ஒரு இந்தியக் கவிதைக் கோட்பாட்டினை நோக்கி – ஷம்சூர் ரஹ்மான் ஃபரூக்கி

ஒரு இந்தியக் கவிதைக் கோட்பாட்டினை நோக்கி

Shamsur R.Faruki

 ஷம்சூர் ரஹ்மான் ஃபரூக்கி

வெளிப்பிரபஞ்சத்திலிருந்து ஒருவர் நமது உலகத்திற்கு வருகை தருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு எல்லா மொழிகளையும் படிக்க முடியும் என்றும் அவருக்குக் கவிதையில் ஈடுபாடு இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். எல்லாவற்றையும் அல்லது இருப்பவற்றில் பெரும்பாலான கவிதைகளை அவர் படிக்கிறார் என்றும் கொள்வோம். அப்பொழுது பிரபஞ்சத்தின் அதீதத்தில் அற்பமான ஒரு புள்ளியான நமது பூமிக்கு ஒரு கவிதை உள்ளதா அல்லது பல கவிதைகள் இருக்கிறதா என அவர் கேட்டுக் கொள்வாரா? Sophocles இன் தடயங்களை Wang Weiயிலும் Bhavabuti யின் எதிரொலிகளை ஷேக்ஸ்பியரிலும், ரூமியின் திசைகாட்டிகளை Virgilஅவர் காண்பாரா? சகலத்தையும் உள்ளடக்கிய, சகலத்தையும் புரிந்து கொள்ள முடிகிற ஒரு பார்வை உலகக் கவிதை பற்றி இருக்க முடியுமா? விடை எதிர்மாறாக இருக்கவேண்டும். ஏதாவது ஒரு வழியில் நமது மூளைகளுக்குள் புரோகிராம் செய்யப்பட்டு, நமது கலாச்சாரத்திலிருந்தும் புவிவெளியிலிருந்தும், காலத்திலிருந்தும் நம்மிடமிருந்து வேறுபடுகிற கவிஞர்களின் கவித்துவத் திறன்கள் குறித்த சில பொதுவான சட்டதிட்டங்கள் இருக்கவேண்டும் என்று நான் எப்போதும் கருதிவந்திருக்கிறேன். நிஜமானதோ, கற்பனையானதோ, அடையாளம் காணும் செயல் என்பது ஒருமையைப் புலனறிவதில் இருந்து தொடங்கப்பட்டாலொழிய, திறன்களை அடையாளம் காண்பது என்பது சக ஜீவனை அறிதலுக்குச் சமமானதல்ல. ஆனால் இந்த ஒத்த தன்மையில் நிஜத்தைவிட கற்பனை அதிகமாகிவிட்டாலும், குழ்நிலை சந்தர்ப்பப் பொருத்தமின்மைகளால் அது தவறான வகையில் புலனறியப்பட்டாலும் கட்டிய எல்லாக் கட்டுமானங்களும் சரிந்து, மீண்டும் நாம் அடிப்படையான கேள்விக்கே திரும்ப வந்துவிடுவோம். பலவேறுபட்ட கவிதைகளின் திறன்களை நாம் அடையாளம் காண்பதில் ஒருவித உணர்ச்சி ரீதியான எதிர்வினையைத் தருகிறோமா அல்லது நாம் பிரமைகளைக்கொண்டிருக்கிறோமா? வெளிப்பிரபஞ்சத்திலிருந்து வருகை தருபவர் பற்றிய கேள்விக்கு மீண்டும் வரும்போது நமது உடல் ரீதியான, மானிடவியல் ரீதியான, மற்றும் கலாச்சார ரீதியான குணாம்சங்கள் அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டால் ஒழிய அவர் நமது மனிதக்கவிதையைப் புரிந்து கொள்வாரா என்பது சந்தேகம்தான். எனவே வெளிப்பிரபஞ்சத்திலிருந்து நம் உலகுக்கு வருகைதரும் ஒருவர் நமது கவிதைகளைப் படிக்கும் உருவகத்தை கீழ்கண்ட கேள்விகளை எழுப்புகிறது.

  1. கவிதை வேறுவிதமாக மாற்றம் செய்யப்பட முடியாதா? அதாவது கவிதையாகவே அதை அனுபவிக்க முடியாதா?  அப்படியானால், அந்த சந்தோஷப்படுத்துதலின் மூலம் என்ன?
  2. வேறுபட்ட கலாச்சாரங்களின், வேறுபட்ட மக்களின்   கவிதைகள் எவ்வளவு வேறுபட்டவை? வேறுபாடுகளுக்கு   அப்பாற்பட்டு காணப்படக்கூடிய திறன்களில் பொதுவான பதிவுகள் உள்ளனவா?

