
This is the collection of poetry(publised 22 years ago) that I wanted to suppress for ever. Consequently I didn’t include a single poem from this collection in my “Selected Poems”. Since my friends like Anand,Pazhani Vel who have high regards for my poetry insisted that I publish them at least in the Collected Edition. Since there is no hope of a collected Edition I am posting these poems here. I have put my pen in a few places correcting a punctuation here and rewriting a word there. I still consider these my apprentice poems. Not all that a poet scribbles becomes poetry. I leave the judgement to the discerning reader-of course not the common,lazy reader.
Bibliographic Details
First Edition May 1985
Publisher: MEETCHI Books, 59/E Elk Hill Road,
Ooty-643001 Cover Design: Brad W.Foster. Price Rs.8-50

ஆத்மாநாமுக்கு
பிரம்மராஜன்
உன் வலியை நீ உணர்ந்த
அந்த முதல் நிமிஷம்
நனவோடையில் தேடி வந்த சொற்கூட்டத்தின்
புத்தம்புதிய ஆரவாரம்
பனிப்படலத்தில் சுற்றப்பட்ட தீக்கங்குகளின் தாக்குதல்–
நகரத்தின் மாலை நேர நியான் விளக்குகள் மின்னத்
தொடங்கியிருக்கும். வெதுவெதுப்பான
தூய மில்லியன் உணர்ச்சிகளின் மார்பகங்கள்
ரோதான்
பெர்னினி
உலோகம்
சலவைக்கல் உருவங்களில் மட்டுமே உனக்கு.
உன்னைத் தேடி வந்த பெண்ணைக் கண்டிருக்க மாட்டாய்.
அழைப்பு மணியின் சலனமின்மை
உன்னைக் கூப்பிட்டிருக்காது.
காலித்தகர டின்களால் சூழப்பட்ட மனிதன்
ரயில் என்ஜின்கள் நிராகரித்த
நிலக்கரித் தூள் மலைகளின் மேல் திரியும் சிறுவர்கள்
உன் நிறுவனம்
உருவாக்கும் தயாரிப்பு ஆடைகளை
அணியப் போகும் குழந்தைகள்
சற்று முன் நீ கண்டிருப்பாய்
உன் காலணிகளின் மீது மட்டும் பதிந்த பசிக்கண்களை.
எல்லாம் தெரிந்திருக்கும்
நீ நிசப்தத்தின் நடனத்தைக் கேட்டபடி உணவருந்தினாலும்
இரண்டு காதுகளிலும் தெளிந்த நீரோடைச் சங்கீதம்
பதிவான போதிலும்
மிலிட்டரி பச்சை நிறப் பையை
உன் ஷேகுவாராத் தொப்பியைக் கிண்டலடிக்கும் நண்பனையும்
விஷத்தையே உணவாக நாளும் புசிக்கும்
உன் சக மனிதர்களையும்
முதல் ‘டாடாயிசக்’ கண்காட்சி காட்டியது சிறுநீர் சேகரத் தொட்டி
உன் தேசமே அப்படி உனக்கு
சர்வ நிஜத்தில் முப்பரிமாணக் குறியீடு.
கிழிக்கப்படாத தேதித்தாள்கள்
உறையிலிருந்து பிரிக்கப்படாத கடிதங்கள்
முகப்பு தெரிவிக்காத பத்திரிகைகள்
அறிவியல் திரைப்படங்களின் விழாவுக்கு அழைப்பிதழ்
சிவனின் பேச்சு மௌனமாகிப் போச்சு
ஜென்னும்
உன் மிலிட்டரி நிறப் பச்சை மோட்டார் சைக்கிளும்
உன்னைப் போலவே.
உன் அறையின் ஜன்னலில் எட்டிப் பார்த்த தென்னை மரம்
நீ விரும்பிய ஸ்படிக நீரலைகள்
உன் தொண்டைக்குள்
நுரையீரல்களில்.
ஒவ்வொரு கன சதுரமும் உன்னை விழுங்கிய போது
ஐந்தாவது படியில் வரிசைக் கிரமத்தில் மடிக்கப்பட்டு
அடுக்கப்பட்ட உன்னுடைகள்
உன் தேய்ந்து போன காலணிகள்
நீருக்கு மேலே வந்த
உன் முகம்–
பட்டியல்கள் அனைத்தையும் மறந்து சொற்களைத் துறந்து
மருந்துப் புட்டிகளின் நிறங்கள் அழிந்து
நிறமிழந்து
நீரைப் போல.
14.08.1984
மணற்கரையில் திரியும் மனிதன்
ஒரு நகரா, மனிதனா, புத்தகமா,
பெயரா அல்லது புனிதனா,
எதுவென்று புரியவில்லை
நான் சொல்வது உனக்கு.
