ரெய்னர் மரியா ரில்கே: நாடற்ற-வீடற்ற ஒரு சர்வதேசக் கவி

ரில்கே கவிதைகள்-

மொழிபெயர்ப்பு பிரம்மராஜன்

rilke2

Rainer Maria Rilke-A short introduction to Tamil readers

ரெய்னர் மரியா ரில்கே:

நாடற்ற-வீடற்ற ஒரு சர்வதேசக் கவி

தலைசிறந்த ஜெர்மன் மொழிக் கவிஞரான ரெய்னர் மரியா ரில்கே ஒரு வீடில்லாதவராகவும் நாடில்லாதவராகவும் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தார். சர்வதேசக் கவிஞர்களிலேயே மிகவும் சர்வதேசீயமானவர் ரில்கே. சகல எல்லைகளையும் கடந்த ஆனால் எந்த ஒரு நாடும் தனக்கென ஸ்வீகரித்துக் கொள்ளாத கவிஞனின் நிலைதான் ரில்கேவினுடையது. நவீன கவிஞர்களில் டி.எஸ்.எலியட் மற்றும் ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.பி.ஏட்ஸ்-க்கு இணையான சாதனையாளர். பிராக் நகரில்(ஆஸ்திரியா)1875ஆம் ஆண்டு தன் பெற்றோருக்கு ஒரே மகனாகப் பிறந்த ரில்கேவுக்கு தொடக்கத்தில் அவரது தாயார் பெண் பெயரை வைத்ததுடன் அல்லாமல் ரில்கேவுக்கு முன் பிறந்து இறந்து போன பெண் குழந்தையின் ஏக்கத்தினால் தன் மகனை ஒரு பெண் குழந்தையாகவே பாவித்து வந்தார்-இது எந்த அளவு அவரது ஆளுமையப் பாதிக்கப் போகிறது என்பதை அறியாமல். ரெனே கார்ல் வில்ஹெல்ம் ஜோஹன் ஜோஜப் ரில்கே. பெயரின் தொடக்கத்தில் உள்ள ரெனே இரு பாலருக்குமானது. இதுமட்டுமன்றி ரில்கேவுக்கு முடிந்த வரை பெண் பிள்ளைகளின் உடைகள் உடுத்தி சந்தோஷப்பட்டார் அவர் தாயார்.

ஒரு ‘டேன்டியின் அழகியல் பாரம்பரியத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் ரில்கே. ஆயினும் கவிதை வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்கிற உண்மை ஒரு வேளை ரில்கே என்கிற ஒரே ஒரு கவிஞனிடத்தில் மட்டுமே நம்மால் பார்க்க முடியும். தனக்கென்று ஒரு வீடில்லாதிருப்பதும் ஏறத்தாழ ஓய்வு ஒழிச்சலற்ற பிரயாணமும்தான் ரில்கே என்ற மனிதனிட மிருந்து அத்தகைய உள்மனப் பிரயாணக் கவிதைகளைத் தந்தது என்று சொல்லலாம். ஒரு வெளியாளின் வாழ்க்கை முறை அமைந்த காரணத் தினால் அவருக்கு பிறரின் வாழ்க்கையையும் தனது வாழ்க்கை யையும் அந்நியமான பார்வையுடன் அணுக முடிந்தது. பெரும்பான்மையான அவரது புரவலர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.

ரில்கேவை ஒரு சிறந்த ஐரோப்பியர் என்று அவரது வார்த்தைகளிலேயே சொல்லலாம். ஆங்கில மொழியை வெறுத்த ரில்கே தனது வாழ்வின் மத்தியகாலங்களில் பிரெஞ்சுக் கவிஞர் பால் வெலேரியைச் சந்தித்த பிறகு தன்னை ஒரு பிரெஞ்சு எழுத்தாளராக ஆக்கிக் கொள்ளக் கூட முயன்றார். உரையாடல் மற்றும் கடிதங்களில் பிரெஞ்சு மொழியைக் கையாண்டார். இந்த நடவடிக்கை ஜெர்மானியர்களுக்கு வேண்டிய எரிச்சலைத் தந்ததால் ரில்கேவை ஜெர்மன் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு கலாச்சாரத் துரோகி என்று முத்திரை குத்தின. அவர் தான் ஒரு சிறந்த ஐரோப்பியனாக இருப்பதற்கு மாத்திரமே முயல்வதாகப் பதில் கூறினார். நிஜத்தில் ஐரோப்பியர் என்கிற அர்த்தத்தை முழுமனதுடன் கூறினாரா என்பது சந்தேகமே. அவர் பிறந்த ஆஸ்திரியாவை அவருக்குப் பிடிக்கவில்லை. பிராக் நகரம் ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசின் ஒரு பிரதான நகரமாக அப்போதிருந்தது. அதன் பிரத்யேக குணாம்சங்களாய் இருந்தவை அதன் கலவையான தேசீய இனங்கள், மொழிகள், மக்கள். ஜெர்மானியர்கள், யூதர்கள், ஸெக்கஸ்லோவாகியர்கள். ஜெர்மன்மொழி அரசாங்க மொழியாக இருந்தது மட்டுமன்றி மேல்தட்டு மக்களின் மொழியாகவும் இருந்தது. இத்தகைய ஒரு காலகட்டத்தில் ஸெக்கஸ்லோவாகியர்கள் ஒரு படி கீழாக வைத்து நடத்தப் பட்டார்கள். ஏன், இளம் வயது ரில்கேவுக்கு ஸெக் நாட்டவர்கள் மீது கீழ்மையான அபிப்பிராயம் உருவாக அவரது பெற்றோர் காரணமாக இருந்தனர் என்பது ஒரு உறுத்தும் உண்மை.

ஒரு ஜெர்மானியராக இருப்பதையும் அவர் விரும்பவில்லை. ஒரு ஸெக் நாட்டவராக இருப்பதும் அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஒரு எதிர்முரண் என்னவென்றால் முதல் உலகப் போருக்குப் பிறகு அவர் பிறந்த இடம் ஸெக்கஸ்லோவாகியாவில் சேர்க்கப்பட்டு சிறிது காலம் ஸெக் பாஸ்போர்ட்டில் அவர் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார். ஒரு இளைஞனாக இருந்த போது ஒரு heimatlos (homeless)என்று தன்னை சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டார். இந்த சொல் நாடற்றவர்வீடற்றவர் என்ற இரு அர்த்தங்களையும் உள்ளடக்கி யதாக இருந்தது. தன் பூர்வீகத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் உரிமை ஒரு கவிஞனுக்கு உண்டு என்கிற உரிமையை அழுத்தம் திருத்தமாகக் கூறினார்:

ஒரு பேச்சுக்கு சொல்வதானால், நாம் பிறக்கிறோம், புரொவிஷனலாக, எங்கே என்பது ஒரு பொருட்டல்ல. நமக்குள்ளாக நாம் சிறிது சிறிதாய் நம்மை கம்போஸ் செய்து கொள்கிறோம், நமது பூர்வீகத்தின் நிஜமான பிறப்பிடத்தை-அதன் மூலம் நாம் பிறகு பிறந்து கொள்ளும்படியாக.

ரில்கேவின் கல்வி சரியாகத் திட்டமிடப்படாததும் கூறுபட்டதாகவும் அமைந்தது. ஒரு ராணுவ அதிகாரி ஆக முயன்று முடியாமல் போன அவரது தோல்வியைச் சரி செய்யவும் வீட்டின் நிதிநிலைமைகளை அனுசரித்தும் ரில்கேவின் பூர்ஷ்வா தந்தை ஜோஸப் ராணுவப் பள்ளியில் மகனைச் சேர்த்தார். அவர் அப்போது ஒரு மிகச் சாதாரண ரெயில்வே அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். St.Polten மற்றும் Mahrisch-Weisskrichen ஆகிய இடங்களில் செப்டம்பர் 1886ஆம் ஆண்டிலிருந்து ஜுன் 1891வரை மொத்தம் 5 வருடங்களை ராணுவப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியும் பள்ளிக் கல்வியும் பயில வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் பள்ளிகளில் ரில்கே எதையும் கற்கவும் இல்லை எந்த நண்பர்களையும் உருவாக்கிக் கொள்ளவுமில்லை என்பதை தன் வாழ் நாளில் பிறகு நினைவு கூர்ந்தார்-மனதில் வடுக்களை உண்டாக்கிய அந்த ராணுவப்பள்ளி அனுபவங்களை. தொடர்ந்த உடல்நலக்குறைவு காரணம் காட்டப்பட்டு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தந்தையுடன் வாழ்ந்த காலங்களில் தனிப்பயிற்சி அளிக்கப்பட்டு பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற தயாரானார். ஆனால் அவர் தன் விதி கவிதை என்பதை மறந்துவிடவில்லை.

அவரது தந்தையைக் காட்டிலும் ஒரு அறிவுஜீவி என்கிற வகையில் ரில்கேவின் தாயார் ஃபியா என்கிற சோஃபியா தேவையான அளவு பாதிப்பைச் செலுத்தினார். மிக இளையவராக இருந்தபோதே ரில்கே பிரெஞ்சு மொழியைக் கற்கக் காரணமாக இருந்தார். மலிவான ஸெக் மொழிக்குப் பதிலாக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பிரெஞ்சு மொழியைப் பயன் படுத்தும்படி மகனுக்கு அறிவுறுத்தினார் ஃபியா. அவர் நடவடிக்கையில் ஒருவித பகட்டுக்காரியின்தன்மை இருந்த போதிலும் இளம் ரில்கேவின் அழகியல் மற்றும் இலக்கிய ஈடுபாடுகளுக்கு ஃபியாதான் காரணம். ஒருவித ரொமாண்டிக் மதத்தன்மையையும், புனிதர்களின் வாழ்க்கை பற்றிய ஈடுபாடும், புனிதச் சின்னங்களைப் பற்றிய மரியாதையையும் குழந்தையின் மனதில் பதியக் காரணமாக இருந்தார் ஃபியா.

ஆங்கில மொழி அவருக்கு உவப்பானதாய் இருக்கவில்லை என்பதை விட அமெரிக்காவை அவர் ஒரு நாடாகக் கருதவில்லை என்பது இன்னும் தீவிரமான ஒரு கொள்கை நிலைப்பாடு. திரள் உற்பத்தியில் பொருள்களைத் தயாரித்து நம் மீது வீசும் ஒரு நாடாகவே அவர் அமெரிக்காவைக் கண்டார். தொழில்மயமான-முதலாளீய சமுதாயத்தை அவர் விளாசிய விதத்தில் ஒன்றும் புதுமையில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதற்குக் காரணமாக இருந்த சிந்தனையாளர்கள் ஆங்கிலக் கலை விமர்சகர் ஜான் கால்லைல், நீட்ஷே, ஜான் ரஸ்க்கின், வால்டர் பேட்டர் மற்றும் ஜேகப் பக்கார்ட். இந்த விமர்சன சிந்தனைகள் வெறும் கருத்துத் துருத்தல்களாகவன்றி நிஜமான கவித்துவ வரிகளாக அவரது கவிதைகளில் இடம் பெற்றன. இந்த சிந்தனையாளர்கள் தவிர ரில்கே, குறிப்பாக அந்த காலகட்டத்தில் லூ ஆன்ரியாஸ்-சலோமி என்ற பெண்ணின் ஆளுமைப் பிடியில் இருந்தார்.

லூ ஆன்ரியாஸ்-சலோமி(1861-1937) ஒரு ரஷ்ய ராணுவ படைத்தளபதிக்கு மகளாகப் பிறந்தவர். தத்துவம், இறையியல் மற்றும் கலை வரலாறு போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த சலோமி உடல்நலக்குறைவு காரணமாக ஜுரிச் நகரிலிருந்து இதாலிக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. ரோம் நகருக்கு வந்த சிறிது காலத்திலேயே அவருக்கு நீட்ஷேவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். 1882ஆம் ஆண்டு வரை நீட்ஷேவுக்கும் சலோமிக்கும் ஒரு இனிமையான நட்பு தொடர்ந்தது. 1894ஆம் ஆண்டு நீட்ஷேவைப் பற்றிய ஒரு ஆய்வு நூலை வெளியிட்ட போதிலும் அவர் நீட்ஷேவின் காதலை நிராகரித்தார். 1887ஆம் ஆண்டு எஃப்.சி.ஆன்ரியாஸ் என்ற கீழைநாட்டு அறிஞரைத் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு பெர்லினில் நிலையாகத் தங்குவதற்கு ஒரு வீடு கிடைத்தது. பெர்லினில் ஹாப்ட்மேன் உட்பட பல எழுத்தாளர்களுடன் சலோமி நல்ல உறவு ஏற்படுத்திக்கொண்டார். இரண்டு நாவல்களை வெளியிட்டதன் மூலம் (பெரும்பாலும் சுயசரிதம் சார்ந்தவை) தன்னை ஒரு நாவலாசிரியராகவும் ஸ்தாபித்துக்கொண்டார். தவிரவும் அவர் பெண்விடுதலை தொடர்பான இயக்க ரீதியான சில கட்டுரைகளையும் வெளியிட்டார்.

