Jose Saramago’s Ricardo Reis/ஜோஸ் சாரமாகோவின் ரிக்கார்டோ ரெய்ஸ்/பிரம்மராஜன்

saramago_josebw

ஜோஸ் சாரமாகோவின் ரிக்கார்டோ ரெய்ஸ்

(The Year of the Death of Ricardo Reis–Jose Saramago)

பிரம்மராஜன்

நாலு வருடம் பதினோரு மாதங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாக ஒரு நூறு வருடத் தனிமை நாவலின் விவரணையாளர் தெரிவிக்கிறார்(மார்க்வெஸ்?). இதற்கு முன்னரே இத்தகையதொரு மழையனுபவத்தை Monologue of Isabel Watching it Rain in Macondo என்ற சிறுகதையில் சற்று சுருக்கமாக விவரித்திருக்கிறார். இதற்கு ஒப்பானதொரு மனோநிலையையும் வெளிச்சூழ்நிலை களையும் மற்றொரு நவீன நாவலில் பார்க்க முடியுமென்றால் அது ஜோஸ் சாரமாகோவின் ரிக்கார்டோ ரெய்ஸ் இறந்த வருடம் The year of the death of Ricardo Reis (1984) என்ற நாவலாகத்தான் இருக்க முடியும். இயற்கைச் சூழ்நிலைகள் மற்றும் மனோநிலையில் மட்டுமன்றி இலக்கியத் தொடர்புகள் என்று பார்க்கும் போதும் கூட லத்தீன் அமெரிக்காவிற்கும் சாரமாகோவின் ரிக்கார்டோ ரெய்ஸ்  நாவலுக்கும் நிறையவே தொடர்புகள் தென்படுகின்றன. எடுத்துக் காட்டாக, நாவலின் நாயகனான ரிக்கார்டோ ரெய்ஸ், லிஸ்பனுக்கு எடுத்து வரும் மிக முக்கியமான புத்தகம் போர்ஹே சம்மந்தப்பட்டது. அதாவது போர்ஹே எழுதாத பல நாவல்களில் அதுவும் ஒன்று. அது இடம் பெறும் போர்ஹேவின் சிறுகதை A survey of the works of Herbert Quain (Fictions[1941]). நாவலின் பெயர் The God of the Labyrinth.  ஹெர்பர்ட் க்வெய்னின் (Herbert Quain) புத்தகத்தை அவர் ரியோ டி ஜெனிரோவிலிருந்து லிஸ்பனுக்குப் பயணம் செய்த Highland Brigand என்ற கப்பலின் நூல் நிலையத்திலிருந்து கடன் பெற்று திருப்ப மறந்து விடுகிறார் என்று தெரிகிறது. அது கடைசியாக மிச்சமிருந்த ஒற்றைப் பிரதியாகக் கூட இருக்கலாம். போர்ஹே அவருடைய ஹெர்பர்ட் க்வெய்ன் நாவல் பிரதியை அவருக்குத் தெரிந்த பெண் ஒருத்தியிடம் கடன் கொடுத்து திரும்பப் பெறமுடியாதபடி தொலைத்து விட்டதாக எழுதுகிறார். நிறைய முறைகள் ரிக்கார்டோ ரெய்ஸ் The God of the Labyrinth நூலைப் படிக்க முயன்றாலும் முதல் சில பக்கங்களில் அல்லது வரிகளில் வந்து தடங்கிப் போய் விடுகிறார். இரண்டு சதுரங்க ஆட்டக்காரர்களைப் பற்றிய ஒரு துப்பறியும் கதைதான் அது என்ற போதிலும் அவரால் கவனம் கொடுத்துப் படிக்க முடியவில்லை. ஹெர்பர்ட் க்வெய்ன் ஒரு ஐரிஷ் எழுத்தாளர். கப்பலின் நூலகத்தில் பொறுப்பிலிருந்த நூலகரும் ஒரு ஐரிஷ்காரர் (ஓப்ரியன்) என்பது மிக யதேச்சையான, ஒன்றினையும் தகவல்கள். ஹெர்பர்ட் க்வெய்ன் போர்ஹேவின் Monsieur Teste வாக இருக்கக் கூடும் சாத்தியம் இல்லாமலில்லை. கூர்மையான போர்ஹே வாசகன் வட்டச் சிதிலங்கள் என்ற சிறுகதையின் ஆசிரியரே ஹெர்பர்ட் க்வெய்ன்தான் என்று போர்ஹே ஒப்புதல் செய்திருப்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்.

மேலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளும் மனப்பதிவுகளும் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்படுவதாகத் தெரிகின்றன. The dense roar of the rain fills my mind  என்ற வரி ரிக்கார்டோ ரெய்ஸின் கவிதை வரி. நாவலின் முக்கால் பாகம் வரை மழை நிற்காமல் பெய்து கொண்டயிருக்கிறது. மீதி பாகத்தில் முதுகு பிளக்கும் வெய்யில் அடிக்கிறது. 1935ஆம் ஆண்டில்தான் கீர்க்கெகார்டின் Human Despair என்ற நூலும் வெளிவந்தது. டோனிஜெட்டியின் (Donizetti) குறிப்பிடத்தகுந்த இசை சாகித்யமும் நிகழ்த்தப்பட்டது.

ஜோஸ் சாரமாகோ நவீன போர்ச்சுகலின் மிக முக்கிய நாவலாசிரியர் மட்டுமல்லாது 1998ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர். Manual of Painting and Calligraphy (1977), The History of the Siege of Lisbon (1989), Baltazar and Blimunda (1982), The Gospel According to Jesus Christ (1991), A stone raft (1986), All the names (1997), Blindness  போன்றவை அவருடைய பிற நாவல்கள்.  ஜோஸ் சாரமாகோ ரிபாடெஜோ பிராந்தியத்தில், ஒரு சிறிய கிராமத்தில், நிலமற்ற விவசாயிகளின் குடும்பத்தில்  1922 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி  பிறந்தவர். ஐந்து வருடங்கள் பொறியியல் படிப்பு முடிந்து அவர் நிறைய வேலைகளில் இருந்து மாறிக் கொண்டேயிருந்தார். பிறகு சமூக நலத்துறையில் ஒரு சிவில் அதிகாரியாகப் பணிபுரிந்தார். 1950களில் எஸ்டுடியோஸ் கோர் (Estudios Cor) என்ற வெளியீட்டு நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். அவருக்குப் பிடித்திருந்ததாலும் குடும்ப நிதிநிலவரத்தை சீராக்கும் நோக்கத்துடனும் தனது சுதந்திரமான நேரத்தில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். பார் லெகர் க்வெஸ்ட், தால்ஸ்தாய், பாதலெர், ஹெகல் போன்ற ஆசிரியர்களை போர்ச்சுகீசிய மொழியில் மொழிபெயர்த்தார். இதற்கிணையானதொரு இன்னொரு இலக்கியப் பணி அவர் பத்திரிகைகளில் விமர்சனங்கள் எழுதியதாகும்.  1969 ஆம் ஆண்டு, அப்பொழுது போர்ச்சுகலில் தடை செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தபொழுதும் கூட தேவையான அளவு விமர்சனத்துடன்தான் அதில் பங்கேற்றிருந்தார். 1970ஆம் ஆண்டு அவருடைய முதல் திருமண முறிவிற்குப் பிறகு போர்ச்சுகீசிய  பெண் எழுத்தாளரான இஸபெல் தா நோப்ரேகா (Isabel de Nobrega) வுடன் ஒரு உறவினை ஸ்தாபித்துக் கொண்டார். இது 1986ஆம் ஆண்டு வரை நீடித்தது.