  3. நமது உடலியலுக்கே உரித்தானதா நமது கவிதை?

  4. கவிதைக் கோட்பாடுகள் எவ்வாறு உருவாகின்றன? கவிதைகளை நாம் ரசிப்பதில் இந்தக்  கோட்பாடுகள் எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கின்றன?

கவிதை வேறுவகையாக மாற்றப்படக் கூடியதில்லை என்றால் வெளிப்பிரபஞ்சத்திலிருந்து நமது உலகுக்கு வருகை தருபவர் நமது கவிதையை ரசிப்பதில் சிரமம் ஏதும் இருக்காது. இந்த ரசிப்பின் மூலாதாரம் கவிதை நமக்குள்ளாக ஏற்படுத்தும் ஒரு குதூகல உணர்வு. ஆனால் சிலர், கவிதை நமக்கு குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்கக் கூடும். கவிதை தீவிரத்தன்மை கொண்டதென்றும், பரிசுத்தமானதென்றும் அவர்கள் கருத்து கொண்டிருக்கக்கூடும். ஆனால் தீவிரத்தன்மையும், பரிசுத்தத் தன்மையும் குதூகலத்தைத் தருவதில்லைþகுறைந்தபட்சம் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை. எனவே சிலர், கவிதை வேறுவிதமாக மாற்றம் செய்யப்படக்கூடியது என்று நம்பக்கூடும். அது வெளிப்படுத்தும் கருத்துக்கள் உங்கள் சுயத்தின் உட்கூடத்தில் வரவேற்புப் பெறக்கூடியவையாக இருக்கும் பட்சத்தில்தான் அதை நீங்கள் ரசிக்கமுடியும். நமது மனிதக்கவிதை வெளிப்பாடு செய்யும் கருத்தாக்கங்கள் வெளிப்பிரபஞ்சத்திலிருந்து வருகை தருபவருக்கு அருவருப்பூட்டக்கூடிய கருத்தாக்கங்களைத் தரலாம். எனவே அவர் நமது கவிதையை ரசிக்கமாட்டார்? கவிதை, கருத்தாக்கங்கள் சம்மந்தப்பட்டதானால்  கவிஞனின் சொல்லுக்கு அகிலத்துவப் பொதுமை எதுவும் கிடையாது. காலத்தையும், வெளியையும் கடந்து நமக்கு உயிர்ப்பூட்டக் கூடிய கவிஞர்கள் பற்றிய நிகழ்முறை (Phenomenon)) இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. உள்ளுணர்வு பூர்வமானதும், அகிலத்துவமானதும் ஆகிய, கவிதைக்காக அனுசரிக்கப்படும் தரத்திறன்கள் பற்றிய ஒரு விவாதத்திற்கு இந்த நிகழ்முறை சாதகமானது. ஆனால் கவிதையை ஒரு விவாதத்திற்கு இந்த நிகழ்முறை சாதகமானது. ஆனால் கவிதையை விளக்கமூட்டவோ, நியாயப்படுத்தவோ கட்டப்படும் கவிதைக்கோட்பாடுகள் நமக்கு வேறுவிதமாகச் சொல்லித் தருகின்றன. சீனக்கவிதையை எனக்கு விளக்கமூட்டும்/ நியாப்படுத்தும் கோட்பாடு எதுவும் சொல்வதில்லை எனக்கு. இருந்தாலும்கூட நான் சீனக்கவிதையை ரசிக்கத்தான் செய்கிறேன். Arthur Waleyயும் Edward Thomas என் சிந்தனையைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது இதற்குக் காரணமா? அல்லது கோட்பாடுகள் கவிதையிலிருந்தே கிளம்புகின்றன அல்லது கவிதையை நெருக்கமாகத் தொடர்கின்றன. எனவே முற்று முழுமையாக அவை பொருந்தாமல் போகமுடியாது. கோட்பாடுகள் ஒரு நிகழ்முறையை (Phenomenon)) விளக்கும் நோக்கத்தில் உருவாக்கப்படுகின்றன. மேலும் கோட்பாட்டினால் விளக்கப்படும் / முன் வைக்கப்படும் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும்போது ஒத்த நிகழ் முறைகளின் தோற்றத்தைக் கோட்பாடுகள் முன் கூறும். கவிதை இல்லை எனில் கவிதை பற்றிய கோட்பாடுகளும் இல்லை. கவிதைக் கோட்பாடுகளின் முன்கணிக்கும் சக்தி சோகமான முறையில் எல்லைப் படுத்தப்பட்டிருக்கிறது. நிஜத்தில், ஒரே தன்மைகொண்ட கவிதைகள் பலவிதமான, ஒன்றை ஒன்று மறுதலிக்கும், முரண்பாடான கோட்பாடு களிடையே வாழ்ந்து வந்திருப்பதால், கவிதைக்கோட்பாடுகள் பற்றிய அறிவு இன்றி கவிதையை முழுமையாக ரசிப்பது சாத்தியமில்லை என்ற கருத்து உருவாகி இருக்கிறது.