அனந்தத்தின் ஒரு துளியைக் கண்ணுற்று
வைரத்தின் முகங்களென மருள்கிறாய் நீ
புவி வெளியில்
கிரகங்களின் இடை கோடுகளைத் தழுவித் திரும்பி
வாசலில் காத்து நிற்கும் மத்திய கால வீரனைப் போன்ற
இசையை நீ கேட்கிறாய் வெறும் காற்றேசையாய்
அவை
எப்பொழுதாவது கோர்க்கப்படும் பிச்சைக்காரன்
கழுத்து மாலையென
மின்னல் வெட்டி மறைகையில்
புதுப்புதுப் பதுமைகள் தோன்றும் .
உனக்கோ உறக்கத்தின் வெறும் சாயைகள் மட்டும் பிடிபடும்.
ஓட்டை வலைகளுடன் மணற்கரையில்
திரியும் மனிதனே
எப்பொழுதும் முகடுகளின் விளிம்பில்
இலைகளுக்கு இடையில்
சப்தமற்று வீழ்ந்துகொண்டிருக்கிறது
அருவி.
அழுக்கின் ஆறும் அலுமினிய மனிதர்களும்
பனித்துளிகள் விளைந்த
புல்லின் வாசனையுடன்
வயலின் கம்பிகளில்
என் வாழ்வைப் பின்னல் ஓவியம் வரைந்து
கொண்டிருந்தது காலம்.
மூன்று ஸ்வரங்கள் மட்டுமே
பழகியிருந்தது புல்லாங்குழல்.
அருந்திய காபிகளின் எண்ணிக்கையை
செலவிடப்பட்ட சர்க்கரையின் அளவில் ஈடுதர
வேண்டியிருந்தது.
புறக்கணிக்கப்பட்ட வாடகைக்காரின்
பின்னிருக்கையில் உறங்கும் காசநோயாளியைப் போல்
கமறிய முதல் பகுதி இரவுக் காக்கைகளைப்
பற்றி இன்னும் சொல்லவில்லை.
இருப்பினும்
தெருக்கள் தீப்பற்றியது போல் சாலையில்
விளக்குகள் எரியும் இப்பெருநகர் விழுங்கியது என்னை
அழுக்கின் ஆறு எனக்குள் வழிகிறது
உணவைக் கனவில் கண்டு உறங்கும்
நடைபாதைக் குழந்தைகளின் அம்மணத்தில்,
பாலிதீன் போர்வைகளில்
முகம் ஒட்டிக் கிடக்கும்
பெண்களின் மீது
குதிரைச் சாணமும் தெருப்புழுதியும் சட்டையெனப் படிந்திருக்கும்
மனிதன் கை ரொட்டித் துண்டுகளுக்கு
விமான வரிசையென இறங்கும்
காகங்களின் நிறத்தில்.
மேஜை விளிம்புகளில் சிந்தும்
எச்சில் தேநீரில் கலக்கிறது
மொய்க்கும் ஈக்களை விரட்டி .
எனக்குள் அழுக்கின் ஆறு
ஒழுகுவதாகிறது.
நாற்றம் குடல் வரை சென்றதை அறியாமல்
அலுமினிய மனிதர்கள்
தம் நிற வர்ணம் பூசும்
ரயில் நிலையத்தில்
நின்று கொண்டிருக்கிறேன்
துண்டுகளாக்கப்பட்ட
நாளின்
நுனிகளைக்
கொறித்தபடி.
பயணம்-கீழ்நோக்கி
ஏன் நான் நீ எல்லோருமே ஒரு ஏணிப்படியில்தான்
ஏறிக்கொண்டிருக்கிறோம்.
இறங்கும்போது
ஒவ்வொருவரும்
லிஃப்டிலோ
மொசைக் படிகளில் செருப்புகள் அழுந்தும்படியோ
ஜில்லிப்பு பாதம் ஏற்க வெறுங்காலுடனோ
அனைத்துப் படிகளிலும்
அல்லது கைப்பிடியில் சிறுவர்கள் போல சறுக்கி
சீக்கிரமாய்
எப்படியோ
கீழே
உனக்குத் தெரியும் நீ அடைகாத்த மண் உன் பாதங்களைத்
தாங்காதென்று.
அவனுக்குத் தெரியும்
பரந்த ஹாலும்
தேக்குக் கதவுகளும்
உலோகக் கைப்பிடிகளும்
இவ்வாறான இடத்தில் தான் கிடத்தப்பட்டிருப்பதை
அறிவதற்கில்லாதவாறு.
யூதர்களுக்கு விஷவாயுக் கிடங்குகள் தந்தவன் கூடத்
தன் கீழ்நோக்கிய பயணம்
பற்றி க்ஷண நேரம் யோசித்திருப்பான்.
நான் நீ அவன் எவரும்
யோசித்திருப்போமோ
நுரையீரலில் நீர் புகுந்து
மூச்சற்று
முடிவற்று
உயிர்கள் இறக்கும் நாளை
தாவரங்கள் கருகும் நாளை
கண்கள் மணிகளை இழக்கும் கணகாலத்தை
உன் டெக்னலஜி உனை நோக்கித்
துப்பாக்கி எனத்
திரும்பும் நாளை.
வலி உணரும் மனிதர்கள்
இந்தக் கூரை எப்போது வேண்டுமானாலும்
பொத்துக் கொண்டு விடுகிறது.