What Shall I do with this Book? (1970), Risen from the Ground (1979), The Second Life of Francis of Assisi (1987)   போன்றவை சாரமாகோவின் நாடகங்கள். அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் The Opinions the DL Had என்ற பெயரில் வெளிவந்தன. 1975ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய காலை தினசரியான Diario de Noticias இன் துணை இயக்குநராகப் பணியாற்றினார். ஆனால் அந்த வருட நவம்பரில் நடந்த அரசியல்–ராணுவ கிளர்ச்சியின் காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 1979இல் வெளிவந்த நூலான Quasi Subject அவருடைய சிறுகதைத் தொகுதியாகும். Baltazar and Blimunda (1982) என்ற நாவலிலிருந்து ஒரு ஓபரா (opera) எழுதியபோதும் அஸியோ கோர்ஹி (Azio Corhi) என்ற நவீன இதாலிய சாகித்யகர்த்தா அதற்கு இசை எழுதினார். In Nomine Dei என்ற நூலிலிருந்து ஏற்கனவே எழுதிய ஒரு லிப்ரட்டோ (libretto) விற்கு கோர்ஹி முன்னரே இசை எழுதியிருந்தார். சாரமாகோவிற்கு 1995ஆம் ஆண்டு கேமோஸ் (Camoes)விருது வழங்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியப் பெண் பத்திரிகையாளரான பிலார் தல் ரியோ (Pilar del Rio) வைச் சந்தித்து 1988இல் திருமணம் செய்து கொண்டார். Baltazar and Blimunda (1982) நாவலின் வருகைக்குப் பிறகுதான் ஒரு இலக்கியாசிரியர் என்ற அந்தஸ்து கிடைத்தது. அதுவரை அவர் முழு நேர மொழிபெயர்ப்பாளர் என்று மட்டுமே அறியப்பட்டிருந்தார். Lanzorote Diaries என அவர் எழுதி வரும் டயரிக் குறிப்புகள் இதுவரை 5 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. ஐபீரிய  தீபகற்பம் ஐரோப்பா விலிருந்து பிரிந்து அட்லாண்டிக் சமுத்திரத்தில் செல்வதான ஒரு மந்திர யதார்த்தக் கதையை கல் தோணி என்ற நாவலில் பயன்படுத்தி இருக்கிறார். ஐரோப்பிய கண்டத்திலிருந்து அவர்கள் பிரிந்ததை எங்ஙனம் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை. வெறும் மந்திர யதார்த்தம் என்ற அம்சம் அரசியல் அங்கதக் கதைப் பொருளுடன் இணைவதால் கூடுதல் அடர்த்தி பெறுகிறது நாவல்

yea-of-the-death-of-ricardo-reis1935ஆம் ஆண்டு போர்ச்சுகலில் இருந்த அரசியல் பொருளாதார மற்றும் ராணுவ கலாச்சார சூழ்நிலைகளைத் தெரிந்து வைத்திருப்பது சாரமாகோவின் ரிக்கார்டோ ரெய்ஸ் நாவலைப் புரிந்து கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும். ஒரு போர்ச்சுகீசியரால் மட்டுமே முழுமையாக இந்த நாவலை ரசித்து அனுபவிக்க முடியும் என்று சாரமாகோவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நவீன போர்ச்சுகீசிய கவிஞரான ஃபெர்னான்டோ பெசோவா (1888-1935) இறந்த ஆண்டும் 1935தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நவீன போர்ச்சுகலின் மிகப் பிரதான கவிஞராகக் கருதப்படும் ஃபெர்னான்டோ பெசோவா குறைந்தபட்சம் நான்கு வேறுபட்ட பெயர்களில் கவிதைகளை  எழுதி வெளியிட்டார். அவருடைய நான்கு பெயர்களில் ஒன்றுதான் ரிக்கார்டோ ரெய்ஸ். (ஆல்பர்ட்டோ கெய்ரோ, ஆல்வரோ த கேம்ப்போஸ் ஆகியவை பிற பெயர்களாகும்) பெசோவாவின் இந்த ஆளுமைகள் குறித்து மெக்ஸிக கவிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆக்டேவியோ பாஸ் சொன்னதை இங்கே மேற்காட்டுவது உபயோகமாக இருக்கும்:

“Caeiro, Reis, and Campos are the heroes of a novel Pessova never wrote”

Octavio Paz [in Cuadrivio (Mexico City: Editorial Joaquin Mortiz, 1965]

பெசோவா இவர்களைப் புனைப் பெயர்கள் (pseudonyms) என்று கருதவில்லை. மாறாக ஒவ்வொருவரும்  தனித்தனி ஆளுமைகள்(heteronyms)என்று வற்புறுத்தினார். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாழ்க்கை களையும் வேலைகளையும் கண்டுபிடித்துச் சொன்னார். மெய்யாகவே அவருக்குள் எண்ணற்ற ஆளுமைகள் இருப்பதாக நேர்மையாக நம்பியவர் பெசோவா. ஸிக்மண்ட் ஃபிராய்ட் போன்றவர்களின் பாதிப்புக்கு முன்னரே அவருக்கு இந்தக் கருத்து இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஃபிராய்டுக்குப் பின் வந்த மனோவியல் அறிஞர்கள் இவற்றை பிளவுற்ற சுயங்கள் (Divided Selves) என்று குறிப்பிட்டதையும் கவனிக்க வேண்டும். பிளவுபட்ட சுயம் என்பது மனநோயாளிக்குத்தானே ஒழிய படைப்பாளிக்கு அல்ல.  நவீன பிரெஞ்சுக் கவிஞர் பாதெலெர் ஒரு கட்டுரையில் கலைஞனைப் பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டார்:

The artist is an artist only on condition. . . that he is ignorant of none of the phenomenon of his dual nature.

[Of the Essence of Laughter]

நிறைய இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இரண்டுக்கு மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டவர்கள். Antonio Machado (இறப்புக்குப் பின் நோபல் பரிசு வழங்கப்பட்ட ஒரே கவிஞர் ஸ்பெயினைச் சேர்ந்த இவராகத்தான் இருக்க முடியும்) இப்படி ஒரு கேள்வியை எழுப்பினார்:

Would you say that a man may carry no more than one poet within himself? The opposite  would be much more unlikely: that he carried within himself only one. [Juan de Mairena]

பெசோவா இந்த ஆளுமைகளை  Multiple Personalities என்று உரிய மரியாதையுடன் குறிப்பிட்டார். இது ட்டி.எஸ்.எலியட்டின் சுயம் நசித்தல் கோட்பாட்டுக்கு மிகவும் பொருந்திப் போகக் கூடியதாகவுமிருக்கிறது.  பெசோவின் சொற்களிலேயே சொல்வதானால்: “a constant and organic tendency towards depersonalization and make believe”. பெசோவின் வார்த்தைகளிலேயே ரிக்கார்டோ ரெய்ஸின் வாழ்க்கைக் குறிப்பு பின் வருமாறு:

Ricardo Reis. Born in Oporto in 1887. A doctor by profession. Educated by Jesuits. Was taught Latin properly and half taught himself Greek. A little below average height, strong and wiry in build with rather dark complexion. Has lived in Brazil since 1919,in self im-posed exile because of monarchist sympathies.

