ஜோர்ஜ் லூயி போர்ஹே என்ற கவிஞனின் உலகம்-The Poetry of Jorge Luis Borges

poetjlbஜோர்ஜ் லூயி போர்ஹே என்ற கவிஞனின் உலகம்

ஹோர்ஜ் லூயி போர்ஹே (1889–1986)வை புனைவுச் சிறுகதை எழுத்தாளர் என்றே பெரும்பான்மையோர் அறிவர். அவர் ஒரு கவிஞராக எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம். 1914ஆம் ஆண்டிலிருந்து 1920ஆம் ஆண்டு வரை போர்ஹே ஐரோப்பியாவில் படித்தார். முதல் உலகப்போரின் போது அவரது தந்தையின் கண் அறுவைச் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு சென்ற அவர் குடும்பம், போர் முடியும்வரை அங்கே தங்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. ஸ்பெயினில், குறிப்பாக மேட்ரிட் நகரில், அவர்கள் சிலகாலம் இருக்க வேண்டி வந்தது. போர்ஹே எழுதிய முதல் கதை ஒன்றினை மேட்ரிட் பத்திரிகை ஒன்று நிராகரித்தது. ஆனால் அவர் எழுதிய முதல் கவிதை பிரசுரம் கண்டது. பல வேறுபட்ட ஐரோப்பிய இலக்கியக் குழுக்களுடன் போர்ஹே தொடர்பு கொண்டிருந்தாலும் தன்னுடைய உத்வேகத்தை (கவிதையில்) அவர் கண்டுபிடித்துக் கொண்டது ஸ்பானிய யூதக்கவிஞரான ரஃபேல் கான்ஸினோஸ் அஸென்ஸ் என்வரைச் சந்தித்த பிறகுதான். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் கஃபே கலோனியல் என்ற காபி விடுதியில் அல்ட்ராயிஸ்டுகளின் சந்திப்புகள் நடைபெற்றன. அல்ட்ராயிஸ்டுகள், அமெரிக்க ஜாஸ் இசையை ரசிப்பவர்களாகவும் ஸ்பானியர்களாக இருப்பதை விடவும் ஐரோப்பியர்களாக இருப்பதையும் விரும்பினர். போர்ஹேவின் சர்தேச கலாச்சாரத்தன்மைக்கும் காஸ்மாபொலிட்டன் தன்மைக்கும் ஆன வித்து இந்தக் காலகட்டத்தில் ஊன்றப்பட்டுவிட்டது என்று உறுதியாகக் கூறலாம். 1921ஆம் ஆண்டு அர்ஜன்டீனாவுக்குத் திரும்பிய பொழுது அர்ஜன்டீனிய அல்ட்ராயிஸத்தின் தந்தை என்றுதான் போர்ஹே அழைக்கப்பட்டார். தொடர்ந்து இந்த இயக்கத்தின் பாணியில் போர்ஹேவால் கவிதைகள் எழுத முடியாமல் போனதால் அல்ட்ராயிஸத்தைக் கைவிட்டு வேறுமாதிரிக் கவிதைகளை எழுதத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில் அவருடைய தந்தையின் நண்பரான மேசிடோனியோ ஃபெர்னான்டஸ் என்பவரின் பாதிப்புக்கு உள்ளானார் போர்ஹே. மேசிடோனியோ ஒரு கவிஞர். எந்த ஒரு விஷயத்தையும் மேம்போக்காக நம்பிவிடாமல் கேள்விக்கு உட்படுத்தும் தன்மையை போர்ஹேவுக்குக் கற்றுக் கொடுத்தவர். எனினும் போர்ஹே தொடங்கிய முதல் இலக்கிய இதழான ப்ரிஸ்மா ஒரு அல்ட்ராயிஸ்ட் பத்திரிகையாகவே வெளிவந்தது. கவிதை என்கிற வடிவம் பற்றியும் கவிதை எழுதும் செயல்பாடு பற்றியும் கவிதையின் சமூகப்பங்கு பற்றியும் கவிதைத்தன்மைக்கும் உரைநடைத்தன்மைக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்தும் மிகத் தனித்துவமான கருத்துக்கள் போர்ஹேவுக்கு இருந்தன.