எனவே கவிதைகள் பற்றியும், கவிதைக்கோட்பாடுகள் பற்றியும் ஒர மாபெரும் குழப்பம் நிலவுகிறது. எல்லாக் கவிதைகளுக்கும் ஒரு சந்திப்புப் புள்ளி இருக்கவேண்டும். இது கவிதையை ரசிக்க நமக்கு உதவும். அப்படிப்பட்டதொரு சந்திப்புப்புள்ளி, நமது கவிதையில் என்பதைவிட நமது உடலியலில் இருக்கிறது என்று சொல்லலாம். நாம்தான், ஒரு அர்த்தத்தில், நமக்குள்ளாகக் கவிதையைக் கொண்டிருக்கிறோம்T.S. எலியட் இசையைப் பற்றிச் சொன்னதைப் போல:

”.……அவ்வளவு ஆழ்ந்து கேட்கப்பட்ட இசை அது கேட்கப்படாதது போலவே,

ஆனால் நீதான் அந்த இசை இசை இருக்கும் வரை.”

அல்லது நமது உடலியலில் அது இயங்குகிறது என்று கோருவதன் மூலம் நான் கவிதைக்கு மிக உயர்ந்த ஒரு ஸ்தானத்தைத் தருகிறேனோ? அப்படியல்ல. கவிதை உலகத்தை மாற்றக்கூடிய அல்லது கவிதை நல்வினைகளுக்கோ தீவினைகளுக்கோ ஆன சக்தி என்று நம்பும் கவிஞர்கள் மற்றும் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஆகியோர் கவிதையைப் பற்றிக் கொண்டிருக்கிற பிளாட்டோனிய ஏமாற்றுத்தனத்தை நான் வலுப்படுத்த விரும்பவில்லை. அத்தகையதொரு சக்தியை கவிதைக்கு அளிக்க நான் விரும்பவில்லை. இன்றைக்கு இந்தியாவில் கவிதைக்கான பேரபாயம் சில கவிஞர்களிடமிருந்தும் பெரும்பான்மையான அரசியல்வாதி களிடமிருந்தும் வருகிறது.  சமூக, அரசியல் நிகழ்வுகளில் கவிதை ஒரு சக்திமிக்க உந்தமாக இருக்கிறதென்றும், கவிதைக்கு அப்பாற்பட்டு கவிஞன் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமை இருக்கிறதென்றும் இவர்கள் நம்பவோ அஞ்சவோ செய்கிறார்கள். இங்கு சற்று விலகிச் சென்று Joseph Brodskyயின் சொற்களை மேற்காட்டுகிறேன்:

“ஒரு கவிஞன் சமுதாயத்திற்கான கடமை என்ற ஒன்றைக் கொண்டிருப்பானானால் அதுசிறப்பாக எழுத வேண்டுமென்பதே…  மாறாக சமுதாயம் கவிஞனுக்கான எந்த விதமான கடமையும் அற்றிருக்கிறது. எவ்வளவு சிறப்பாக  எழுப்பட்டிருப்பினும் அந்தக் கவிதைகளை வாசிப்பதை விடவும் வேறு தேர்வுகள் இருப்பதாக சமுதாயத்தின்  பெரும்பகுதி  நினைக்கிறது”

 