அடர்த்திச் சிக்கல் மற்றும் பெசோவாவின் ஆளுமையின் மர்மத்தன்மை ஆகியவற்றை சாரமாகோ இந்த நாவலில் சிறப்பாகப் பதிந்து வைத்திருக்கிறார். இந்த இரு அம்சங்களுமே பெசோவாவை அவரது சமகாலத்தில் கவனிப்பாரற்றுப் போகச் செய்தன. ஆனால் இன்று பெசோவாவின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்பட்டிருக்கிறது. பெசோவாவின் ஈடுபாடுகள் என்சைக்குளோபீடியத்தன்மைகள் மிக்கவை. கவிதை, துப்பறியும் நாவல்கள், அரசியல், ஜோதிடம், இறையியல், மந்திரம் போன்ற பல் வேறுபட்ட துறைகளில் அவருக்கு ஈடுபாடிருந்தது. பெசோவா ஒரு சுதந்திரச் சிந்தனையாளர். அவர் கொண்டிருந்த அரசியல் கருத்துக்கள் முரண்பாடுகள் மிகுந்தவையாயிருந்தன. அவருடைய இலக்கியக் கருத்துக்கள் க்யூபிஸ்ட்டுகளாலும், ஃபியூச்சரிஸ்டுகளாலும் பாதிக்கப்பட்டிருந்தன. பெசோவா தனது கவிதைக் கோட்பாடுகளை தொகுத்து பாலிஸ்மோ (Paulismo)என்ற கொள்கையாக வெளியிட்டார். பெசோவா நிலையான வேலை பார்க்காமல் பல தற்காலிக வேலைகள் பார்த்தார். பல வணிக நிறுவனங்களுக்கு மொழிபெயர்ப்பு வேலைகள் செய்தார். தனக்குப் பிடித்த காரியங்களைச் செய்து கொள்வதற்கு ஒரு நிலையான வேலை இடையூறாக இருக்கும் என்று அவர் எண்ணியிருக்கலாம். பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளில் கவிதைகள் எழுதினார். ஆனால் அவர் உயிரோடிருந்த காலத்தில் ஒரே ஒரு கவிதைத் தொகுதி (Mensagem) மாத்திரமே வெளியிடப்பட்டு அது போர்ச்சுகீசிய அரசின் பரிசையும் பெற்றது. இந்த நாவலில் நிலைப்பாக இடம் பெறும் பெசோவாவின் சித்திரம் ஒரு பாதுகாக்கப்பட்ட தனிமையுடையதாக, மனதின் தீர்க்கப்படாத முரண்பாடுகள் கொண்டதாக, உள்ளார்ந்த ஒரு வெறுமை உணர்வுடையதாக சாரமாகோவால் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெசோவா தன் நண்பர்களிடம் கூறியதாகக் கூறப்படும் ஒரு மேற்கோள் இங்கே உதவிகரமாக இருக்கும்:

“I do not know who I am, nor what soul I possess.”

காரண அறிவின் தெள்ளிய தன்மையையும், கனவுலகின் மறைநிலையையும் சமரசப்படுத்த முயன்ற ஒரு அழகியல்வாதி ஃபெர்னான்டோ பெசோவா. ஊழ்வினைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த சுதந்திரச் சிந்தனையாளரான அவர் வைதீக கிறித்துவ மதத்தை எதிர்ப்பவராக இருந்தார். ரெய்ஸ் வேறெல்லாக் கடவுள்களிடம் எந்த அளவு நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்த அளவு நம்பிக்கையைத்தான் யேசு கிறிஸ்துவின் மீதும் வைத்தார். ஏறத்தாழ பெசோவாவின் கிறித்தவ மதம் பற்றிய கருத்துக்களுடன் ஒத்துப் போகும்படியான கருத்துக்களையே சாரமாகோவும் கொண்டிருந்தார் என்றால் அது அதிக அதிகபட்ச கோருதலாக இருக்க முடியாது. சாரமாகோவின் இரண்டு நாவல்கள் கிறித்தவ மதம் பற்றியவை. இரண்டுமே பிரச்சனைப்பாடுகள் மிக்கவை. Baltazar and Blimunda (1982), The Gospel According to Jesus Christ (1991) கிறிஸ்துவை சாரமாகோவின் பார்வையில், தற்கால விமர்சன நோக்கில் சித்தரிக்கிறது. இந்த நாவல் பற்றி சாரமாகோவின் எண்ணங்களை இங்கு தருவது பயனுள்ளதாக இருக்கும்:

“My Gospel tries to fill the blank spaces between the various episodes of Jesus’s life as narrated in the other gospels–with some interpretations of my own.”

The Gospel According to Jesus Christ பழைய வேதாகமத்தின் கடவுளை தன்னுடைய ராஜ்ஜியத்தின் எல்லையை விஸ்தரிக்கும் ஒருவராக, கொடுங்கோன்மை நிறைந்தவராக, அதிகாரத்திற்கும் மனிதக் குருதிக்கும் ஆசைப்படுபவராக சித்தரிக்கிறது. யூதர்களின் குறுநில மன்னர் போலத்தான் இந்த நாவலில் யேசுவின் வழியாக நமக்குக் கடவுள் காட்சி தருகிறார். விதியின் சர்வ வல்லமை பற்றி பைபிள் பாத்திரங்கள் பேசுவது சற்றே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. மேலும் சாரமாகோவின் யேசு கிறிஸ்துவின் பார்வையில் வேதாகமம் என்ற நாவலின் நாயகி மேரி மேக்தலீனா. மேரி மேக்தலீனாவுடனான யேசு கிறிஸ்துவின் செக்ஸ் உறவு மிக நுண்மையாகவும் அழகாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு அறிவிக்கப் பட்டவுடன் வாட்டிகனிலிருந்து நோபல் கமிட்டிக்கு ஆட்சேபனைக் கடிதம் பறந்தது.

சுதந்திரம் என்பது ரெய்சைப் பொறுத்தவரை சுதந்திரத்தைப் பற்றிய ஒரு மாயைதானே ஒழிய வேறில்லை, அவ்வாறே சந்தோஷம் என்பதும் சந்தோஷத்தைப் பற்றிய ஒரு மாயைதான். ரெய்ஸ் அறிவிப்பு செய்கிறார்:  “நிஜம் என்பது அறியப்பட முடியாதது, ஏன் கடவுளர்களாலும் முடியாதது.” ரெய்ஸின் ஆழ்ந்த நம்பிக்கை என்பது ஊழ்வினையின் சர்வ வல்லமையில்தான். விதிவசமான வாழ்வின் நடப்புகளில் சாரமாகோவுக்கும் சரி, ரிக்கார்டோ ரெய்ஸூக்கும் சரி, சமமான நம்பிக்கை இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக ரிக்ôர்டோ ரெய்ஸ் இறந்த வருடம் நாவலில் இருந்து ஒரு சில வரிகள்:

“If fate decrees that we meet, then we will meet, even if we attemp to hide from each other”

[The Year of the Death of Ricardo Reis, p.240]

மதிநிறைந்த ஒருவன் தன் ஒவ்வொரு கணத்தையும் அது ஏதோ அவனுடைய கடைசிக் கணம் என்பது போல அனுபவிக்கிறான். அவனுக்கிருப்பது பங்கேற்பு மிக்க சந்தோஷித்தல் அல்ல. ஒரு அமைதியான ஏற்றுக் கொள்ளும் மனோபாவமே. இந்த இடத்தில் நாவலின் தியானம் ஜென்னுக்கு மிக நெருக்கமாக வந்துவிடுகிறது.