ரில்கேவைச் சந்தித்தபோது சலோமிக்கு வயது 36. சலோமிக்கு அருகாமையில் இருக்கும் பொருட்டு பெர்லின் நகருக்கு தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார் ரில்கே. 22வயதான ரில்கேவுக்கு நம்பகமான ஆலோசகராகவும் பிறகு ரில்கேவின் முதல் காதலியாகவும் ஆனார். ஒரு காதலி என்கிற ஸ்தானத்தை விட ரில்கேவுக்கு ஒரு தாயாய் இருந்து அவரது வளர்பிராய இலக்கியக் கல்வியையும் பாதிப்புகளையும் நெறிப்படுத்தியவர் சலோமி. 1900ஆம் ஆண்டுக்குப் பிறகு சலோமியுடனான நெருக்கம் குறைவதை ரில்கே உணர்ந்தார். ஆனால் இதற்குப் பிறகும் தன் மனநெருக்கடிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் கடிதங்கள் எழுதுவுதற்குமான ஒரு நம்பகமான ஆலோசகராக சலோமி தொடர்ந்து செயல்பட்டார். 1911ஆம் ஆண்டு ஸிக்மண்ட் ஃபிராய்டைச் சந்தித்த சலோமி தீவிரமாக மனோவியல் பகுப்பாய்வு பற்றிய புரிதலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஃபிராய்டுடனான சலோமியின் உறவு இறுதி வரை தொடர்ந்து நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் மூன்றவாது சர்வதேச மனோவியலாளர்களின் மாநாட்டின் போது ஸிக்மண்ட் ஃபிராய்டைச் சந்திக்கும் வாய்ப்பினை ரில்கேவுக்கு ஏற்படுத்தித் தந்தார். ரில்கே ரஷ்ய இலக்கியங்களிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த படிப்பும் ஈடுபாடும் கொள்ளவேண்டும் என்றும் சலோமி வற்புறுத்தினார். இருபால் பெயர் தொனிப்பு கொண்ட ‘ரெனே என்ற பெயர்ப்பகுதியை ஆண்தன்மையான ரெய்னர் என்று மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரில்கேவை வற்புறுத்தியவர் சலோமிதான். திருமணமான இந்தப் பெண்ணுடனான தீவிரமான உறவு ஒரு வருடம் நீடித்தது.

சலோமியின் துணையுடன் 1899ஆம் ஆண்டின் வசந்தகாலத்தின் போது ரஷ்யாவுக்கு சென்றார் ரில்கே. அங்கே தால்ஸ்தாயுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இந்த முறை சலோமியின் கணவரும் அவர்களுடன் பிரயாணம் செய்தார். இந்தப் பயணத்தைப் பற்றி பிறகு நினைவு கொள்ளும் போது “முதல் முறையாகத் தன் வாழ்வில் சொந்த இடத்தில் இருப்பது போலவும், யாருடனும் சேர்ந்திருப்பது போன்ற உணர்வும் ரஷ்யாவின் பரந்த நாட்டுப்புறப் பகுதிகளும் அதன் கிறித்தவக் கோயில்களும் அளித்ததாகப் பதிவு செய்தார் ரில்கே. மீண்டும் அடுத்த வருடமே(1900) ரஷ்யாவுக்கு இன்னொரு பயணம். இந்த முறை சலோமி ரில்கே இருவர் மாத்திரம். இரண்டாம் ரஷ்யப் பயணத்தின் போது போரிஸ் பேஸ்டர்நாக் குடும்பத்துடன் ஒரு அரிய சந்திப்பு ஏற்பட்டது. (சலோமி ரில்கேவைப் பற்றிய தனது நூலை ரில்கேவின் மறைவிற்குப் பிறகு 1928ஆம் ஆண்டு வெளியிட்டார். அதே போல அவர்கள் இருவருக்குமிடையிலான கடிதங்களையும் நூலாக வெளியிட்டார்.)

இதைத் தொடர்ந்த இலையுதிர்காலத்தின் போது உண்டான எதிர்பாராத உத்வேகத்தினாலும் அதன் தொடர்ச்சியினாலும் The Book of Monastic Life என்ற கவிதை நூலைப் படைத்தார் ரில்கே. இந்நூலே பிறகு The Book of Hours என்றழைக்கப்பட்டது. இதில் 67 சிறிய, கையடக்கமான கவிதைத்-தியானங்கள் அடங்கியிருந்தன. இவை ஒரு ரஷ்ய-கிறித்தவ பிக்குவுக்கு சொந்தமானவை என்று வாசிக்கப்பட வேண்டும்.

இதாலிய மறுமலர்ச்சிக்கால ஓவியங்களைப் பரிச்சயம் கொள்ளும் வகையில் ஃபிளாரென்ஸ் நகரில் ஒரு வருட காலத்தைக் கழித்தார் ரில்கே. இந்த அனுபவம் ரஷ்யப் பயணம் அளவுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லையெனினும் ரஷ்யப் பயண அனுபவத்துடன் ஒன்றிணைந்து போகும் தகுதி வாய்ந்ததாய் அமைந்தது. கலையை வாழ்க்கையின் அதிசயம் அல்லது மர்மமாகப் பார்க்கும் தளைகளற்ற பார்வையை வளர்த்துக் கொள்ள ஃபிளாரென்ஸ் நகரம் உதவிற்று. குறிப்பாக ஓவியர்களும் கவிஞர்களும் நிஜமான வெளிப்பாட்டாளர்களாக(Revealers), ஒரு வகையில் சொல்லப் போனால் கடவுளர்களாக ஆகும் நிலை பற்றிய உள்ளுணர்வையும் நம்பும் உணர்வையும் பெற்றார். வாழ்வின் அருமையை அதிகரிக்கச் செய்யும் இவ்வுலக வாழ்வைப் பற்றிய அனுபவத்தையும் சொல்வதால் இந்தக் கவிதைகளில் ஒரு கிறித்தவனுக்கு தூய இறையனுபவமோ அல்லது மத அனுபவமோ கிடைக்க வாய்ப்பில்லை. காரணம் ரில்கேவின் கடவுளும், பிக்குகளும், தேவதூதர்களும் மதம்சாராதவர்கள்.

ரில்கேவின் தாயார் பாதிப்பு செலுத்திய குறுகிய எல்லைகள் கொண்ட கத்தோலிக்க மதக் கட்டுப்பாடுகளை உதறி எறிய நீட்ஷேவின் சிந்தனைகள் உதவின. சகலமும் அனுபவப்பட்டு அறியப்பட வேண்டியது இந்த உலகத்தில்தான்-இறந்த பிறகான உலகில் இல்லை என்பதை ரில்கேவின் சமகாலக் கலைஞர்கள் நீட்ஷேவின் உதவியுடன் நிரூபித்துக் கொண்டிருந் தனர். ரில்கே குறிப்பிடும் கடவுள் மதம் சாராதவர், மேலும் அவர் ‘பிரார்த்த னைகள் என்று குறிப்பிடுவது அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டவை.

1900ஆம் ஆண்டு மே-விலிருந்து ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களை இரண்டாவது ரஷ்யப் பயணத்தில் கழித்தார் ரில்கே. இந்தப் பயணத்தின் முடிவில் வடக்கு ஜெர்மனியின் ஓவியக் குடியிருப்பு ஒன்றில் ப்ரெம்மன் என்ற இடத்தில் ஒரு ஓவிய நண்பருடன் தங்கிச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ப்ரெம்மன் என்ற நாட்டுப்புற பிரதேசத்திற்கருகில் Worpswede என்ற அந்த சிறிய கிராமத்தில்தான் அவரது எதிர்கால மனைவியையும் மற்றொரு காதலியையும் (பாவ்லா பெக்கர்)சந்தித்தார். தன் மென் உணர்வு களுடன் ஒத்திசைவு கொண்ட கலைஞர்களும் ஓவியர்களும் வாழும் அந்த கலைக்கிராமத்தின் புதிய வாழ்க்கை முறைகள் தன் கவிதை வாழ்வுக்கு இசைவாக இருக்கும் என்று ரில்கே நம்பினார். இந்த ஓவிய கிராமத்தில் ஆகஸ்ட் ரோதான்-இன் மாணவியும் சிற்பியுமான கிளாரா வெஸ்ட்டாஃப் என்ற பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். 1901இல் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. என்ற போதிலும் தொடக்கத்திலிருந்தே இந்தத் திருமணம் அவரது வாழ்க்கையில் ஒரு சொற்பமான நிகழ்வாகத்தான் இருந்தது. இருவருக்கும் குடும்ப வருமானத்தின் பொருட்டு மிக அற்பமான வேலைகளையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நெருக்கடி கணவன்-மனைவி இருவரின் கலை வாழ்க்கையின் ஆன்மாவை அழித்துவிடும் என்று நம்பியதால் நட்பு முறையில் கிளாராவும் ரில்கேவும் மணவாழ்க்கையில் பிரிந்தனர்.

William H.Gass என்ற மொழிபெயர்ப்பாளர்-படைப்பாளர் ரில்கேவின் தனிநபர் உறவுகள் பற்றிய ஒரு சர்ச்சையை அவரது குறிப்பிடத்தக்க நூலான Reading Rilke(1999))வில் பதிவு செய்திருக்கிறார். ரில்கே பெண்களை அணுகும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட முறைமை இருக்கிறது. அவர்களைக் காதலிக்கத் தொடங்கி அந்தப் பெண்கள் அவர் மீது ஈடுபாடு காட்டத் தொடங்கிய உடன் ரில்கே பின்வாங்கி விடுவது ஒரு மனோவியல் சிக்கல் என்றும் அவர் அந்தப் பெண்களில் அவர் தேடியது ஒரு “காதலியை அல்லவென்றும் தனது அம்மாவையே அவர்களில் தேடினார் என்றும் காஸ் வாதிட்டார். ஆனால் இந்த நோய்க்கூற்றுத் தன்மை பற்றிய சுயப்பிரக்ஞை ரில்கேவுக்கே இருந்திருக்கிறது. 1902ஆம் ஆண்டிலிருந்து 1910வரை அவர் ரோதானின் நேரடி பாதிப்பிலும் பிறகு ஓவியர் செஸான்-இன் பாதிப்பிலும் இருந்தார். ஆனாலும் தன் எந்தவித பிணைப்புகளுக்கும், தனிநபர் உறவுகளுக்கும், சொந்தங்களுக்கும் மட்டுமீறிய மதிப்பளிக்க இயலாது என்றார் ரில்கே. இவ்விதமான உறவுகள் மற்றும் பந்தங்களின் துறப்பினை அவரது கலை வேண்டி நிற்கிறது என்றார். தான் யாரிடமிருந்தும், எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அதனால் முன்பு எப்போதையும் விட மிகப் பெரிய காரியமாக இந்த உலகம் தன்னை நோக்கிப் பாய்ந்து வருகையில் அதற்கேற்ற தெளிவானதும் உறுதியானதுமான பதில்களை அளிக்க முடிந்தது என்றும் கூறினார் அவர். ரில்கே பீத்தோவனின் சொற்களை மேற்காட்டினார்:

எனக்கு நண்பர் எவருமில்லை. நான் என்னுடன் தனியாகத்தான் வாழ வேண்டும். ஆனால் என் கலையில் கடவுள் வேறு எவரிடமும் விட மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதைப் பற்றிய அறிதலுடன் இருக்கிறேன்.

பின்வாங்கல் என்பது பிரதானமாய் ஒரு அணுகு முறையாக ரில்கே என்ற மனிதனிடமும் கவிஞனிடமும் சரிசமமாய் இருந்தது.

இளம்பெண்களின் மரணம் ரில்கேவை சில சிறந்த நினைவாஞ்சலிக் கவிதைகளை எழுத வைத்திருக்கிறது. ஒன்று Requiem என்ற கவிதை. இந்தக் கவிதை ஓவியர்களின் கிராமத்தில் ரில்கே கிளாரா வெஸ்டாஃப்-உடன் சந்தித்த Paula Medorshon Becker என்ற இளம் பெண் ஓவியரின் நினைவில் எழுதப்பட்டது. கிளாராவும் பாவ்லாவும் மிக நெருக்கமான நண்பிகளாகவும் இருந்தனர். பாவ்லா பெக்கர் ஒரு குறிப்பிடத்தக்க ஜெர்மன் ஓவியராக இருந்தார். பாவ்லா பெக்கருக்கு ஓவியர் Otto Medorshon என்பவருடன் திருமணம் ஆனபின் ரில்கே கிளாராவிடம் தன் விருப்பத்தை வெளிப் படுத்தினார். ஆனால் இருவர் மீதுமே ரில்கே காதல் வயப்பட்டிருந்தார். பாவ்லாவின் வாழ்க்கைத் திசை வேறுமாதிரியாகச் சென்றது. அவர் திருமணம் செய்து கொண்ட Otto Medorshon ஒரு பெரிய ஓவியர். Otto Medorshon அந்த ஓவிய இயக்கத்தின் இயக்குநர். பாவ்லா தன் கணவரின் நிழலில்தான் வாழ முடிந்தது. பிறகு வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனவரானார். பாவ்லாவுக்கு ஏற்பட்ட அவரது கலைப் பயணத்திற்கான இக்கட்டைச் சரிசெய்ய வேண்டி ஒரு வருடம் வீட்டு வேலைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு பாரிஸ் நகருக்குச் சென்று தன் ஆத்மதிருப்திக்கு ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். ஆனால் அந்த வருடமே அவரது கணவர் ஓட்டோ மெடோர்ஷான் மற்றும் பாவ்லாவின் பெற்றோர்கள் கடிதங்கள் எழுதி அவர் வீடு திரும்ப வேண்டுமென்றும், வீட்டு வேலைகளையும் ஒரு மனைவிக்கான பொறுப்புகளையும் ஏற்றுச் செய்ய வேண்டுமென்றும் நச்சரிக்கத் தொடங்கினர். இந்த வேண்டுதல்களையும், கெஞ்சுதல்களையும் நிராகரிக்க இயலாத பாவ்லா Worpswede திரும்பினார். கொஞ்ச நாட்களிலேயே கர்ப்பமாகி 1907ஆம் ஆண்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து குழந்தைப் பிறப்பில் இறந்து போனார். Worpswedeஇல் இருந்த காலங்களில் ரில்கே பாவ்லாவுடன் நீண்ட நேரம் கலை மற்றும் ஓவியங்கள் பற்றிய விவாதங்கள்-பகிர்தல்களில் ஈடுபட்டிருப்பினும் கூட அவரது ஓவியங்களை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. வெளிப்படை யாகவே பாவ்வலா இறந்த வருடத்தின்(1907) கோடை காலத்தில் நடத்தப்பட்ட செஸான்-இன் எல்லா ஓவியங்களும் அடங்கிய கண்காட்சிக்குச் சென்றார். செஸானின் இறுதிக்கட்ட ஓவியங்களைப் பார்த்த பிறகுதான் பாவ்லா எவ்வளவு சிறந்த ஓவியர் என்பது ரில்கேவுக்கு உதயமாயிற்று. பாவ்லாவின் இறப்பு அவருக்குள் மிக ஆழ்ந்த அதிர்ச்சிகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியது.