ஒரு உலகக் கவிதைக் கோட்பாடு இருக்கமுடியாது. ஆனால் உலகக் கவிதைகளில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட ஒரு கவிதைக் கோட்பாடு இருக்க முடியும். ஆனால் எப்பொழுதுமே வெளிப்படையாகத் தெரியாத, இயற்கையாய் உள் அமைந்திருக்கும் கோட்பாடு இது. இது போலவே, யதார்த்தமாக, ஒரு இந்தியக் கவிதைக் கோட்பாடு இருக்க முடியும்ஙீ இருக்கிறது. பல வேறுபட்ட மொழிகளில் எழுதிய நமது கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகளில் இருந்து வடித்தெடுக்கப்பட்டது அது. அந்தக் கவிதைக் கோட்பாடு இந்தியத்துவத்தால் பிரதான குணம்பெற்றிருக்கும் எவ்வாறு வெளிப்பிரபஞ்சத்திலிருந்து நமது உலகுக்கு வருகை தருபவருக்கு உலகக் கவிதை மனிதத்துவத்தால் குணம் பெற்றுத் தெரியுமோ அதுபோல்  எப்படி ஒரு மனிதனல்லாத (non-human)  கண்காணிப்பாளனுக்கு மனிதத்துவம் மிகத் தயாராய் வெளிப்பட்டுத் தெரியுமோ அவ்வாறே இந்த இந்தியத்துவமும் ஒரு இந்தியனல்லாத வேற்று நாட்டுக்காரனுக்கு தயாராய் கவனிக்கப்படக் கூடியதாய் இருக்கும். ஆனால் இது இந்தியர்களுக்கு இந்தியத்துவத்தை வரையறை செய்யும் செயலைத் தடுத்து நிறுத்தக்கூடிய செயலாகிவிடக்கூடாது.

இந்தியத்துவம் அல்லது இந்தியக் கவிதைக் கோட்பாடு பற்றி சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையில் மெத்தப் படித்தவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் பெரும்பாலும் இந்தியனையும் இந்துவையும் சமமாக வைக்கின்றன. இந்தியத்துவம் என்பது இந்துமத சாராம்தான் என்ற கருத்தாக்கத்தை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ வேறுபாட்டிலும் ஒற்றுமை என்ற பிரபலமான கருத்தை இங்கு துணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மை இதைவிடச் சிக்கலானதாய் இருக்கிறது. இந்த சிந்திக்கிற, உணர்கிற வழியை நியாயப்படுத்த மதத்தையும், தத்துவத்தையும் துணைக்கழைக்க வேண்டிய அவசியம் இல்லை, பிரத்யேகமாய் இந்தியத்துவம் என்று கூறும் அளவுக்கு ஒரு உணரும் வழியும் இருக்கவேண்டும். F. Schlegal ரொமாண்டிசிசத்தை “ஒரு வகையாய் உணர்தல்”என்று விவரித்தபோது, அந்த வகையை கிறிஸ்துவர்களுக்கு மட்டும் எனவோ, புராட்டஸ்டண்ட்டுகளுக்கு மட்டும் எனவோ, மதமில்லாத இயற்கைத் தொழுகையாளர்களுக்கு மட்டும் எனவோ எல்லைப்படுத்திக் கூறிவிடவில்லை. ஒரு இந்தியக் கவிதைக் கோட்பாடு இருக்குமானால், ஏதாவது ஒரு வழியில் அது இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் பொதுவானதாய் இருக்கவேண்டும். அப்படி ஒரு கவிதைக்கோட்பாடு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்தியக் கவிஞர்கள் பெர்ஷிய மொழியில் எழுதத் தொடங்கினபோது அவர்கள் தங்களையும் அறியாமல் இந்திய நடையிலான பெர்ஷியக் கவிதையை உருவாக்கினார்கள். இந்த நடை ஈரானிய பெர்ஷியக் கவிஞர்களின் நடையிலிருந்து முற்றிலும் வேறாகத் தெரிந்தது. இது ஈரானியக் கவிஞர்களால் நிராகரிக்கப்பட்டது. மைக்கேல் மதுசூதன் (Michael Madhusudan Dutt)) தோரு தத்தும் (Toru Dutt) எழுதிய ஆங்கிலக் கவிதைகள் ஆங்கிலம்போல இருக்கவேண்டும் என்ற பிரக்ஞைபூர்வமான யத்தனிப்பை மீறியும் இந்தியக் கவிதைகளாகவே இருக்கின்றன.