1930களில் நிகழ்ந்த அரசியல் நிகழ்ச்சிகள் நாடகீயமான முறையில் ஐரோப்பாவை மாற்றியமைத்துக் கொண்டிருந்தன. ஸ்பெயின் தேசத்தில் வெடித்த உள்நாட்டுப் போர் பற்றி போர்ச்சுகல் கவலைப்படாதிருக்க முடியாத நிலையில் இருந்தது. இதாலியிலும் ஜெர்மனியிலும் ஃபாசிசம் துரித கதியை அடைந்திருந்தது. சாரமாகோ தனது விவரணையை 1935-36க்குள் உட்படுத்தி, அந்த காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலைகளை செய்தித் தொகுப்புகளின் சேகரங்களிலிருந்து மறுகட்டுமானம் செய்கிறார். அப்பொழுதிருந்த போர்ச்சுகலின் அரசியல் நிலவரம் எவ்வகையில் சாலாஸார் (Antonio Oliveira Salazar) என்ற போர்ச்சுகலின் சர்வாதிகாரியின் பேராசைகளுக்கு தீனி போட்டது என்பதையும் வாசகன் உணரச் செய்கிறார் சாரமாகோ. நம்ப முடியாத நேச நாடுகளாலும் மிரட்டும் எதிரி நாடுகளாலும் சூழப்பட்டிருந்தது போர்ச்சுகல். போர்ச்சுகலின் தயக்கமான குரல் என்று சாரமாகோ குறிப்பிடுவதற்குக் காரணம் 1930களில் ஐரோப்பாவில் அதன் முக்கியத்துவம் வெகுவாக குறைவுற்றிருந்தது. பழைய காலனி நாடுகளை ஏற்கனவே இழந்திருந்தது. பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து அது தனிமைப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் அதை ஆரோக்கியமான தேசீயவாதத்துடன் உருவாக்குவதை விட்டு ஸாலஸாரின் புதிய அரசு அந்நிய துவேஷத்திலும் உள்நாட்டு அடக்கு முறையிலும் இறங்கியது. கம்யூனிசத்தை வெறுத்து எதிர்த்த வகையில் அவர் ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோருடன் ஒற்றுமைப்படுகிறார்.

ஃபெர்னான்டோ பெசோவாவின் Alter Ego வான ரிக்கார்டோ ரெய்ஸை, பெசோவா இறந்த 9 மாதங்களுக்கு பிறகு  லிஸ்பன் நகரில் உலவவிடுகிறார் சாரமாகோ. லிஸ்பனுக்கு ரிக்கார்டோ ரெய்ஸ் பதினாறு வருடங்கள் கழித்துத் திரும்புகிறார்–சுயேச்சையாய் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு. ஒரு புரட்சியைத் தவிர்க்கும் பொருட்டு லிஸ்பனை விட்டுச் சென்றவர் இன்னொரு புரட்சியை அர்ஜன்டீனாவில் தவிர்க்க விரும்பி லிஸ்பன் திரும்புகிறார். இந்தக் காரணம் கூட ஸாலஸாரின் போலீஸ் அதிகாரிகளுக்கு ரெய்ஸின் மீது சந்தேகம் ஏற்பட வைத்திருக்கும். பதினாறு வருடங்களில் லிஸ்பன் நகரம் பெரிய மாற்றங்கள் எதுவும் அடைந்ததாக டாக்டர் ரிக்கார்டோ ரெய்ஸ் நினைப்பதில்லை. வெளிப்படையான தோற்றத்தில்  அவருடைய இளமைக் காலத்தில் தெரிந்ததைப் போலத்தான் இன்றும் தெரிகிறது லிஸ்பன்: நதிகள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், துறைமுகங்கள், மாதாகோயில்கள், திரை மற்றும் நாடக அரங்குகள், ரெஸ்டாரன்ட்டுகள் நிறைந்த லிஸ்பனை நாம் ஆராய்ந்து பார்க்க முடிவது ரிக்கார்டோ ரெய்ஸின் பார்வையில். பிரமிக்கத் தக்க காட்சிப்பாடுகள் நிறைந்ததாகவும் களியாட்டங்கள் கொண்டாடும் நகரமாகவும் விளங்கும் லிஸ்பனில் ஊர்வலங்கள் நடந்தவாறே இருக்கின்றன. நாடகத்தன்மைகள் நாடகம் மற்றும் திரையரங்குளில்தானன்றி தெருக்களிலும் சரிசமமாகக் காணக்கிடைக்கின்றன. சில நேரங்களில் பிச்சைக்காரர்களுக்குத் தர்மம் வழங்கும் ஒரு நிகழ்ச்சியே கூட லிஸ்பன் நகரில் கொண்டாட்டமாக ஆக்கப்படுகிறது. ஒரு சவ ஊர்வலம் கூட கேளிக்கை விழாவாக ஆகக் கூடிய வாய்ப்பு கொண்டதாய் ஸிஸ்பன் நகரில் ஆக முடியும் என்பதற்கு ரெய்ஸ் பங்கேற்கும் ஓ மௌரேரியா (O Mouraria) என்ற கிரிமினல் குற்றவாளியின் இறுதி ஊர்வலம் ஒரு எடுத்துக்காட்டு. ஓ மௌரேரியா மற்றொரு அடியாள் தலைவனால் சுட்டுக் கொல்லப்படுகிறான். ஓ மௌரேரியாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் ரிக்கார்டோ ரெய்ஸ் அதில் ஏதும் கலவரம் கூட நடக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறார். சவ ஊர்வலம் ஏதோ பெரும் திருவிழா போன்ற கோலாகலத்துடன் நடைபெறுகிறது. இவ்வாற ஓ செக்யூலோ (O Seculo) என்ற தினசரிப் பத்திரிகை நடத்தும், பிச்சைக்காரர்களுக்கான தர்ம விநியோக விழாவிலும் யதேச்சையாகக் கலந்து கொள்ள வேண்டி வருகிறது ரெய்ஸூக்கு. வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவினால் கூட சில களியாட்டங்கள் லிஸ்பனில் ஒத்திப் போடப்படுவதில்லை. மாறுவேடமணிந்தும் முகமூடிகளனிந்தும் லிஸ்பன் நகர மக்கள் பங்கேற்கும் கேளிக்கை விழாவொன்றிலும் ரெய்ஸ் பார்வையாளராகச் செல்கிறார். மழை பெய்வதால் இந்த கேளிக்கை விழாவின் உற்சாகம் எந்த வகையிலும் குறைவதில்லை. மாறுவேடங்கள் அணிந்து கொள்வது இதில் மிக முக்கியமான ஒரு அம்சமாகும். எலும்புக்கூடு வரையைப்பட்ட, உடல்பிடிப்பான உடையில், மரண மாறுவேடத்தில் ஒருவர் இதில் இடம் பெறுகிறார். அந்த உருவம் பெசோவாவாக இருக்கக் கூடுமோ என்ற நம்பிக்கையில் பின் தொடர்ந்து ஏமாற்றமடைகிறார்.

