Brammarajan’s Polyphonic poems

A unique blog about Tamil poetry and Tamil culture, with translations in English

Posts Tagged ‘Marquez’s stories in Tamil translation’

செயற்கை ரோஜாக்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்/Artificial Roses-Gabriel Garcia Marquez

Posted by brammarajan on December 7, 2008


View blog authority

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

செயற்கை ரோஜாக்கள்

ஆங்கிலத்திலிருந்து தமிழில்- ரெங்கநாயகி


இருள் பிரியாத விடியற்காலைப் பொழுதில் தன் வழியை உணர்ந்தவாறு, முந்தைய இரவு படுக்கையருகே தொங்கவிட்டிருந்த கைப்பகுதியற்ற உடையை அணிந்து கொண்டு டிரங்குப் பெட்டியில் பிரித்து அணியக்கூடிய சட்டைக் கைகளைத் துருவித் தேடினாள். பிறகு அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவளது கண் தெரியாத பாட்டியை எழுப்பி விடாதிருக்கும் பொருட்டு சப்தம் செய்யாமலிருக்க முயன்றபடி கதவுகளுக்குப் பின்னாலும் சுவர் ஆணிகளிலும் தேடினாள். ஆனால் இருட்டுக்கு அவள் கண்கள் பழகிவிட்ட பின் அவள் பாட்டி ஏற்கனவே எழுந்து விட்டிருந்ததைக் கவனித்தாள். பிறகு அந்த சட்டைக் கைகள் எங்கே இருக்கின்றன என்று அவளிடம் கேட்பதற்காகச் சமயலறைக்குச் சென்றாள்.

‘‘அவை குளியலறையில் இருக்கின்றன”, அந்த பார்வையற்றவள் கூறினாள். ‘‘நான் நேற்று மதியம் அவற்றைத் துவைத்தேன்”. அவை அங்கேதானிருந்தன, ஒரு கொடிக்கம்பியில் இரண்டு மரக்கிளிப்புகளில் பொருத்தப்பட்டு, இன்னும் ஈரமாக இருந்தன. மினா சமயலறைக்குச் சென்று அந்த சட்டைக் கைகளை அங்கிருந்த கணப்புக்கல் மீது பரத்தினாள். அவளுக்கு நேரெதிராக, எந்த இடத்தில் மருந்து மூலிகைச் செடிகள் கொண்ட பூந்தொட்டிகளின் வரிசை இருந்ததோ அந்த வராந்தாவின் கல் விளிம்பின் மேல் நிலை குத்திப் போன கண் பாவைகளுடன் பார்வையற்ற முதியவள் காபி கலக்கிக் கொண்டிருந்தாள்.

‘‘மறுபடி ஒரு தடவை என் பொருட்களை எடுக்காதே”, என்றாள் மினா. ‘‘வெய்யிலை நம்ப முடியாத நாட்கள் இவை.”
பார்வையற்றவள் அந்தக் குரலை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினாள்.

‘‘இது முதல் வெள்ளிக் கிழமை என்பதை நான் மறந்து விட்டேன்” என்றாள் அவள்.
காபி தயாராகி விட்டதா என்பதை ஒரு ஆழமான மூச்சிழுப்பில் சோதித்த பின் அந்தப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கினாள்.

‘‘ஒரு காகிதத்தை அடியில் போட்டுக் கொள், ஏனெனில் இந்தக் கற்கள் அழுக்காக இருக்கின்றன.”

சுட்டு விரலால் அந்தக் கணப்புக் கற்களைத் தேய்த்துப் பார்த்தாள் மினா. அவை அசுத்தமாக இருந்தன. ஆனால் படிவமாய் கரிப்புகை படிந்த மேல்பாகத்தில் அழுந்த உரசாமல் போனால் அந்தச் சட்டைக் கைகள் அழுக்காகாது.

‘‘அவை அழுக்கானால் நீதான் பொறுப்பு”, என்றாள் மினா.