1902 ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு வருவதற்கு ஒரு மாதம் முன்னர் Book of Images என்ற கவிதை நூலை வெளியிட்டார். இக்கவிதைகள் 1898ஆம் ஆண்டுக்கும் 1901ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் எழுதப் பட்டவை. இக்கவிதைகளில் ஒருவித நியோ-ரொமாண்டிக்தன்மை காணப் பட்டது. அவற்றின் உச்சபட்சமான சில கவிதைகளில் விவரிப்புகளையும் குறியீடுகளையும் பிணைக்கும் தன்மையும் காணப்பட்டது. இந்த மாதிரியான கவிதைகளை அப்பொழுதைக்கப்பொழுது எழுதிவந்தார். இதன் இரண்டாவது பதிப்பில் கூடுதலாக 37 கவிதைகளைச் சேர்த்தார். ஆனால் பாரிஸ் நகர் வந்தடைந்தவுடன் பிரெஞ்சுக் கவிஞர் பாதலெர் மற்றும் சிற்பி ரோதான் ஆகியோரின் பாதிப்பிலும் பிரெஞ்சு உழைப்பின் அடிப்படையிலும் பிரெஞ்சு மொழியின் புறவயத்தன்மையிலும் மிகவும் வித்தியாசமான கவிதைகளை எழுதிப்பார்க்கத் தீர்மானித்தார்.

1902ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு நிறுவனம் ஒன்றுக்காக ஆகஸ்ட் ரோதான்-இன் வாழ்க்கை பற்றிய சிறுநூல் ஒன்றை எழுதும் பணியை மேற்கொண்டு பாரிஸ் நகருக்குச் சென்றார். அவரது மாணவியும் தனது முன்னாள் மனைவியுமான கிளாரா வெஸ்டாஃபின் மூலம் ரோதான் பற்றி அவர் அறிந்து வைத்திருந்த தகவல்கள் ரில்கேவுக்கு ரோதானிடம் அளவற்ற மதிப்பை உண்டாக்கியிருந்தன. மேலும் அந்தக் காலகட்டத்தில் ரோதான் உலகப் பிரசித்திபெற்ற சிற்பியாக விளங்கினார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒப்பிட்டுப் பார்க்கையில் ரில்கே இப்போதுதான் எழுதத் தொடங்கியிருக்கும் ஒரு ஆரம்ப கட்டக் கவிஞர். ரோதான் என்ற கலைஞனையும் ரோதான் என்ற மனிதனையும் நெருங்கிப் புரிந்து கொண்டு தகவல்களைப் பதிவு செய்ய அவருக்கு அருகாமையில் இருப்பதற்காக பாரிஸ் பயணம் உதவிற்று. ஹெமிங்வே போன்ற பிற எழுத்தாளர்கள் பாரிஸ் நகர் பற்றிக் கொண்டிருந்த ரொமாண்டிக் மனப்பதிவு சிறிது கூட ரில்கேவுக்கு இருக்கவில்லை என்பது பிறகு தெரிந்தது. வாழ்க்கைக்கும் கலைக்குமிடையிலான எதிரிடைகளைப் பற்றிய அதீதப் பிரக்ஞையுடனிருந்த ரில்கேவுக்கு ரோதான் அவ்விரு எதிரிடைகளை இணைப்பவராகத் தோன்றினார்.

1902லிருந்து அடுத்த 12 வருடங்களில் ரில்கேவுக்கு பாரிஸ் நகர்தான் பூகோள மையமாக இருந்தது. ஆனால் 1903ஆம் ஆண்டு தொடங்கி அடிக்கடி பிற ஐரோப்பிய நகரங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று திரும்பியதற்கான காரணம் பாரிஸ் நகரின் பிறர் மீது அக்கறையற்ற வாழ்க்கைதான். அதன் குரூரத்தைத் தாங்கவியலாமல் மத்திய இதாலியின் ஒரு பகுதியான வியரெஜியோ பகுதியில் தங்கினார். வியரெஜியோவில் தங்கியபோதுதான் The Book of Hours இன் இறுதிப் பகுதியான The Book of Poverty and Death The Book of Hourஐ எழுதினார். 1903ஆம் ஆண்டு ரோம் நகரிலும் 1904ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்திலும் இருந்தார். 1906லும் 1908லும் திரும்பத் திரும்ப இதாலியத் தீவான கேப்ரிக்குச் சென்றார். பிறகு ஃபிரான்சின் தென் பகுதி, ஸ்பெயின், எகிப்து என பல பயணங்கள் மேற்கொண்டார்-நண்பர்களைச் சந்திக்க ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கும் சென்று வந்தார்.

அவரே தேர்ந்தெடுத்துக் கொண்ட இரண்டாவது வீடாக பாரிஸ் அமைந்தது என்று சொல்வது மிகையாகாது. அதன் காட்சிபூர்வமான தன்மைக்கும் அறிவார்த்த சவால்களுக்கும் அது ரஷ்யாவுக்கு சமமாக ரில்கேவுக்கு இருந்திருக்க வேண்டும். சௌகரியங்களும் புலன் தூண்டுதல்களும் நிறைந்த கலாச்சாரத் தலைநகராக பாரிஸ் அவருக்குத் தோன்றவேயில்லை. பாரிஸ் நகர் வயோதிகர்களாலும், நோயாளிகளாலும், இறந்து கொண்டிருப்பவர் களாலும், முகமற்றவர்களாலும், வீடற்றவர்களாலும் நிறைந்த மனிதமை இழந்த நகரமாக இருந்தது ரில்கேவுக்கு. அது பீதியின், வறுமையின், மரணத்தின் தலைநகரமாய் காட்சியளித்தது. கலை மற்றும் படைப்பாக்கம் பற்றிய ரில்கேவின் கருத்துருவங்கள் அபார வளர்ச்சி பெற்றது ரோதான்-உடன் ஏற்பட்ட நெருக்கத்திற்கு பிறகு என்பதை ரில்கேவே ஒப்புக் கொண்டார். ரோதானுடனான இந்த நட்பு 1906ஆம் ஆண்டு வரை நீடித்தது. “இடைவிடாத கடின உழைப்பு என்ற கலையறம் பற்றிய தன் கருத்துக்களை இளம் ரில்கேவுக்கு தனது ஓய்வற்ற சிற்ப வேலைகள் மூலம் ரோதான் புரிய வைத்தார். ரோதானின் அணுகுமுறை மரபான படைப்பு உத்வேகம் கலைஞனை வந்தடையும் வரை கலைஞன் காத்திருக்க வேண்டும் என்கிற கருத்துருவாக்கத்துடன் அடிப்படையில் முரண்பட்டது. சார்ட்(ஸ்) திருக் கோயிலின் பொக்கிஷங்கள், லூவர் மியூஸியத்தின் பொக்கிஷங்கள் பற்றி சிறந்த அணுகல்கைளத் தந்தார் ரோதான். இலக்கிய முன்மாதிரியாக ரில்கே வுக்கு இருந்தவர் சார்ல்ஸ் பாதலெர். ரோதான் அளித்த உணவுக்கும் உறைவிடத்திற்கும் கைம்மாறாக அவருக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதும் உதவியாளராக இருந்து பணி புரிந்தார் ரில்கே. ஆனால் ஒரு தவறான புரிந்து கொள்ளலினால் தவிர்க்க இயலாத பிரிவு இருவருக்கும் ஏற்பட்டது. குறிப்பாக ஒரு கடிதத்திற்கான பதிலை ரோதானைக் கேட்பதற்குப் பதிலாய் தானே முடிவெடித்து எழுதிவிட்டார் ரில்கே.

பாரிஸ் காலகட்ட வாழ்க்கையின் போது ரில்கே புதுவிதமான உணர்ச்சி வெளிப்பாட்டுக் கவிதைகளை உருவாக்கி வளர்த்தெடுத்தார். இவை பிறகு “வஸ்துக் கவிதைகள் (அ) “காணும் கவிதைகள் என்றும் அழைக்கப்பட்டன. ரில்கே தனது கவிதை இல்லாக் காலங்களைப் பற்றியும் கவிதை உருவாகும் மனநிலை வாய்க்காதிருப்பது பற்றியும் ரோதானுடன் பகிர்ந்து கொண்டார். பாரிஸ் நகரின் Jardin des Plantesக்கு சென்று அங்கே ஏதோ ஒன்றை எடுத்துக் காட்டாக ஒரு விலங்கினைக்-கூர்ந்து பார்த்து அதிலிருந்து ஏன் ஒரு கவிதையை உருவாக்கக் கூடாது என்று கேட்டார் ரோதான். இந்த அறிவுரையை மதித்து ரில்கே Jardin des Plantesக்கு சென்று ஒரு சிறுத்தையைப் பார்த்ததன் விளைவாய் உருப்பெற்றதுதான் Panther என்ற அதிகம் மேற்கோள் காட்டப்படும் ஓர் அழகிய கவிதை.

இவற்றில் பல வெற்றிகரமான கவிதைகள் காட்சிக் கலைப் படைப்புகள் சிலவற்றின் கற்பனை ரீதியான சொற்களால் ஆன மொழிபெயர்ப்புகளாய் அமைந்தன. பிற கவிதைகள் நிலக்காட்சிகளையும், உருவப்படங்களையும், விவிலிய மற்றும் புராணிக அம்சங்களை கவிதைக் கருவாகக் கொண்டிருந்தன. 1907-08ஆம் ஆண்டு New Poems என்ற பெயரில் வெளிவந்த இந்தக் கவிதைகள் பாரம்பரிய ஜெர்மன் ‘லிரிக் கவிதையிலிருந்து முற்றிலும் தளையறுத்துக் கொண்டவை மட்டுமல்லாது நவீன ஜெர்மன் கவிதைக்கு புதிய திசைகளைக் காட்டின. அவ்வளவு தீவிர எல்லைகளுக்கும் நுட்பங்களுக்கும் ரில்கே தனது மொழியை நுண்மைப்படுத்தி வனைத்து வடிவமைத்துக் கொண்டதால் அப்போது புழங்கிய ஜெர்மன் இலக்கிய மொழியிலிருந்து முற்றிலும் புத்துணர்ச்சி கொண்டதாய் அமைந்திருந்தது. ஒரு கடிதத்தில் செஸானின் கலை முறை பற்றிக் குறிப்பிடுகையில் ரில்கே எழுதிய வார்த்தைகள் Using up of love in anonymous labour ரில்கேவின் கவிதைக் கலைக்கும் முற்றிலும் பொருந்தக் கூடியதாய் இருந்தது. making objects out of fearஎன்றும் சலோமிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் 1903ஆம் ஆண்டு குறிப்பிட்டார்.

New Poems தொகுதிக்கு இணையானதொரு உரைநடைப் படைப்பாக எழுதத் திட்டமிட்ட ரில்கேவின் நாவலின் பெயர் The Notebook of Malte Laurids Brigge . 1904ஆம் ஆண்டிலிருந்து இந்நூலை எழுதத் தொடங்கினார். கவிதைகளுக்குப் பின்னாலிருந்து இந்நூல் ஒரு கழுகு போல வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இது ஒரு தனிநபரைப் பற்றிய-குறிப்பாக பாரிஸ் நகரில் ஹோட்டல் அறையில் வசிப்பவன் ஒருவனின் பயங்கள், பீதிகள் பற்றிய பதிவாக இருக்கிறது. New Poems சிம்பலிஸ்டுகளின் “தூய கவிதைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்குமானால் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டின் உரைநடை எழுத்தாக அமையும் அந்த குறிப்பேடு. புலம்பெயர்ந்து பாரிஸ் நகர் வந்து வசிக்கும் ஒரு டேனிஷ் நாட்டவரின் நினைவுக் குறிப்புகளாய் விரிகிறது அந்த நூல். ரில்கேவின் பிரதான கருப்பொருள்களான காதல், மரணம், குழந்தைப் பருவக்காலத்து பயங்கள், பெண்களைப் போற்றுதல், மற்றும் கடவுள். மேலும் பாரிஸ் வாழ்க்கையைப் பற்றி கவிதையில் எழுத இயலாத விஷயங்களையெல்லாம் உரைநடையில் பதிவு செய்ய முடிந்தது. குறிப்பாக பாரிஸ் நகரில் அவர் கண்டவை அவரை ஏன் மிரள வைத்தன என்பதைப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக இந்த உரைநடைப் படைப்பு அமைகிறது. முகங்கள் தேய்ந்தழியக் கூடியவை என்பதை ரில்கே உணர்ந்து கொண்டதும் பாரிஸ் நகரில்தான். கடந்த காலங்களில் ஒரு வாழ்க்கை முழுவதற்கும் நீடிக்கக் கூடிய முகங்கள் இருந்தன. நவீன காலங்களில் அவை மெலிதாகத் தேய்ந்து முகமற்ற முகங்களாகி அவற்றின் பின்புறம் இருப்பவை தெரிய ஆரம்பிக்கின்றன. தொழில் புரட்சியைப் பற்றியும் அதன் தயவால் கிடைத்த தயார்-மரணங்களைப் பற்றியும் ஆழ்ந்து தியானித்தார்.