ஓயாத மழையிலும், ரிக்கார்டோ ரெய்ஸ் சொதசொதக்கும் சேறு நிறைந்த நகரத்தின் தெருக்களில்  மழைக்கோட் அணிந்து, நடந்து ஆங்காங்கே உள்ள உணவு விடுதிகளில் உணவருந்தி நாடகம் மற்றும் திரைப்படங்கள் பார்த்து தன் ஆரம்ப நாட்களைக் கழிக்கிறார். ஃபெர்னான்டோ பெசோவாவின் இறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் அவர் லிஸ்பனுக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார். முடிவெடுக்க முடியாத ஒரு அலைபாயும் மனநிலையில் அவர் முதலில் வந்து அறை எடுக்கும் ஹோட்டலிலேயே ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கிவிடுகிறார். இடையிடையே ரியோ டி ஜெனிரோவுக்குத் திரும்பி விடலாம் என்றும் அவருக்குத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. இந்த ஹோட்டல் வாசம் சில நட்புகளையும், தொடர்புகளையும், உறவுகளையும், மாறுதலுக்கான உந்துதல்களையும் ஏற்படுத்துகிறது. இந்த காலகட்டத்தில் மார்சென்டா என்ற இளம்பெண்ணையும் அவள் தந்தையான வழக்கறிஞர் சேம்ப்பையோ வையும் (Sampaio) சந்திக்கிறார். இதற்கு முன்பாகவே ரெக்கார்டோ ரெய்ஸூக்கு விடுதிப் பணிப் பெண்ணான லிடியாவுடன் மிக நெருக்கமான அந்தரங்கத் தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. (அன்னா கரினினாவின் வேலைக்காரியும் லிடியாதான்) ரெய்ஸ் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது நாற்பத்து ஏழு வயதைக் கடந்து வந்துவிட்டார். ஓரளவுக்கு தேவையான பணத்துடன் ரியோ டி ஜெனிரோவிலிருந்து வந்ததால் மருத்துவத் தொழிலை லிஸ்பனில் தொடங்கத் தயங்கிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் காஃப்காத்தன்மையான ஒரு விசாரணை அனுவத்தில் சிக்கிக் கொள்கிறார். ஒரு அறிவிப்புமின்றி திடீரென ஒரு நாள் ஒரு போலீஸ்காரன் ஹோட்டலுக்கு வந்து, விசாரணை செய்யப்பட டாக்டர் ரிக்கார்டோ ரெய்ஸ் தலைமைக் காவல்துறை அலுவலகத்திற்கு வரவேண்டுமென்று கூறிவிட்டுச் செல்கிறான். இந்த நிகழ்ச்சி சில விதமான எதிர்ப்பு அலைகளையும் ரெய்ஸ் பற்றி நம்பிக்கை குறையும்படியான தாக்கத்தினையும் ஹோட்டல் பணியாளர்கள் மத்தியிலும் லிடியாவின் மத்தியிலும் ஏற்படுத்துகிறது. குற்றங்கள் எதையும் அவர் புரியவில்லை என்பது நிச்சயமானாலும் கூட போலீஸ் விசாரணை சில தப்பெண்ணங்களை தேவையில்லாமல் பிறரின் மனதில் ரெய்ஸ் பற்றி உண்டாக்குகிறது. மார்சென்டாவின் தந்தை, வழக்கறிஞர் சாம்ப்பையோ, ரிக்கார்டோவின் உடனிருப்பையே தவிர்க்க விரும்புவதாக மார்சென்டா மூலம் ரெய்ஸ் அறிகிறார். அதற்காக அவர் தந்தையின் சார்பில் மார்சென்டா மன்னிப்புக் கோருகிறாள். மிக எளிய தகவல்களை மட்டுமே தந்துவிட்டு ஏதும் உபத்திரவமின்றி ரெய்ஸ் போலீஸ் அலுவலகத்திலிருந்து மீண்டு வந்துவிடுகிறார். இருப்பினும் விக்டர் என்ற ஒரு போலீஸ்காரன் ஒரு நிழல் போல ரெய்ஸைத் தொடர்கிறான். இந்த விசாரணையே அவரை ஹோட்டலில் இருந்து தனி வாடகை வீட்டுக்கு மாறுவதற்குத் தூண்டுதலாக அமைகிறது. தனக்கான ஒரு வாடகை வீட்டினை தேடியபடி லிஸ்பன் நகரில் ரெய்ஸ் அலையும் பொழுதும் லிஸ்பனின் வேறு வேறு காட்சிகள் பதிவாகின்றன. இதற்கிணையான முந்தைய சித்திரங்களாக நாம் குஸ்தாவ் ஃபிளாபரின் 1848ஆம் வருடத்திய பாரிஸ் நகரினையும் ஜேம்ஸ் ஜாய்சின் 1904ஆம் ஆண்டின் டப்ளின் நகரத்தையும் சொல்லலாம்.

நாவலில் உருவாகும் காதல் என்கிற அம்சம் துணைக் கதைத்திட்டமாகக் (Sub-plot) கருதப்படக் கூடாது. மனித உறவுகளின் மீதான சாரமாகோவின் ஆழ்ந்த அலசல் மற்றும் நுணுக்கப்பார்வையாகக் கருதப்பட வேண்டும். இரண்டு மிகவும் கூர்மையாக வேறுபடும் பெண்கள் ரிக்கார்டோ ரெய்ஸைக் கவர்கிறார்கள். ஒருத்தி-லிடியா. சாதாரண, படிப்பறிவற்ற ஹோட்டல் பணிப்பெண். லிடியா பாலுணர்வு ரீதியான உறுதியுணர்வினையும் வீட்டைக் கவனித்தலையும் எந்த விலையுமின்றி அர்ப்பணிக்கிறாள். அதிகபட்ச கோருதல்கள் வைக்காத துறுதுறுப்பான நேர்மையான பெண்ணாக இருக்கிறாள் லிடியா. பெசோவாவின் கவிதைகளில் வரும் லிடியாவுக்கும் நாவலில் வரும் லிடியாவுக்கும் அதிக தொடர்புகள் இருக்க முடியாது. கருத்தியல் ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கும் கவிதைகளின் லிடியா, நாவலில் வரும் லிடியாவிலிருந்து வேறுபடுகிறாள். அடுத்து, சுற்றிவளைத்துப் பேசும் துன்புறும் பெண்ணான மார்சென்டா அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வசதியான பெண். அவளது நடைமுறை வாழ்க்கை சந்தோஷமாக இல்லை. இதயநோயின் பக்க விளைவினால் அவளது இடது கை இயக்கமற்றிருக்கிறது. ஒரு இறந்த பறவையைப் போல் அவளுடைய கோட் பாக்கெட்டில் அவள் கையை எடுத்துச் செல்கிறாள். லிடியாவுக்கு 23 வயதே ஆகிறது. இயக்கமற்ற இடது கைக்கு மருத்துவம் பார்க்கும் பொருட்டு கோயிம்ரா (Coimbra) பிரதேசத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் லிஸ்பனுக்கு வந்து ரிக்கார்டோ ரெய்ஸ் தங்கும் அதே விடுதியில் அவளுடைய தந்தையுடன் தங்குகிறாள். அவளுடைய ரோகத்திற்கு மருந்தில்லை என்று தெரிந்தும் ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய தந்தை சாம்ப்பையோவுக்கு லிஸ்பனில் ஒரு வைப்பாட்டி இருப்பதாலும் அவர் தன் மகளை வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார். லிடியாவும் மார்சென்டாவும் மனிதனின் உடல் ரீதியான இச்சைகளுக்கும், அடையவே முடியாத கருத்தியல் ரீதியான பெண் தொடர்பான ஒரு இலக்குக்கும் இடையே நிலவும் பெரும் இடைவெளியை நினைவூட்டும் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். ரெய்ஸூக்கு உண்டாகும் முரண்பாடுகள் எந்த ஒரு பெண்ணாலும் தீர்த்து வைக்க முடியாதவை என்பது வேறு பக்கத்து உண்மை. இந்த முரண்பாடுகள் சமூக ஒழுங்குநிலைகளுக்கும் தனிநபர் சார்ந்த விருப்பு வெறுப்புகளுக்கும் தொடர்புள்ளவை.  இவை ரெய்ஸ் மிகவும் ஜாக்கிரதையான, சுயநலமான காதலனாக  இருப்பதால் கூர்மையடைகின்றன. அவருடைய மகள் வயதுதான் மார்சென்டாவுக்கு ஆகிற போதிலும் மார்சென்டாவுக்கு டாக்டர் ரிக்கார்டோ ரெய்ஸிடம் காதல் ஏற்படுகிறது. ஒரு முத்தத்துடன் இது சடக்கென்று முடிந்து விடுகிறது. ஆனால் அந்த முத்தத்தைப் பெற மார்சென்டா எல்லாவற்றையும் விட்டு விட்டு தனியாக ரெய்ஸின் வீட்டுக்கு வரவேண்டியிருக்கிறது. ஆனால் மார்சென்டாவுடனான உறவு முழுமையடைவதில்லை. மார்சென்டாவின் மீதான ரெய்ஸின் ஈர்ப்பு பற்றி அறிந்திருந்தும் அவரை முழுமனதுடன் காதலிப்பது லிடியா மட்டுமே. லிடியா இருக்கும்போதே அவருடைய சிந்தனை மார்சென்டாவிடம் செல்வதை அவரால் தவிர்க்க முடிவதில்லை. இதனால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவராகக் கூட சீரழிகிறார் ரெய்ஸ்.

