யூலியோ கோர்த்தஸாரின் ஹாப்ஸ்காட்ச்(Hopscotch)-பிரம்மராஜன்

600full-julio-cortazar

(Julio Cortazar)

யூலியோ

கோர்த்தஸாரின்  ஹாப்ஸ்காட்ச்(Hopscotch)

பிரம்மராஜன்

கவிதையின் உச்சத்தினை எட்டிவிடக்கூடிய செறிவான உரைநடையில், எதிர்பாராத சமயத்தில் முகத்தில் விழுகிற அறைகளைப் போன்ற அனுபவங்களைத் தரக்கூடிய, திடுக்கிட வைக்கும் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிய யூலியோ கோர்த்தஸார் ஐரோப்பிய நகரான பிரஸ்ஸல்ஸில் பிறந்து அவரது நான்காம் வயதிலிருந்து போனஸ் அயர்சில் வளர்ந்தார். ஒரு பக்குவப்பட்ட புனைகதையாளர் என்ற நிலையை விக்டோரியா ஒகேம்ப்போ என்ற அர்ஜன்டீனியப் பெண் எழுத்தாளர் நடத்திய ‘சுர்’ என்ற காஸ்மொபொலிட்டன் இலக்கியப் பத்திரிகை மற்றும் ஜோர்ஜ் லூயி போர்ஹேவின் நிழலிலும் அடைந்தார். வேறு எந்த இலக்கிய வடிவத்தை விடவும் அவரது வெளிப்பாட்டு முறைக்கு புனைகதை மிகவும் பொருந்திப் போகக் கூடியது என்பதை கோர்த்தஸார் தன் வாழ்க்கையில் சற்று தாமதமாகவே கண்டுபிடித்துக் கொண்டார். தொடக்க காலத்தில் கோர்த்தஸார் ஆங்கில ரொமாண்டிக் கவிஞரான கீட்ஸ், பிரெஞ்சு சிம்பாலிசக் கவிஞரான ஆர்தர் ரைம்போ, தியேட்டர் ஆஃப் குரூயெல்ட்டியின் (Theatre of Cruelty)மூலம் பிரபலமான நவீன பிரெஞ்சு நாடகாசியரான ஆந்தோனின் ஆர்த்தாட்  (Antonin Artaud)ஆகியோர் பற்றிய விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். யூலியோ டென்னிஸ் என்ற புனைப்பெயரில் அவர் எழுதி வெளியிட்ட கவிதைகளையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். பன்முக ஆளுமை கொண்ட கோர்த்தஸாருக்கு இசை ஒரு மிகத் தீவிரமான தூண்டுதலாகவும் தொடர்ந்த ஈடுபாடாகவும் இருந்திருக்கிறது. ஒன்பது வயதில் கோர்த்தஸார் பியானோ வாசிக்கப் பழகினார். ஜாஸ் இசை, ஜென் தியானம், புரட்சிகர அரசியல் ஆகிய மூன்று அம்சங்களும் கோர்த்தஸாரின் எழுத்துக்களில் முனைப்பாகவும், பிணைந்தும், சில நேரங்களில் அடியோட்ட மாகவும் வருகின்றன. லத்தீன் அமெரிக்கப் புனைகதை எழுத்தாளர்களில் கோர்த்தஸார் அளவுக்கு ஸர்ரியலிஸ இயக்கத்தின் செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட வேறு எவரும் இருக்க முடியாது. பழகிய பாதையில் பிரக்ஞையின்றி நடமாடும் வாசகனை உலுக்கி எடுக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களை இந்த நூற்றாண்டில் ஸர்ரியலிஸ்டுகளே முன் வைத்தார்கள். 1935ஆம் ஆண்டு சர்வதேச எழுத்தாளர் காங்கிரசில் வாசிக்கும் நோக்கத்துடன் ஸர்ரியலிஸத்தின் பிதாமகரான ஆந்ரே பிரெத்தன்(Andre Breton)ஆர்தர் ரைம்போவினுடைய தையும் (Arthur Rimbaud), கார்ல் மார்க்சினுடையதையுமான பிரதான கருத்தோட்டங் களைப் பிணைத்து ஒரு புதிய எழுத்துத் திட்டத்தை வடிவமைத்தார். (இதை வாசிக்க பிரெத்தன் அனுமதிக்கப்படவில்லை.) பிரெத்தனின் இந்த அறைகூவலை–மார்க்ஸ் தவிர்த்து–மனமார ஏற்றுக் கொண்டவர் கோர்த்தஸார்.

ஆரம்பத்தில் ஒரு பள்ளியிலும் பிறகு மெண்டோசா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய கோர்த்தஸார் ஒரு கட்டத்தில் பெரொனிஸ்ட் அதிகாரிகளுடன் மோதலை மேற்கொண்டார். இதனால் அவருடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. பிறகு பிரெஞ்சு மொழி கற்றுக் கொண்டு ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் விளக்குநராகவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு பாரிஸ் நகருக்குச் சென்றவர் ஃபிரான்சிலேயே அவருடைய இறப்பு வரை தங்கி விட்டார்.