பார்வையற்ற முதியவள் தனக்கு ஒரு கோப்பை காபியை ஊற்றிக் கொண்டாள். ‘‘நீ கோபமாக இருக்கிறாய்” வராந்தாவை நோக்கி நாற்காலியை இழுத்துப் போட்டவாறு கூறினாள் அவள். ‘‘கோபமாக இருக்கும் போது ஒருவர் புதிய நன்மை பெறுவது தெய்வ நிந்தனை.”

உள் முற்றத்திலிருந்த ரோஜாச் செடிகளுக்கு எதிராக காபி அருந்துவதற்கு அமர்ந்து கொண்டாள். கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்புக்கான மூன்றாவது மணி அடித்த போது கணப்புக் கல்லிலிருந்து இன்னும் ஈரமாக இருந்த அந்த சட்டைக் கைகளை எடுத்தாள் மினா. ஆனாலும் அவற்றை அணிந்து கொண்டாள். மறைக்கப்படாத வெற்றுத் தோள்கள் தெரியும் உடையில் இருந்தால் பாதிரியார் ஏஞ்சல் அவளுக்குப் புதிய நன்மை தர மாட்டார். அவள் முகம் கழுவிக் கொள்ளவில்லை. முகத்தின் ரூஜ் தீற்றல்களை துண்டால் துடைத்துக் கொண்டு, அவள் அறையிலிருந்த சால்வை மற்றும் பைபிளை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள். கால் மணி நேரத்தில் திரும்பி வந்து விட்டாள்.

செடிகளுக்கு எதிரே அமர்ந்திருந்த அந்த பார்வையற்ற முதியவள் கூறினாள்.

மினா நேராகக் கழிவறைக்குச் சென்றாள். ‘‘நான் கூட்டுப் பிரார்த்தனைக்குச் செல்ல முடியாது,’‘ என்றாள். ‘‘என் சட்டைக் கைகள் ஈரமாகவும், உடை எல்லாம் சுருக்கமாகவும் இருக்கிறது. ஒரு அர்த்தமுள்ள பார்வை தன்னைத் தொடர்வதை அவள் உணர்ந்தாள்.

‘‘முதல் வெள்ளி நீ கூட்டுப் பிரார்த்தனைக்குப் போக மாட்டாயா?” ஆச்சரியப்பட்டாள் பார்வையற்றவள்.
கழிவறையிலிருந்து திரும்பிய மினா அவளுக்காக ஒரு கோப்பை காபி ஊற்றிக் கொண்டு பார்வையற்றவளின் அருகில் வெள்ளையடிக்கப்பட்டிருந்த அந்தக் கதவு வழியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். ஆனால் அவளால் காபியை குடிக்க முடியவில்லை.

‘‘நீ தான் காரணம்”, மந்தமான ஒரு வன்மத்துடன் தான் கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் உணர்வுடன் முணுமுணுத்தாள் அவள்.

‘‘அழுதுகொண்டிருக்கிறாய் நீ!” பார்வையற்றவள் வியந்தாள். ஒரிகேனோ (சமையலுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைக் கீரை) இருந்த பூந்தொட்டிக்கு அருகில் பூவாளியை வைத்து விட்டு உள் முற்றத்திற்குச் சென்றவள், மறுபடியும் கூறினாள், ‘‘நீ அழுது கொண்டிருக்கிறாய்!” நிமிர்ந்து உட்காரும் முன்னர் கோப்பையை தரையில் வைத்தாள் மினா.

‘‘நான் கோபத்தால் அழுது கொண்டிருக்கிறேன்” அவள் கூறினாள், பாட்டியின் அருகில் நகர்ந்தவாறே, மேலும் கூறினாள், ‘‘நீ பாவமன்னிப்பு கேட்கச் செல்ல வேண்டும், ஏனெனில் நீதான் நான் முதல் வெள்ளியின் புதிய நன்மை இழந்து விடக் காரணம்.”