ஒரு கட்டத்தில் ஸிஸ்பனுக்கு வருகை தருவதை மார்சென்டா நிறுத்திக் கொண்டு இனி அவள் பாத்திமா ஆலயத்திற்கு புனித யாத்திரை செய்து நம்பிக்கையின் மூலம் ஊனமான கையை சரி செய்து கொள்ள நினைக்கிறாள். இதுவும் கூட அவள் எடுக்கும் தனிப்பட்ட முடிவல்ல. அவளுடைய தந்தையின் அறிவுரையின் பேரில் எடுக்கப்பட்டதாகும். ஆனால் மார்சென்டா வரக்கூடுமென்ற நம்பிக்கையில் நாத்திகரான, அற்புதங்களில் நம்பிக்கையில்லாத டாக்டர் ரிக்கார்டோ ரெய்ஸ் புனிதப்பயணம் மேற்கொள்வது மிகவும் பரிதாபமான, சோகமான அனுபவம்.

ரோகிகள், பிச்சைக்காரர்கள், லாட்டரி சீட்டு வியாபாரிகள், மெடல்களையும் சிலுவைகளையும் கூவி விற்கும் விற்பனையாளர்கள், பிச்சை கேட்கும் வேலையில்லாதவர்கள், கம்பளி விற்பவர்கள் இவர்களுக்கு மத்தியில் நாம் கவிஞரும் டாக்டருமான ரெய்ஸை பார்க்கிறோம்.

புழுதி, சுள்ளென்றடிக்கும் வெய்யில், வியர்வை ஆகியவைதான் இந்தப் புனிதப் பயணத்தின் மிகப் பிரதான அடையாளங்களாக இருக்கின்றன. பாத்திமாவை நோக்கிய யாத்திரைப் பெண்களின் இறைஞ்சுதல் இழவு ஓலம் போலிருக்கிறது-கண்ணீர் மட்டும் இல்லை. இதில் முக்கியமான சொற்களை மறந்துவிட்டு, சுருதி சேராமல் கத்திக் கொண்டு வருகின்றனர் ஆண்கள். பெண்கள் தலையில் சோற்றுப் பார்சல்களைச் சுமந்தபடியும், பால்குடி மறக்காத குழந்தைகளுக்கு நடந்தபடி பால்கொடுத்துக் கொண்டும் செல்வதை ரெய்ஸ் பார்க்கிறார். லிடியா எச்சரித்த மாதிரியே அங்கே தங்குவதற்கு தங்கு மனைகளோ ஹோட்டல்களோ இருப்பதில்லை. யாரோ முன்பின் தெரியாதவர்களின் டென்ட்டில் அந்த இரவு தங்கி விட்டு அடுத்த நாள் திரும்பி விடுகிறார் ரெய்ஸ். பாத்திமா ஆலயத்திற்குச் சென்று அத்தனை ரோகிகள் மத்தியில் மார்சென்டாவைக் கண்டு பிடிக்க முடிவதில்லை அவரால். உறுத்துகிற நிஜம் என்னவென்றால், பாத்திமா யாத்திரைக்கு மார்சென்டா வரவே இல்லை என்பதை அவள் பின்னர் எழுதும் ஒரு கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்திக் கொள்கிறார். புனிதப் பயணமும் ஒருவித கேளிக்கை உணர்வினையே தருவதாக ரெய்ஸூக்குத் தோன்றுகிறது. புனிதப்பயணிகளுக்கிடையே வணிக விற்பனைப் பொருள்களுக்கான துண்டுப் பிரசுரங்களை வண்ணக் காகிதங்களில் அச்சிட்டு வானிலிருந்து வீசும் ஒரு விமானத்தைப் பார்க்க முடிகிறது. அவளைச் சந்திக்கும் நம்பிக்கை அறவே அற்றுப் போனாலும் கூட அவளுக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டுதானிருக்கிறார் ரெய்ஸ். கடைசியாக மார்சென்டாவை மையமாக வைத்து ஒரு கவிதையையும் எழுதி அனுப்புகிறார்–சென்று சேருமென்ற உறுதியில்லாது போனாலும். பிரயத்தனப்பட்டு லிடியாவுக்குத் தெரியாமல் மார்சென்டாவின் கடிதத்தை மறைத்து வைக்கிறார்.

இந்த சகல நிகழ்வுகளையும் ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி நகைச்சுவை யுணர்வுடன் கருத்துக்கள் சொல்வது ஃபெர்னான்டோ பெசோவாவின் ஆவி. பெசோவாவுக்கும் ரெய்ஸூக்கு மிடையில் நடக்கும் வாக்குவாதங்கள், கருத்து மோதல்கள் மிகச் சிறப்பாகவும் இயல்பாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளன. லிஸ்பனுக்குத் திரும்பிய பிறகு ஒரு நாள் பெசோவாவின் கல்லறையைத் தேடிச் செல்கிறார் ரிக்கார்டோ ரெய்ஸ். இதற்குப் பிறகு ரெய்ஸ் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு பெசோவாவின் வருகை அடிக்கடி நிகழ்கிறது. பெசோவாவின் இருப்பை ரிக்கார்டோ ரெய்ஸ் தவிர வேறு யாரும் அறிய முடிவதில்லை. பெசோவா இறந்த அன்று எந்த உடையிலிருந்தாரோ அதே உடையில் ரெய்ஸின் அறையிலும், சில ரெஸ்டாரென்ட்டுகளிலும் தென்படுகிறார். அலாதியான கிண்டல் தொனியில் அமைந்திருக்கிறது பெசோவாவின் கருத்துக்களும் உரையாடல்களும்.  அரசியல் நிகழ்வுகள், தனிநபர் உறவுச் சிக்கல்கள், கலாச்சாரப் போக்குகள், கம்யூனிசம், சர்வாதிகாரம், கவிதை என அவர்களின் விவாதத் தளம் விரிந்து செல்கிறது. கதைசொல்லி ஒரு ரெஸ்டாரென்ட்டின் பணியாளிடம் விசாரிக்கும் பொழுது ரெய்ஸ் எப்படி எப்பொழுதும் இரண்டு கோப்பை மதுவுக்கு ஆர்டர் செய்யும் விநோத வழக்கத்திலிருந்தார் என்ற தகவலை நமக்குத் தருகிறார். பெசோவா, அவரின் வாழ்நாளிறுதியில், அதிகம் குடித்து கல்லீரல் நோயினால் இறந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