கொலாஜ் நாவல்கள், புனைவுச் சிறுகதைகள், கவிதைகள், அரசியல் கோட்டபாட்டுக் கட்டுரைகள், சோதனை எழுத்துக்கள் என்று வகைப்படுத்த முடியாத பல வேறுபட்ட படைப்புக்களையும் எழுதிய கோர்த்தஸார், இலக்கியத்தில்  ஒரு ஒற்றை வகைமையுடன் எல்லைப்படுத்தி அவர் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. கோர்த்தஸாரின் நாவல்கள் யதார்த்த வாதத்தையும் அதன் ஒருமைவாத பிரதிநிதித்துவங்களையும் நேரடியாகவோ மறைமுக மாகவோ குலைக்கவும், குறைக்கவும் உதவின. கோர்த்தஸாரின் புனைகதை எழுத்துக்களில் எந்த அளவு ஒரு தீவிரத்தன்மை காணப்படுகிறதோ அதே அளவு நகைச்சுவையுணர்வும் வெளிப்படுகிறது. சோம்பலான வாசகன் கூட விழித்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு திடுக்கிடல்கள் மிகுந்திருக்கும் புனைகதைகள் கோர்த்தஸாரிடம் உண்டு. The Night Face Up என்ற சிறுகதையின் அனுபவம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கையில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனைப் படுக்கையில் இருப்பவனின் கனவா அல்லது ஒரு அஸ்டெக் வீரனின் நவீனகாலக் கனவாக மோட்டார்பைக் இளைஞனின் அனுபவம் மாறுகிறதா என்பதை வாசகன் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

The Continuity of Parks என்ற  தலைப்பிலான கதையைப் படித்துக் கொண்டிருக்கும் நபர் அந்தக் கதையிலிருந்து உருவான கொலையாளியால் நிஜவாழ்க்கையில் கொல்லப்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.  Moebius Strip சிறுகதையில் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பி வந்து ஒரு காட்டில் ஆங்கில டூரிஸ்ட் பெண் ஒருத்தியைக் கற்பழித்து விட்டு, பிறகு சிறையில் தான் கற்பழித்த அந்தப் பெண்ணாகவே அவன் மாறிப்போய் அந்த அவசம் தாங்கமாட்டாமல் தற்கொலை செய்து கொள்கிறான். யதேச்சையான, மேலோட்டமான, சோம்பலான வாசகனுக்கு கோர்த்தஸாரின் கதைகளிலும் நாவல்களிலும் இடமில்லை.  இயக்கம் மிகுந்தவனாகவும், ஆசிரியன் தரும் அத்தியாயங்களை தக்கவாறு மாற்றி வரிசைப்படுத்திப் புரிந்து கொள்பவனாகவும், கதைத் திட்டத்தை ஏமாற்றிப் புரிந்து கொள்ளாதவனாகவும்  (Cheating the plot) இருப்பவனே கோர்த்தஸாரின் வாசகானாக இருக்க லாயக்கானவன்.

கோர்த்தஸாரின் 7 சிறுகதைத் தொகுதிகளில் குறிப்பிடத்தகுந்தவை Blow up and Other Stories(1967),  We Love Glenda So much and Other stories(1981), The End of the Game and other stories. முதல் நாவலான The Winners 1960 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1963ஆம் ஆண்டு வெளிவந்த Hopscotch கோர்த்தஸாரின் இரண்டாவது நாவல். 62: A Model Kit(1968) மற்றும் A Manual for Manuel (1973), A Certain Lucas(1979) போன்றவை அவரின் பிற நாவல்கள். 1970இல் வெளிவந்த The Last Round என்ற நூலை எதிலுமே வகைப்படுத்த முடியாது. பாரிசுக்கும் மார்ஸெய்ல்ஸ் நகருக்கும் இடையிலான கார் பயண வழியைப் பற்றிய பதிவாக இந்த நூல் அமைகிறது. அரசியல் எழுத்துக்கள் இரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வந்திருக்கின்றன.

1)Nicaragua, So violently Sweet

(2)Argentina: Years of Cutural wire-fencing.

கோர்த்தஸாரின் இறப்புக்குப் பிறகு வெளிவந்தது The Exam என்ற நாவல் .

கோர்த்தஸாரின் கதாபாத்திரங்களைப் பற்றிச் சொல்லும் போது நமக்கு போர்ஹேவின் பாத்திரங்கள் நினைவுக்கு வரவேண்டும். கோர்த்தஸாரின் பாத்திரங்களை ரத்தமும் சதையுமுமான ஸ்தூலப் மனிதர்களின் பிரதிபலிப்புகள் என்று சொல்ல முடியாது. சமயங்களில் அவை விவரணை ரீதியான உத்திகள் போல இயங்குகின்றன. இந்தப் பெயர்களின் மீது நாவலாசிரியன் தன் தற்சாய்வுமிக்க அணுகுமுறைகளையும் மனப்பதிவுகளையும் கட்டுகிறான். நிஜவாழ்வில் மூன்று மணிநேரமாக ஒரே விவாதத்தைத் தொடரக்கூடியவர்களை நாம் பார்க்க முடியாதென்றாலும் கோர்த்தஸாரின் புதினங்களில்  சந்திக்கலாம். வாசகன் எதிர்பார்த்திராத மிகத்தீவிரமான மனோவியல் மாறுதல்களை இந்தப் பாத்திரங்கள் மிகக் குறுகிய காலத்தில் அடைந்துவிடுபவர்களாக இருக்கின்றனர். எட்கர் ஆலன் போ என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க நாவலாசிரியர் வாசகனின் ஆன்மாவை எழுத்தாளன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டுமானால் அவன் ஒரு ஒற்றை விளைவில் மாத்திரம் கவனம் செலுத்துவது நல்லது என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்து கோர்த்தஸாருக்கு மிகவும் ஒப்புதலானதாக இருக்கிறது. பொதுவாக கோர்த்தஸாரின் புதினங்களில் பொதுப்புத்தியை அணுசரித்து கதை சொல்லும் விவரணையாளன் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. எனவே கதை எவ்வளவு குழப்பமானதாக இருப்பினும் இறுதியில் வாசகனுக்கு திருப்தி கிடைக்கவே செய்யும். உரையாடல்களைப் பொது விவரணையோட்டத்திலிருந்து பிரித்து அடையாளப்படுத்தும் மேற்கோள் குறிகள் ஏதும் இவர் கதைகளில் தேவையான இடங்களில் இருக்காது. நனவோடை நாவல்களைப் படிப்பது போன்ற  உணர்வு பல கதைகளில் ஏற்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஹாப்ஸ்காட்ச் நாவலை விவாதிப்பதற்கு முன்னர் நாவலின் காலம் பற்றிய ஒரு சிறு விளக்கம் அவசியமானதாகிறது. நாவலின் காலத்தை வசதி கருதி பிரதியின் காலம் (Text Time) என்றும் கதையின் காலம் (Story Time) என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பிரதியின் காலம் நேர்கோட்டுத்தன்மையிலானது மட்டுமன்றி மாற்றவே முடியாததும் கூட. இப்படி ஒரு திசைத்தன்மையில் அமைந்த காரணத்தினால்தான் வாசிப்பவர், வார்த்தை அடுத்து வார்த்தையாக, வாக்கியம் அடுத்து வாக்கியமாக வாசிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய புனைகதையின் விவரணை எல்லைகளை உடைக்க முயன்ற இரண்டு நாவல்கள் சாமுவெல் பெக்கெட்டின் வாட் மற்றும் கோர்த்தஸாரின் ஹாப்ஸ்காட்ச். அத்தியாயங்களின் ஒழுங்கில் மாறுபாட்டினைச் செய்வதன் மூலம் பிரதியின் ஒருதிசைத்தன்மையை மறுக்கிறார் கோர்த்தஸார். பிரதியின் காலம் தவிர்க்க இயலாதபடி நேர்க்கோட்டுத்தன்மையில் இருப்பதால் நிஜமான கதைக் காலத்தின் பன்முகக் கோட்டுத்தன்மையுடன் ஒன்றிணைய முடியாது. ஒன்றிணைய வேண்டிய கட்டாயத் திலும் அவை இல்லை.