ஒரு விநோத வாழ்க்கை முறையை பாரிஸ் நகர் அவருக்கு வாழக் கற்றுத் தந்தது. செல்வந்தர்களின் கோட்டைகள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு வருகை தரும் வழக்கம் ரில்கேவுக்கு உண்டு. இவை தவிர்த்து அந்தப் பெரிய நகரில் போதுமான வருமானமின்றி ஒரே ஒரு மரியாதையான உடையை மாத்திரம் உடுத்திக் கொண்டு, மிகவும் சந்தடியும் சப்தமும் நிறைந்த ஒரு தெருவில் ஒரு மிகச்சிறிய வாடகை அறையில் தங்கியபடி காலம் கழித்தார். ஏனென்றால் ஓசையின்மையை விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. மிகச் சாதாரண பால்பொருட்கள் விற்கும் ஒரு உணவுவிடுதியில் தனியாக உணவருந்தியபடி, ஒரு வெளியாளாக, வேட்டையாடப்படும் விலங்காக அவர் பாரிஸில் வாழ்ந்தார். அவர் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கினால் அதன் பக்கத்து அறையில் வசிப்பவன் இரவில் மிக அகாலமாக வயலின் வாசிப்பான். இந்த அனுபவம் அவருக்கு பல நகரங்களில் ஏற்பட்டிருக்கிருக்கிறது:

விநோத வயலினே நீ என்னைப் பின்தொடர்கிறாயா?

எத்தனை தூரத்து நகரங்களில் ஏற்கனவே

உன் தனிமை இரவு என்னிடம் பேசியிருக்கிறது?

நூற்றுவர் உன்னை வாசிக்கின்றனரா? அல்லது ஒரே ஒருவரா? . . .

தம் பயத்தில் உன்னை வாசிக்கச் செய்து

இப்படி ஏன் எப்போதும் நான் அத்தகு மனிதர்களுக்கு அண்டையில்

இருப்பவனாகிறேன்: வாழ்வின் கனத்தன்மை

வஸ்துக்களின் கனத்தை விடக் கூடுதலானது.

ரில்கே இப்போது வஸ்துக்களில் பொதிந்த கனத்ததன்மையை கவனிக்கத் தொடங்கினார். ஒரு பார்வையற்றவனின் ஊன்றுகோலில் எத்தகு கோபமான, தீங்குத்தன்மையான சக்தி நிறைந்திருக்கிறது? மரச்சாமான்களுடன் அமைந்த ஒரு அறையை ஸ்வீகரித்துக் கொள்ளும்போது அதில் உள்ள நாற்காலியில் எத்தனை தொற்றிக்கொள்ளும்படியான மனக்கசப்பு நிரம்பியுள்ளது?-குறிப்பாக நாற்காலியின் பளபளக்கும் முதுகில், தோல்வியடைந்த பல உள்வயமான மனிதர்கள் தமது தலைகளைச் சாய்த்திருக்கின்றனர்? ஒரு நடுத்தர வர்க்க வாழ்வறையில் கொஞ்சமும் பொருத்தமற்றவராகிவிடுகிறார் ரில்கே. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ரில்கேவின் The Soliltary Personஎன்ற கவிதையை மேற்காட்டலாம்.

பாரிஸ் வாழ்க்கையின் முதல் நான்கு வருடங்களில் ஒரு தீவிரக் கவிதை நூலை எழுதுவதில் முனைந்தார். The Book of Images என்ற அத்தொகுதியில் சித்திரங்களைப் பற்றிய ஒரு இலக்கிய நூலை எழுத முயலவில்லை. அது ஒரு ஓவியத்தன்மையான நூல்-இதில் ஓவியத்தின் ஒழுங்குகளையும் சட்ட திட்டங்களையும் ரில்கே கைக்கொள்கிறார். இத் தொகுதியில் இடம்பெறும் From Childhood என்ற தலைப்பிலான கவிதை சிறுவயதில் அவர் அம்மாவுடனான பிணைப்பை சித்தரிக்கிறது- இதில் ஓவியர் ரெம்ராண்ட் எப்படி தன் ஓவியத்தை அமைப்பாரோ அப்படித் தன் கவிதையை அமைத்திருக்கிறார் ரில்கே. இந்தக் கவிதையில் ஒரு அம்மாவும் மகனும் உள்ளனர். அறையில் எத்தனையோ மரச்சாமான்கள் இருந்த போதிலும் ஒரு கண்ணாடித் தம்ளர் மீதும் ஒரு கரியநிற பியானோவின் மீது மாத்திரம் தன் குவிமையத்தை வைக்கிறார். தாயார் அவரது பெரிய விரல்களில் மோதிரங்களுடன் பியானோவை வாசிக்க ஆரம்பிக்கிறார்-சிறுவன் கவனிக் கிறான்.

இதை எழுதுவதற்கு அவர் நிறைய விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஏறத்தாழ 10 வருடங்கள் கவிதையில்லாக் காலத்தைக் கடத்த வேண்டி வந்தது. இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக எழுதுவதையே நிறுத்து விடலாம் என்று கூட யோசித்துக் கொண்டிருந்தார். New Poems தொகுதிக்குப் பிறகு அவர் குறிப்பிடத்தக்க கவிதை என்று எதையும் எழுதவில்லை. 1902ஆம் ஆண்டுக்குப் பிறகு 1912ஆம் ஆண்டுதான் கவிதை வந்தது.

The Notebook of Malte Laurids Brigge நாவலை எழுதி முடித்த 1910ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் அவரின் பாரிஸ் நகர வாழ்க்கை ஒரு முடிவுக் கட்டத்தை நெருங்கியது. அடுத்த நான்கு வருடங்களில் அவர் சுமார் 18 மாதங்களே பாரிஸில் தங்கினார். நிலைகொள்ளாத்தன்மையும், மனச்சோர்வும், உள்மன உளைச்சல்களும் அவரை ஒரு நாடு அடுத்த மற்றொரு நாடாக அலைய வைத்தன. புதிய பிராந்தியங்களை ஆராயும் பதற்றத்தில் அவர் வடக்கு ஆப்பிரிக்க கண்டத்தின் அல்ஜியர்ஸ், டூனிஸ், மற்றும் எகிப்து போன்ற பிரதேசங்களில் அலைந்து கொண்டிருந்தார். 1912லிருந்து 1913வரை ஸ்பெயனில் வசித்தார். இந்த வருடங்களின் ஆழ்ந்த நம்பிக்கையின்மை மற்றும் காரியமுனைவழிவுகள் இவற்றுக்கிடையே ஒரு நிகழ்வு அவரது இலக்கிய வாழ்க்கையையே மாற்றியமைக்கும்படியாக அமைந்தது. Princess Marie of Thurn and Taxis என்ற இளவரசி டால்மேசிய கடற்கரைப் பகுதியில் தனது டியூனோ கோட்டையில் ரில்கே தங்கி எழுதுவதற்கு வகை செய்தார். 1912ஆம் ஆண்டு டியூனோவில் அவர் இரங்கற்பாடல்களின் தொடர் ஒன்றினை எழுதத் தொடங்கினார். டியூனோ இரங்கற் பாடல்கள் ரில்கேவின் உச்சபட்ச கவிதைச் சாதனை என்று கருதப்படுகிறது. ஆனால் டியூனோ இரங்கற் பாடல்கள் எழுதி முடிக்கப்பட அடுத்த 10 ஆண்டுகள் தேவைப்பட்டன.

1914ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்கியவுடன் ரில்கே லீப்ஸிக் நகரில் சிக்கிக் கொண்டார். ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டு 7 மாதத்திற்குப் பிறகு சிவில் வாழ்க்கைக்குத் திரும்பிய போதிலும் அவர் மியூனிக் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலேயே இருக்க வேண்டி வந்தது. தொடக்கத்தில் 5 தேசாபிமான பாடல்களை எழுதிய போதிலும் போர் முடியும் தறுவாயில் ஜெர்மானியப் போர் யத்தனங்களுக்கு எதிராக அவர் மனம் திரும்பியது.

1919ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உரையாற்று வதற்கான அழைப்பினை ஏற்றார். இதாலிக்கும் ஜெர்மனிக்கும் வந்து போதல்களைத் தவிர்த்து அவர் தன் இறப்பு வரை ஸ்விட்சர்லாந்திலேயே இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் தொடங்கி வைத்து இன்னும் முற்றுப்பெறாதிருக்கும் அந்தக் கவிதைத்(டியூனோ எலிஜி) தொடரை முடித்துவிட ஒரு புகலிடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். 1921ஆம் ஆண்டின் கோடை காலத்தில் அவர் “முஸோவைக் கண்டுபிடித்தார். அது வசிப்பதற்குத் தகுதியற்ற ஒரு மத்தியகாலக் கோட்டை. ஸ்விஸ் புரவலரின் விருந்தினராக ரோன் பல்லத்தாக்கில் அமைந்த Château de Muzot வில் குடியேறினார். தெற்கில் இதாலிக்கும் மேற்கில் பிரான்ஸ் தேசத்திற்கும் இடையில் அமைந்தது இந்தப் பிரதேசம். 1922ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் சில நாட்களிலேயே அவர் 1912இல் தொடங்கிய டியூனோ இரங்கற்பாடல்களை மீதிப் பகுதிகளை எழுதி முடித்தார். அவரது படைப்பாக்கத் திறன்கள் மீண்டும் அவரின் கட்டுப் பாட்டுக்குள் வந்தன. இந்தக் கவிதைத் தொடர்ச்சியை அவரது நலவிரும்பியும் உறைவிடம் அளித்து உதவியவருமான இளவரசி மேரிக்கு அர்ப்பணம் செய்தார். டியூனோ என்ற அவரது கோட்டையில் தொடங்கப்பட்டதால் ஒரு நன்றி உணர்வுடன் “டியூனோ எலிஜி என்றே பெயரிட்டார். முஸோவிலியே எதிர்பாராத விதமாகவும் ஏறத்தாழ யத்தனம் ஏதுமின்றியும் Sonnets to Orpheus என்ற தலைப்பிலான அற்புதமான கவிதைகளில் 55 எழுதி முடித்தார். 1922 பெப்ருவரியில் நிகழ்ந்த இந்தக் கவிதைப் பெருக்கெடுப்பு அவரது 10வருடக் காலக் காத்திருப்பு வீண் போகவில்லை என்பதை நிரூபணம் செய்தது.

இந்த நீண்ட கனமான கவிதைகளைத் தவிர சிறியதும் எளிமையானதுமான சில பாடல்களை அவர் தங்கியிருந்த முஸோவின் முன் விரிந்த Valais பள்ளத்தாக்கிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக எழுதினார். முஸோ அவரது வீடாகத் தொடர்ந்து இருந்தது. ஆனால் அவரது பயணங்களை இப்போது ஸ்விட்சர்லாந்துக்குள் வைத்துக் கொண்டார். நண்பர்களைப் பார்க்கச் சென்றார்-அவரது பிரசித்தி பெற்ற கடிதங்களை எழுதுவதைத் தொடர்ந்தார். 1925ஆம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் பாரிஸ் நகருக்குச் சென்றார்-அதன் இலக்கிய வாழ்க்கையுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணிவந்தார். அவரது பழைய நண்பர்களான அந்ரே ழீத் மற்றும் பால் வெலரியும் மற்றும் புதிய ஆர்வலர்களும் அவருக்கு ராஜரீகமான வரவேற்பளித்தனர். அவர் வாழ்நாளிலேயே முதல் மற்றும் கடைசியாக ஐரோப்பியப் பெருநகரில் அமைந்த இலக்கிய சீஸனில் தன்னை ஒரு மையமாகக் கண்டார். ஆனால் இந்த வருகையின் சிரமங்கள் அவரது நொய்மையான ஆரோக்கியத்தை மிகக் கடுமையாகப் பாதித்தது. ஆகஸ்ட் 18ஆம் தேதி யாருக்கும் சொல்லிக் கொள்ளாமலேயே பாரிஸ் நகரிலிருந்து கிளம்பிச் சென்றார். அவர் 1923ஆம் ஆண்டிலிருந்தே உடல்நலம் சரியில்லாமலிருந்த போதிலும் அதன் காரணம் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்தது. 1926ஆம் ஆண்டு அவரது இறப்புக்கு சில வாரங்களுக்கு முன்னரே அவரது நோய் குணப்படுத்த வியலாத லுக்கேமியா என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஜெனிவா ஏரியின் கரையில் அமைந்த Territet என்ற உடல்நலக் காப்பகத்தில் அவர் காலமானார்.

ரில்கே பல சமயங்களில் பரிசுகளைப் பெறுபவராக இருந்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது லாஜிக்கல் பாஸிட்டிஸவிச தத்தவவாதியான இளம் லுட்விக் வேன் விக்கென்ஸ்டீன் தன் பெயரை அறிவிக்காமல் அளித்த 20,000 க்ரோனன் தொகை. ஆனால் அத்தனை நலவிரும்பிகள் இருந்த போதும் அவர் என்றுமே பணவிஷயத்தில் பாதுகாப்பான உணர்வுடன் இருந்ததில்லை. தனக்கென்று ஒதுங்க ஒரு வீடு இருந்ததில்லை. அவரது கடைசி தனிமை வருடங்களை வாழ்ந்து முடித்த “முஸோவே கூட Weiner Reinhart என்பவருக்குச் சொந்தமானது. அதை ரில்கேவின் பொறுப்பில் அவரது வாழ்நாளுக்குப் பயன்படுத்திக் கொள்ள மட்டுமே ஒப்புவித்திருந்தார்.