குறிப்பாக இடது மூலை.
வலி.
சிவப்பின் துடிப்பென
நெருப்பின் நிறத்தில்
நிமிர்ந்த ஆணியாய்
முன்னறிவித்தலின்றி
உள் செருகி துருத்திக் கொள்கிறது சில நேரம்.
பிடுங்கப்பட்டுவிட்டாலும்
பின் வரும் தாக்குதல்களுக்காய்
கூரை செப்பம் செய்வதில்
மாத்திரைகள் தீர்ந்து போகின்றன.
கம்பிகளின் இனிமை
அதிர்வலைகள் அயர
விரல்களின் அழுத்தம் குறைய
கூரையின் துளை வளர்கிறது
பெரிதாய்.
நீலவானம்
கடும் இருள்
தெரிய ஆரம்பிக்கிறது அங்கிருந்து.
துடிக்கும் நட்சத்திரங்களின்
ஒளி வலிகள் காட்சிப்பாடுகள்
போர்க்கிரகமும்
சிவந்து விடுகிறது வலியின் வறண்ட காற்றுகளால்.
இனி முழு வானத்தையும்
பார்க்கவேண்டும்
கூரையின் மேல்தளத்தை முழுவதுமாய் அகற்றி.
அப்பொழுதும்
ஏதோ ஒரு நட்சத்திரக் கூட்டத்திற்கிடையிலிருந்து
தெரியும்
பழுக்கக் காய்ந்த கூர் ஆணி.
நிலையங்களும் நினைவுகளும்
ஊர்திகளாலும் ரயில்களாலும்
நிலையங்களில் வீசப்பட்டு
மிதந்தபடி சென்று கொண்டிருந்தேன்.
சுவாசம் மறந்த பழங்கள், பனியில் உறைந்த இலைகள்
திடீரென சகதியில் புதைந்து
இறங்கும் கண்ணடிக் கோலியின் ஈர்ப்பு.
வீசும் காற்றின்றி ஜன்னல்களற்ற சிறைக்குள்
அடைக்கப்பட்டு
எடை அளக்கும் யந்திரம்
அச்சடிக்காமல் துப்பும் அட்டைத் துண்டுகளென
வெளிப்பட்டன
என் சொற்கள்.
நோயில் படுத்திருந்தும் நடன அசைவுகளை
சிருஷ்டித்த ஒருவன் முகம் வியர்வையில் ஒளிர்ந்தது
பளீர் நினைவின் திரையில்.
என் படுக்கையில் அசைவற்று கிடந்தது உடல்.
தோண்டும் கருவியொன்று மண்டையில்
திருகித் துளையிட
சிந்தனைகள்
வடிவமிழந்த வார்த்தைகளாய்
வெளியேறிக் கரைந்தன.
விசாரம் வேண்டும் மனித இறப்புகள்
உன் காடுகளில் திரிந்த புலியை
பரவிக் கிடந்த முட்பரப்பை
அகற்றி
தசைகளில் உலவிய ஜ்வாலையைப் பிழிந்து
குடிசைக் கலயங்களின்
கூழ்நிலையுடன் மாறினாய்.
இருளின்
கவியும் ஆக்ரமிப்புகளைக் கிழித்துச் சென்ற
உன் பாதங்கள்
காலணிகள் காணாதவை.
காய்ந்த அருகம்புல்லில்,
படரும் நெருஞ்சிக் கொடியில்,
ஒற்றைத் தடங்கள்,
கிராமங்களை இணைத்த மனிதனே
நாளை பார்ப்போம் எனக் கூறிச் சென்றாய்.
உன் கடைசிச் சொற்களுக்கு
மொழியைக் கடந்து
அர்த்தம் தருவார்கள் சீருடையாளர்கள்
எனக் கற்பிதம் கொள்ளாத என் பார்வை
உன் கிழிந்த சட்டைக் காலரில்
நிலைத்துப் போனது.
காலங்களின் முதுமையைச் சுமந்தது
அவர்கள் பிரயோகித்த ஆயுதம்.
கற்கள் உன் மூட்டுக்களின்
பாஸ்பேட்டுக்களைத் தேடியிருக்கவேண்டும்.
திரவ ஒலியுடன்
உன் தொடைகளைக் கிழித்திருக்கும்.
ரணங்களை ஆற்றாமல்
ரத்தப்பொலிவுடன் வெளியேற்றியது
அரசு மருத்துவமனை.
இறுதிப் பார்வை கொள்ள வந்த என்னிடம்
கல்லறையிலும் முளைத்துவிடுவாய்
எனப் பயந்த மின்சார இயந்திரம்
உன்னுடலைச் சாம்பலாக்கி
பாலீதீன் பையில் அடைத்துக்
கையில் தந்தது.
ஓர் இந்தியக் கிராமத்தின் கோட்டுப் படம்
தூசிகள் மடிந்தும்
தோள்கள் வீழ்ந்த பின்னும்
புழுக்கள் திரியும்
இவ்வமைதியற்ற சமாதிகளில்
யாரைத் தேடுகிறீர்கள்?