தாமஸ் மூரின் (Thomas Moore) Lalla Rokh, இந்தியமயமாய் ஒலிக்கவேண்டுமென்ற யத்தினிப்புக்கு அப்பாற்பட்டும் ஒரு ஆங்கிலக் கவிதையாகவே இருக்கிறது. காரணம் மொழிரீதியானது அல்ல. வாஸ்தவம், இந்திய பெர்ஷிய மொழியிலும் இந்திய ஆங்கில மொழியிலும் சில சொற்களும் சொற்றொடர்களும் இந்தியாவுக்கே உரித்தானதாக இருக்கின்றன. இவற்றில் சில, ஏற்றுக்கொள்ளப்பட்ட பெர்ஷிய மொழித் தரத்திலோ, ஆங்கிலத்தின் தரத்திலோ இல்லை. ஆனால் இது மேம்போக்காய் நிலவும் ஒரு நிகழ்முறை. வேண்டுமென்றும், முன்நோக்கத்துடனும், பெரும்பாலும் எதிர் மறையான நோக்கங்களுக்கும் இன்றைய இங்கிலாந்தின் வேறுபட்டவர்க்கங்களால் பேசப்படும் துணைமொழிகளையும், மொழிமரபுக் கூறுகளையும் China Achube வும்Wole வும் பயன்படுத்திய போதிலும் அவர்கள் ஆங்கில எழுத்தாளர்கள் அல்லர். அவர்களின் மொழி ஏற்கப்பட்ட ஆங்கிலமாக இருந்தபோதிலும், அவர்களின் மென் உணர்வு (Sensibility) ஆப்பிரிக்கத்தன்மை கொண்டது. இந்தியக் கவிதைக் கோட்பாடு, சந்தேகத்திற்கிடமின்றி, சமஸ்கிருதக் கவிதைக் கோட்பாட்டிலிருந்து தொடங்குகிறது. ஆனால் அது அதற்கு அப்பாலும் செல்கிறது. சமஸ்கிருதக் கவிதைக் கோட்பாடு ஏதாவது ஒரு வகையில் எல்லா இந்தியக் கவிதைக்கும் பண்பூட்டுகிறது. ஆனால் அது பாழ்படுத்தும் சக்தியல்ல. ஒரு உயிர்ப்பூட்டும் சக்தி. ஒரு மேற்கத்திய மொழிக்கு வெற்றிகரமாக மொழிபெயர்க்கப்பட முடியாத எந்த ஒரு கவிதையையும் நவீனத்துவம் கொண்டது எனக் கருதமுடியாது என்ற கருத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் சில உருது விமர்சகர்கள் முன்வைத்தனர்.

இதன் பின் உள்ள கற்பிதம் என்னவென்றால், நவீனத்துவ மென் உணர்வு முழுவதுமாய் இல்லையாயினும், பெரும்பாலும் மேற்கத்தியமானது என்பதே. இங்கு மொழிபெயர்ப்பு கோட்பாடு குறித்த பலத்த சச்சரவினைத் தொடங்க நான் விரும்பவில்லை. கவிதைத்திறனுக்கோ, ஏன் நவீனத்துவத்திற்குமே கூட மொழிபெயர்க்கப்படக் கூடிய தன்மை ஒரு அளவுகோலாக இருக்க முடியும் என்பதை நான் ஏற்கவில்லை. மேலும் எவ்வாறு சுதேசி மென் உணர்வுகள் உண்டோ, அவ்வாறே ஒரு முழுக் காலகட்டத்திற்குப் பொருந்தக்கூடிய உலகத்தின் எல்லாப் பிரதேசங்களுக்கும் பொதுவான மென்உணர்வுகள் உண்டு. இன்றைய இந்தியக்கவிதை இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் விஷயங்களைக் கவனிக்கூடிய ஒரு பிரத்யேக இந்தியநோக்கு உண்டுஙீ ஒரு இந்திய இனப்பண்பு (ethos)இருக்கிறது. மேலும் அப்பண்பு நமது கவிதையில் பிரதிபலிக்க வேண்டும்.

அந்த இந்திய இனப்பண்பு என்பது என்ன? என்னைப் பொருத்தவரை, நமது கவிதையில் இந்திய இனப்பண்பு தெளிவாய் மேல் எழும்பித் தெரிவதற்குத் தடையாக இருப்பது நம் அறிவு மற்றும் உணர்வு மீதான மேற்கத்திய விக்டோரிய (காலத்து) இனப்பண்பின் மேலாதிக்கமே, அந்தப் பண்பு, வாழ்வு மற்றும் பிரபஞ்சம் பற்றியதல்ல இலக்கியம் பற்றியது.  உலகின் நமது கற்பனையில் மறுவார்ப்பு செய்யும் வழியாகவும், வார்த்தைகளை விளையாடும் ஒரு விஷயமாகவும் கவிதையைக் கருதும் இந்தியப் பேரிலக்கியப் பார்வையை நாம் நம்மை அறியாமலேயே இன்னும் மறுதளிக்கிறோம் என்று தோன்றுகிறது. சமஸ்கிருத கோட்பாட்டாளர்கள் “கவி வியாபர” என வரையறை செய்ததை நாம் மறந்து விட்டோம். விக்டோரியாþபுராட்டஸ்டண்ட் அறநெறியாளர்களால் நமக்கு தரப்பட்ட பிளாட்டோவின் உணர்வு ரீதியான ஆதிக்கப் பிடியிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை.