மினா அந்த படுக்கையறைக் கதவை மூடுவதற்காக அசைவின்றிக் காத்திருந்த பின், பார்வையற்ற முதியவள், தொடப்பட்டிராத அந்தக் கோப்பையின் துண்டுப்பகுதி தரையில் தட்டுப்படும் வரை வராந்தாவின் ஒரு கோடிக்கு நடந்தவள் சற்று நிறுத்தி குனிந்தாள். மண் தொட்டியில் காபியை கொட்டிவிட்டு தொடர்ந்தாள்-
‘‘ஆண்டவருக்குத் தெரியும் நான் தெளிந்த மனசாட்சி உடையவள் என”

படுக்கையறையிலிருந்து மினாவின் தாயார் வெளியே வந்தாள்.

‘‘யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் நீ?” என்று கேட்டாள்.

‘‘யாரிடமும் இல்லை”, பார்வையற்றவள் சொன்னாள். ‘‘நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கிறேனே என் புத்தி தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று”

தன் அறையின் பாதுகாப்பில் இருந்தவாறு, மினா உள்பாடி பட்டன்களை கழற்றி சேஃப்டி பின்னில் கோர்த்திருந்த மூன்று சிறிய சாவிகளை எடுத்தாள். அவற்றில் ஒன்றைக் கொண்டு துணி அலமாரியின் கீழ் இழுப்பறையைத் திறந்து ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்தாள். அதை வேறு ஒரு சாவியால் திறந்தாள். உள்ளே ஒரு ரப்பர் பேண்டினால் சுற்றப்பட்ட, வண்ணத்தாள்களில் எழுதப்பட்ட ஒரு கற்றை கடிதங்கள் இருந்தன. அவற்றைத் தனது உள்பாடிக்குள் மறைத்து கொண்டு, அந்தச் சின்னப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு, இழுப்பறையைப் பூட்டினாள். பிறகு கழிவறைக்குச் சென்று அந்தக் கடிதங்களை வீசியடித்தாள்.

மினா சமையலறைக்குள் வந்தபோது, ‘‘நீ தேவாலயத்தில் இருப்பாய் என்றல்லவா நான் நினைத்தேன்,” அவள் தாயார் கூறினாள்

‘‘அவளால் போக முடியவில்லை”, பார்வையற்றவள் இடைமறித்துக் கூறினாள். ‘‘நான் முதல் வெள்ளி என்பதை மறந்து போய் நேற்று மதியம் அந்தச் சட்டைக் கைகளைத் துவைத்து விட்டேன்”

‘‘அவை இன்னும் ஈரமாக இருக்கின்றன”, மினா முணுமுணுத்தாள்.

‘‘நான் இப்போதெல்லாம் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது” என்றாள் பார்வையற்ற முதியவள்.

‘‘ஈஸ்டருக்கு ஒரு நூற்று ஐம்பது டஜன் ரோஜாக்களை நான் முடித்துக் கொடுக்க வேண்டியுள்ளது”, மினா கூறினாள்.
சீக்கிரமாகவே சூரியன் வெதுவெதுக்கத் தொடங்கியது. ஏழு மணிக்கு முன்னரே மினா காகித ரோஜாக்கடையை வரவேற்பறையில் அமைத்தாள்ஙி ஒரு கூடை நிறைய கிரேப் பேப்பர், இரண்டு கத்திரிக் கோல்கள், ஒரு நூல் கண்டு, ஒரு மண் சட்டியில் பசை. ஒரு நொடி கழித்து தன் கையில் ஒரு அட்டைப் பெட்டியுடன் வந்து சேர்ந்த ட்ரினிடாட் ஏன் அவள் (மினா) கூட்டுப் பிரார்த்தனைக்குச் செல்லவில்லை என்று கேட்டாள்.

‘‘என்னிடம் சட்டைக்கைகள் இல்லை” என்றாள் மினா.

‘‘எவர் வேண்டுமானாலும் உனக்குக் கடனாகக் கொடுத்திருக்க முடியும்” ட்ரினிடாட் கூறினாள். பூ இதழ்கள் வைத்திருந்த கூடைக்கு அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள் அவள்.

