளுக்கானது. இரண்டாம் பட்சமாய்த்தான் குரல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆயினும் வியப்பாய் இருப்பது என்னவெனில் ஜாஸின் அடிப்படை இசைபொருள், குரலிசையிலிருந்து ஸ்சுவீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். ஜாஸ் கலைஞர்கள் தங்கள் அடிப்படை பொருட்களை கறுப்பு மற்றும் வெள்ளையர்களால் பாடப்பட்ட இசை ஆதாரங்களிலிருந்து எடுத்தாள்கின்றனர். இதில் இரு பிரதான தோற்றுவாய்கள் Popular song மற்றும் Blues. Blues என்பது தனிவகையான கறுப்பு நாடோடிப் பாடல். இந்த Blues தனிமையை, கைவிடப்படுதலை, இன்னல்களை, சோகங்களை வெளிப்படுத்திய இசை மனதைக் கரைக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஜாஸ் இசைத்தட்டுக்கள் blues ஐ வைத்து உருவாக்கம் கண்டவைதான். கறுப்பர்களின் புலம்பல் பாடல்களில் இருந்த தனித்துவமான பண்ணமைப்பினை சாஸ்திரீய ஜாஸ் ஸ்வீகரித்திருக்கிறது.

மேற்கின் சாஸ்திரீய இசையின் Mozart அல்லது Bramhsஇன்  இசைப்பொருள் (theme)மெலிதாகக் கோடி காட்டப்பட்டு, பின்னர் அதன் முன்னேறும் பகுதிகளால் Movements  மாறுபடுத்தப்படுகிறது. இதற்கு எதிர்மாறானது ஜாஸ்.

இதற்கு மாறாக ஒரே பாடலைத் தனித்தனி இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்கள், தனித்தனியாக வேறுபடுத்தியும் எல்லோரும் இணைந்து பிறகு வேறுபடுத்தியும் இசைப்பார்கள். உச்சமான கோரஸ் பகுதி பாடலின் Polyphony எனும் பலதள இசையை பாதுகாத்து தருகிறது. ட்ரம்பெட் சந்தோஷமான பிளிறலைப்போல தொடங்குகிறது. மேலும் கீழுமாய் பாடலின் துரிதமான இசைப்பகுதிகளைப் பாடுகிறது கிளாரினெட். ட்ராம்போன் மற்ற இசைக்கருவிகளைக் கோர்த்து ஒருவித அணிவகுப்பு போன்ற துணை ஸ்ருதிகளைத் தருகிறது. இவை யாவற்றையும் ஒரு மந்திரம்போல அடிப்படை இசைக்கோர்வையுடன் இணைகிறது-பியானோ, ட்ரம்ஸ், பான்ஜோ மற்றும் கிட்டார்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை ஜாஸ் Swing  என்றும் Boogie என்றும் Bebop என்றும் Modern Jazz என்றும் பலவிதமாக விரிவடைந்திருக்கிறது. பல சமயம் குழப்பமூட்டும் வகையில். பாப்புலராக களிப்பூட்டும் நிகழ்ச்சியாக தொடங்கிய ஜாஸ் இன்று மிகக் கூர்ந்து கேட்டு ரசிக்கும் தனிக்குழுக்களுக்காக என்று ஆகிவிட்டிருக்கிறது. இன்று ஜாஸ் கேட்பது ஒரு intellectual exercise என்று ஒரு இசை விமர்சகர் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவகையில் சொல்வதானால் ஜாஸ் சாஸ்திரீய இசையின் நிலையை எட்டிவிட்டது.

div021

P.S.

I wrote these jottings in MEETCHI-35(1991). Today I might want to write in detail especially where the notes are a bit stubby. In fact I would want to write a separate essay on the experimentation of John Cage. I felt very much impressed after reading Coming Through Slaughter-Michael Ondaatje’s disturbing novel based on the real life of the jazz pioneer Buddy Bolden. It focusses on the last months of his sanity. Ofcourse there are no extant recordings of  Buddy Bolden to listen to. When I enter this area of music I am distracted. Should I also improvise?

38

Advertisements