பயனில்லாத எந்த செயலும் மதிப்புடையதல்ல என்று புராட்டஸ்டண்ட் அறநெறி சொல்லித் தந்தது. இந்தப்பார்வையை சுமார் 150 வருடங்களுக்கு முன்பே மேற்குலகு நிராகரிக்கத் தொடங்கியது. புலன் உணரும் மனதினால் பார்க்கப்படும், நிதரிசனத்தைக் கிரகித்துக் கொள்ளும் முயற்சியில் மேற்குலகு தனது நீண்ட, முடிவுறாத பயணத்தைத் தொடங்கியது. 1835ஆம் ஆண்டு Gautier,, எல்லாப் பயனுள்ள பொருள்களும் அசிங்கமானவை என்ற பிரகடனத்தை முன் வைத்தார். சமூகத்தில் கவிதையின் நிலையை மீண்டும் வலியுறுத்த அவ்வளவு தீவிரத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் பிளாட்டோவைப்போல், அவர்களின் இறுதியான விளைவுகளுக்குப் பயன்படும்பொருட்டு கவிதை இருக்கவேண்டும் என்பவர்களுக்கு எதிராகக் கவிதையின் நிலையை நாம் தற்காக்கவேண்டும். அதிகாரங்களின் விளையாட்டில் கவிதையை ஒரு கைப்பாவையாகப் பயன்படுத்தும் போக்கினை எதிர்க்க ஒரு மிகச்சிறந்த வழி இருக்கிறது: எல்லா நுண்கலைகளும் மிக அந்நியோந்நியமாய் பிணைந்து, பரஸ்பர பரிமாற்றம் கொள்ளும் நிலையில் இயங்குகின்றன என்னும் புராதன இந்திய முறைப்படுத்துதலே அந்த வழியாகும். ஒரு இன மக்கள் உருவாக்கும் கட்டிடகலை, அவர்களால் உருவாக்கப்படும் கவிதை அல்லது ஓவியத்தின் வகையினால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே கலைகள் யாவும் பரஸ்பரமான ஒத்திணைவைக் கொண்டவை. இசை ஒரு வழியில் வளரவும் கட்டிடக்கலை ஒரு வழியில் வளரவும் முடியாது. இந்தியத்துவம் மேற்கினை நிராகரிப்பதில்லை. அது அதனுடைய வரை அமைப்புகளிலேயே மேற்கினை ஏற்கிறது. ரஷ்ய உருவயலாளர்களால் (Russian Formalists)இலக்கியம் பற்றியும் இலக்கியத் தன்மை பற்றியும் உருவாக்கப்பட்டு, தற்போது பெரும்பான்மையான மேற்கத்திய விமர்சனத்தில் பயன்படுத்தப்படும் ஆழ் பார்வைகள், நீண்டகாலத்திற்கு முன்பே இந்தியாவில் உருவாக்கப்பட்ட கவிதைக் கோட்பாடுகளில் நினைவிலி ஒப்புமைகள் கொண்டிருப்பது ஒருவித எதிர்மறைத் தன்மைபோல் தோன்றுகிறதல்லவோ?  “ஒரு கலைப்படைப்பில் இருக்கும் எல்லாமும் அந்தக் கலைப்படைப்பை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு” என்று கூறினார் Victor Shklovsky. இந்த ஆழ்பார்வை மத்தியகால ஈரானிலும் புராதன இந்தியாவிலும் ஒரு மகிழ்ச்சிகரமான எதிரொலியைக் கண்டிருக்கும். இந்தியக் கவிதைக் கோட்பாடு பற்றிய மறுகூற்று (Re-statement) இங்கிருந்து தொடங்கட்டும்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: பிரம்மராஜன்.

இந்தக் கட்டுரை பாரத்பவன் எப்போதாவது வெளியிடும் BAHUVACHAN (பன்மைகள்) என்ற சிற்றேட்டிலிருந்து (February 1988)) தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது. BAHUVACHAN-1 February, 1988. pp.209-214

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s