“ஒரு கவிஞனின் துறை,–எழுத்தாளனின் துறை–விநோதமான ஒன்று. செஸ்ட்டர்டன் குறிப்பிட்டார்: ஒரே ஒரு விஷயம்தான் தேவையாகிறது–சகலமும். ஒரு எழுத்தாளனுக்கு இந்த சகலமுமானது எல்லாவற்றையும் அரவணைக்கும் சொல்லை விடக் கூடுதல் அர்த்தம் கொண்டது. அது சொல்லுக்குச் சொல் நேரானது. அது பிரதானமான, அவசியமான மானுட அனுபவங்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எழுத்தாளனுக்கு தனிமை தேவைப்படுகிறது, அவனுக்கு அவனது பங்கு கிடைக்கிறது. அவனுக்கு அன்பு தேவைப்படுகிறது–அவனுக்கு பகிரப்பட்டது அல்லது பகிர்மானமில்லாத ஒரு காதல் கிடைக்கிறது. அவனுக்கு நட்பு அவசிமாகிறது. வாஸ்தவமாக அவனுக்கு இந்தப் பிரபஞ்சமே தேவைப்படுகிறது. ஒரு எழுத்தாளனாக இருப்பதென்பது ஒரு பகல் கனவு காண்பவனாக இருப்பதாகும்– ஒருவிதமான இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருத்தல் ஆகும்”.
(“Who needs Poets? New York Times, May 8, 1971)
மேற்குறிப்பிட்ட மேற்கோள் போர்ஹே அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது. போர்ஹே 1923ஆம் ஆண்டு Fervor de Buenos Aires என்ற முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். போனஸ் அயர்ஸ் நகரைப் பற்றிய புகழ்ச்சி உரைகள் கொண்டதல்ல இத்தொகுதி. அந்த நகரினைப் பற்றிய போர்ஹெவின் உணர்ச்சி ரீதியான பதிவுகளே அதில் கவிதைகளாக இடம் பெற்றிருந்தன. அவரது வாழ்நாளில் மொத்தம் 5 கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். வாசல் வழிகள், நிலைக்கண்ணாடிகள், ஃபைல்கள், அட்லஸ், நீர்பருகும் கண்ணாடித் தம்ளர்கள், ஜெர்மனி மொழி, ஆங்கிலோ சாக்ஸன் இலக்கணம், என்று அவரது கவிதைக்கான பொருள்கள் விரிந்து செல்கின்றன. இத்தாலிய நாவலாசிரியரும் கவிஞருமான பிரைமோ லெவி இந்த அளவுக்கு பரந்துபட்ட கவிப்பொருள்களை எடுத்து கவிதைகள் எழுதியிருக்கிறார். குறிப்பாக வரலாற்று நாயகர்களை கவிதைக்கான பொருளாக்குவதில் போர்ஹேவுக்கும் லெவிக்கும் சரிசமமான ஈடுபாடு இருந்திருக்கிறது. தத்துவவாதி ஸ்பினோசா பற்றி இரண்டு வேறுபட்ட கவிதைகளை போர்ஹே எழுதியிருக்கிறார். ஸ்பினோசாவை முழுமையாகப் புரிந்து கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் அவை. மேலும் ஸ்பினோசா மீது போர்ஹேவுக்கு இருந்த ஈடுபாட்டினை அவர் இரண்டு சிறுகதைகளில் இடம் பெறும் கதாபாத்திரங்களுக்கு வைத்திருக்கும் பெயரைக் கொண்டு நாம் அறியலாம். மரணமும் காம்பஸ் கருவியும் சிறுகதையில் ஒரு பாத்திரத்தின் பெயர் பாருக் ஸ்பினோசா. மாற்கு எழுதிய வேதாகமம் என்ற சிறுகதையில் வரும் இளைஞனின் பெயர் எஸ்பினோசா. பாருக் ஸ்பினோசா(1632–1677)டச்சு நாட்டு பொருள்முதல்வாத தத்துவ வாதியாவார். தெக்கார்த்தேவின் மாணவர். Ethics மற்றும் Tractatus-Theologico-politicus ஆகிய நூல்களின் ஆசிரியர். ஸ்பினோசா வின் சுதந்திரச் சிந்தனை காரணமாக ஆம்ஸ்டர்டாமின் யூதத்திருச்சபையிலிருந்து வெளியேற்றப் பட்டார். தத்துவத்தின் ஜியோமிதி முறைமைகளின் மூலவர் என்று அறியப்படுகிறார் ஸ்பினோசா. 1962இல் எழுதப்பட்ட ஸ்பினோசா, என்ற தலைப்பிலான கவிதை பதினான்குவரி சானெட் ஆகும். ஸ்பினோசா அவருடைய நம்பிக்கைகளைத் துறக்க மறுத்தார். வாழ்ந்த குறுகிய வாழ்க்கையில் தனது சிந்தனைச் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பியதால் பதவிகளையும், பரிசுகளையும் பென்ஷன்களையும் நிராகரித்து விட்டு லென்ஸ்களை பாலிஷ் செய்யும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் :

ஸ்பினோசா
அந்த யூதனின் ஊடுருவித் தெரியும் கைகள்
அரைகுறை வெளிச்சத்தில்
கிரிஸ்டல் லென்ஸூகளை பாலிஷ் செய்கின்றன.
பயமும் சில்லிடுதலும்தான் மங்குகிற அந்தியாகிறது.
அந்தி மங்கும் நேரங்கள் எல்லாம்
ஒன்று போலவே இருக்கின்றன.
யூதச் சேரிகளை நோக்கிச் செல்கையில் வெளிரும் ஹயாசிந்த் காற்றும்
இருப்பதாகவே தெரியவில்லை
இந்த மௌனமான மனிதனுக்கு.
அவன் ஒரு தெள்ளத் தெளிவான புதிர்ச் சிக்கலைக்
கனவு காண்கிறான்.
புகழ் அவனைத் தொந்தரவு செய்யவில்லை
அதுவோ கனவுகளின் பிரதிபலிப்பு
அதுவும் வேறு ஒரு நிலையாடியிலுள்ள கனவின் பிரதிபலிப்பு.
இளம்பெண்களின் பயமுறுத்தும் காதலினாலும்
அவன் இடைஞ்சலுறுவில்லை.
அவன் ஒரு கடினமாக கிரிஸ்டலை
பளபளப்பாக்கிக் கொண்டிருக்கிறான்.
அவனுடைய நட்ஷத்திரங்களாக ஒளிர்ந்திருக்கும்
ஒருவரின் எல்லையற்ற வரைபடத்தினை.
(Spinoza, The Other, 1964)