உள்மன அமைதியையும் தனிமையும் தேடி அலைந்து கொண்டிருந்த ஓய்வில்லா நித்திய பயணி அவர். அவரது உள்மன உலைச்சல்களின் வெளிப்பாடுகளே அவரின் யாத்திரைகளாயின. புற உலகில் அவர் தேடியது உள்ளார்ந்த ஒத்திசைவின் ஒரு நிலை-ஆனால் இந்த ஒத்திசைவின் நிலையை அவர் கவிதை என்ற ஊடகத்தின் வாயிலாகவே எட்ட முடிந்தது. ஆனால் இது ஒரு நழுவலானதும் பிடிகொடுக்காததுமான நிலை. அதன் உக்கிரம் உள்வயமாய் அடர்த்தியும் செறிவும் பெற்றது. இக்காரணத்தினாலே கவிஞன் அதை அடைய முயலும் போது தொடர்ச்சியான தோல்விக் குள்ளாகிறான். அதிர்வுகளின் ஸ்தாயியை கவிஞன் விளிம்பெட்டித் தொட்டவுடன்தான் விஷயங்கள் ஆரம்பமாகும். முடுக்கி வைக்கப்படும் கணமும் அதிர்வுகளின் ஸ்தாயியும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவு கொண்டதாய் இருந்தால் மாத்திரமே புற உலகுகள் மற்றும் அக உலகுகளின் அதிர்வுகள் ஒன்றுபடும். கவிஞனின் உள்வயமான ஆன்டென்னா ஒரு ராடார் திரையைப் போல் இயங்க வேண்டும். ஒரு ‘ஸ்கேன் வெளியில் எங்கோ இருக்கும் கவிதையின் இருப்பிடத்தையும் கவிப்பிரக்ஞையின் ஓடுபாதையில் அது வெட்டிக் கொள்ளும் சாத்தியத்தையும் சொல்லும். கவிஞன் தன் உள் மனத்திரையில் நிகழ்சிகளை ஆராய்ந்து படித்துணர்ந்து அர்த்தம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்தப் பெரிய வெளிச்சச் சிதறல்கள் எப்போதும் முன்னெச்சரிக்கை இல்லாமல் தோன்றி மறையக் கூடியவை. அப்பொழுதுதான் மறைவாய்ப் படிந்திருக்கும் அனுபவ அடுக்குகளைப் பற்றிய பிரக்ஞையும் அறிதலுமே தோன்றுகின்றன. இவ்வனுபவ அடுக்குகள் கவிதையின் உருவாக்கத்தில் நனவிலி நிலையில் தொழிற்பட்டிருப்பவை. இந்த வெளிச்சச் சிதறல்களை ரில்கே quiet flashesஎன்றழைத்தார்.

ரில்கே, ஆழமானதும் இடைவெட்டுக்கள் இல்லாததுமான ஒரு நிச்சலனத்தைத் தேடிக் கொண்டிருந்ததால் அதைக் கவிதையின் ஆழ்குரல்களில் மாத்திரமே கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினார். மேலும் அந்த நிச்சலனத் திலிருந்துதான் கவிதையின் குரல் எந்தத் தடைகளும் கட்டுப்பாடுகளுமின்றி தன்னிச்சையாக வெளிப்பாடு காண்பதற்கு இயலும். ஆனால் நிச்சலனம் நிறைந்த தனிமை அவ்வளவு எளிதாய் கிடைப்பதில்லை. இது கவிஞனின் பதற்றத்தை அதிகரிக்கிறது. ரில்கேவிலும் சரி, அவர் மொழிபெயர்த்த பாதலெர் மற்றும் பால் வெலேரியிலும் சரி, கவிதை என்பது நுட்பமும் தூய்மையும் ஆக்கப்பட்ட சுயப்பிரக்ஞையின் கலையாக ஆகிறது.

ரில்கேவைப் பொறுத்தவரை ஞாபகம் ஒரு தனித்த செயல்பங்கினை ஏற்கிறது. அது ஒரு பண்புநிலை மாற்றத்தக்க ஒரு கருவியாக செயலாற்றுகிறது. அனுபவத்திற்குள் வந்து அனுபவமயமான விஷயங்களும் உட்கிரகிப்பட்ட விஷயங்களும் பிறகு கவிதையில் விவரிக்கப்படும் விஷயங்களாக மாற்றப்படும் தகுதியைப் பெறுகின்றன. மீள்வாழ்தலில் அனுபவத்தைப் பிரித்து ஒரு படி உயர்த்தி கவிதையாக்கும் இறுதிக் காரணிகளாகவே வார்த்தைகள் மாறுகின்றன.

இது தவிரவும் ரில்கே கவிதையாக்கம் பற்றிக் கூறும் கருத்துக்கள் ரஸவாதம் பற்றிய கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. கவிஞனால் பெறப்பட்ட விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வேதிமாற்றத்தை அடைந்த பிறகே அவன் மனதிலிருந்து கவிதையாக வெளிப்படுத்தப்பட அனுமதிக்கப்படுகின்றன. உள்வயமாக நிகழும் இந்த உருமாற்றம் என்பது அனுபவரீதியாக அர்த்த முள்ளதற்கும் அற்பமானவற்றுக்கும் உள்ள வேறுபாட்டினை அழுத்தமாக்கி ஒரு கவிதையின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

ஆனால் இப்படிப்பட்ட கவிதைக்காக காத்திருக்கும் காலங்களில் ஒரு கவிஞன் என்ன செய்ய வேண்டும்? பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அறையில் குறுக்கும் நெடுக்கமாக நடக்கலாம். இரவிலும் மழையிலும் நனையலாம். புத்தகங்களில் தஞ்சமடையலாம். கவனத்திசைதிருப்பல் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் செல்லலாம். ஆனால் உறுத்தல் சற்றும் குறையாது. யேட்ஸ் கவிதை எழுதுவதின் மன-உடல்வலிகளிலிருந்து தப்பிக்க விரும்பினார். கவிதை எழுதுவதை காலவரையறையின்றி ஒத்திப் போட முயல்வார். அதன் கரு தாங்கும் அழுத்தம் அவ்வளவு தொடர்ச்சியாக உண்டாகும்போது கவிதையை உரக்க ஓங்கிச் சொல்வார். ரில்கேவைப் பொறுத்தவரை கவிதை தோன்றும் காலத்தின் போது எவ்வித முன்னறிவிப்பும் இராது. ஆனால் அதன் வருகை அத்தனை தீவிரமாய், தொடர்ச்சியாய் இருந்தாலும் அதன் நீட்டிப்பு மிகச் சொற்பமாய் இருக்கும்.

ரில்கே அளவுக்கு உள்மன யாத்திரை பற்றிய பிரக்ஞை கொண்ட கவிஞர்கள் மிகச் சொற்பமே. எந்தத் தடைகளுமில்லாது, சுதந்திரமாக எழுதுவதற்கான திறன் மீது சுமத்தப்படும் மனோவியல் ரீதியான கட்டுப்பாடுகளை உடைத்து வெளியேற அவர் கடிதங்களைப் பயன்படுத்தினார். கடிதங்கள் எழுதுவதே கூட சில சமயம் அவரை கவிதை எழுதவிடாமல் தடுத்தது. எனவே கடிதங்கள் என்பவை கவிதைகளுக்கான மறைமுக பதிலிகளே. கவிதையின் மொழியில் நமக்குக் கிடைத்திருக்கும் மிக ஆழமானதும் அழகானதுமான கடிதங்கள் மட்டுமல்லாது அவை கவிதை உருவாவது பற்றிய சூழ்நிலைகளை எதிரொலிக்கும் அதிகபட்ச பிரக்ஞையை வெளிப்படுத்துகின்றன. ஆங்கிலக் கவிஞர் கோல்ரிட்ஜைப் போல உள்மனக் கண்காணிப்பு கொண்டவராக இருந்தார் ரில்கே. அவ்வளவு உள்மன ஜாக்கிரதை உணர்வும் கூட ரில்கேவுக்கு கவிதையில்லாக் காலங்களைத் தந்திருக்க வேண்டும். இருவருமே கவிதைக்கே பிரத்யேகமான ஒரு பிரக்ஞைப் பிரதேசத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். ரில்கே தன் கவிதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தாரோ அதே அளவு முக்கியத்துவத்தை தன் கடிதங்களுக்கு அளித்தார். கடிதங்களும் கவிதைகளும் தனித்தனியாகப் பிரிக்க இயலாதவை:

எந்த ஒரு கடிதமும் எழுத வேண்டும் என்ற வெறும் நோக்கத்தினால் எழுதப்படுவதல்ல. ஒரு கடிதம் உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தைப் போல நிகழ வேண்டும், எங்கே பகலில் அதை எழுதுவதற்கு நேரம் இருந்தது என்று நீங்கள் யூகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக் கூடாது.

குறிப்பு-

இந்த அறிமுகக் கட்டுரை கூட முழுமை பெறாதது என்பதை மனந்திறந்து நான் ஒப்புக் கொள்கிறேன். விவாதிக்கப்பட வேண்டிய பல விஷயங்களும், சேர்க்கப்பட வேண்டிய தகவல்களும் மிச்சமிருக்கின்றன. இது ஒரு தொகுதியாக உருப்பெறும் சமயம் எல்லாவற்றையும் இணைத்து சரி செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன்-பிரம்மராஜன்.

ரில்கே கவிதைகள்

ஒரேயொரு கவிதையின் பொருட்டு

, கவிதைகள் உங்கள் வாழ்வின் மிக ஆரம்பத்தில் நீங்கள் எழுதும்போது அவ்வளவு குறைவாக ஆகிவிடுகின்றன. ஒரு வாழ்நாள் முழுவதற்குமான உணர்வையும் இனிமையையும் சேகரித்துக் காத்திருக்க வேண்டும், முடிந்தால் ஒரு நீண்ட வாழ்நாள். பிறகு அதன் கடைக் கோடியில் ஒரு வேளை நீங்கள் எழுதக் கூடும் பத்து நல்ல வரிகளை. மனிதர்கள் எண்ணுவதைப் போல கவிதைகள் வெறும் உணர்ச்சிகளல்ல (ஆரம்பத்திலிருந்தே ஒருவருக்கு தேவையான அளவு உணர்ச்சிகள் உண்டு), அவை அனுபவங்கள். ஒரேயொரு கவிதையின் பொருட்டு நீங்கள் பல நகரங்களைப் பார்க்க வேண்டும், பல மனிதர்களை, மற்றும் பொருள்களை. நீங்கள் விலங்குகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படிப் பறவைகள் பறக்கின்றன என்பதை உணர வேண்டும். சிறிய மலர்கள் விடியலில் மலர்கையில் செய்யும் இயக்கங்களை அறிய வேண்டும். முன்பின் தெரியாத தெருக்களுக்கு பின்னோக்கி யோசிக்க முடியவேண்டும், எதிர்பாராத சந்திப்புகளுக்கு, நீண்ட காலமாய் நீங்கள் வருமெனப் பார்த்திருந்த பிரிவுகளுக்கு. இன்னுமே விளக்கமூட்டப்படாத குழந்தைப் பிராய நாட்களுக்கு, ஒரு சந்தோஷத்தைக் கொணர்ந்த போது, அதை ஏற்காது நீங்கள் காயப்படுத்த வேண்டியிருந்த அந்தப் பெற்றோர்களுக்கு (அது வேறு எவருக்கோவான சந்தோஷம்) அத்தனை ஆழ்ந்த, கடின உருமாற்றங்களுடன் விநோதமாய்த் தொடங்கிய குழந்தைப் பிராய நோய்களுக்கு, அமைதியான நாட்களுக்கு, கட்டுப்படுத்தப்பட்ட அறைகள், கடல் மருங்கில் காலை வேலைகளுக்கு, கடலுக்கென்றே, பல கடல்களுக்கு, உங்கள் தலை மீது விரைந்தோடி எல்லா நட்சத்திரங்களுடன் கூடிய அந்த இரவுகளின் பயணங்களுக்கு,–ஆனால் இன்னும் கூட போதுமானதாய் இல்லை அவை பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்க. உங்களுக்கு அவசியம் தேவை பல இரவுகளின் காதல்கள், ஒவ்வொன்றும் மற்றவற்றை விட மாறுபட்டதாய், பிரசவ வலியில் வீறிடும் பெண்கள் பற்றிய நினைவுகளுக்கு, மேலும் லேசான, வெளுத்த, இப்போதுதான் பிரசவித்து மீண்டும் மூடிக் கொள்ளும், உறங்கும் இளம் பெண்களுக்காக. ஆனால் நீங்கள் இறப்போரின் அருகில் இருந்திருக்க வேண்டும், திறந்த கதவும் சிதறலான சப்தங்களும் கொண்ட ஒரு அறையில் இறந்தவரின் அருகில் அமர்ந்திருந்திருக்க வேண்டும். ஞாபகங்கள் கொள்வது மாத்திரம் இன்னும் போதுமானதாய் இல்லை. அவை கூடுதலாய் இருக்கையில் அவற்றை உங்களால் மறக்க இயல வேண்டும், மேலும் உங்களுக்கு அபாரப் பொறுமை வேண்டும் அவை திரும்பி வரும் வரை. ஞாபகங்கள் தம் அளவிலேயே முக்கியமானவையல்ல. அவை நம் குருதியாய் மாற்றப்பட்ட பிறகே, நம் பார்வையாய், அங்க அசைவுகளாய் மாற்றப்பட்டு, பெயரற்றதாகி, நம்மிலிருந்து இனி வேறுபடுத்த முடியாதிருக்க வேண்டும்–அப்பொழுதுதான் அது நிகழும், ஒரு அபூர்வ நேரத்தில் ஒரு கவிதையின் முதல் வரி அவற்றினிடையே உதிக்கிறது, அவற்றிலிருந்து கிளம்பிச் செல்கிறது

பிரார்த்தனை மணி நேரங்களின் புத்தகம்

1.