முக்காலமும்
விஸ்தாரமும்.
பச்சைக் குழந்தையின் புதுமேனி வாசம்
கழுதைப்புலியிடம் அல்லது ஓநாயிடம் என்ன வேண்டும்?
வயிற்றில் மந்தமாய்
ஜீரணமாகாத தவளை
வண்டித் தடங்கள் அழிந்தாலும்
நரி சொல்லித் தரும் தந்திரம்.
வளைந்த பாதைகள் டைனமைட் கொண்டு செல்லும்.
யார் வேண்டும் உங்களுக்கு?
சதைகள் பிளந்து
ஆறுகள் பெருக்கெடுக்கும்
ஆர்ப்பரிக்கும் நிலம்
எனும் இயக்கச் சித்திரம் மாறும்.
கதிர் வயல்களில் உஷ்ண மூச்சு
அமில மழையில்
தேசத்தின் ஆறுகள் கரை உடைக்கும்
அச்சமயம்.
கிராமங்களின் மௌனங்களுடன்
அவன் விட்டுச் சென்ற ஓவியங்கள்
என் அறைச்சுவர் விரிசல்களுக்குத் திரையிட்டன.
அவற்றிலிருந்து எப்பொழுதும்
முரட்டு மனிதர்களின் இயக்க கோஷம்
தலைமேல் பிழம்புக் கோளத்தைச் சுமந்தபடி.
அடிக்குரலில் ஆலாபித்த இசை
மஞ்சள் நிற வயிற்றுப் பறவையாய்
திசைக் கொன்றய்
கருப்பந் தோகைகளைக் கிழித்துவந்து
கூடு பின்னுகிறது.
குஞ்சுகள் பொரிக்கும் நாளில்
இச்சுவர்கள்
எனக்குச் சொந்தமற்றதாகிவிடும்.
அறைமூலையில் நிற்கும் அவன் ஒரு ஜோடி காலணிகள்.
அவற்றில் சிலந்திகள் பின்னும் வலைகளை
பிள்ளையார் எலிகள் விளையாடிக் கலைக்கும்.
அவன் அமர்ந்துபோன
உடுக்கை வடிவ இருக்கை
தலைகீழாய்
அதன் உள்ளே அவன் உடைமைகள்
புத்தகங்கள்,
புறக்கணித்த கையெழுத்துப் பிரதிகள்,
கெட்டி மை தீர்ந்த பேன
இரும்புக் கிராதிகளை அரித்துத் தின்றபடி
கடல் உப்புக் காற்றாக
வீசும் மழையில்
பிடறி சிலிர்த்து
அடைத்த கதவை
பிய்த்துக்கொண்டு வெளியேறும்
குதிரையென
எங்கோ
கிராமங்களின் மௌனங்களுடன்
அவன்.
கற்பனை நிகழ்வின் யதார்த்தம்
கதவுகள் தகர்க்கப்படும்
கனிகள் கனவுகள் நீரில் மூழ்கும்
தெருக்களில் தற்காலிகச் சுவர்கள் முளைக்கும்
இரும்பு வாகனங்களைக் கிழிக்கும் நாள் நிலைக்கும்
முன்பு போல் இராது எதுவும்
இலைகள் உதிரும்
கிளைகள் ஒடியும்
சந்துகள் வெடிமருந்தின் நெடியில் கமரும்.
குழந்தைகள், குரல்கள் , அலரும்.
யாரும் யாரும் கலந்துவிட வேண்டும்
எதுவும் இராது முன்புபோல்
தீயில் வழலும் பறவை இறைச்சியென
மனிதர் தீய்ந்து தெருவோரம் கிடப்பர்
துண்டித்த கால்
சிதறிய விரல்கள் துடித்துக்கொண்டிருக்கும் சாக்கடைகளில்.
எதுவும் முன்புபோல் இருக்காது.
இன்று உறிஞ்சப்படுவது
அன்று சிந்துவது சில துளி குறையும்
நீரைவிட எளிதாய் மனிதர் குருதி
காய்ந்து மொய்க்கும் .
ஈக்களின் ரீங்காரம்
யாரும் பாட முடிவதாயிருக்காது.
பாடல்காரரும் குண்டுகளின் நீள் ஓசையாய்ப்
பாடலாய்க்கொள்வர்.
காகம் ஒன்று சிறகடித்துக் கண் குதறும்
கேட்பாரற்ற பிணத்தை.
கற்கள் செங்கள் சுவர்கள் குவியலாகும்.
இரண்டு இசைகளின் இடைவெளியாய்ப் பெருமௌனம்
கல்
உலோகச் செதில்
புண்ணாய்ப் பிளந்திருக்கும் சுவர்கள்
விரிசலில்
சிறுபுல் முளைக்கும் கிளி நிறத்தில்
களைத்திருக்கும் உடல்களில்
வியர்வை வைரப் பொடியாகும் .
கழற்றப்படும் சட்டையென
உன் தோல் சோதனைக்கு.
இசைக்கும் நரம்புகள்
இருப்பது அறியப்படும்.