இந்தத் தன்மை கொண்ட மற்றொரு கவிதை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞரான ராபர்ட் ப்ரௌனிங் பற்றியது. Browning Resolves to be a Poet என்ற கவிதை The Dream Tigers தொகுதியில் இடம் பெறுகிறது. ஒரே மனிதன்தான் எல்லா மனிதனும் என்றும் ஷேக்ஸ்பியரின் ஒரு மேற்கோளைச் சொல்கிறவன் கூட ஷேக்ஸ்பியராகவே ஆகிவிடுகிறான் என்றும் போர்ஹே எழுதியிருக்கிறார் :

ப்ரௌனிங் ஒரு கவிஞனாக ஆவதற்குத் தீர்மானிக்கிறார்
இந்த லண்டன் நகரின் புதிர்ச் சுழல்வழிகளில்
மனிதத் தொழில்களிலேயே மிகவும் விநோதமானதைத்
தேர்ந்தெடுத்திருக்கிறேன்–
ஒவ்வொன்றுமே அதனதன் வழியில் விநோதமானது என்றாலும் கூட.
சிக்காமல் நழுவும் பாதரசத்தில்
சித்துமணிக்கல்லினைத் தேடித்திரிந்த பொன்மாற்றுக்காரர்கள் போல
நான் சாதாரண வார்த்தைகளை மாற்றுவேன்–
சீட்டாட்டத்தில் கள்ளத்தனம் செய்பவனின் குறியிடப்பட்ட சீட்டுகள்,
ஜனங்களின் பிரயோகங்கள்
அவற்றினுடையதேயான மந்திரத்தை ஈந்துவிட
தோர் உத்வேகப் புத்துணர்ச்சியாயும் திடீர் வெடிப்பாகவும்
இடியாயும் வழிபாடுமாய் இருந்த காலத்தில் போல
என்னுடைய முறை வருகையில் நித்தியத்துவமான விஷயங்களைச் சொல்வேன்.
பைரனின் பெரும் எதிரொலியாக இருப்பதிலிருந்து
தகுதி இழந்துவிடாதபடி பார்த்துக் கொள்வேன்.
நானாக இருக்கும் இந்தத் தூசி அழிவற்றதாக ஆகும்.
ஒரு பெண் என் காதலைப் பகிர்ந்து கொள்வாளாயின்
என் கவிதை ஒரே மையத்தைக் கொண்ட சொர்க்கங்களின்
பத்தாவது கோளத்தினை உராய்ந்து செல்லும்.
ஒருத்தி என் அன்பை உதறிச் செல்வாளாயின்
காலத்தின் ஊடாக அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும்
ஒரு அகண்ட நதி என
என் வருத்தத்திலிருந்து என் இசையை உருவாக்குவேன்.
நானே பாதி பார்த்து மறந்து போகும் முகமாவேன்.
ஆசீர்வாதம் மிகுந்த விதியைக் கொண்ட
காட்டிக் கொடுப்பவனாய் இருத்தலை
ஏற்றுக் கொண்ட யூதாஸ் ஆவேன்.
சதுப்பு நிலங்களில் இருக்கும் காலிபனும் நானாவேன்.
நம்பிக்கையோ பயமோ இன்றி இறக்கும்
கூலிக் கொலைகாரனாகவும் ஆவேன்.
தலைவிதியால் மோதிரம் திருப்பப்படுதலை பீதியுடன் பார்த்த
பாலிகிரேட்டஸூம் நானாக ஆவேன்.
என்னை வெறுக்கும் எனது நண்பனாக ஆவேன்.
பாரசீகம் எனக்கு நைட்டிங்கேல் பறவையையும்
ரோம் எனக்கு உடைவாளையும் தரும்.
அவசங்களும் முகமூடிகளும் புத்துயிர்ப்புக்களும்
எனது விதியை நூற்று, நூற்றதைப் பிரிக்கும்
பிறகு ஏதோ ஒரு புள்ளியில்
நான் ராபர்ட் ப்ரௌனிங் ஆவேன்.