என் வாழ்வை வாழ்கிறேன் வளரும் சுழல்வட்ட பாதைகளில்

அவை உலகின் வஸ்துக்களின் மேலாக நகர்கின்றன.

ஒரு வேளை என் இறுதியை நான் அடையாமல் போகலாம்

ஆனால் அதுவே என் முயற்சியாய் இருக்கும்.

நான் கடவுளைச் சுற்றிச் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன்,

புராதன கோட்டையைச் சுற்றி,

நான் ஓராயிரம் ஆண்டுகளாய் வட்டமிட்டுவருகிறேன்

ஆனால் இன்னமும் நானறியேன்

நானொரு வல்லூறா, புயலா

அன்றி

ஓர் உன்னதப் பாடலாவென.

17.

திராட்சைத் தோட்டக் காவல்காரன் தன்கென ஒரு

குடிசை வைத்திருந்து கண்விழித்துக் காத்திருப்பது போல்

நான் உமது கைகளின் குடிசை இறைவா,

எனது இரவு உனது இரவிலிருந்து பெறப்பட்டது.

திராட்சைத் தோட்டம், புல்படுகை,

நேர்த்தியான சீதோஷ்ணநிலை கண்ட ஆப்பிள் தோட்டம்

ஒரு வசந்தத்தையும் கடந்துவிடாது வைத்திருக்கும்

வயல்

பூமியில் பளிங்கின் அளவு கடினமாய் வேர்பிடித்திருக்கும்

அத்தி மரம்,

இருப்பினும் நூறு அத்திப் பழங்களைத் தாங்கி நிற்கிறது.

உமது கிளைகளிலிருந்து வாசனை ஊற்றுகிறது,

ஆனால் நீரோ என்றுமே கேட்பதில்லை

நான் காவல் காக்கிறேனா இல்லையா என;

தன்னம்பிக்கையுடன், சாரங்களினால் கரைக்கப்பட்டு,

உமது ஆழங்கள்

என்னைக் கடந்து ஓசையின்றி மேலேறியபடி இருக்கின்றன.

20.

இந்த உலகின் வேந்தர் வயோதிகமடைகின்றனர்

வாரிசுகள் யாருமிலாது போகட்டும் அவர்கள்

பையன்களாயிருந்த போதே மரித்தனர் அவர் மகன்கள்saracen

அவர்தம் நரம்புநோயுற்ற மகள்கள் துறந்தனர்

சலித்த கிரீடத்தை ஜனத்திரளிடம்.

ஜனத்திரள் உடைக்கிறது அதை சின்னஞ்சிறு துண்டுகளாய்.

உலகின் உய்விப்பாளர், காலத்தின் எஜமானன்

அவற்றினை நெருப்பில் உருக்குகிறார் யந்திரங்களாய்.

தாழ்ந்த உறுமல்களுடன் கட்டளைகளை நிறைவேற்றுகின்றன அவை.

ஆனால் அதிர்ஷ்டம் அவை பக்கமில்லை.

வீட்டுக்கான ஏக்கம் கொள்கிறது உலோகத் தாது

அது காசடிக்கும் ஆலைகளையும்

அவ்வளவு சொற்ப வாழ்வே அளிக்கும் சக்கரங்களையும்

கைவிட்டு விட விரும்புகிறது.

உற்பத்திச் சாலைகளிலிருந்தும் பட்டுவாடா பெட்டிகளிலிருந்தும்

திறந்து கிடக்கும் மலைகளின் நரம்புகளுக்கு

திரும்பிச் செல்ல விரும்புகிறது.

அம்மலை மீண்டும் தனக்குப் பின்னால் மூடிக் கொள்ளும்.

23.

அந்த மாபெரும் நகரங்கள், இறைவா, என்ன அவை?

கைவிடப்பட்ட சிதைவுறும் இடங்கள்.

நானறிந்த நகரம் நெருப்பிலிருந்து தப்பியோடும் மிருகங்களை

ஒத்திருக்கிறது

அது தந்த தங்கிடம் இப்போது காப்பிடமல்ல

மேலும் நகரங்களின் காலம் முடிந்து விட்டது ஏறத்தாழ.

ஆண்களும் பெண்டிரும் வசிக்கின்றனர் திகைத்து, மெலிவடைந்து,

இருட்டறைகளில்,

எந்த மனித உடலசைவுக்கும் அஞ்சி

ஓராண்டிலே காயடிக்கப்பட்ட எருதுகளை விட பயங்கரமாய்.

உனது பூமி திறந்து கொள்கிறது கண்களை,

ஸ்வாசிக்கிறது

ஆனால் அவர்கள் இனியும் அறிவதில்லை அந்த ஸ்வாசிப்பை.

ஒரு குழந்தை தன் வளர் வருடங்களை வாழ்கிறது ஜன்னல்-பலகணி விளிம்பில்

நிழல் அதே கோணத்தை ஒவ்வொரு நாளும் போடுகிறது அங்கே

அது காட்டு ரோஜாக்களின் அழைப்பினை அறிவதில்லை

திறந்த இடங்களின் தினத்திற்கு — மற்றும் காற்றுக்கு.

அது குழந்தையாய் இருக்க வேண்டியதால்

சோகமான குழந்தையாய் ஆகிறது.

இளம்பெண்கள் மேல்நோக்கி மலர்கின்றனர் அறிந்திராதவற்றை நோக்கி

குழந்தைப் பிராயத்தின் அமைதிக்கான ஏக்கமுணர்கின்றனர்

எவ்வாறாயினும், அவர்கள் எதற்காகத் தகிப்பது எதற்கென்றால்

அது இவ்வுலகில் இல்லை

அவர்கள் உடல் மறுபடி மூடிக்கொள்ளும் போது நடுங்குகிறது

தாயாக இருந்து ஏமாற்றமடைந்த ஆண்டுகள்

கடந்து செல்கின்றன அபார்ட்மெண்ட்டுகளில் வெளிச்சத்திற்கப்பால்

இரவடுத்து இரவாக அவர்களுக்கெந்த விழைவுமில்லை

அழுகின்றனர்

எந்த நிஜமான போருமின்றி

உறைந்த ஆண்டுகள் கடக்கின்றன சக்தியற்று

மரணப்படுக்கை காத்திருக்கிறது இன்னும் இருண்ட அறையில்

அவர்கள் அதற்குள்ளாய் விழைகின்றனர் சிறிது சிறிதாய்

மேலும் நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றனர் இறக்க

ஏதோ சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல்

பிச்சைக்காரர்கள் போல இறக்கின்றனர்

இன்னும் பிறரைச் சார்ந்து.

தனித்த ஒரு நபர்

தமது இல்லங்களில் ஆறுதலாய் இருக்கும் அத்தனை மனிதரிடையே

நானிருக்கிறேன் தூரத்து சமுத்திரங்களை ஆராயும் மனிதனென.

நிறை வயிற்றுடன் நாட்கள் அவர் தம் மேஜைகளின் மேல் நிற்கின்றன

நானொரு தொலை தேசத்தைக் காண்கிறேன் காட்சிகளால் நிறைந்து.

ஒரு வேளை நிலவில் வாழப்பட்டதை விட கூடுதலாய் வாழப்படாத

வேறொரு உலகினை உணர்கிறேன் என்னருகில்

எனினும் அவர்கள் ஓர் உணர்வினை சும்மா விடுவதில்லை

மேலும் அவர்களின் சொற்கள் பழகிச் சலித்தவை.

அவர்களின் உடைமைப் பொருள்களை ஒப்பு நோக்க

நான் என்னுடன் கொண்டு வந்த வாழ் உயிர்கள்

வெளியில் எட்டியும் பார்ப்பதில்லை.

அவற்றின் சொந்த தேசத்தில் அவை காட்டு ஜாதிஙீ

இங்கே அவை அவமானத்தில் மூச்சைப் பிடித்துக்கொள்கின்றன.

இலையுதிர் காலம்

இலைகள் வீழ்கின்றன, மேலே அப்பாலிலிருந்து வீழ்வது போல்

ஏதோ வானின் உயரத்தில் தோட்டங்கள் மரிப்பது போல்.

இல்லை என மறுக்கும் இயக்கத்துடன்

ஒவ்வோர் இலையும் வீழ்கிறது.

இன்றிரவு கனத்த இந்த பூமியும் பிற நட்சத்திரங்களிடமிருந்து

அப்பால் விலகி வீழ்கிறது தனிமையில்

நாம் எல்லோரும் வீழ்கிறோம். இங்கே இந்தக் கையும் வீழ்கிறது.

மற்றதைக் கவனி. . . . அவை எல்லாவற்றிலும் அது உள்ளது.

என்றாலும் யாரோ ஒருவர் இருக்கிறார்

அவர் கைகள் எல்லையில்லா அமைதியுடன்

இந்த சகல வீழ்வுகளையும் நிறுத்தி வைக்கின்றன.

பழம்

பூமியிலிருந்து புலனாகாது அது உயர்ந்தது மேலே மேலே

மேலும் தனது ரகசியத்தை வைத்துக் கொண்டது மௌனமான தண்டில்

தெளிந்த மலரில் ஒரு தீம்பிழம்பாய் ஆயிற்று

பிறகு தொடர்ந்தது தனது ரகசியத்தை.

முழுநீளக் கோடையினூடாய்க் கனிந்தது

பகலிலும் இரவிலும் மகப்பேறு வலிகொண்ட மரத்தினுள்

தன்னையே உணர்ந்தது

விடாப்பிடியான படுவிரைவாய்

எதிர்வினை தரும் புறவெளியைச் சந்திக்க.

அந்த முற்றுப் பெற்ற அழகிய வளைவினை மிச்சமும் புதியதாய்,

இப்போது அது அத்தனைப் பளபளப்புடன் புலப்படுத்தி னாலும்

அதன் புறத்தோலுக்குள் சரிகிறது விட்டுக்கொடுத்து

மீறி வளர்ந்த மையத்தை மீட்டு நோக்கியவாறு.

அடுத்த அறைவாசி

விநோத வயலினே என்னைப் பின்தொடர்கிறாயா?

எத்தனை தூரத்து நகரங்களில் ஏற்கனவே

உன் தனிமை இரவு எனதுடன் பேசியிருக்கிறது?

நுற்றுவர் உன்னை வாசிக்கின்றனரா? அல்லது ஒருவரா?

எல்லா ராட்சத நகரங்களிலும்

இப்படிப்பட்ட மனிதர் உண்டோ

நீயில்லாது போயின் ஏற்கனவே ஆற்றில் மறைந்திருப்பர்?

மேலும் நானொருவனே அதைக் கேட்பவனாயிருக்கிறேன்?

பயத்தில் உன்னைப் பாடக் கட்டாயப்படுத்தும்

அம்மனிதர்களுக்கு ஏன் எப்போதும்

நானே அடுத்த அறைவாசியாயிருக்கிறேன்?

அவர்கள் சொல்வர் வாழ்வின் பாரம்

வஸ்துக்களின் பாரத்தை விட அதிகம்.

பிணத்தைக் குளிப்பாட்டுதல்

அவர்கள் அவனுக்குப் பழகிவிட்டிருந்தனர்

ஆனால் இருண்ட காற்றில் சமையலறை விளக்கு

தாறுமாறாய் எரியத் தொடங்கிய சமயம்

அந்நியன் முற்றிலும் விநோதமானான்.

அவன் தொண்டையைக் குளிப்பாட்டினர்.

அவன் விதியைப் பற்றி ஏதும் அறியாததால்

பொய்கள் மூலம் வேறொன்றை உருவாக்கினர்

குளிப்பாட்டியபடி.

ஒருத்திக்கு இரும வேண்டியிருந்தது

இருமியபடி கனத்த வினிகர் பஞ்சிலிருந்து

சொட்டி விட்டாள் அவன் முகத்தின் மேல்.

இது ஓர் இடைவெளியை உருவாக்கியது இரண்டாமவளுக்கு.

விரைப்பான தேய்க்கும் பிரஷ்ஷிலிருந்து

துளிகள் பட்டென்று சொட்டியபோது

தான் இனியும் தாகமாயில்லையென

அந்த அறையை அறியச் செய்ய விரும்பியது போலிருந்தது

அவனது கோரமாய் விரைத்த கை.

அவன் அதை நிரூபித்தான்.

ஒரு சிறிய இருமலுடன்

அசௌகர்ய உணர்வடைந்தவர்கள் போல்

இப்போது இன்னும் கூடுதல் வேகத்துடன்

தொடர்ந்தனர் வேலையை

அதன் மூலம் அவர்களின் வளைந்த நிழல்கள்

சுவர்மறை காகிதங்களின் மேல்

துடித்துப் பின்வாங்கி வலையில் சிக்கியது போல்

அவனைக் குளிப்பாட்டி முடிக்கும் வரை

திரைச்சீலையற்ற ஜன்னல் சட்டத்தில்

இரவு கருணையற்றதாயிருந்தது.