பத்திரமாய் ஓர் இடமில்லை
வேற்று தேசத்திற்கொரு விமானச்சீட்டுமில்லை.
எண்ணி இரண்டோ மூன்றோ
தோட்டாக்கள் செலுத்தப்படும்
கழுத்தின் கீழ்
விலா எலும்புகளின் பிளவுகளில்.
கவிதையின் பொய்
போய்க் கொண்டிரு
நிச்சயமாய்.
திரும்புதல் தவறாதென்றால்
புழுதியில் உறங்கி
கன்னம் ஒடுங்கி
கண்களை நீரின்றித் துடைத்து
கால்களிடம் கேட்டு வா.
போய்க்கொண்டிரு.
கபாலம் சூரியனில் நனைந்து
உள்ளாடைகளற்று
மனநல விடுதிக்குச் செல்.
கோதுமை வயல்களை வரைந்து
மேலும் முதிர்ந்து
பழுத்து உன்னையே இழந்து கொள்.
செவிப்புலன் இழந்தும்
கூட்டுக் குரல்களைக் கலந்து
இறுதியாய் ஒரு கீர்த்தனையைச் செய்
சோற்றுக்குக் கால்வாய்கள் வெட்டி
சோர்ந்து போ
கவிதை எனச் சொல்லிப் பொய்யை
நிறுத்தாதே.
என்றும் இன்றும் எல்லோரும்
ஒரு இரவை நூலால் நான்காய்ப் பிரித்து
அவனிடம் தந்தேன்
மூன்றாம் பகுதியில் நுழைந்து
கடல் புறங்களில் கரைமறந்த சிரிப்புகளை
கிளிஞ்சல் சுண்ணாம்பின் நிறமென
அறைக்குள் எதிரொளித்தான்.
‘ஆனால் பைக்குள் பணம் வைத்திரு’
என்பவன் ரோடரிகோ இயாகோ எவனெனத்
தொடர்பு நாளங்கள்
கால் பிசகிக் கேட்க
என்றும் இன்றும் எல்லோரும் என்றேன்
சிரிப்புகளைப் பண்டமாற்றி
நான்காம் கட்டம் தாண்டினான்
கபாலம் துருத்திய என்னிரு கண்ணாடிக் கோலிகளில்
விழுந்தது
தீச்சுடரும் கண்மணிகளைக்
கொண்டதொரு முகம்.
போல்களின் குரல்கள்
இன்னும் கொஞ்சம் நிலா வேண்டும்போல்
சிறிது இனிப்பு காபியில் கூடியிருக்கக் கூடாதென
படிகளும் கைப்பிடிக் கிராதிகளும் பரிமாணமுற்றுத் தெரிய
இடைவெளியற்று
தவளைகள் எறியும் உலோகச் சில்லுகள்
இரவை முற்றிலும் உடைக்க வேண்டுமென
அணைக்கப்பட்ட மேஜைவிளக்கின் வெப்பம்
குறையக் கூடாதென
இன்னும் கொஞ்சம் நிலா வேண்டும் போல்
கிரகம் ஒன்றின் தெருக்கள் தெரிய வேண்டும்
தெளிவாய் என
இன்னும் ஒரு மிடறு நீர்
குளிர்ந்து தொண்டையில் இறங்கவேண்டும் போல்
கையசைப்பில் ஒரு பொம்மை நாடக நடிப்பு சிறைப்பட
உதடுகளின் குவிப்பில்
வெற்றொலிகள் சித்திரச் செதுக்கம் போல
இன்னும் கொஞ்சம் நிலா வேண்டும் போல
கேட்டு முடிந்து ஒலித்த குரல்
மன ஆகாசங்களில் எதிரொலித்தபடி
இருக்க
முடிவற்ற வெளியேற்றமாய் பிரக்ஞை தவித்துக் கிடக்க
அங்கிருந்தும் ஒரு தூரக்குரல் அழைக்க
திசையற்ற மூலையில் கொஞ்சம்
ஏதோ வேண்டும் போல்.
வலியின் முகம்
எல்லாம் மறந்து விடும்
சுத்தமாக,
துடைக்கப்பட்ட ஸ்லேட்டாக.
இப்பள்ளத்தாக்கின் முகட்டில்
என்னை நகர்த்திக் கொணர்ந்து நிறுத்தினேன்.
மூளை குப்பைகளைத் துறந்துவிடும்.
ஒரு குற்றுச்செடி அதன் இடது மூளையில்
வலியுடன்
காற்றின் வீச்சினைத் தாங்கும்.
என் முகம் ஒரு காமிராவென
‘பான்’ அசைவுகளில் இடது வலதாய் நகர்ந்தது.
பதிந்தது
நெகிழ்ந்த பாறையின் முகத்தில் நீர் வழிதல்
நீர் அருவியின் குறையும் அகலம்
‘நீர்தெளிப்பான்’களின் சுதந்திரச் சுழல் விளையாட்டு
வயலில் உருளைக் கிழங்கு விதைக்கும் மனிதர்கள் எதிர்த்த
முதுகு பிளக்கும் சூரியன்.