“ஒரு நிஜமான கவிஞனுக்கு வாழ்தலின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலும் கவித்துவமானதாகத்தான் இருக்க வேண்டும், ஏன் எனில் சாராம்சத்தில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, இன்றைய நாள் வரை எவருமே இவ்வுயர்ந்த பிரக்ஞை நிலையை அடையவில்லை. வேறு எவரையும் விட ப்ரௌனிங்கும் (Browning) பிளேக்கும் (William Blake) இந்த நிலையை நெருங்கிச் சென்றிருக்கின்றனர். விட்மன் அந்தத் திசையினை நோக்கி குறி வைத்த போதிலும், அவருடைய கவனமான எண்ணியெடுத்துச் சொல்லுதல் ஒரு வித கரடுமுரடான பட்டியலிடுதல் என்பதற்கு மேல் எழும்புவதில்லை.” (Preface to The Gold of Tigers) போர்ஹே பாரிஸ் ரெவ்யூ பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலும் ஒரு கவிஞன் முழுமையாகக் கவிஞனாக இருக்க வேண்டும் என்றும், அவன் சாதாரண கீழ்மையான அனுபவங்களுக்குத் தன்னைத் தந்துவிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். போர்ஹே தேர்ந்தெடுத்துக் கொண்ட சர்வதேசீயத்தன்மையான கவிதைகளை எழுதும் நிலையை எளிதில் அடைந்துவிடவில்லை. அர்ஜன்டீனியக் கவிஞரான ஜோஸ் ஹெர்னான்டஸ்(1834-1886) என்பவர் எழுதிய பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காவியமான Martin Fierro வையும், போர்ஹேவின் சமகாலத்தவரான எவரிஸ்ட்டோ காரிஜோவின் மாட்டுக்காரன்தன்மையான கவிதைகளையும் கடந்து வருவது போர்ஹேவுக்கு எளிமையான காரியமாக இருக்கவில்லை. மார்ட்டின் ஃபைரோ காவியத்தை எழுதிய ஜோஸ் ஹெர்னான்டஸ் ஒரு கவிஞனாக மட்டுமல்ல, ஒரு தேசீய நாயகனாகப் பார்க்கப்பட்டார். பாம்ப்பா பிரதேசத்து அடியாள்–வீரன் ஒருவனின் சாகசங்ளைப் பற்றிய, டென்னிசன்தன்மையிலான நீண்ட விவரணைப் பாடல்தான் மார்ட்டின் ஃபைரோ. இந்த காவியத்திற்குப் பின் வந்த எந்த ஒரு அர்ஜன்டீனியக் கவிஞன் மீதும் ஜோஸ் ஹெர்னான்டஸின் நிழல்படியத்தான் செய்தது. ஆனால் “பிரதேச நிறம்(Local colour) பற்றிய தனது கருத்துக்கள் தெளிவாகும்வரைதான் போர்ஹே பிரதேசக் கவிதைகளை எழுதினார். மேலும் செண்ட்டி மென்டலான கவிதைகளை எழுதுவது பற்றி கடுமையான கருத்துக்கள் கொண்டிருந்தார்:
“A poetry that springs from domestic quarrels and that falls into frequent obsessions, imagining or registering irreconcilable differences so that the reader may feel sorry, seems to me a loss, an act of suicide.”
[Evaristo Carriego, 1930]
1925இல் வெளியிடப்பட்டது Moon Across the Way. போர்ஹே இந்த இரண்டாவது கவிதைத் தொகுதியை மறைத்திருக்க வேண்டும் என்று கூட நினைத்தார். அந்த அளவுக்கு “பிரதேச நிறம்” மிகுந்ததாய் இருந்தது அந்தத் தொகுதி. அவருடைய பெயரைக் கூட சிலிநாட்டு ஃபாஷனில் Jorje என்று அச்சிட்டிருந்ததாகத் தெரிவிக்கிறார் போர்ஹே. பின் வந்த பதிப்புகளில் இந்த விநோதத்தன்மைகளையும் மோசமான கவிதைகளையும் களைந்து விட்டார். மூன்றாவது தொகுதியான Cuaderno San Martinஐ எவரும் அர்ஜன்டீனிய தேசிய நாயகனான சேன் மார்ட்டினுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. அந்தப் பெயர் போர்ஹே பயன்படுத்திய சற்றே கர்நாடகமான நோட்டுப் புத்தகத்தின் பிராண்ட் பெயராகும். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் San Martin Copy Book என்று அர்த்தமாகும். போர்ஹே நினைவு கூறும் மற்றொரு இலக்கியவாதியான Ricardo Guiraldes வும் ஒரு காவியத்தை எழுதியவர். Don Segundo Sombra என்பது காவியத்தின் பெயர். அவரை 1924ஆம் ஆண்டு சந்தித்த போர்ஹே, தன்னுடைய கவிதைகளைக் காட்டி அபிப்ராயங்களைக் கேட்டார். கியூரால்டோ மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். சீர்குலைவான ஒரு கவிதையை எடுத்துச் சென்றாலும் கூட, அந்த வரிகளுக்கிடையிலாகவும் படித்து பிறகு இன்னதைத்தான் போர்ஹே சொல்ல முயல்கிறார் என்று மற்றவர்களுக்கும் சுட்டிக் காட்டுவாராம் கியூரால்டே. ஆனால் அவர் சொல்வதைக் கேட்பவர்களுக்கு அந்த விஷயங்கள் நேரடியாகக் கவிதையில் தென்படாத அளவுக்கு தெளிவில்லாமல் இருந்தன போர்ஹேவின் ஆரம்பக் கவிதைகள்.
ஒரு மனிதன் அழிந்து போகும் போது அவனுடன் அவன் தொடர்பான எல்லா அனுபவங்களும் அழிந்து போகின்றன என்று கருதினார் போர்ஹே. இதற்கான எடுத்துக்காட்டாக ஒரு கவிதை:

தற்கொலை(யாள்)
ஒற்றை நட்ஷத்திரம் கூட இந்த இரவில் விடுபட்டிருக்காது.
இரவும் விடப்பட்டிருக்காது.
நான் இறப்பேன், என்னுடன்,
சகிக்க முடியாத இந்த பிரபஞ்சத்தின் பாரமும் கூட.
நான் பிரமிடுகளையும், பட்டயப் பதக்கங்களையும்
கண்டங்களையும் முகங்களையும் அழித்து விடுவேன்.
சேகரிக்கப்பட்ட கடந்த காலத்தையும் நான் அழிப்பேன்.
வரலாற்றினை தூசியாக்குவேன், தூசியின் தூசியாக.
நான் இப்போது இறுதி சூரியாஸ்தமனத்தை பார்க்கிறேன்.
கடைசிப் பறவையின் குரலினைக் கேட்கிறேன்.
நான் ஒன்றுமின்மையை எவருக்கும் கையளித்துச் செல்லவில்லை.