‘‘நான் மிகவும் தாமதமாகியிருந்தேன்” மினா கூறினாள். ஒரு ரோஜா செய்து முடித்தாள். பிறகு கத்திரிக் கோலின் உதவியுடன் பூ இதழ்களில் சுருக்கம் வைக்க அந்தக் கூடையை தன்னருகே இழுத்துக் கொண்டாள். ட்ரினிடாட் அந்த அட்டைப் பெட்டியை தரையில் வைத்து விட்டுத் தானும் அந்த வேலையில் இணைந்து கொண்டாள்.
மினா அந்தப் பெட்டியைப் பார்த்தாள்.

‘‘ஷுக்கள் வாங்கினாயா நீ?” என்று கேட்டாள்.

‘‘செத்த எலிகள் அவை”, ட்ரினிடாட் கூறினாள்.

சுருக்கம் வைத்து காகிதப்பூ இதழ்கள் செய்வதில் ட்ரினிடாட் தேர்ந்தவள் என்பதால் மினா, பச்சை நிறத்தாள்கள் சுற்றிய கம்பிக் காம்புகள் செய்வதில் நேரம் செலவழித்தாள். எளிய கிராமாந்திர வாழ்க்கையைச் சித்தரிக்கும் படங்களாலும், குடும்பப் புகைப்படங்களாலும் அழகு படுத்தப்பட்டிருந்த அந்த வரவேற்பறையில் சூரியன் முன்னேறிக் கொண்டிருந்ததை கவனியாது, அமைதியாக அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். காம்புகள் செய்து முடித்தவுடன் மினா ட்ரினிடாடை நோக்கித் திரும்பினாள்þவெறுமையில் முடிவது போன்ற ஒரு முகத்துடன். மெச்சத் தகுந்த வகையில் சுத்தமாக, அவளது விரலிடுக்கில் இருந்த காகித இதழ் நுனியை நகர்த்தி விடாமல் சுருக்கம் வைத்துக் கொண்டிருந்தாள் ட்ரினிடாட், கால்களை நெருக்கிக் கொண்டு. ஆண்களுக்கானது போன்ற அவளுடைய ஷுக்களை மினா நோட்டம் விட்டாள். தன் தலையை உயர்த்தாது ட்ரினிடாட் அந்தப் பார்வையைத் தவிர்த்தாள். கால்களைப் பின்னுக்கு இழுக்காமல் வேலை செய்வதை நிறுத்தினாள்.

‘‘என்ன விஷயம்?” அவள் கேட்டாள்

மினா அவளை நோக்கி சாய்ந்தாள்.

‘அவன் போய் விட்டான்,” அவள் சொன்னாள். ட்ரினிடாட் கத்திரிக்கோல்களை மடியில் நழுவவிட்டாள்.

‘‘இருக்காது”

‘‘அவன் போய் விட்டான்,” திரும்பச் சொன்னாள் மினா. இமைக்காது அவளைப் பார்த்தாள் ட்ரினிடாட். செங்குத்தாய் ஒரு நெற்றிச்சுருக்கம் அவள் புருவ முடிச்சைப் பிரித்தது.

‘சரி, இப்போது?,” அவள் கேட்டாள்.

மினா நிதானமான குரலில் பதில் சொன்னாள் ‘‘இப்போது ஏதுமில்லை”. ட்ரினிடாட் பத்து மணிக்கு முன்னதாகவே விடை பெற்றுக் கொண்டாள். அவள் அருகாமை தந்த பாரத்தினின்று விடுபட்டவளாய் ஒரு நிமிடம் அவளை நிறுத்தினாள் அந்த செத்த எலிகளை கழிவறைக்குள் எறிந்துவிட. அந்தப் பார்வையற்ற பெண்மணி ரோஜாப் புதரை நறுக்கி விட்டுக் கொண்டிருந்தாள் .

அவளைக் கடந்து செல்கையில், ‘‘பந்தயம், இந்தப் பெட்டியில் நான் வைத்திருப்பது என்னவென்று உனக்குத் தெரியாது”, என்றாள் மினா.
அந்த எலிகளை குலுக்கினாள் அவள்.