பெயரற்றவன் அங்கே கிடந்தான்

சுத்தமாயும் நிர்வாணமாயும்

கட்டளையிட்டபடி.

பாண்ட் டு கேரூஸல்

கைவிடப்பட்ட ராஜ்யமொன்றின் சாம்பல் நிற எல்லைக்கல் போல்

கண்ணில்லாதவன் நின்றிருந்தான் பாலத்தின் மேல்

மாறுதலே இல்லாதிருக்கும் ஒரு பொருள்

ஒரு வேளை அவனாகத்தானிருக்கும்.

அதைச் சுற்றியே சுழல்கின்றன

நட்சத்திரங்கள் தம் நேரத்தை

நட்சத்திரக் கூட்டங்களின் நிச்சலன மையம் அவன்தான்–

காரணம் அவனைச் சுற்றிலும்

நகரம் தடுக்கி விழுந்தலைகிறது

தன் பிரம்மாண்டத்தைக் காட்டிக் கொண்டு.

பின்னலிட்டுக் கிடக்கும் பல தெருக்களினிடையில் பதிக்கப்பட்டு

அவன்தான் இயக்கமற்ற நியாயவாதி

மேலோட்டத் தலைமுறை மனிதரிடையே

அவன் பாதாள உலகின் இருண்ட வாசல்

சிறுத்தை

கம்பிகளைப் பார்த்துப் பார்த்து அதன் நோக்கு

அத்தனைக் களைப்புற்றதால் அது எதையும் இனி காண்பதில்லை.

நூறாயிரம் கம்பிகள்

கம்பிகளின் அப்பால் உலகம் ஏதுமில்லை அதற்கு.

லயமிகு எளிய நடையின் லகுவான அசைந்தாட்டம்

சின்னஞ்சிறிய மையம் வரை சுழன்றடைகிறது

ஒரு புள்ளியைச் சுற்றி சக்தியின் நடனத்தை அது நிகர்த்திருக்கிறது

அதில் ஓர் மகத்தான மனத்திட்பம் திகைத்து நிற்கிறது செயலற்று.

சிலநேரங்களில் கண்ணின் கருமணியின் திரைகள் உயர்கின்றன

ஓசையின்றி. . . பிறகு ஒரு உரு உள்நுழைகிறது

தோள்களின் இறுகிய மௌனத்தினூடாய் நழுவி

இதயத்தை அடைந்து மடிகிறது.

இசை

இசை-சிலைகளின் ஸ்வாசிப்பு.

ஒருவேளை-ஓவியங்களின் மௌனம்.

மொழி எங்கே முடிகிறதோ அங்கேயுள்ள மொழி நீ,

அநித்திய இதயங்களின் இயக்கத்தின் மீதாய்

செங்குத்து சமனில் நிற்பெறும் காலம் நீ.

யாருக்கான உணர்வுகள்? , மாறுதலே நீதான்

எதுவாய் ஆகும் உணர்வுகள்?–காதுணரும் நிலக்காட்சிவெளி?

அந்நியனே நீ : இசை.

எம்மை மீறி வளர்ந்து விட்ட வெளி,

இதய-வெளி.

எமக்குள்ளிருக்கும் படுஆழப் பிரதேசம்.

அது எம் எல்லைகளைக் கடந்து,

தன் வழியை வலிந்து வெளிப்படுத்துகிறது–

மிகுபுனித விடைபெறல்:

பயிலப்பட்ட தொடுவானாய்

எம் உள்ளாழ்ந்த புள்ளி எம்மை சூழ்ந்திருக்கும் அங்கே

காற்றின் வேறுபுறமாய்

தூய்மையாய்,

கட்டற்று

இனியும் உள் வாழப்படாததாய்.

ஸ்பானிய நடனக்காரி

அதன் மினுங்கும் வெண்ணிற நாக்குகள் தீப்பிழம்பாய் வெடிக்குமுன்

தீக்குச்சியின் எல்லாப்புறமிருந்தும் பாய்வது போல்

துரிதமாகி, வெப்பமாய், பார்வையாளர்கள் அவளைச் சூழ்ந்திருக்க

அவள் நடனம் இருட்டறையில் மினுங்கத் தொடங்குகிறது.

ஒரே சமயத்தில் எல்லாமும் முற்றிலும் தீயாகிறது.

மேல்நோக்கிய ஓர் பார்வை வீச்சில்

அவள் தன் கூந்தலைப் பற்ற வைக்கிறாள்

இன்னும் இன்னும் துரித கதியில் சுழன்றாடி

தன் உடையை உணர்ச்சிமிகு பிழம்புகளால் விசிறுகிறாள்

அது ஓர் உலைக்களமாய் ஆகும்வரை–

அதிலிருந்து திடுக்கிட்ட சங்கிலிப் பாம்புகளென

நீண்ட அம்மணக் கைகள் சுருள்விரிகின்றன

உணர்ச்சியேறி, சொடுக்கிக் கொண்டு.

பிறகு மிகவும் பிடிப்பாய் அந்த நெருப்பு அவள் உடலைச் சுற்றி

இருப்பது போல்

அதை எடுத்து வீசியெறிகிறாள்

திமிராய்,

ராஜரீக அங்க அசைவுடன் கவனிக்கிறாள்

அது கிடக்கிறது தரை மேல் சீறியபடி

இன்னும் பிழம்பு உயர்ந்து

மேலும் பிழம்புகள் சாக மறுக்கின்றன–

முழுமையான தன்னம்பிக்கையுடன்

இனிய, திளைப்புறும் புன்னகையில்

அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள் கடைசியில்

மிதித்தணைக்கிறாள்

சக்தி வாய்ந்த சிறி கால்களால்.

புலம்பல்

சகலமும் தொலைவாய்

நெடுங்கால முன்பே கடந்து போனது போல்.

என் மேல் மின்னும் அந்த நட்சத்திரம்

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே

மரித்துவிட்டதென எண்ணுகிறேன்.

என்னைக் கடந்து சென்ற காரில்

கண்ணீர்த் துளிகள் இருந்ததென்றும்

ஏதோ பயங்கரமானது சொல்லப்பட்டதென்றும்

நினைக்கிறேன்.

சாலையின் அப்பக்கமிருக்கும் வீட்டில்

ஒரு கடிகாரம் ஓய்ந்துவிட்டது. . . .

எப்போது அது ஆரம்பித்தது?. . . .

என் இதயத்திலிருந்து கீழிறங்கி

பிரம்மாண்ட வானின் கீழ் நடந்து செல்லவும்

பிரார்த்தனை செய்யவும் விரும்புவேன்.

நெடுங்கால முன் மரித்த நட்சத்திரங்கள் அனைத்திலும்

ஒன்று இன்னும் உயிர்த்திருக்கிறது.

அது எதுவென

எனக்குத் தெரியுமென எண்ணுகிறேன்–

வானில் அதன் ஒளிக்கற்றையின் இறுதியில்

எதன் மேல் ஒரு வெண்ணிற நகர் அமைந்துள்ளதோ

அது. . . .

நேற்றின் மாலை

இரவு மற்றும் தூரத்து குமுறலோசை: இப்பொழுது

ராணுzxவத்தின் சரக்கு ரயில் வெளிக்கிளம்புகிறது, போருக்கு.

நவீனயாழிசைக் கருவியிலிருந்து தலையுயர்த்திப் பார்த்தான் அவன்,

அவன் வாசித்துச் செல்கையில் அப்புறம் அவளை நோக்கினான்.

ஏறத்தாழ ஒருவர் நிலைக்கண்ணாடியில் ஆழ்ந்து நோக்குவது போல்ஙி

அவளது ஒவ்வொரு அம்சமும் அவ்வளவு ஆழமாய்

அவனது இளமையான அம்சங்களால் நிறைந்தன

அவை அவன் வலியையும் கொண்டிருந்தன

ஒவ்வொரு ஓசைக்கும் அவை இன்னும்

அழகாயும் தீக்கவர்ச்சியுடனும் விளங்கின.

பிறகு திடீரென சிதைவுற்றது அக்காட்சி.

அவள் எழுந்து நின்றாள், கவனச்சிதைவுற்றவள் போல

ஜன்னலருகில்

தன் இதயத்தின் வன்முறையான மத்தள ஓசைகளை உணர்ந்தாள்.

அவன் வாசிப்பு நின்றது.

வெளியிலிருந்து புதிய காற்று வீசியது.

விநோத அந்நியத்துடன் நிலைக்கண்ணாடி-மேஜை மேல்

நின்றது கரிய ராணுவத் தொப்பி

அதன் பளிங்கு மண்டையோட்டுடன்.

கோடைமழைக்கு முன்

திடீரென, உங்களைச் சுற்றிலுமுள்ள எல்லாப்பச்சைகளிலிருந்தும்

ஏதோ–உங்களுக்குத் தெரிவதில்லை என்னவென்று–

காணாமல் போய்விட்டது.

முழுமையான மௌனத்தில்

ஜன்னலருகில் அது ஊர்ந்து வருவதாய் நீங்கள் உணர்கிறீர்கள்.

அருகாமைக் காட்டிலிருந்து நீங்கள் கேட்கிறீர்கள்

புலோவர் பறவையின் அவசர விசில் ஓசையை,

யாரோ ஒருவரின் ‘புனித ஜெரோமை அது நினைவூட்டுகிறது:

அத்தனைத் தனிமையும் பேருணர்வும்

அந்த ஒற்றைக் குரலிலிருந்து வந்ததென,

அதன் ஆக்ரோஷமான கோரிக்கையை

கடுமழை பூர்த்தி செய்யும்.

அந்த திரையோவியங்களுடன் சுவர்கள்

நம்மிடமிருந்து நழுவிச் செல்கின்றன

கவனத்துடன்

நாம் சொல்வதை அவை கேட்கக் கூடாததென்றபடியாய்.

இப்போது

சாயம்போன திரையோவியங்களில் பிரதிபலித்தவை:

கடுங்குளிர்,

நீங்கள் அவ்வளவு பயந்து போயிருந்த

அந்த நீண்ட குழந்தைப் பிராய நிச்சயமற்ற சூரிய ஒளி.

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும், காதலின் நிலப்பரப்பினை எவ்வளவு நன்றாய்

நாம் அறிந்த போதிலும்,

அதன் புலம்பும் பெயர்களுடன் மிகச் சிறிய கல்லறைக்காடு

மற்றும்

மேலும் மேலும் பீதியூட்டும் மௌனத்துடனிருக்கும்

சகலரும் சென்று முடியும் பாழ்வெளியைத் தெரிந்திருந்தாலும்

நாம் இருவரும் இணைந்து நடக்கிறோம்

புராதன மரங்களின் கீழே

மலர்களிடையே,

மீண்டும் கீழே படுக்கிறோம்

வானத்தை நோக்குகிறோம்.

தலைப்புக் கவிதை

செல்வந்தரும் அதிர்ஷ்டக்காரரும் சும்மா இருப்பது சரிதான்

யாரும் அவர்களைப் பற்றி அறிய விரும்புவதில்லை.

தேவை உள்ளோர் ஓரெட்டு முன்னெடுத்து வைக்க வேண்டும்

சொல்ல வேண்டும்: நான் கண்ணற்றவன்,

அல்லது நான் குருடாகப் போகிறேன்,

அல்லது எனக்கு ஒன்றுமே சரியாய் நடப்பதில்லை,

அல்லது எனக்கு சீக்காளிக் குழந்தை இருக்கிறது,

அல்லது இப்போது அங்கே ஒரு விதமாய் கெட்டியாய் ஒட்டியிருக்கிறேன். . .

சாத்தியத்தில் அதுவெல்லாம் எதையும் மாற்றிவிடுதில்லை.

அவர்கள் பாடவேண்டி இருக்கிறது

அவர்கள் பாடவில்லையென்றால்

எல்லோரும் வேகமாய்க் கடந்து விடுவர் நடந்து

அவர்கள் ஏதோ விளக்குக் கம்பம் அல்லது வேலி என்பது மாதிரி.

அங்கேதான் நீங்கள் நல்ல பாடலைக் கேட்க முடியும்.

மக்கள் நிஜமாகவே விநோதமானவர்கள்:

சிறார்களின் கூட்டுக்குரலிசையில் ‘கேஸ்ட்ரேட்டோக்களைக்

கேட்க விரும்புகின்றனர்.

ஆனால் கடவுளே வந்து

நீண்ட நேரமிருக்கிறார் சேர்ந்தாற்போல்

அரை-மனிதர்களின் உலகம் அவருக்கு சலிப்பைத் தர ஆரம்பிக்கையில்.