லத்தீன், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ஜெர்மன் மொழிகளையும் போர்ஹே கற்றிந்திருந்தார். அவருடைய கண்பார்வை இழப்புக் காலங்களில் பழைய ஆங்கிலம் என்று சொல்லக்க கூடிய ஆங்கிலோ சாக்ஸன் மொழியையும் கற்றுக் கொண்டார். ஆங்கிலோ சாக்ஸன் (Anglo-Saxon) மொழியின் இலக்கணம் பற்றி ஒரு கவிதையும் எழுதினார். இந்தத் தலைப்பைப் பார்த்து மிரட்சியும் பீதியும் அடைந்த ஒரு கல்வியியலாளர் போர்ஹேவிடம் இப்படிக் கேட்டிருக்கிறார்: “What do you mean by publishing a poem entitled “Embarking on the Study of Anglo-Saxon Grammar?.” ஒரு சூரியோதத்தைப் பார்ப்பதைப் போலவோ காதலில் ஈடுபடுவதைப் போலவோ அது ஒரு மிக அத்யந்தமான அனுபவம் என்று போர்ஹே அதற்குப் பதில் அளித்ததாகத் தெரிகிறது. அவரைப் பற்றிய சுயவிமர்சனக் கவிதையாக 1972 என்று தலைப்பிட்ட கவிதையைச் சொல்லலாம்:

1972
இப்பொழுது ஏற்கனவே சுருங்கிவிட்டிருக்கும்
எதிர்காலத்தைப் பற்றி பயந்திருக்கிறேன்
அது நீளும் நிலையாடிகளின் நடைக் கூடமாகத்
தெளிவின்றியும் பயனின்றியும் விரியும்
அவற்றின் பிரதிமைகள் தேய்ந்த வண்ணமிருக்கும்
எல்லாத் தற்பெருமைகளின் இரட்டிப்புகளாகவும்
கனவுக்கு சற்று முந்தியதான அரை வெளிச்சத்தில்
என் கடவுளர்களிடம் கெஞ்சினேன், அவர்களின் பெயர்களை நானறியேன்
எதையாவது எவரையாவது என் வாழ்நாட்களுக்குள் அனுப்பச் சொல்லி.
அருளினர். அதுதான் என் தேசம். நீண்ட விலக்கி வைத்தல்களின் மூலமாகவும்,
பசியிலும், பஞ்சத்திலும், போரின் மூலமாகவும் என் மூதாதையர்
தங்களை அர்ப்பணித்தனர் அதற்கு.
இங்கே, மீண்டும் ஒரு முறை வருகிறது கவர்ச்சிமிக்க அந்த சவால்.
காலத்தில் இன்னும் உயிர்த்திருந்த, நான் புகழ்ந்த அந்த பாதுகாப்பாளர்களின்
உருவங்களுடன் நானில்லை.
நான் பார்வையற்றவன்,
எழுபது வருடங்களை வாழ்ந்துவிட்டவன்
சாவுநாற்றம் வீசும் மருத்துவமனையின் ரத்தத்தில்
பல மனிதர்களின் இறுதி மரணவேதனைகளுக்கிடையில்
தன் நெஞ்சில் இரண்டு துப்பாக்கிக் குண்டுகளுடன்
இறந்து போன
கிழக்கிலிருந்து வந்த ஃபிரான்சிஸ்கோ போர்ஹே நானில்லை.
ஆனால் என் தேசம் இப்போது சேதப்படுத்தப்பட்டு
எழுத நிர்ப்பந்திக்கிறது.
போரனைய வேலைகளைச் செய்யக்கூடிய வாளின் வெகு தூரத்திற்கு அப்பாலிருக்கும்
தற்காலிகமான இலக்கணவாதியின் எழுதுகோளுடன்
காவியத்தின் பெரும் முனகலோசையை நான் தொகுக்கிறேன்
எனக்கேயான இடத்தினைச் செதுக்கிக் கொள்கிறேன். செய்கிறேன் நான் அதை.