தனிமனித விமோசனமும், வேதாந்த விசாரமும், செயல்படாதிருப்பது பற்றிய குற்ற உணர்வும், சுயவெறுப்பும் ஹாப்ஸ்காட்ச் நாவலின் பிரதான சிந்தனையோட்டத்தில் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கின்றன. செயலுக்கு முன் ஆன சிந்தனையில்லாத அறிவு ஜீவி எவனும் இருக்க முடியாது. ஹாப்ஸ்காட்ச் நாவலின் நாயகனான ஹொரேசியோ ஆலிவேய்ரா சிந்தனையால் பீடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமான விஷயமல்ல. அவன் ஒரு மத்தியதர வர்க்க அறிவு ஜீவி. Picon Garfield க்குக் கொடுத்த பேட்டியில் ஆலிவேய்ராவை அதிகம் படிப்பதால் வரும் கலாச்சார நோயினால் பீடிக்கப்பட்ட ஒரு pseudo-intellectual என்று கோர்த்தஸார் குறிப் பிட்டிருக்கிறார். மஹாபாரத அர்ஜூனனையும், டென்மார்க் இளவரசனான ஹாம்லட்டையும், ரஷ்யனான ஓப்ளமோவையும் தன் கட்சிக்கு ஆலிவேய்ரா அழைப்பதை தொடக்க அத்தியாயங்களில் படிக்க முடிகிறது. கலாச்சார ரீதியான அதிகப் படிப்பினால் பிரத்யட்ஷ வாழ்க்கையின் கணங்களை உணர முடியாமல்  போய்விடும் ஆபத்தில் இருப்பவன் ஆலிவேய்ரா. ஹாப்ஸ்காட்ச்  உருவாக்க நிலையில் இருந்த காலகட்டத்தில் அவருடைய குறிப்புகளுக்கு மண்டலா என்று பெயர் கொடுத்திருந்தார் கோர்த்தஸார். தியானத்திற்கான உருவ ரீதியான உதவியாக அமைவது மண்டலா. 1950களில் கோர்த்தஸாருக்கு இருந்த உள்வயமான தேடலைப் பிரதிபலிப்பதாக மண்டலா அமைகிறது. போனஸ் அயர்ஸ் மற்றும் பாரிஸ் தெருக்களின் மண்டலங்களின் வழியாக அலைந்தபடி மண்டலத்தின் வெறுமையான மையத்தை–சடோரியை–தேடுகிறான் ஆலிவேய்ரா. இதன் பொருட்டு தன் காதலிகளை, நகரங்களை, நண்பர்களை, புத்தக ரீதியான அறிவினை உதறிச் செல்கிறான்.

வயது வந்தவர்கள் குழந்தைகள் அளவிற்கு விளையாட்டை எதுபற்றிய லட்சியமோ அக்கறையே இன்றி விளையாட முடியாது. புனைவின் இழப்பும், சுயப்பிரக்ஞையும் வளர்ந்தவர்களின் உலககினை உயிர்ப்பற்றதாக, உப்புச்சப்பற்றதாக மாற்றி விடுகிறது. குழந்தையின் மனோநிலைக்குத் திரும்ப வேண்டுமானால் ஆலிவேய்ரா தான் கற்றதின் செயற்கைத் தன்மைகளிலிருந்து அவனை விடுவித்துக் கொள்ளத் தூண்ட வேண்டும். ஒரு வேளை இந்தக் காரணத்தினால் கூட கோர்த்தஸார் தன் நாவலுக்கு இறுதியாக ஹாப்ஸ்காட்ச் என்ற, குழந்தைகள் கூழாங்கற்களை எத்தித் தாண்டி விளையாடும் விளையாட்டினைத் தலைப்பாக வைத்திருக்கலாம். ஹாப்ஸ்காட்ச் ஏறத்தாழ நம் ஊர் குழந்தைகள் விளையாடும் பாண்டியாட்டத்தை ஒத்திருக்கிறது.