பார்வையற்ற முதியவள் கவனம் செலுத்தி, ‘‘மறுபடியும் அதைக் குலுக்கு” என்றாள். மீண்டும் அசைத்தாள் மினா. ஆனால், தன் காது மடல் மீது சுட்டுவிரலை அழுத்திக் கொண்டு மூன்றாம் முறையாகக் கேட்ட பிறகும் கூட அவை என்ன என்பதை பார்வையற்றவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.
‘‘தேவாலயத்தின் எலிப்பொறிகளில் நேற்றிரவு பிடிக்கப்பட்ட எலிகள்தான் அவை” மினா சொன்னாள்.

அவள் திரும்ப வந்ததும் ஏதும் பேசாது அந்தப் பார்வையற்ற முதியவளைக் கடந்து சென்றாள். ஆனால் பார்வையற்றவள் அவளைப் பின் தொடர்ந்தாள். வரவேற்பறையை அடைந்ததும், மூடியிருந்த ஜன்னலுக்கு அடுத்து, அந்த காகித ரோஜாக்களை செய்து முடித்தபடி இருந்தாள், தனிமையில்.

‘‘மினா” என்றாள் பார்வையற்றவள். ‘‘நீ மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் முன்பின் தெரியாதவர்களிடம் மனந்திறந்து எதையும் சொல்லாதே.”

எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தாள் மினா. அவளுக்கு நேரெதிராக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள், வேலையில் அவளுக்கு உதவ முற்பட்டபோது மினா அவளைத் தடுத்தாள்.

‘‘நீ பதற்றத்திலிருக்கிறாய்,” பார்வையற்றவள் கூறினாள்.

‘‘நீ ஏன் கூட்டுப் பிரார்த்தனைக்குச் செல்லவில்லை?” அவள் கேட்டாள்.

‘‘உனக்கு நன்றாகத் தெரியும் வேறு எவரையும் விட”.

‘‘அந்த சட்டைக் கைகள் காரணமாக இருந்தால் வீட்டை விட்டு கிளம்ப யத்தனித்திருக்க மாட்டாய்” என்றாள் பார்வையற்றவள்.

‘‘உனக்கு ஏதோ ஏமாற்றத்தைத் தந்த யாரோ ஒருவர் வழியில் உனக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கலாம்.”

கண்ணுக்குப் புலப்படாத கண்ணாடிப் பலகையைத் துடைத்து விடும் பாவனையில் அவள் பாட்டியின் கண்கள் முன்னால் கைகளைக் கொண்டு சென்றாள் மினா.
‘‘நீ ஒரு சூனியக்காரி,” அவள் கூறினாள். பார்வையற்றவள் கூறினாள்.

‘‘இன்று காலை நீ இரண்டு தடவை கழிவறைக்குச் சென்றாய். ஒரு தடவைக்கு மேல் எப்போதும் நீ சென்றதில்லை.”

மினா தொடர்ந்து ரோஜாக்கள் செய்தபடி இருந்தாள்.

‘‘அந்தத் துணி அலமாரியின் இழுப்பறையில் நீ எதை ஒளித்து வைத்திருக்கிறாயோ அதை என்னிடம் காட்டத் துணிவிருக்கிறதா உனக்கு?” என்று கேட்டாள் பார்வையற்றவள்.

அவசரப்படாமல் அந்த ரோஜாவை ஜன்னல் சட்டத்தில் செருகி விட்டு, மூன்று சிறிய சாவிகளை அவளது உள்பாடிக்குள்ளிருந்து வெளியே எடுத்தாள் மினா. பிறகு அவற்றை பார்வையற்ற முதியவள் கைகளில் வைத்தாள். அந்தக் கைகளை அவளே மூடினாள்.

‘‘போ, உன் கண்களால் நீயே பார்த்துக் கொள்”, அவள் கூறினாள்.
அந்தச் சிறிய சாவிகளை விரல் நுனி கொண்டு சோதித்துப் பார்த்தாள் பார்வையற்றவள்.