கவிதை எனும் கலை அணங்கு(Muse)கவிஞர்களை எழுதத் தூண்டுவதான ரொமாண்டிக் கருத்துருவமானது பேரிலக்கிய (Classical)எழுத்தாளர்களால் முன் வைக்கப்பட்டது. ஆனால் கவிதையானது அறிவின் செயல்பாடு என்கிற கிளாஸிக்கல் கருத்துருவம் எட்கர் (Edgr Allen Poe) ஆலன் போ என்கிற ரொமாண்டிக்கினால் 1846ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது என்கிறார் போர்ஹே. எனினும் இந்த இரண்டு கருத்துருவாக்கல்களையும் போர்ஹே முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் என்றால் நிஜம் முரண்பாடாக இருக்கிறது. கலை அணங்கு என்பதை மில்ட்டனும் எபிரேயர்களும் ஆன்மா என்றழைத்தார்கள். நவீனகாலத்திலே அது “நினைவிலி (Unconscious)என்று அழைக்கப்படுகிறது. ஏறத்தாழ அவருக்குள் நடக்கும் படைப்பு ருவாக்க நிகழ்வினையும் கூட போர்ஹே கச்சிதமாக சித்தரித்திருக்கிறார். ஒரு தீவு போல மனதில் தோற்றம் கொள்ளும் “அது” இறுதியில் கதையாகவும் உருவாகலாம் அல்லது கவிதையாகவும் உருவாகலாம். ஆரம்பமும் தெரிகிறது. இறுதியும் தெரிகிறது. ஆனால் இடையில் இருப்பது தெரிவதில்லை:
“I begin with a glimpse of form, a kind of remote island, which will eventually be a story or a poem. I see the end and I see the beginning but not what is in between.”
(Preface to The Unending Rose)
அவருடைய கவிதைகள் யாவும் மாடர்னிசத்திலிருந்து தோன்றியவைதான். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மாத்திரம் மாடர்னிசத்தை(Modernismo)இலக்கிய முன்னணிப்படை என்கிற Avant-gardeலிருந்து பிரித்துப் புரிந்து கொள்ள வேண்டும். கவிஞர் Ruban Darioவில் தொடங்கியது லத்தீன் அமெரிக்க மாடர்னிசம். 1920களுக்குள் அது தனது முனைப்பை இழந்துவிட்டிருந்தது. அதிலிருந்து மாறுபட்டு எழுத நினைத்த எல்லோரும் Avant-garde இயக்கத்தின் சோதனைகளையே தேர்ந்தெடுத்தனர்.
ஊடிழைப் பிரதி (Inter-Textuality) பற்றிய கருத்தாக்கத்தினை பின்நவீனத்துவ வாதிகள் விரிவாக்கி வலிமையாக்கின போதிலும், நிஜத்தில் மத்தியகாலத்திலேயே அதன் தொடக்கம் நிகழ்ந்து விட்டதை போர்ஹே (போர்ஹே பின்நவீனத்துவம் என்கிற இயக்கம் உருவாகும் முன்னரே காலமானார் என்பது வேறு செய்தி) சுட்டிக் காட்டுகிறார்: “The idea of a text capable of multiple readings is characteristic of the middle ages, those maligned and complex middle ages. . ” ஒரு பிரதிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட, ஏன் ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் இருக்க முடியும் என்று தனது கவிதை பற்றிய உரையில் குறிப்பிடுகிறார். (Poetry, [Seven Nights, 1987 ]pp.76-94) Scotus Eregena என்கிற ஐரிஷ் இயற்கை-இறையியல்வாதி(Pantheist) திருமறை நூலுக்கு முடிவற்ற அர்த்தங்கள் உண்டு என்று ஒரு முறை குறிப்பிட்டார். மற்றொரு ஸ்பானியதேசத்து கப்பாலிஸ்ட், உலகில் எத்தனை பேர் திருமறைநூலைப் படிக்கிறார்களோ அத்தனை தனித்தனி திருமறைநூல்களை கடவுள் எழுதினார் என்றும் குறிப்பிட்டார். இது திருமறைநூல்களுக்கு மாத்திரமல்ல, மறுவாசிப்பு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் பொருந்தக்கூடிய கருத்தாகும். இயற்கையால் அமைந்த எந்த ஒரு பொருளும் தொடர்ச்சியான சுழற்சிக்கும் மாறுதலுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்கிற தத்துவத்தை முன் வைத்தார் கிரேக்க தத்துவவாதி ஹீராக்ளீட்டஸ்: (கி.பி. 544-483). எந்த ஒரு மனிதனும் ஒரு முறை கால் வைத்த நதியில் மீண்டும் கால் வைக்க முடியாது என்றார். கால ஓட்டத்தின் நிற்பாடின்மையைத்தான் அவர் இப்படிப்பட்ட உருவகத்தில் வெளிப்படுத்தினார். நாம் எல்லாருமே ஹீராக்ளீட்டஸின் நதியாக இருக்கிற பட்சத்தில் நாம் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறோம். முடிவற்ற வகையில் நாம் மாறுதலுக்கு உட்பட்டுக்கொண்டே இருக்கிறோம். எனவே நம்மின் ஒவ்வொரு வாசிப்பும், அந்த வாசிப்பின் முந்தைய வாசிப்பின் நினைவுகூறல்களும், மறுவாசிப்புகளும் மாறுதல் அடைந்து கொண்டேயிருக்கும். வாசகன் ஒவ்வொரு முறை மறுவாசிப்பு செய்யும் போதும் பிரதியை மறுகண்டுபிடிப்பு செய்கிறான். பிரதியும் ஹீராக்ளீட்டஸின் நதி போல மாறிக் கொண்டேயிருப்பதுதான்.
விட்மனின் பாதிப்பு தெரியக்கூடிய ஒரு காதல் கவிதையையும் இங்கே மேற்காட்டுவது பொருந்தும். குறிப்பாக விட்மன்தன்மையான கவிதையின் பட்டியலிடுதல்களை The Threatened One என்ற கவிதையில் பார்க்கலாம் :