பாரிஸ் நகரில் Club de la Serpentine என்ற குழு அங்கத்தினர்களுடன் உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் முடிவற்ற விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறான் ஆலிவேய்ரா. அவன் ஒரு சுயபிரக்ஞை மிகுந்த நடோடி. (Self-conscious vagrant) பக்26. பாரிஸ் பற்றிய கனவுத்தன்மையான கிளாமர் கரைந்து போவதற்கு முன் அவன் தன் நாட்களை குற்ற உணர்வு மிகுந்த ஓய்வு நேரங்களால் நிரப்புகிறான். காதல் விவகாரங்கள், விடுதிகளில் விவாதங்கள், தெருக்களில் உலவுதல்-இப்படிச் செல்கிறது அவன் வாழ்க்கை. ஆலிவேய்ராவின் சகோதரன் ஒரு ஏஜண்ட் மூலமாகப் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான். ஓசிப் கிரகொரோவியஸ் என்ற போஸ்நிய (ட்ரேன்சில்வேனியா?) நாட்டவனும், எட்டியன் என்ற பிரெஞ்சுக்காரனும், வோங் என்ற சீனனும் ரோனால்ட் என்ற அமெரிக்கனும் அவன் காதலி பாப்ஸ் என்பவளும் குழுவின் அங்கத்தினர்கள்.  விவாதங்களில் ஈடுபடும் அதே அளவுக்கு குழு அடுக்கடுக்கான எல்.பி ரெக்கார்டுகளில் இருந்து சாஸ்த்ரீய மேற்கத்திய இசையையும் ஜாஸ் இசையையும் கேட்கிறது.  தத்துவ விசாரங்களில் ஈடுபடுகிறது. ஓவியம் மற்றும் ஓவியர்கள் பற்றிய விவாதம் சில நேரங்களில் அரூபப் பிரதேசங்களில் சஞ்சரிக்கும். கிளப்பின் அங்கத்தினர்களில் ஒருவனான எட்டியன் பால் க்ளீயின் ஓவியப் பாங்கினையும் மாண்ட்ரியனின் ஓவியப்பாங்கினையும் ஒப்பிட்டு மாண்ட்ரியனின் ஓவிய வெளிப்பாட்டு முறையே உயர்வானது என முடிவெடுக்கிறான். விதி மற்றும் கலாச்சாரத்தின் பரிசுகளை வைத்து விளையாடிவர் க்ளீ என்றும் மாண்ட்ரியன் முழுமுற்றானவற்றுடன் தன் பரிவர்த்தனைகளை வைத்துக் கொண்டார் என்றும் வாதிடுகிறான். இந்தக் கருத்துக்களின் நியாய அநியாயங்களைத் தீர்மானிக்க வாசகனுக்கு ஓரளவு நவீன ஓவியப் பரிச்சயம் இருப்பது நல்லது.

“பாரிஸ் ஒரு பெரும் உருவகம்” என்றும் “பாரிஸ் ஒரு மகத்தான குருட்டுக் காதல்” என்றும் கிளப்பின் அங்கத்தினர்களால் வரையறுக்கப்படுகிறது. ஏறத்தாழ உலகத்தின் எல்லா அறிவுஜீவி களும் சென்று அடைய வேண்டும் என்று நினைக்கிற சர்வதேச கலாச்சார மெக்காவான பாரிஸ் நகரைப் பற்றி ஹெமிங்வே தனது நூல் ஒன்றில் Paris is movable feast என்று புகழ்ந்துரைத் திருப்பதையும் கோர்த்தஸாரின் கருத்துக்களையும் வாசகன் சீர்தூக்கிப் பார்க்கலாம்.

ஹாப்ஸ்காட்ச் நாவலின் பிரதான பெண் பாத்திரமாக இருப்பவள் ‘லா மாகா’. இவளும் ஆலிவேய்ராவைப் போல உருகுவே நாட்டிலிருந்து பாரிசுக்கு வந்தவள். ஆலிவேய்ராவின் காதலி. முந்திய  காதல் மூலம் இவளுக்கு Rocamadour என்ற ஆண் குழந்தை உண்டு. கருக்கலைக்க வேண்டாம் என்று நினைத்து பிறகு இப்போது அதற்காக வருத்தப்பட வைக்கும் குழந்தை. Rocamadour இன் தந்தையின் பெயர் தரப்படுவதில்லை.  மாண்ட்டிவீடியோவிலிருந்து அவள் பாரிசுக்கு வருவதற்கு முன்பு லா மாகவின் பெயர் லூசியா. லா மாக ஒரு பெண் அறிவு ஜீவி அல்ல. கிளப் அங்கத்தினர்களின் ஒவ்வொரு பெயர் உதிர்ப்பின் போதும் அதுபற்றி கள்ளங்கபட மில்லாமல் என்ன ஏது என்று சந்தேகம், தெளிவு கேட்டு வசவு வாங்கிக் கொள்பவளாக இருக்கிறாள். ஆலிவேய்ராவுக்கும் லா மாகவுக்கும் இடையே நிலவுவது காதல்  என்று சொல்ல முடியாத உறவு. அது விருப்பும் வெறுப்பும் ஒர சேரக் கலந்த ஒரு மனோ நிலை. லா மாகாவுக்கு வேண்டுமானால் ஆலிவேய்ராவிடம் அன்பிருக்கிற மாதிரி தோன்றுகிறதே ஒழிய ஆலிவேய்ராவுக்கு அவளிடம் பிணைப்போ பந்தமோ இருப்பதில்லை. அவளுடைய அருமையையும் இனிமையையும் அவளை இழந்த பிறகே முழுமையாக உணர்பவனாக இருக்கிறான் ஆலிவேய்ரா. லா மாகவின் குழந்தை மகன் ரோகோமோடார் ஓர் இரவு இறந்து போயிருப்பதைத் தெரிந்தும் கூட லா மாகாவிடம் தெரிவிக்காமல் இருந்து விடுகிறான்.