‘‘என் கண்களால் கழிவறையின் கீழே பார்க்க முடியாது”.
வித்தியாசமான ஒரு உணர்வினை அடைந்த மினா தன் தலையை உயர்த்தினாள். அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள் என்பது கூட தெரிந்திருக்கிறது அந்தப் பார்வையற்றவளுக்கு என்பதை உணர்ந்தாள் மினா.

‘‘நான் என்ன செய்கிறேன் என்பதில் நீ மிகவும் விருப்பம் காட்டினால் உன்னை அந்தக் கழிவறையின் கீழே தள்ளி விட்டுக் கொள்.” அவள் சொன்னாள்.

இந்த இடைமறித்தலை பார்வையற்றவள் லட்சியம் செய்யவில்லை.

‘‘எப்போதும் விடியற்காலை வரை நீ படுக்கையில் எழுதிக் கொண்டிருக்கிறாய்”, அவள் சொன்னாள்.

‘‘நீதான் விளக்கை அணைப்பாய்”, மினா சொன்னாள்.

‘‘உடனே அந்த டார்ச் விளக்கை நீ ஏற்றுவாய்.”

‘‘நீ எழுதிக் கொண்டிருக்கிறாய் என்பதை உன் சுவாசத்தை வைத்தே என்னால் கூற முடியும்”, என்றாள் பார்வையற்றவள்.
அமைதியாக இருக்க முயற்சி செய்தாள் மினா.

‘‘நல்லது” தலையை உயர்த்தாமல் சொன்னாள் அவள்.

‘‘அது அப்படித்தான் என்று வைத்துக் கொண்டாலும் அதில் என்ன விசேஷம் இருக்கிறது?”

‘‘ஒன்றுமில்லை”, பார்வைற்றவள் பதில் சொன்னாள். ‘‘அது உன்னை ஒரு முதல் வெள்ளி புதிய நன்மை இழந்து விட செய்திருக்கிறது என்பது மட்டுமே.”

இரண்டு கைகளிலும் அந்த நூல் கண்டு, கத்திரிக்கோல்கள், முடிக்கப்பட்டிராத காம்புகள் மற்றும் ரோஜாக்களை எடுத்துக் கொண்டாள். அந்தக் கூடையில் எல்லாவற்றையும் வைத்து விட்டு பார்வையற்றவளை நோக்கித் முகம் திருப்பினாள். ‘‘எதற்காக நான் கழிவறைக்குச் சென்றேன் என்பதை உன்னிடம் கூற வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?” என்றாள் மினா. ஒரு சஸ்பென்சில் இருவரும் இருந்தனர், தனது கேள்விக்கு மினாவே பதிலளிக்கும் வரையில்.

‘‘நான் மலங்கழிக்கச் சென்றேன்”
பார்வையற்ற முதியவள் மூன்று சிறிய சாவிகளையும் கூடைக்குள் எறிந்தாள். ‘‘இது ஒரு நல்ல சாக்காக அமையலாம்”, அவள் சயமலறைக்குச் சென்றவாறே முணுமுணுத்தாள். ‘‘நீ என்னை நம்ப வைத்திருக்க முடியும் ஒரு வேளை இதுதான் உன் வாழ்நாளில் முதல் முறையாக நான் கேட்க நீ செய்யும் சத்தியம் என்ற பட்சத்தில்.”

மினாவின் தாயார் எதிர்ப்புறமிருந்த நடைபாதையிலிருந்து வந்து கொண்டிருந்தாள், கை நிறைய முட்கள் நிறைந்த மலர்க் கொத்துக்களுடன்
‘‘என்ன நடந்து கொண்டிருக்கிறது?” அவள் கேட்டாள்.
‘‘புத்தி பேதலித்திருக்கிறது எனக்கு”, பார்வையற்ற முதியவள் கூறினாள். ‘‘ஆனால் கற்களை எடுத்து நான் வீசாதிருக்கும் வரை என்னைப் பைத்தியக்கார விடுதிக்கு அனுப்புவதைப் பற்றி மேலோட்டமாக யோசித்துப் பார்த்ததில்லை நீ.”

005

Artificial Roses, from Gabriel Garcia Marquez’s Collected Stories, Translated from the Spanish by Gregory Rabassa and J.S.Bernstein.