அது காதல்தான். நான் பதுங்கிக் கொள்ளவோ, தப்பிக்கவோ வேண்டும்.
ஒரு பயங்கரக் கனவில் போல அதன் சிறைச்சுவர்கள் பெரிதாய் வளர்கின்றன.
கவர்ச்சி மிகுந்த முகமூடி மட்டும் மாறியிருக்கிறது, ஆனால் எப்பொழுதும் போல அது ஒன்றேதான்.
என்னுடைய தாயத்துக்களாலும், உரைகற்களாலும் என்ன பயன்:
இலக்கியத்தின் பயன்பாடு, தெளிவற்ற படிப்பு,
கூர்ந்த கற்களால் நிறைந்த வடக்குநாடுகள் தம் கடல்களையும், வாள்களையும்
பாடுவதற்குப் பயன்படுத்திய ஒரு மொழிக்கான எனது பயிற்சி,
நட்புகளின் அமைதி, நூலகங்களின் படியடிக் கூடங்கள், சாதாரண பொருள்கள்,
பழக்கங்கள், என் தாயின் இளம் காதல், என் இறந்த முன்னோர்களால் வீசப்பட்ட போர்வீரர்தன்மையான நிழல்கள், காலமற்ற இரவு, கனவின், இரவின் சுவைகள்.?
உன்னுடன் இருத்தல் அல்லது உன்னுடன் இல்லாதிருத்தல் என்பதைக் கொண்டுதான் நான்
காலத்தை அளக்கிறேன்.
இப்பொழுது நீர் ஜாடி நீர் ஊற்றுக்கு மேலாக உடைந்து சிதறுகிறது, இப்பொழுது அந்த மனிதன் பறவையின் பாடல் சப்தத்திற்கு உயர்கிறான், இப்பொழுது ஜன்னல்களுக்கு ஊடாகப் பார்ப்பவர்களை பிரித்தரிய முடிவதில்லை, ஆனால் இருள் அமைதியைக் கொண்டு வரவில்லை.
அது காதல்தான், நானறிவேன். உன் குரலைக் கேட்டதினால் உண்டான பதற்றமும் ஆசுவாசமும், நம்பிக்கையும் ஞாபகமும், அடுத்தடுத்த தொடர்ச்சிகளில் வாழும் பயங்கரமும்.
அது காதல்தான். அதன் சொந்தப் புராணிகங்களுடன், அர்த்தமற்ற மந்திரங்களுடன்.
ஒரு தெருத் திருப்பம் உள்ளது அதன் வழியே கடந்து செல்லத் துணியேன்.
இப்பொழுது சைனியங்கள் சூழ்கின்றன என்னை ஜனத்திரள்கள்
(இந்த அறை நிஜமற்றது, இதை அவள் பார்க்கவில்லை)
ஒரு பெண்ணின் பெயர் என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது.
ஒரு பெண்ணின் இருப்பு என் முழு உடலையும் பீடிக்கிறது.