கிளப் அங்கத்தினர்களில் ஒருவனான ஓசிப் கிரெகொரோவியஸூடன் லா மாகா செக்ஸ் உறவு வைத்துக் கொண்டிருப்பாளோ என்று சந்தேகப்படும் ஆலிவேய்ரா மிக அவமானப்படுத்தும் தொனியில் லா மாகாவை விசாரிக்கும் பொழுது கூட மிகப் பொறுமையாக அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறாள். ஒரே அபார்ட்மெண்ட்டில் வசிக்க முடிவு செய்து தங்கள் வாழ்க்கையைத்  தொடங்க முடிவெடுத்தாலும் ஆலிவேய்ராவால் குழந்தை ரோகோமோடாரின் உடல்நலக் குறைவு மற்றும் கத்தல்கள் காரணமாக அந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்ற முடிவதில்லை. லா மாகாவைச் சகித்துக் கொண்டாலும் அவள் குழந்தையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாதவனாக இருக்கிறான்.  தாய் என்ற பொறுப்பினை அதிகம் ஏற்க வேண்டி வரும் லா மாகாவிடமிருந்து தனக்குத் தேவையான காதல் கிடைக்காமல் போய்விட்டது என்று குற்றம் சாட்டுகிறான். குழந்தை ரோகோமோடாரின் இறப்புக்குப் பிறகு லா மாகா காணாமல் போகிறாள். இதன் பின்விளைவாக பாரிஸ் நகரிலிருந்து கிளம்பி அர்ஜன்டீனாவிற்கு திரும்பிச் செல்கிறான்.

ஹாப்ஸ்காட்ச் நாவல் இரண்டு பிரதானப் பகுதிகளாக அமைந்திருக்கிறது.

1-36 அத்தியாயங்கள் பாரிஸ் நகரில் அமைந்திருக்கின்றன.

37-56 அத்தியாயங்கள் அர்ஜன்டீனாவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஹாப்ஸ்காட்சின் முன்னேற்றம் அத்தியாயம் 73இல் ஆரம்பிக்கிறது. இந்த வாசிப்புகளுக்காக ஆசிரியனின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாவலின் முழுமைக்கும் முன்னும் பின்னுமாக தாவித் தாவிக் குதித்து குதித்துச் செல்ல வேண்டியிருக்கிறது. ஹாப்ஸ்காட்ச் ஒரு திறந்த முனை, எதிர் நாவல். மேற்குறிப்பிட்ட பிரதான இரண்டு விவரணைப் பகுதிகளும் மொத்த நாவலின் 349 பக்கங்களை எடுத்துக் கொள்கின்றன. மூன்றாவது விவரணைப் பகுதியான (பக்கம் 350லிருந்து 564வரை) From Diverse Sides நாம் தேவையில்லை என்று நினைத்தால் எடுத்துவிடக் கூடிய அத்தியாயங்களால் அமைந்திருக்கிறது.

ஹாப்ஸ்காட்ச் நாவலையே ஆலிவேய்ரா என்ற எழுத்தாளன் தனித் தனிப் பக்கங்களாக எழுதி வைத்திருக்கும் ஒரு நோட்டுப் புத்கமாகப் பார்க்கலாம். ஆலிவேய்ரா ஒரு எழுத்தாளன் என்ற தகவல் நமக்குத் தரப்பட்டிருப்பினும் அவன் என்ன எழுதுகிறான் என்ற தகவல் நமக்கு அளிக்கப்படுவதில்லை. நம் கையில் வைத்திருக்கும் பிரதி அந்த இடைவெளியை நிறைக்கலாம். இருப்பினும் கூட நாவலின் பல குறிப்புகள் உணர்த்துவது போல நாவலின் ஆசிரியர் மொரேலி என்பவனாக இருக்க முடியும். 71, 82, 94, 105, 112, 115, 137, 145, 151 ஆகிய அத்தியாயங்களுக்கு மேரேலியானா (மெரோலிய புராணம்?) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அத்தியாயங்கள் நாவலின் கதை ஓட்டத்தினை பாதிப்பதில்லை. நாவலில் இவை மாத்திரமே தலைப்பு தரப்பட்டிருக்கிற அத்தியாயங்கள். 107வது அத்தியாயம் “மொரேலி மருத்துவ மனையில் இருக்கும்போது எழுதியது” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.  115வது அத்தியாயம் மோரேலி எழுதியது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் மொரேலியை மூன்றாம் நபர் பார்வையிலிருந்து அணுகுகிறது. மேலும் மோரேலியே ஒரு கதாபாத்திரமாக ஹாப்ஸ்காட்ச் நாவலில்óவருவது பிரச்சனைப்பாடுகளை உச்சத்திற்குக் கொண்டு சென்று விடுகிறது.

ஹாப்ஸ்காட்ச் என்ற விளையாட்டு ஒரு இலக்கிய உத்தியாக நாவலின் பிந்திய பகுதியில்தான் உருவாக்கப்படுகிறது. அர்த்தம் நிறைந்த இந்த வார்த்தை நாவலின் பிராதான பாத்திரமான ஆலிவேய்ராவின் லா மாகா மீதான குழப்பமான காதலை விளக்குவதற்குப் பயன்படுகிறது. லா மாகாவை “ஒரு பைத்தியக்கார ஹாப்ஸ்காட்ச்” (பக்கம்.95) என்கிறான் ஆலிவேய்ரா. பூமியிலிருந்து சொர்க்கத்திற்குச் செல்வதற்கான ஒரு உருவகமாகவும் நாவலின் கதைக்கருவாகவும் மாறுகிறது. குழந்தைகள் விளையாடும் வளைவு வளைவான ஹாப்ஸ்காட்ச், கட்டம் கட்டமான ஹாப்ஸ்காட்ச், அடிக்கடி வியைடப்படாத புனைவு ஹாப்ஸ்காட்ச் (பக்கம்.214) போன்ற வேறுபடும் ஹாப்ஸ்காட்ச் விளையாட்டுக்கள் பற்றி தகவல்கள் வருகின்றன. எனினும் கடைசியாகக் குறிப்பிடப்படும் புனைவு ஹாப்ஸ்காட்ச் பற்றி நாம் நினைவில் இறுத்திக் கொள்வது கோர்த்ஸாரைப் புரிந்து கொள்ள உதவும். வேறு எவர் ஒருவருமே பரீட்ஷார்த்தமாக கூழாங்கல்லினை சொர்க்கத்திற்கு ஏற்றுவது எப்படி எனக் கற்று முடிக்காதிருக்கும் கட்டத்திலேயே திடீரென குழந்தைப் பருவம் முடிந்து போய் எல்லோரும் நாவல் படிக்க வந்துவிடுவதாக வருத்தப்படுகிறார் கோர்த்தஸார். திடீரென நாம் குழந்தைமையிலிருந்து விலகி, அர்த்தங்கெட்ட மாறுபாதையில் சென்று வயதானவர்களாக நாவல்களின் உலகத்திற்கு வந்துவிடுகிறோம். ஆனால் இதில் நாம் சென்றடையக் கற்றுக் கொள்ள வேண்டிய வேறு ஒரு சொர்க்கம் பற்றிய சாத்தியப்பாடும் கூட இருக்கலாம்.