Posted in translated short story | Tagged: , , , , , | Comments Off

மூன்று உறக்க நடையாளர்களின் துக்கம்-Bitterness for Three Sleepwalkers-Translation by Brammarajan

Posted by brammarajan on December 7, 2008


கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்


மூன்று உறக்க நடையாளர்களின் துக்கம்



தமிழில் பிரம்மராஜன்.

இப்பொழுது வீட்டின் ஒரு மூலையில் அவளை விட்டிருந்தோம். அவளுடைய உடைமைகளான, சேற்றில் நடப்பதற்கான லேசான காலணிகள், புதியதாய் வெட்டப்பட்ட மரத்தின் வாசனை வீசும் உடைகள் ஆகியவற்றை நாங்கள் இங்கு கொண்டு வருவதற்கு முன்பே யாரோ கூறினார்கள் இங்கு அவளின் முதுகை அழுத்தும், வேட்டில் மரத்தால் ஆன தனிமை தவிர எவ்வித ஈர்ப்பும், இனிமையான சுவைகளும் இல்லாத ஊர்ந்து நகரும் வாழ்க்கைக்கு அவளால் பழகிக்கொள்ள முடியாதென்று. யாரோ சொன்னார்கள் எங்களிடம்–அதை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு முன் ஏராளமாய் காலம் கழிந்துவிட்டிருந்தது–அவளுக்கும் ஒரு குழந்தைப் பிராயம் இருந்ததென்று. அப்பொழுது ஒரு வேளை அதை நாங்கள் நம்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது, வீட்டின் ஒரு மூலையில் பீதியடைந்த கண்களுடன் ஒரு விரலைத் தன் உதடுகளின் மீது வைத்திருக்கும் அவளைப் பார்க்கும் போது, ஒரு காலத்தில் அவளுக்கும் குழந்தைப் பிராயம் இருந்திருக்கும் என்ற உண்மையை ஒப்புக் கொண்டோம். எதிர்பார்ப்பதற்கு முன்னரே குளிர்வித்துவிடும் மழையின் சீதளத்தின் உணர்தல் மிக்க தொடுதல் ஒருகாலத்தில் அவளுக்கும் இருந்திருக்கக் கூடும் என்பதையும், மேலும் அவள் உடலின் ஒருபக்கத் தோற்றத்தில் எதிர்பார்த்திராத ஒரு நிழலை அவள் எப்போதும் கொண்டிருந்தாள் என்பதையும் உணர்ந்தோம்.

இவை எல்லாவற்றையும்–மேலும் இன்னும் கூடுதலாய்–அந்த மதியப்பொழுதில் நாங்கள் உணர்ந்தோம். அவளின் பயங்கரம் மிகுந்த அடிமன உலகிற்கு மேல் அவள் முற்றிலும் மனிதத்துவத்துடன் இருந்தாள் என்பதையும் நம்பினோம். உள்ளுக்குள் ஒரு கண்ணாடி உடைந்தது போல் துன்புறும் கத்தல்களை அவள் உண்டாக்கியபோது நாங்கள் திடீரெனக் கண்டு கொண்டோம்; அவள் எங்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தாள். கண்ணீருக்கிடையே பேசிக்கொண்டிருந்தாள் நாங்கள் அவளருகில் அமரும் வரை; நாங்கள் கைகளைத் தட்டியபடி பாடத் தொடங்கினோம்–எங்களின் உரத்த குரல்கள், உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளை ஒன்று சேர்த்துவிடும் என்பதுபோல. அந்த சமயத்தில்தான் அவளும் குழந்தைப் பிராயத்தை உணர்ந்திருக்கிறாள் என்பதை நம்புவதற்கு முடிந்தது. அது எப்படியோ ஒருவகையில், அவளின் கத்தல்கள் ஒரு புதிரின் விடுவிப்பெனத் தோன்றியது. அந்தக் கத்தல்களில் ஞாபகப்படுத்தபட்ட எராளமான மரங்களும், ஆழ்ந்த நதியும் உள்ளடங்கியிருந்தன என்பது போலிருந்தது. அவள் எழுந்த போது, சற்றே சாய்ந்தவாறு இன்னும் தன் முகத்தைத் அங்கியால் மூடிக்கொள்ளாமலும், இன்னும் மூக்கைச் சிந்தாமலும், இன்னும் கண்ணீருடனும் அவள் எங்களிடம் சொன்னாள்:
“நான் இனி என்றுமே சிரிக்கப் போவதில்லை.”