கூசும் ஒளி வலி நினைவை உலர்த்தியது.
என் படுக்கைக்கு அழைத்துச் சென்றேன் என்னை மீண்டும்.
முணுமுணுப்பு
எங்கென்று தெரியாதிருந்தது-
எலும்புகளின் வலியும்
இன்னும் இரு வாரங்களில் முளைக்கப்போகும்
கிழங்கின் குருத்துகளும் உரையாடுவது.
எல்லாம் மறந்து விடும்
என்னை அழைத்துச் சென்றதும்
என் தகுதியின்மையும்
பசும் குருத்துக்கள் மண்ணை உடைத்து
கண் திறக்கும்போது.
துருப்பிடிக்கும் குரல்
கடந்து காதல் தெளிந்து பின்
நடந்த ஒரு இருள் தெரு
30ஐத் தாண்டும் உன்னை
பால் வடியும் முகமெனச் சொல்லி அழைக்கும் அவன்.
பாடுமுன் மீட்டிய தம்பூராவின் அதிர்வலைகள்.
உனக்குள் இன்னும் துடிக்காத சிசுவின்
மூளை லயப்படும்.
நான் நீயென்று
தலையிட்டுக் கொத்தி
வேலிப் பூக்களைச் சிதறி
சொந்தச் சிறகுகளையும் உதிர்த்துச் செல்லும் குருவிகள்.
தலை நிமிர்த்திப் பாராமல் உணர்வாய்
தேநீர்க் கோப்பைகளில் எஞ்சியதில்
சாகத்துணியும் ஈ ஒன்றை அவன்
சுட்டுவிரல் விடுவிப்பதை
தவிர்க்க இயலாதவற்றின் தன்மைகள்
உன் முகத்தில் தெரியும்
தம்பூரா மீண்டும் அறையின் மூலையில்
சாய்ந்து நிற்கும்
காற்றில் சங்கீதம் கரைந்து கிடக்கும்.
உன் குரலோ
பழுக்கக் காத்திருந்து துருப்பிடிக்கும்.
(ரேவதிக்கு)
மூன்றாவது பாடல்
குலைந்து சிதைவுற்ற
கருவின் தினம் ஒன்றில்
குவிந்த கைகள் எனப் பாரத் திரள்கள் ஞாபகத்தில்
கவிந்த நிமிடங்களில்,
பள்ளத்தாக்குகள்
பெயர் தெரியாத மரங்களின் வாசனைகள்
புற்களைச் சுழன்றாடிய காற்றின் ஜியோமிதி வடிவங்கள்
மீண்டும் உன்னை அழைத்துக் கூவின
வடித்து இறைக்கப்பட்டு
மெலிந்து அதிர்ந்து பாடப்பட்ட பாடல் என
என்னுடன் என் மயிர்க்கால்களில்
சிலிர்த்து வெளிப்பட்டதை நீ அறியவில்லை.
நடுவானில் உறைந்த அருவியாய் நீ நின்றதை
உணர்ந்தேன் நீரின் பேரோசையால்.
நீளும் மெல்லிய உன் விரல்களில்
அடங்காதது என் கண்ணாடிகளும் விலா எலும்புகளும்
என்றாலும்
உன் கை நரம்புகளின் கொடிகளை அசலாய்ப்
பார்த்துச் சென்றது
யாரென்று கேட்டது என் அகம்.
ஆம் என்ற பதில் ஒன்று
உன்னிடமில்லை இப்போது
எப்போது
அப்போது
மீண்டும் உன் தலை கலைத்து விளையாடிச் செல்லும்
நீலக்காற்றாக
நான் அலைவேன்.
இசையெனும் பேராறு
நாம் கிளை பிரிகிறோம் என்றால்
அது கச்சிதமற்ற உருவகம் என்று சொல்வாய்.
நம் வார்த்தைகள் பிளவுபடுகின்றன எனின்
மரபின் சொல் வழி வந்தததாகுமது
சூடேறி, சொல் மீதேறி அழுத்தமானியின் குறியீடுகள்
அதிகம் காட்டுவது உன் குருதியின் கூர்மையை
என்பேன்.
உன் அறிவியல் சொற்கட்டுக்களை வீசாதே
என்மீதென்பாய்.
‘தூரமாய் விலகிப் போகிறோம்’–கடிதத்திற்கான வரி.
நிஜத்தை ஓர் ஒளிரும் ஆடையற்ற தூய்மையாய்
உரிக்கத் தெரியாத கையறு நிலை.
தொடுதலும் உணர்தலும் இடைவெளியற்று
நடக்குமாயினும்
மெய்யென்று அறியுமோ தனித்தனி மனதுகள்?
துவக்கத்தின் புல்லரிப்புகள்
சிலிர்த்த கற்பனைகள்
நமக்குப் பின் என்றென்றும் ஓடிக்கொள்ளும்
இசையெனும் பேராறு
யாவும் காவியேறிய புகைப்படங்கள்
கூடிப் பிரிந்து சமரசத்தில் கை குலுக்கினால் நட்பு.