ஹாப்ஸ்காட்ச் நாவலின் வடிவரீதியான விநோதங்கள் இன்னும் சிலவற்றைச் சொல்லலாம். அத்தியாயம் 34இல், சீர்குலைவான நாவல் ஒன்றின் உள்ளடக்கங்களையும், அது பற்றிய ஆலிவேய்ராவின் விமர்சனக் குறிப்புகளையும் படிக்கலாம். வாசகன் முதல் வரிக்குப் பிறகு மூன்றாம் வரி என்ற வரிசைப்பாட்டில் லா மாகா படிக்கும் மலிவான நாவலாகவும்,  இரண்டாவது வரிக்கு அடுத்படி 4வதுவரி என்ற வரிசைப்பாட்டில் உள்ளவற்றை ஆலிவேய்ராவின் விமர்சன மாகவும் படித்தால்தான் இந்த அத்தியாயம் புரியவே வாய்ப்பிருக்கிறது. 69வது அத்தியாயம் ஒரு விநோத ஃபோனடிக் ஆங்கிலத்திலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டு “It waz a sad surprize to red. . . .” Ispamerikan மொழியிலிருந்து இந்த அத்தியாயம் மொழிபெயர்க் கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 96வது அத்தியாயத்தில் கதாபாத்திரங் களுக்கிடையில் நடைபெறும் விறுவிறுப்பான உரையாடல் அவர்களுடைய பெயர்கள் இடது மார்ஜினில் அச்சிடப்பட்டு, உரையாடல் வலது பக்கத்தில் தரப்பட்டு ஒரு நாடகம் போலவே அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பினை மீறியும் கூட பாத்திரங்களின் வார்த்தைகள் எல்லைகளை மீறிக் கலந்து வழிந்து விடுகின்றன. 84வது அத்தியாயம் இலைகள் பற்றிய மிக அழகிய சித்திரிப்புகள் கொண்டதாக அமைகிறது. லா மாகா 4வது அத்தியாயத்தில் ஒரு உலர்ந்த இலையை எடுத்துப் பார்த்து அதன் அமைப்பினை வியப்பதிலிருந்தே கூட 84வது அத்தியாயத்திற்கான விஷயம் தொடங்கி விடுகிறது.

பல அத்தியாயங்களைத் தம்மளவில் முழுமை பெற்ற அழகிய சிறுகதைகளாகப் படிக்கலாம். குறிப்பாக ஒரு மழைநாள் மதியம் பியானோ இசைக் கச்சேரிக்குச் சென்று அந்த பெண் பியானோ வாசிப்பாளர் பெட்டி த்ரிபாத் உடன் ஏற்படும் ஆலிவேய்ராவின் அனுபவங்கள் விசேஷமானவை. அத்தியாயம் 21 ஒரு புதிய விதமான வாசித்தல் பற்றிய விவாதத்தைக் கொண்டிருக்கிறது. மெரோலி என்கிற எழுத்தாளனின் அவதானிப்புகள் மூலம் வாசிப்பவர்களை இயக்கம் மிகுந்த வாசகர்கள் என்றும் இயக்கமற்ற வாசகர்கள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறார் கோர்த்தஸார். பாரிஸ் நகரின் லத்தீன் குவார்ட்டர் பகுதியில் ஒரு காபி விடுதியில் அமர்ந்து ரெனே க்ரெவெல் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் 1929ஆம் ஆண்டு எழுதிய நாவலான Etes-Vous fou? வைப் படித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் புத்தகத்துடன் உரையாடும் ஆலிவேய்ரா க்ரெவல் ஏதோ அந்த கணத்தில் உயிரோடிருப்பது மாதிரி நடந்து கொள்கிறான். அத்தியாயம் 82 இல் இலக்கியம் எழுதுவது என்பது விமோசனத்திற்கான வழி என்று மொரேலி வரையரை செய்கிறான்: “To write is to draw my mandala and at the same time traverse it, to invent purification purifying myself”

32வது அத்தியாயம் லா மாகா அவளுடைய குழந்தை ரோகோமோடாருக்கு எழுதிய நெகிழ்ச்சி மிகுந்த, சற்றே செண்டிமென்டலான கடிதமாக ஆகிறது. கோர்த்தஸாரின் மிக மென்மையான எழுத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஆலிவேய்ரா இந்தக் கடிதத்தை ரோகோமோடாருக்கு எழுதியதன் மூலம் தன்னை முன் நிறுத்தியே லா மாகா எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறான்.