In Praise of Darkness(1969) என்ற தொகுதியில் போர்ஹேவின் உரைநடைக் கவிதைகளும், சானெட்டுகளும், கலந்து வெளியாகியிருக்கின்றன. கவிதைக்கும் உரைநடைக்குமான வேறுபாடுகள் அதிகமில்லை என்று நினைத்தவர் போர்ஹே. அப்படியானால் எல்லா உரைநடை இலக்கியங்களையும் கவிதை என்ற தகுதி கொடுத்துப் படிப்பதா? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியைப் பற்றி போர்ஹே அதிகமாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போர்ஹே எழுதிய எல்லாவற்றையுமே கூட கவித்துவத்துடன் அணுக வேண்டும் என்று நினைத்திருக்கலாம். மானுட நிலையையே அடிப்படையானதொரு கவித்துவ நிலை என்று அவர் கருதியிருக்க வேண்டும். உரைநடைத்தன்மைக்கும் கவித்துவத்திற்கும் அடிப்படையான முரண்பாடோ வேறுபாடோ இல்லாதிருந்த காலம் இருந்திருக்கக் கூடும். அப்பொழுது எல்லாமே மந்திரத்தால் நிறமடைந்திருக்க வேண்டும். இந்த மாதிரியான ஒரு அணுகல்பார்வையை போர்ஹே என்கிற மந்திரவாதிதான் உருவாக்கியிருக்க முடியும். இந்தப் பார்வையை முழுமையாக ஏற்க வேண்டி வந்தால் மந்திரத்தின் துணை வடிவமாக இலக்கியம் ஆகிவிடும் சாத்தியம் இருக்கிறது. The Gold of The Tigers தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் இந்த வாதத்தை முன்வைக்கிறார் போர்ஹே:
. . . there can have existed no division between the poetic and the prosaic [and] everything must have been tinged with magic”
கற்பனையை நோக்கி எழுதப்பட்ட வரிகள் கவிதையாகின்றன என்றும் காராணார்த்த அறிவினை நோக்கி எழுதப்பட்ட வரிகள் உரைநடையாக ஆகின்றன என்றும் முன் கூறிய கருத்தை வலியுறுத்தும் பொருட்டு போர்ஹே எழுதிய அடுத்த வாதத்தைப் பார்க்கலாம் :
“A passage read as though addressed to the reason is prose; read as though addressed to the imagination, it might be poetry.” (Introduction to Selected Poems).
எனினும் கண்பார்வையிழப்பு அவரைப் பாவகை அமைப்பிலுள்ள கவிதைகளையே எழுதும் கட்டாயத்திற்கு உள்ளாக்கியது. பாஅமைப்புகள் எதுகை மோனை ஒழுங்குளை அனுசரிப்பதால் எளிமையாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஏதுவாக இருந்தது. எழுதப்பட்ட பிரதிகளின் வசதிகள் மறுக்கப்பட்ட ஒருவருக்கு ஞாபகமும், அதற்குத் தோதான பாவகை அமைப்புகளுமே உறுதுணையாக இருந்திருக்க முடியும். போர்ஹேவுக்கு முற்பட்ட இலக்கியவாதிகளில் போர்ஹே குறிப்பிடும் இருவர் கிரேக்கக் கவிஞர் ஹோமரும் ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்ட்டனும் ஆவர். இருப்பினும் ஆக்குபவன் என்ற சிறுகதையை எழுதும்போது தன்னை ஹோமருடன் ஒப்பிட்டுத்தான் எழுதினார் போர்ஹே. பதினைந்து நாணயங்கள் என்ற கவிதையில் வேறுபட்ட கவிப்பொருள்களை ஒன்றினைக்கிறார் போர்ஹே:
ஒரு கீழைநாட்டுக் கவிஞன்
உனது தீர்மானமற்ற வட்டத்தட்டினை
நான் ஒரு நூறு இலையுதிர்காலங்களாய்ப் பார்த்திருக்கிறேன்.
தீவுகளின் மீதாக உனது வானவில்களை
நான் ஒரு நூறு இலையுதிர்காலங்களாய்ப் பார்த்திருக்கிறேன்.
ஒரு நூறு இலையுதிர்காலங்கள் எனது உதடுகள்
இதைவிடப் பேச்சற்று இருக்கவில்லை.

மழை பெய்து கொண்டிருக்கிறது
எந்த நேற்றுவில், கார்த்தேஜ் நகரின் எந்த முற்றங்களில்
இந்த மழையும் கூட விழுகிறது?

மேக்பெத
நமது செயல்கள் அவற்றின் தீர்மானிக்கப்பட்ட வழியில் தொடர்கின்றன.
அதற்கு ஒரு முடிவுண்டென்பது தெரியாது.
நான் எனது அரசனை வாளால் வீழ்த்தினேன்
ஷேக்ஸ்பியர் தன் துன்பியல்நாடகத்தின் கதைத்திட்டத்தை
அமைக்க ஏதுவாய்.

வடிவ விஷயங்களில் மெய்யான ஒரு சர்தேசீயத்தன்மையைக் கடைபிடித்த போர்ஹே ஜப்பானியக் கவிதை வடிவமான தான்க்கா வையும் பின்பற்றிக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
வாசகன் படிக்கும் ஒவ்வொரு கவிதையும் வாசகனுக்கு உள்ளாக எப்போதும் இருந்து கொண்டுதானிருக்கிறது என்று கூறுகிறார் போர்ஹே. கவிதை படித்தவுடன் இந்தக் கவிதை நாம் எழுதியிருக்க வேண்டிய கவிதை என்று அவனுக்குத் தோன்ற வேண்டும். கவிதை படிக்கும் போது ஏற்கனவே நாம் மறந்து போன ஒரு விஷயம் நமக்கு நினைவுக்கு கொண்டு வரப்படுகிறது என்றும் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிடுகிறார். மேலும் கவிதை ஒருவர் உணர்ந்தறிய வேண்டிய ஒன்று கருத்தை முன் வைக்கிறார்:
“I believe that poetry is something one feels. If you dont feel poetry, if you have no sense of beauty, if a story doesn’t make you want to know what happened next, then the author has not written it for you.” (Poetry, [Seven Nights],p.81)
போர்ஹேவின் உச்சபச்சமான சாதனைகள் அவருடைய கதைகளில் இல்லை என்றும் மாறாக அவருடைய இலக்கிய விமர்சனத்தில் இருக்கிறது என்றும் கருத்துக் கூறும் விமர்சகர்கள் (ஜேம்ஸ் அட்லஸ் போன்றோர்) இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளனின் ஆளுமையையும் அவனது எழுத்துக் களையும் பற்றியுமான கருத்துக்களை ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் வடித்து விடக் கூடிய அபாரத் திறன் காரணமாக ஜேம்ஸ் அட்லஸ் இந்தக் கருத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனினும் கவிதை, புனைகதை இலக்கிய விமர்சனம் ஆகிய மூன்று துறைகளிலும் தனக்கான நியாயத்தை போர்ஹே செய்தார் என்பதை வாசகன் அறிந்து கொள்ள முடியும். மேலும் அமெரிக்க எழுத்தாளர் எமர்சன் பற்றி போர்ஹே குறிப்பிடுவது அவருக்குமே பொருந்தும்:
“I have read the essential books and written others which oblivion will not efface”

Advertisements