இடைவெளியைத் தூர்த்து
கையை நீட்டினாலும்
இட்டு நிரப்பியதென்று அறிவோம்
நீயும் நானும்.
காத்திருக்க வேண்டும்
காத்திருக்க வேண்டும்
கடந்து செல்லும் மரங்கள்
கன்னத்தின் மீது காற்றைக் கோடிட்டுச் செல்ல
கால்களைத் தீட்டியபடி பெயர் தெரியாத வைரசை
உன் தோள் மீது தொற்ற நினைக்கும் ஈக்களுக்காக
உள் ஓடும் ஆற்றுடன் நாளும் வாழ்ந்து
கேட்டவுடன் அள்ளித்தரும் இசைக்காரருக்காக
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
கிறித்தவக் கோயிலின் நான்காவது முகம்
மழையில் நனைவதற்கு
உன் இதயத்தின் வால்வுகளில் ஒன்று
தாளம் தவறுவதைப் பதிவு செய்ய
வெட்டியும் துளிர்த்த
மரக்குருத்துக்களை குருட்டுக் கால்கள்
மிதிக்கும் ஒரு அஞ்சல் அலுவலக நுழைவாயிலுக்கு
நாளை உனக்குச் சுதந்திரம்
என்று கூறிச் செல்லும் அரைப் புரட்சிக்காரனின்
மூளை வெறுமையைச் சிந்திக்க
நிறங்களை மண்ணில் மூழ்கடித்து
பூக்களை விரல்களாய் நீட்டும் பெயர் தெரியாத
தாவரத் தண்டு நரம்புகளின்
வரி அமைப்புக்களைக் காண
இரண்டுகைகள் கட்டியணைத்தும்
இடைவெளி மிஞ்சும் அடிமரங்களின்
வெட்டுத் துண்டுகளை
ஆழ்ந்த கார்பன் மோனாக்சைட் மூச்சிழுத்து
வாரிச் செல்லும் லாரியின் சிவப்பு எச்சரிக்கை விளக்குக்காக
மழைக்குப் பயந்து
பழுதாகிக் கிடக்கும் கார்களின் அடியில்
நிற்கும் கோழிக்குஞ்சுகளின் இறகு சிலிர்க்க
ஒரு மாலைக்கால மழை நேரத்தை
மூன்றாவது பரிமாணமாகும் வயலின்
மீட்டல்களுக்காக
சேகரிக்கப்பட்ட மனித ஞாபகங்களுடன்
எதிர் கேள்ளிகளுக்கு விடை தர
உன் மூளையில் பதிக்கப்படவிருக்கும் 2010ன் மினி
கம்ப்யூட்டருக்காக
ஒரு அதிகாலையில் ஜன்னல் திறக்கப்பட்டவுடன்
முகத்தில் விழிப்பு கொள்ளும்
புலியை நினைவூட்டும் பூக்களுக்கென
உனக்கே உன் முகம்
கண்ணாடியில் அடையாளம் மறந்து போகும்
நியாயமற்ற நாளின் நிமிஷத்துக்காக
நடனத்தில் கலந்தும் விலகியும் நின்று
காட்சியாகும் பித்தனின்
பிறைசூடிய நெற்றி மின்னலுக்கு
எங்கிருந்தோ பச்சைப் பெரும் விரிப்பில்
வெற்று ஓடங்களாய் நீந்தும்
கொக்குக் கூட்டத்தின் சிறகடிப்புகளுக்காக
கடவுளரைத் தெரியாது
ஆயினும் ஆறு ஒரு பெரும் மண்ணிறக் கடவுள்
என்றவனின் அச்சு வரிகளில் உன் கவனம் மோத
காத்திருக்க வேண்டும்.
சிலை ஒன்றின் சமீப வெற்றிடம்
இமைகளின் பிளவில்
வினாடியின் வீச்சில்
எறியப்பட்ட பூமியும் உயிர்களும்
நம் உடன் வரவில்லை.
விரல் விட்டு நாட்களை எண்ணிய
குழந்தை
பசியின் கோஷங்களை வயிற்றில் வாங்கிய போது
உன் கோள்
இரு சந்திரன்களை ஒளியூட்டி
பிணிக்கு
மறதியைப் பதிலாய்ப் பூசியது.
நடை பாதையில் நாம் கைகளுடன் நீந்தினோம்
எனில்
அவ்வொளி
தேசப் படங்களை தொலை நோக்கிக்குக் கிட்டாமல்
செய்திருந்தது.
இலையுதிர்க்கும் மரங்களை
செம்மண் புழுதியை
புழுக்களை உண்ணும் பறவைகளை
சிநேகிதம் கொள்ளாமலிருந்தது.
வெள்ளைக் கணுக்கால்களும்
பச்சை மின்னல்களும்
பதித்து வைக்க செப்புப் பீடம் தேடும்
ஆஸ்திகம் இல்லாமல் போயிற்று.