இந்தப் பக்கத்திலிருந்து என்ற நாவலின் இரண்டாம் பகுதி 37வது அத்தியாயத்திலிருந்து ஆரம்பிக்கிறது. பாரிஸ் நகரினை விட்டு அர்ஜன்டீனாவுக்கே திரும்பி வந்து ஆலிவேய்ரா தன் பால்யகால நண்பனைச் சந்திக்கிறான். அர்ஜன்டீனாவை விட்டு இதுவரை எங்குமே பயணம் செய்யாதிருப்பதாலோ என்னவோ எதிர்மறையான அர்த்தம் கிடைக்கும்படி ஆலிவேய்ராவின் நண்பனுக்கு ட்ரேவலர் என்ற பெயர் தரப்பட்டிருக்கிறது. கணக்கு போடக் கூடிய ஒரு பூனைக்குட்டியை வைத்து வேடிக்கைக் காட்டும் சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு தன் மனைவியான டாலிட்டாவுடன் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். இவர்கள் இருவரும் வசிக்கும் வீட்டின் எதிர்ச்சாரியில் மூன்றாம் மாடியில் கெக்ரெப்டன் என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தத் தொடங்குகிறான் ஆலிவேய்ரா. சர்க்கஸ் கம்பெனியை நடத்தும் குகாவும் ஃபெராகுட்டோவும் ட்ரேவலரின் சிபாரிசினால் துணிவிற்பனையாளனாக இருக்கும் ஆலிவேய்ராவை சர்க்கஸ் கம்பெனியில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் சர்க்கஸ் கம்பெனியை விற்றுவிட்டு மனநோய் நல விடுதி ஒன்றை வாங்கத் திட்டமிடுகின்றனர் ஃபெர்ராகுட்டோ தம்பதியினர்.  டாலிட்டா, ஃபார்மஸி பிரிவில் ஒரு பட்டதாரி என்பதாலும் மனநல மருத்துவ விடுதியை வரவேற்கிறாள். ஆனால் தொடக்கத்திலிருந்து ஃபெர்ராகுட்டோ தம்பதியினருக்கு ஆலிவேய்ரா மீது நல்ல அபிப்ராயம் இருப்பதில்லை. அர்ஜன்டீனாவுக்கு வந்து சேர்ந்த ஆரம்ப காலங்களில் டாலிட்டா மீது எந்தவித ஈடுபாடும் காட்டாதவன் போல ஆலிவேய்ரா இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அவளுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து, அவளையும் தன் பழைய காதலியான லா மாகாவையும் குழப்பிப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறான். டாலிட்டா இந்தக் குழப்பப் புரிதல் பற்றி தன் கணவன் ட்ரேவலரிடம் சொல்வது எவ்வித பலனும் அளிப்பதில்லை.

மனநோய் விடுதியில் வேலை பார்க்கத் தொடங்கும்போதே ஆலிவேய்ராவும் மனநோயாளி யாக மாறத் தொடங்குகிறான். மனநோயாளிகளிடம் அவன் நெருங்கிப் பழகுவதும் அவர்களை அத்யந்தமாகப் புரிந்து கொள்வதும் இதற்குக் காரணங்களாக இருக்க முடியாது. ஏற்கனவே ஆலிவேய்ரா கார்ட்டீசிய இருமைவாதத்தினாலும் (dualism) அந்த இருமைத் தன்மையை மீற வேண்டும் என்ற யத்தனிப்பினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறான். எட்டாம் நம்பர் அறை நோயாளி தினமும் ஹாப்ஸ்காட்ச் விளையாடுவதை ஊன்றிக் கவனிக்கிறான். அவனுமே கூட மூன்றாவது மாடி அறையிலிருந்து பிடித்து மீந்த சிகரெட் துண்டுகளை முற்றத்தில் சாக் கோடுகளால் வரையப்பட்டிருக்கும் ஹாப்ஸ்காட்ச் கட்டத்தில் விழும்படி வீசிப் போடுகிறான். யதேச்சையாக ஒரு இரவு லிப்ஃப்டுக்கு வரும்போது முற்றத்தைக் கடக்கும் டாலிட்டா  விளையாட்டாக ஹாப்ஸ்காட்ச் கட்டத்தில் கால் வைத்துவிட்டு வருவதைக் கவனிக்கிறான். 56வதுஅத்தியாயத்தில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயல்கிறான் ஆலிவேய்ரா. இந்தத் தற்கொலை முயற்சியின் மூலம் அவனுடைய நண்பன் ட்ரேவலரும் ட்ரேவலரின் மனைவி டாலிட்டாவும் எந்த அளவு அவனை நேசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறான். இருப்பினும் நாவலின் இறுதியில் (அதாவது 56வது அத்தியாயத்தில்) ஆலிவேய்ரா தற்கொலை செய்து கொள்கிறான் என்று நினைக்கக் கூடிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு பேட்டியில் கோர்த்தஸார் குறிப்பிட்டிருக்கிறார். கோர்த்தஸாரைப் பொருத்த வரை ஹாப்ஸ்காட்ச் நம்பிக்கை நிறைந்த ஒரு நாவல்.

பல் வேறு பக்கங்களிலிருந்து என்கிற மூன்றாம் பாகமான நாவல் முதல் இரண்டு பாகங்களின் பின்இணைப்பாகப் படிக்கப்படலாம். முதல் பாகத்தில் ஆலிவேய்ராவின் பாரிஸ் காலத்து வாழ்க்கையில் லா மாகா தவிர போலா என்றொரு காதலி இருப்பது பற்றிய மேம்போக்கான தகவல்கள் தரப்படுகின்றன. போலாவின் பாத்திரம் ஓரளவு முழுமையாக உருவாவதற்கு உதவும் அத்தியாயங்கள் மூன்றாம் பாகத்தில்தான் இருக்கின்றன. போலாவுக்கும் ஆலிவேய்ராவிற்கும் இடையே உள்ள உறவு பற்றி லா மாகாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதே போல போலாவுக்கும் லா மாகா என்றொரு காதலி ஆலிவேய்ராவுக்கு இருக்கிறாள் என்பதும் தெரிந்திருக்கிறது. ஆனால் போலாவிடம் இருக்கும் பொழுது லா மாகா பற்றி பற்றிப் பேசுவதை ஆலிவேய்ரா விரும்புவதில்லை என்பதை போலா உணர்ந்து கொள்கிறாள்.ó லா மாகாவைப் போலன்றி போலா ஒரு விதமான பெண் அறிவு ஜீவியாகவும் நிறைய படிக்கின்றவளாகவும் இருக்கிறாள். La Dauphine தெருவில் போலாவுக்கு ஒரு சொந்த அபார்ட்மெண்ட் இருக்கிறது.