பறவைத்தீனி அளிப்பவர்கள்

நான் அதைக் குறைத்து மதிப்பிடவில்லை. அதற்கு தைர்யம் தேவை என்று நானறிவேன். ஒரு கணம் யாரோ ஒருவருக்கு அப்படி அது இருப்பதாய் நாம் கருதுவோமானால், இந்த டீலக்ஸ் துணிச்சல், எங்கே அவர்கள் ஊர்ந்து செல்கின்றனர் என்பதை என்றென்றைக்குமாய்த் தெரிந்து கொள்ள (யார் மீண்டும் அதை மறக்கவோ அல்லது மற்ற எதனுடனோ குழப்பிக் கொள்ள இயலும்) மேலும் நாளின் பாக்கி நேரங்களில் அவர்கள் என்ன செய்கின்றனர் மற்றும் இரவில் எங்கே உறங்குகின்றனர் என்பது போல. குறிப்பாக இது நிச்சயப்படுத்தப்பட வேண்டும்: அவர்கள் உறங்குகிறார்களா என. ஆனால் அதற்கு துணிச்சலை விடக் கூடுதலான ஒன்று தேவைப்படுகிறது. காரணம் அவர்கள் பிற மனிதரைப் போல வந்து போவதில்லை. இவர்களைப் பின்தொடர்வது ஒரு சிறுபிள்ளை விளையாட்டு. அவர்கள் இங்கேதானிருக்கின்றனர் ஆனால் திடீரென காணாமல் போய் விடுகின்றனர், வைக்கப்பட்டு வெடுக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட பொம்மை வீரர்களைப் போல. அவர்கள் இருக்குமிடம் கொஞ்சம் வழியிலிருந்து விலகியதானது, ஆனால் எந்த விதத்திலும் மறைக்கப்பட்டதில்லை. புதர்கள் பின் சென்றுவிடுகின்றன, புல்தரையைச் சுற்றி வழி வளைந்து செல்கிறது: அங்கேதான் அவர்கள் இருக்கின்றனர் அவர்களைச் சுற்றிலுமுள்ள ஒளி ஊடுருவம் இடப்பரிமாணத்துடன், அவர்கள் ஏதோ குவிமாடத்தினடியில் நின்றிருப்பது போல். தம் சிந்தனையில் ஆழ்ந்து அவர்கள் சென்று கொண்டிருப்பதாய் நீங்கள் எண்ணலாம், இந்த முக்கியத்துவமற்ற மனிதர்கள், அந்த அவ்வளவு சிறிய, எல்லா விதத்திலும் தற்பெருமையற்ற உடல்கள். ஆனால் நீங்கள் எண்ணுவது தவறு. அந்த இடது கை பழைய கோட்டின் சாய்வான பாக்கெட்டிலிருந்து எதையோ பற்றிக்கொள்வதை உங்களால் பார்க்க முடிகிறதா? எப்படி அது அதைக் கண்டு பிடித்து, வெளியே எடுத்து, சிறிய பொருளை காற்றில் நீட்டுகிறது, தடுமாற்றத்துடன், கவனத்தை ஈர்த்தபடி? ஒரு நிமிடத்திற்குள்ளாய் இரண்டு மூன்று பறவைகள் வருகின்றன, ஊர்க்குருவிகள், வருகின்றன ஆர்வத்துடன் தத்தித்தாவி. அவற்றின் இயக்கமறுதன்மையின் மிகக் கச்சிதமான கருத்தாக்கதிற்கு அம்மனிதன் ஒத்துப் போவதில் வெற்றியடைந்தால், அவை ஏன் இன்னும் கொஞ்சம் அருகில் வராமலிருக்கக் காரணமில்லை. கடைசியில் அவற்றில் ஒன்று உயரப் பறக்கிறது, கை உயரத்தில் சிறிது பதற்றத்துடன் சிறகடிக்கிறது, அந்தக் கையில் என்னவிதமான பயன்படுத்தப்பட்ட ரொட்டிப் பொருக்குகள் உள்ளன என்று கடவுளுக்குத்தான் தெரியும்-அந்த பாசாங்கற்ற, வெளிப்படையாய் துறக்கும் விரல்களில். எவ்வளவு கூடுதலாய் ஜனங்கள் அவனைச் சுற்றி கூடுகின்றனரோ–ஒரு பொருத்தமான தூரத்தில், வாஸ்தவமாக–அவர்களுடன் அவன் குறைவாய்த்தான் பொது அடையாளம் கொண்டவனாய் இருக்கிறான். ஏறத்தாழ தீப்பிடித்து அதன் சிறிய திரிகளின் மிச்சங்களுடன் எரியும் ஒரு மெழுகுவர்த்தி போல அவன் அங்கே நிற்கிறான், மற்றும் சகலமும் வெதுவெதுப்புடன் இருக்கிறது என்றுமே அகலாமல். அந்த எல்லா மடத்தனமான பறவைகளும் புரிந்து கொள்வதில்லை அவன் எப்படி அவற்றை ஈர்க்கிறான் என, எப்படி அவற்றைச் சபலப்படுத்துகிறான் என. பார்வையாளர்கள் எவரும் இல்லாது போனால், அங்கே அவன் நீண்ட நேரம் நிற்க அனுமதிக்கப்பட்டால், ஒரு தேவதூதன் தோன்றி, தன் அருவருப்பை வென்று, அந்த பழைய இனிக்கும் ரொட்டித் துணுக்குகளை அந்த வளர்ச்சி குன்றிய கையிலிருந்து உண்ணுவான் என்று நிச்சமாய் நான் எண்ணுகிறேன். ஆனால் இப்பொழுது, எப்போதும் போல, ஜனங்கள் அதை நிகழ விடுவதில்லை. பறவைகள் மாத்திரமே வர வேண்டுமென்பதை அவர்கள் நிச்சயப்படுத்துகின்றனர். வேறெதை இந்த வயோதிக மழைவெய்யிலில் தாக்குண்ட, ஒரு சரிவான கோணத்தில் பூமியில் சிக்குண்ட சீதோஷ்ணத்தில் சீரழிந்த பொம்மை எதிர்பார்க்க முடியும்? கப்பல் தலைவனின் தோட்டத்தில் தீட்டப்பட்டுள்ள தோணிமுகப்பு உருவங்களைப் போலிருக்கும் இவை எதிர்பார்க்க முடியும்? அது அப்படி நிற்கக் காரணம் அதுவும் கூட ஒரு காலத்தில் எங்கோ அதன் வாழ்க்கையின் முன்னோக்கிய நுனியில் வைக்கப்பட்டிருப்பதாலா? எந்த ஒரு புள்ளியில் இயக்கம் மிக அதிகமாய் உள்ளதோ அதில்? இப்போது அது சாயம் போயிருக்கக் காரணம் அது ஒரு காலத்தில் பளிச்சென்றிருந்ததுதானா? அதனிடம் சென்று நீங்கள் கேட்பீர்களா?

அவர்கள் பறவைக்கு இரையளிக்கும் போது அந்தப் பெண்களிடம் மாத்திரம் கேட்காதீர்கள். நீங்கள் அவர்களைப் பின்தொடரக் கூட செய்யலாம். அவர்கள் அதைக் கடக்கும் போது செய்கின்றனர். அது எளிமையாய் இருக்கும். ஆனால் நாம் அவர்களைத் தனிமையில் விடுகிறோம். அவர்களுக்குத் தெரிவதில்லை அது எப்படி நிகழ்கிறதென. திடீரென ஒரு பர்ஸ் நிறைய ரொட்டி அவர்களிடமிருக்கிறது. அவர்களின் லேசான சால்வைகளினடியிலிருந்து அவற்றை நீட்டுகின்றனர், சிறிதே மெள்ளப்பட்டதும், சொதசொதப்பதுமான துண்டுகள். இந்த உலகினுள் அவர்களின் உமிழ்நீர் பரவுகிறது என்பது அவர்களுக்கு நன்மை செய்கிறது, அந்த சிறிய பறவைகள் தம் வாய்களில் அந்த சுவையுடன் பறந்து செல்லுமென்பது. பிறகு இயல்பாக அவை அதை மீண்டும் மறந்து போனாலும் கூட.

முகங்கள்

ஏற்கனவே நான் அதைச் சொல்லியிருக்கிறேனா? நான் பார்க்கக் கற்றுக் கொள்கிறேன். ஆம், நான் ஆரம்பிக்கிறேன். இன்னும் மோசமாகத்தான் அது போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை நேரத்தை பயன்படுத்திக் கொள்ள உத்தேசிக்கிறேன்.

எடுத்துக்காட்டாக, முன்பு எனக்குத் தோன்றியதில்லை எத்தனை முகங்கள் இருக்கின்றனவென. எண்ணற்ற மனிதர் உள்ளனர், ஆனால் அதை விட அதிகமான முகங்கள் உள்ளன, காரணம் ஒவ்வொரு நபருக்கும் பல முகங்கள் உள்ளன. ஒரே முகத்தைப் பல ஆண்டுகளாய் அணியும் மனிதர்கள் உண்டு இயல்பாகவே அது தேய்மானமடைகிறது, அழுக்கடைகிறது, விளிம்புகளில் வெடிக்கிறது, ஒரு நீண்ட பயணத்தில் அணியப்பட்ட கையுறைகள் போல் விரிந்து விடுகிறது. அவர்கள் சிக்கனமானவர்கள், சிக்கலில்லாத மனிதர்கள் அவர்கள் என்றும் அதை மாற்றுவதில்லை, அதைச் சுத்தம் கூட செய்வதில்லை. அது போதுமானது என்றவர் சொல்கின்றனர், அதற்கு மாறுபட்டு யாரவர்க்கு நம்பச் செய்யவியலும்? வாஸ்தவமாய், அவர்களிடம் பல முகங்கள் உள்ளதால் நீங்கள் வியக்கலாம் பிறவற்றை என்ன செய்வரென்று? அவற்றை அவர்கள் சேமிப்பில் வைக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் அவற்றை அணிவார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்களின் நாய்கள் அவற்றை அணிவதும் நடக்கிறது. மேலும் ஏன் கூடாது? ஒரு முகம் முகம்தானே.

வேறு மனிதர்கள் நம்ப முடியாத வேகத்தில் முகங்களை மாற்றுகின்றனர், ஒன்றன் பின் ஒன்றாய், தேய்த்து பழையதாக்குகின்றனர். தொடக்கத்தில் அவர்களுக்கு முடிவற்ற அளிப்பு இருக்குமென எண்ணுகின்றனர் ஆனால் நாற்பதே வயதாகு முன்பே அவர்களின் கடைசி முகத்திற்கு வந்து சேர்கின்றனர். நிச்சயமாக இதில் வருந்தத்தக்க ஏதோ விஷயம் உண்டு. அவர்களுக்கு முகங்களைப் பாதுகாத்து பழக்கமில்லை ஒரு வாரத்தில் கடைசி முகம் தேய்ந்தவுடன், மெல்லிய தாளில் பல இடங்களில் உருவாவது போல் அதில் ஓட்டைகள் உண்டான பின், சிறிது சிறிதாய் ஓரத்தையல்கள் தெளித் தெரியத் தொடங்கி, அ-முகம் தோன்றுகிறது. அவர்கள் இதையணிந்து சுற்றி வருகின்றனர் நடந்து.

ஆனால் பெண்கள் பெண்கள்தான் அவள் முற்றிலுமாய் தனக்குள் விழுந்துவிட்டாள், முன்னோக்கி தனது கைகளுக்குள். அது .. .. .. .. தெருவின் திருப்பத்தில் உள்ளது. நான் அவளைப் பார்த்த மாத்திரத்தில் அமைதியாய் நடக்கத் தொடங்குகிறேன். ஏழை மக்கள் சிந்திக்கும் போது அவர்களை இடைஞ்சல் செய்யக் கூடாது. இன்னும் கூட ஒரு வேளை அவர்களின் கருத்தாக்கம் அவர்களுக்கு உதிக்கக் கூடும்.

தெரு மிகவும் வெறிச்சோடியிருந்தது. அதன் வெறுமை சலித்திருந்தது. அது என் காலடி எடுப்புகளை என் காலடிகளிலிருந்து இழுத்துவிட்டது அதில் சத்தமிட்டது சடசடத்து, தெரு முழுவதிலும், அவை ஏதோ மரமிதியடிகள் போல. அந்தப் பெண் எழுந்து நின்றாள், பீதியடைந்து, அவள் தனக்குள்ளிருந்து அவளைப் பிடுங்கிக் கொண்டாள், மிக விரைவாகவும், மிக மூர்க்கமாகவும், அதன் விளைவாய் அவள் முகம் அவளின் இரு கைகளில் விடப்பட்ட மாதிரி. அது அங்கே கிடப்பதை நான் கண்டேன் அதன் உள்ளீடற்ற வடிவம். அந்தக் கைகளுடனிருக்க விவரிக்கவொன்னாத யத்தனம் எனக்கு ஏற்பட்டது–அவற்றிலிருந்து எது பிடுங்கப்பட்டதென பார்க்காதிருப்பதற்கு. உள்புறம் ஒரு முகமிருப்பதைக் கண்டு திகைப்படைந்தேன். ஆனால் இன்னும் கூடுதலாய் பயந்திருந்தேன் முகமிழந்து காத்திருக்கும் தோலுரித்த தலைக்காக.


jeanbaptiste_monge

Note:

I have been keeping the drafts of Rilke’s poems with me for the past 5 years. Since I wasn’t satisfied with some of the renderings into Tamil I kept on revising them. A few of my friends might have the hard copies of the older versions of what has been posted here. They should tear off the older versions.

To be honest I tried my hand with the translations of Rilke’s poetry in 1982 when I bought a copy of J.B.Leishman’s book released in the Penguin Modern Poets series. But I couldn’t with confidence translate a single poem from J.B.Leishman’s collection.(Of course I did but tore them off because of utter dissatisfaction)  Even after reading C.M.Bowra’s The Heritage of Symbolism I didn’t dare touch a single poem. I felt more diffident after reading C.M.Bowra’s introduction to Rilke.

What ultimately triggered me to start the translations was Robert Bly’s book: Selected Poems of Rainer Maria Rilke. Bly’s translations gave me the confidence which I couldn’t get from J.B.Leishman.

Most of the poems from The Book of Hours are from Robert Bly. I acknowledge this with gratitude.

The rest are from Stephen Mitchell’s equally accessible book-The Selected Poetry of Rainer Maria Rilke

Though I got Galway Kinnell’s The Essential Rilke I have not used his book for translating any of these poems


Advertisements