காலம் கலந்த வெளியில்
விரல் சேர்க்க நீ வருமுன்
கர்ப்பக்கிருகத்தின் வாசனையை
உன்மீது போர்த்தியதோ
இந்நாள் வாழ்வின் நினைவுகள்
ஒரு சிலையின்
வெற்றிடத்தை மறைப்பதற்கு.
சமர்ப்பிக்கப்படாத கவிதை–மனதின் குழந்தைக்கு
நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் நின்று பார்க்கும்
மனிதர்களிடையில்
நான் ஒற்றை விலா எலும்புடன் அல்ல
மூடிய என் கண்களுக்குள்
சற்பி சைத்ரீகன் கடவுள்
உருவாக்கினேன்
உன்னை
தொடாமல் உணரும் சருமம்
அணிகள் அற்ற முகம்
கற்பனைக் கைகள்
ரோமானிய சிற்பத்தின் மூக்கு
பழகாத உள்மனம்.
இலைகள் சிந்திய பயணப்படாத என் சாலைகள்
ஒரு குழந்தைக்காகுமென
நான் அழைக்க
கானல் வீசும் கறுப்புத் தார்ச் சாலையில்
எங்கே தத்துகின்றன உன் பாதங்கள்?
( சியாமளிக்கு )

வேலியும் விருக்ஷமும்
க்ரானைட்டில் அரண் எடுத்து நிறுத்தியதாய்
மனப் பாதுகாப்பு
சரக்கென்று காகிதமெனக் கிழிந்து
அப்பால்
நீயும் உன் ரகஸ்யப் படைப்புகளும்
வியர்வையில் மின்னும் ரோதான் சிற்பம்,
ஆல மரம் பற்றிப் பின்னிய
தொடைகளின் இடையில்
பனை ஒன்றின் நிமிரல்.
எப்பொழுதும் தேடுவிளக்குகள்
ஊர்ந்து வரலாம்
இருள் முடுக்குகளின் ரகஸ்ய
அம்பலத்திற்கு.
ஒவ்வொரு இலையாய்
கணுவாய் வளர்த்த செடி
ஒரு க்ஷணத்தில் களை எனச் சொல்லிப் பிடுங்கப்படும்
வேருடன்.
சூர்ய ஈர்ப்பு
நீ உறங்கும்
மாடி ஜன்னல்களின் வழியாய் வரும் தேடி.
பிடுங்கப்பட்ட செடி
உறக்கத்தின் ஒளியில்
கனவுகளின் நிழலில்
நனைந்து
எண்ணெய் மினுமினுப்பில்
ராக்ஷச விருக்ஷமாகும்.
வேலியின் நினைவு வருமுன்
விழித்துக் கொள்வாய்.
வேலியின்றி விடுதலையெனவாகும்
தோட்டத்திற்கு
விடுபடுவாய்.
திரும்புதலின் பிரச்சனைகள்
தெருக்கள் சுருங்கிவிட்டன
மறதியின் நிழல் படர்ந்து
பறவையின் உயரப் பார்வையில் போல்
திட்டுத் திட்டாய்த் தெரிகிறது கிராமம்.
பெண் முகம் ஒன்று அம்மை வடுக்களுடன்
தன் மடியில் கிடத்தக் கேட்கிறது உன்னை
மீண்டும் ஒரு முறை.
கோயில் முற்றத்துப் பறை
நரம்புகளைச் சொடுக்கி இழுக்கிறது
கால்கள் பரபரக்க. . . . . .
காசுகள் இறைந்தது போல்
குடிசையின் ஓட்டைகளில்
தரை மீது
நிலா ஒளி
கந்தல் சாக்கு எப்படித்தஞ்சமாகும் உனக்கிது
என்கிறது தந்தைக்குரல்.
தட்டித் தட்டி
தடம் பிடித்துச் செல்கிறது கைத்தடி.
திரும்பக் கேள் ஞாபகமே
ஒற்றைத் தடத்தை.
மின்மினிப் பூச்சிகளையாவது கேட்டுப்பார்.
ஈரக்களிமண் சிறையில்
குருவிக் கூடுகளில் கிடக்கின்றன அவை.
தவறு நிகழ்ந்துவிட்டது
நாடாப் பதிவு அழிந்து விட்டது.
முதல் மற்றும் இறுதி வரிகள்
என் முதல் வரி கிடைத்து விட்டது
என் மீது பச்சைத் தேயிலை வாசனை வீசிக்கிடந்தது.
இரண்டாவது
நாணற் புற்களுக்கிடையில் மணற்கரையில்
நெளிந்து வெளியேறும் பாம்புக் குட்டிகளாயிற்று.
இதோ மூன்று
மகாமசானத்தில் என்னைத் தொலைத்த பின்
யாரோ ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின்
தகரக் குரல் பாடலில் கண்டெடுக்கிறேன்.
படிகளில் ஏறி இறங்கி
கண்ணாமூச்சி விளையாட்டாகிறது சுவாசம்.
தவறிக் கால் வைத்து
குழியில் திடுக்கிட்டு
விழிப்புற்று
கவிதை கனவன்று தூய
உறக்கமாகும்
முதல் அடுக்கில்.
<