பாரிஸ் நகரின் விளிம்புநிலை மனிதர்களானclochardsநகரத்து நாடோடிகள் பற்றியதொரு அற்புதச் சித்தரிப்பாக அத்தியாயம் 108 விரிகிறது. பாரிஸ் நகரின் clochards பிச்சைக்காரர்கள் அல்ல என்பதும் மரியாதைக்குரிய tramps என்பதும் புரிகிறது. பாரிஸ் நகரின் அழகிய முகமூடிகளைக் கிழிக்கக் கூடியதாகவும் இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது. தென் அமெரிக்காவின் linyera என்று குறிப்பிடப்படும் நாடோடிகளை எங்ஙனம் பிச்சைக்காரர்களுடன் குழப்பிக் கொள்ளக் கூடாதோ அவ்வாறே clochardஐயும். பாரிஸ் நகரின் விளிம்பு மனிதர்களுக்கான பரிவுணர்ச்சி லா மாகவுக்கு இருக்கிறதென்றால் இதற்கு ஒரு படி மேலே போய் அந்த நாடோடிப் பெண்களில் ஒருத்தியான இம்மெனுவெலாவுடன் மிக நெருக்கமான உறவு வைத்துக் கொள்கிறான் ஆலிவேய்ரா. அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுமளவுக்கு தகவல்கள் சேகரித்து வைத்திருப்பவன் ஆலிவேய்ரா.  108 வது அத்தியாயத்தை வாசகன் நீக்கிவிட முடியாததாகத் தெரிகிறது.

மீனவர்கள் அவர்களால் உண்ண முடியாதிருக்கிற போதிலும் பொழுதுபோக்குக்காக மீன்களைப் பிடித்து பிறகு அவை அழுகிப் போகாதிருக்க அவற்றை மணலில் புதைக்க வேண்டும் என்கிற சடங்கு பற்றிய லெவி ஸ்ட்ராஸின் ஒரு சிறிய மேற்கோள் Tristes Tropiques நூலில் இருந்து எடுத்து அத்தியாயம் 59இல் போடப்பட்டிருக்கிறது.

THEN,to pass the time, they catch fish they cannot eat; to avoid the rotting of the fishes in the air, notices have been posted all along the beach telling the fishermen to bury them in the san just as soon as they have been caught.

CLAUDE LEVI STRAUSS,Tristes Tropiques

நவீன பெண் நாவாலாசிரியரான Anais Nin இன் Winter Artifice என்ற நூலிலிருந்து ஒரு மேற்கோள் அத்தியாயம் 110 ஆக மாறியிருக்கிறது. நவீன ஆங்கில நாவாலாசிரியரான மால்கம் லவ்ரியின் Under the Volcanoe நாவலின் ஒற்றை வரி மேற்கோள் அத்தியாயம் 118 ஆக இருக்கிறது.

How shall the murdered man convince his assassin he will not haunt him?

MALCOLM LOWRY, Under the Volcanoe

இவற்றை வாசகன் கழற்றிவிடக் கூடிய அத்தியாயங்களாக் கருதலாம்.

இதாலிய எழுத்தாளர் (கற்பனையான) மோரேலியைப் பார்ப்பதற்கு ஓவியன் எட்டியன்-உடன் மருத்துவ மனைக்குச் சென்று காத்திருக்கும் ஆலிவேய்ரா ட்டி.எஸ்.எலியட்டின் இரண்டு கவிதைகளில் இருந்து மேற்கோள்களை வீசுகிறான். எலியட்டின் ஃபுரூஃபிராக் கவிதையின் கீழ்க்கண்ட வரிகளை

In the room women come and go

Talking of Michael Angelo

பரிகாசமாக The nurses came and went speaking of Hippocrates மாற்றிச் சொல்கிறான். “Time present and time past are both perhaps present in time future” என்கிற மேற்கோளை Four Quartets லிருந்து வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மாற்றாமல் மேற்காட்டுகிறான் ஆலிவேய்ரா. ஆனால் இந்த அத்தியாயத்தின் இறுதிக்குள் அவர்கள் மோரேலியைச் சந்திப்பதாக வருதில்லை.

மருத்துவ மனையில் இருக்கும் மொரேலியை கிளப் அங்கத்தினர்கள் சந்திப்பது ஏறத்தாழ புத்தகத்தின் இறுதியில் 154வது அத்தியாயத்தில் நிகழ்கிறது. மொரேலி அவருடைய புத்தகத்தை எப்படி வேண்டுமானாலும் எந்த வரிசைப்பாட்டிலும் படிக்கலாம் என்கிறார். இந்தக் கூற்று ஹாப்ஸ்காட்ச் நாவலுக்கு முற்றிலும் பொருந்தும்.

கோர்த்தஸாரின் ஹாப்ஸ்காட்ச் ஸ்பானிய மொழியில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்தது. Gregory Rabassaவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தாரால் 1966 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழில் ஹாப்ஸ்காட்ச் நாவலை மொழிபெயர்க்கத் துணிபவர்களுக்கு ஓரளவுக்காவது பிரெஞ்சு மொழி தெரிய வேண்டிய கட்டாயமிருக்கிறது.

[February 27,2002]

redbook-1a1

Advertisements