மருத்துவத் தொழிலைத் தொடரலாம் என்பதை விட ஹோட்டலின் சூழ்நிலையிலிருந்து தப்ப விரும்பியே ரெய்ஸ் தனக்கான வாடகை வீட்டைத் தேடுகிறார். பிரபல தினசரிகளில் “வீடு வாடகைக்கு” பகுதிகளில் தேடத் தொடங்குகிறார். சிறிது முயற்சிக்குப் பிறகு வீடு கிடைத்து மாறியும் செல்கிறார். ஆனால் ஹோட்டலை விட்டு மாறிய பின்னும் தொடரும் உறவு லிடியாவுடையதுதான். அவள் டாக்டர் ரெய்ஸின் காதலி என்று சொல்லிக் கொண்டு மரியாதைக்குரிய கனவான்களும் கனவதிகளும் வாழும் அபார்ட்மெண்ட்டுக்கு வந்து போக முடியாது. எனவே லிடியா தன்னை வீடு பெருக்கும் பணிப்பெண் என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டு ரெய்ஸின் மூன்றாவது மாடியில் இருக்கும் வீட்டிற்கு வாரம் ஒரு முறை வந்து போகிறாள். காதலி என்ற வகையில் சரிநிகராகப் பழக முடியாவிட்டாலும் ரெய்ஸின் உடல்ரீதியான தேவைகளைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்பவளாகவும் நல்ல வீட்டு நிர்வாகியாகவும் இருக்கிறாள். ரெய்ஸின் அண்டை வீட்டில் வசிக்கும் பெண்கள் இன்னும் சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள் அவளை. ஒரு கட்டத்தில் தான் கர்ப்பவதியாகிவிட்டதை லிடியா தெரிவித்தவுடன் அதிர்ந்து போகிறார் ரெய்ஸ். ஆனால் பிடிவாதமாக லிடியா கருச்சிதைவு செய்து கொள்வதற்கு ஒப்புவதில்லை. டாக்டர் ரெய்ஸ் கருவிலிருக்கும் குழந்தைக்குத் தந்தை என்று ஒப்புக் கொள்ள மறுத்தாலும் கூடப் பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு மிகப் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறாள் லிடியா. சிறிது காலம் டாக்டர் தொழிலும் பார்க்கிறார் ரெய்ஸ். இந்த சமயத்தில் ஒரே ஒரு முறை மார்சென்டா அவரை மருத்துவ மனையில் சந்தித்து விட்டுச் செல்வதோடு சரி. கடிதங்களும் அவளிடமிருந்து வருவது நின்று விடுகிறது. அவளைப் பார்க்கும் வாய்ப்பினை அறவே இழந்து விடுகிறார். உள்நாட்டுப் போர் ஒன்றில் கப்பல் படைப்பிரிவில் பணியாற்றும் லிடியாவின் சகோதரன் இறக்கிறான். லிடியாவை ஹோட்டலுக்குச் தேடிச் சென்றும் அவளை ரெய்ஸ் பார்க்க முடிவதில்லை. இதற்கிடையில் அந்த ஒன்பது மாதங்கள் முடியவே பெசோவா வந்து தன்னுடன் ரெய்ஸை அழைத்துச் செல்கிறார். ஹோட்டல் மேனேஜரான சால்வடாரின் பாத்திரம் நினைவில் நிற்கும்படி படைக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டலில் உணவு பரிமாறும் இரண்டு ஆண்கள் (Ramon, Felipe), மற்றும் வேலையிலிருந்து ஓய்வு பெற்று பொழுது போக்க முடியாமல் கடலையும் நதியையும் பார்த்தும் தினசரிகளை இரவல் வாங்கிப் படித்துக் கொண்டுமிருக்கும் இரண்டு வயோதி கர்கள்(பெயர் தரப்படவில்லை) ஆகியோர் நினைவில் நிற்கும்படியாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன், சிறிது நேரமே வரும் டாக்ஸி ஓட்டி எவ்வளவு துல்லியமாக நினைவில் நிற்கிறான் பல் குத்தும் குச்சியை வாயில் மென்றபடி? மேலும் தொடர்ந்து பெய்யும் மழையே ஒரு பாத்திரம் என்று சொல்லுமளவுக்கு சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலில் மட்டுமல்லாது லிஸ்பன் நகரம் தனித்துவமான இடத்தைப் பெறுகிறது சாரமாகோவின் மற்றொரு முக்கியமான நாவலான History of the Siege of Lisbon இல்.

புதின உத்திகளில் சாரமாகோ சம்பிரதாயமானவற்றையும் மிக நவீனமானவற்றையும் கலந்தே பயன்படுத்துகிறார். நாவலின் கால எல்லை வரையறுக்கப்பட்டிருக்கிறது. பாத்திரங்கள் முழுமையான அளவுக்கு நிஜ மனிதர்களைப் போலிருக்கிறார்கள். லிஸ்பன் நகரம் அடையாளப்படுத்தப்படும்படியாக அதன் நினைவுச் சின்னங்களுடன்  மறு விவரணை பெறுகின்றது. ஒரு வகையில் மேலோட்டமாகப் பார்த்தால் இதை வரலாற்று நாவல் என்று கூட சொல்லிவிடலாம்தான். அப்படிப் பார்த்தால் Thomas Pynchon இன் Gravity’s Rainbow கூட வரலாற்று நாவல் என்ற வகைப்பாட்டில் வந்துவிடும். ஆயினும் அப்படிச் சொல்ல முடியாதபடிக்கு நவீனத்தன்மைகள் மிக்கதாய் இருக்கிறது சாரமாகோவின் நாவல்.  சலிப்பே வராத வாசிப்பு அனுபவம் தரக்கூடயதாய் இருக்கிறது. சித்தரிப்புகளில் எந்த இடத்திலும் தொய்வு வந்துவிடாமல் எழுதும் மொழிநடை சாரமாகோவினுடையது.  மேற்கோள் குறிகள், அரைப்புள்ளிகள், கேள்விக்குறிகள், வியப்புக் குறிகள் மற்றும் சில வாக்கிய இணைப்புத் தொடர்களை சாரமாகோ தவிர்த்து விடுகிறார். கவனக்குறைவாக வாசிக்கிறவர்களும் அவசரமாக வாசிக்கிறவர்களும் உரையாடல் யாருடையது என்று அறிந்து கொள்ள முடியாமல் குழம்பிப் போக வாய்ப்பிருக்கிறது. ஃபிளாஷ் ஃபார்வார்ட் உத்தியை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்தி நாவலின் காலத்தை சுழற்சிமிக்கதாய் ஆக்கிவிடுகிறார் சாரமாகோ. நகரத்தின் கேளிக்கை விழா முடியும் தருவாயில் அதில் பங்கேற்கும் மாறுவேடமணிந்த குழந்தைகளின் புகைப்படங்கள் சில நாளிதழ்களினால் எடுக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி நடப்பது நாவலின் 120 பக்கங்களைத் தாண்டிய பிறகு. ஆனால் இந்த புகைப்படக் குழந்தைகளில் ஒன்றினுடைய பாட்டி இந்தக் குழந்தையின் புகைப்படத்தை பத்திரமாக தனது சிறிய பச்சை நிறப் பெட்டியில் வைத்துக் கொள்வாள் என்று கதைசொல்லி அனுமானிக்கிறார். ஆனால் இதே பச்சை நிறப் பெட்டி டாக்டர் ரெய்ஸ், ரியோ டி ஜெனிரோவிலிருந்து வந்திறங்கும் Highland Brigand கப்பலில் வந்த வயதான மூன்றாம் வகுப்புப் பெண்மணியின் பையிலிருந்து ஏற்கனவே தவறி விழுந்து உடைந்து விடுகிறது. இதே போல நாவலின் இறுதியில் டாக்டர் ரெய்ஸ் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அந்தரங்கத்தின் நெருக்கத்தைப் பற்றி லிடியாவும் மார்சென்டாவும் பரிமாறிக் கொள்வதாக வரும் உரையாடல்கள் எதிர்காலத்தில் நடக்கின்றன அல்லது நடக்க வாய்ப்பில்லாத வெறும் யூகத்தின் காட்சிப்பாடுகள். ஆயினும் அது யதார்த்தமாக நடக்கிறதென்கிறமாதிரிதான் கதைசொல்லி சொல்லிச் செல்கிறார். டாக்டர் ரெய்ஸ் மார்சென்டாவுக்காக எழுதிய ஒரு கவிதையை மார்சென்டாவின் தந்தை அவளிடம் குறிப்பிடுவதாக வரும் உரையாடலும் கூட எதிர்காலத்தில் நடப்பதாக அல்லது கற்பனை செய்யப்பட்டதாகக் கருதப்பட வேண்டியிருக்கிறது. ஒரே வாக்கியத்தில் இரண்டு அல்லது மூவரின் பார்வைகள் பிரதிபலிக்கும்படியான உரையாடல்கள் கோர்க்கப்பட்டுள்ளன. சீர்தன்மைகளும் சம அமைப்புகளும் நாவலின் எண்கள் வழியாக வலியுறுத்தப்படுகின்றன. ஒன்பதாம் எண் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. இங்கு கடல் முடிந்து பூமி தொடங்குகிறது என்ற வாக்கியத்தில் நாவல் தொடங்கி  இங்கே கடல் முடிந்து பூமி காத்துக் கொண்டிருக்கிறது என்ற வாக்கியத்தில் முடிகிறது. மொழி பற்றிய அதீத பிரக்ஞை மிகுந்த நாவலாசிரியர் சாரமாகோ என்பதை நாவலில் பல இடங்களில் தெரிவித்துச் செல்கிறார். சிந்தனைகளை மறைத்துக் கொள்வதற்காகத்தான் மனிதனுக்கு மொழி கொடுக்கப்பட்டிருப்பதாக ரெய்ஸ் கருதுகிறார். வார்த்தைகளின் பொய்மை அவரை ஹிம்சிக்கிறது. மனிதத்தொடர்பு இல்லாது போனால் பெயர்களே கூட அர்த்தமற்றவையாகிவிடும்:

…these words are spoken casually, they hover in midair, waiting for someone to pay attention. But what kind of attention, he could be telling the truth, he could be telling a lie, such is the inadeqacy, the bulit-in duplicity of words. A word lies, with the same word one can speak the truth, we are not what we say, we are true only if others believe us.

(The Year of the Death of Ricardo Reis, pp.282-83)

தேவாலயப் பூஜை தொடர்பானவை, போர் முறை சம்மந்தப்பட்டவை, மல்யுத்தம் பற்றியவை என  வாழ்க்கையின் பல தளங்களிலிருந்து சொற்களை எடுத்துப் பயன்படுத்துகிறார் சாரமாகோ. நனவோடை உத்தியையும் கதைசொல்லி பயன்படுத்தினாலும் விவரணைப் பொருளிலிருந்து மிகவும் விலகிச் செல்லும் போது தன்னைத் தானே நினைவூட்டிக் கொள்கிறார். நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை மிக முக்கியமான கட்டங்களில் ஃபெர்னான்டோ பெசோவாவின் கவிதை வரிகள் உரையாடல்களுக்கு இடையிலும் விவரணைக்கு இடையிலும் விரவி வருகின்றன. மேற்காட்டப்பட்ட வரிகள் மிகக் கச்சிதமான இடப்பொருத்தம் கொண்டவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. சில வரிகள் மாத்திரமே கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன:

“I stand firmly on the foundations of the poems I fashioned.”

. . .       . . .       . . .       . . .       . . .       . . .       . . .

“All I ask of the gods is that I should ask nothing of them”.

இந்த நாவலின் ஊடிழைப் பிரதிகள் (inter-texts) அல்லது இடைவெட்டுப் பிரதிகள் பற்றி சில விஷயங்களைச் சொல்லியே ஆக வேண்டும். மார்சென்டாவின் பெயர் தொடர்பான விவாதத்தில் அதன் விநோதப் பயன்பாடு பற்றி கதைசொல்லி தெரிவிக்கிறார். அது பிலிமுண்டா என்கிற பெயரைப் போலவே விநோதமானது என்றும் நடைமுறையில் பெண்களுக்கு சூட்டப்படாதது என்கிறார். பிலிமுண்டா என்கிற பெண் பாத்திரம் சாரமாகோவின் மற்றொரு நாவலான பால்த்தஸாரும் பிலிமுண்டாவும் என்கிற நாவலில் இடம் பெறுவது. The Moor’s Last Sigh (1995) என்ற நாவலுக்காக பிலிமுண்டா என்ற கதாபாத்திரத்தின் பெயரை சாரமாகோவிடமிருந்து திருடியதாக ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் Salman Rushdie.

(“I stole Blimunda from him [Saramago]”- interview with Clara Ferreira Alves in the Lisbon weekly Expresso, 4 Nov 1995, magazine section, p. 96).

The convent of Mafraஎன்ற தலைப்பிலான சாரமாகோவின் நாவலின் நிழலை கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் Of Love and Other Demons நாவலில் பார்க்க முடியும். மார்க்வெஸ்ஸின் நாவலில் இடம் பெறும் வால்டேரின் மேற்கோளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்த கிறித்தவ பிக்கு கோயிம்ராவைச் சேர்ந்த, சாரமாகோ உருவாக்கிய Bartolomeu de Gusmão ஆவார்.

“this name, Marcenda, isn’t borne by women, we’re talking about words from another world, another place, feminine nouns of the tribe of gerunds, like Blimunda, for example, which is a name waiting for a woman to bear it”

[Year of the Death of Ricardo Reis]

பாதிரி Bartolomeu Gusmão வின் நகரான கோயிம்ராவைச் சேர்ந்தவள்தான் மார்சென்டா. பால்த்தஸாரும் கோயிம்ராவைச் சேர்ந்தவன். வேறு ஒரு தளத்தில், நாவலில் கற்பனையான ரிக்கார்டோ ரெய்ஸ், லிஸ்பனின் நிஜமான செய்தி நாளேடான Diário de Notícias ஐ படிப்பதாக வருகிறது. இந்த செய்தி ஏட்டில் நிஜவாழ்க்கையில் சாரமாகோ துணையாசிரியாகப் பணியாற்றினார்.

படைப்பாக்கத்தின் மொழியியல் மற்றும் இலக்கியப் பரிமாணங்கள் இந்த நாவலின் பிரக்ஞைமிக்க கதைசொல்லலில் (self-conscious narrative) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நாவல் பலகுரல் நிறைந்ததாக அதன் பாத்திரங்களாலும் கதைசொல்லியின் விவரணை முறையாலும் ஆகிறது.

ரிக்கார்டோ ரெய்ஸ் இறந்த வருடம், 1984ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவுடன் Independent Foreign Fiction Award பரிசு இந்த நாவலுக்கு வழங்கப்பட்டது. போர்ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் Giovanni Pontiero. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பக்க எண்கள் ஹார்வில் பிரெஸ் (லண்டன்-1992) பதிப்பை அனுசரித்து தரப்பட்டுள்ளன. நாவல் எழுதுவது பற்றி சாரமாகோ ஒரு பேட்டியில் சொன்னதை இங்கே தருவது தமிழ் எழுத்தாளர்களுக்கு பயன் தரும்:

“Sometimes I say that writing a novel is the same as constructing a chair: a person must be able to sit in it, to be balanced on it. If I can produce a great chair, even better. But above all I have to make sure that it has four stable feet. A chair with three feet promises a fatal fall. No three-footed chair  will last.
Writing is my job. It’s the work I do, what I build. I don’t believe in inspiration.”

(BOMB Magazine: Saramago Interviewed by Katherine Vaz)

Enhanced with Snapshots

Advertisements