நாங்கள் மூவரும், பேச்சின்றி, வெளியில் முற்றத்துக்கு வந்தோம்; நாங்கள் ஒரு பொதுவான சிந்தனையை சுமந்து கொண்டிருந்திருக்கக்கூடும். வீட்டுக்குள் விளக்குகள் எதையும் போடாமல் இருப்பது சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைத்திருக்கலாம். இருண்ட மூலையில் உட்கார்ந்தபடி, விலங்கின் நிலைக்கான யாத்திரையில் நிலைத்திருக்கக்கூடிய ஒரே பொருளாகத் தோன்றிய மிக இறுதியான பின்னலைப் பின்னியபடி–அவள் தனிமையில் இருக்க விரும்பினாள்–இருந்திருக்கலாம்.
வெளியில், முற்றத்தில், பூச்சிகளின் நிறைந்த ஆவிக்குள் மூழ்கிப்போய் நாங்கள் அவளைப் பற்றிச் சிந்திக்க, தரையில் அமர்ந்தோம். இதைப் பல முறை நங்கள் இதற்கு முன்பு செய்திருக்கிறோம். எங்களின் ஒவ்வொரு நாள் வாழ்விலும் என்ன காரியத்தைச் செய்து கொண்டிருந்தோமோ அதையே செய்து கொண்டிருந்ததாக நாங்கள் சொல்லி யிருக்கக்கூடும்.

எனினும் அந்த இரவு வேறு மாதிரியாக இருந்தது. அவள் இனி என்றுமே சிரிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறாள். அவளைஅவ்வளவு நன்றாக அறிந்திருந்த நாங்கள் அந்த பயங்கரம் நிஜமாகப்போகிறது என்பதில் உறுதியானோம். நாங்கள் முக்கோண வடிவில் அமர்ந்தபடி, அரூபமென, செயல் இழந்து போய், அவள் தூசியாய் மாறிக் கொண்டிருப்பதை அளவிட்டு அறிவித்தபடி இருந்த எண்ணற்ற கடிகாரங்களின் நுண்ணிய துடிப்புகளைக் கூடக் கேட்பதற்கு சக்தியற்று போயிருந்த அவள் வீட்டினுள்ளே இருப்பதைக் கற்பனை செய்தோம். நாங்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் நினைத்தோம், நமக்கு மட்டும் அவளின் மரணத்தை விழையும் துணிவாவது இருந்தால்? ஆனால் நாங்கள் அவள் அப்படியே இருப்பதை விரும்பினோம்–அசிங்கமாக, சலனங்கள் உறைந்து போய், எங்களின் மறைக்கப்பட்ட குறைபாடுகளில் ஒரு கீழ்மையான பங்களிப்பாக.

நாங்கள் வாலிபப் பருவத்தினராய் இருந்திருக்கிறோம்–நிறைய காலத்திற்கு முன்பு–எனினும் அவள் எல்லா வகையிலும், வீட்டிலேயே முதிய நபராக இருந்தாள். அங்கே, எங்களுடன் அமர்ந்தபடி, நட்சத்திரங்களின் அளவிடப்பட்ட துடிப்புகளை உணர்ந்த வண்ணம், அதே இரவு ஆரோக்கியமான மகன்களால் சூழப்பட்டு அவளால் இருக்க முடிந்தது. நகரின் முக்கிய நபரின் மனைவியாகவோ, அல்லது தவறாமல் வருகை புரியும் ஒரு மனிதனின் வைப்பாட்டியாகவோ இருந்திருப்பாளானால் வீட்டின் மரியாதைக்குரிய பெண்மணியாக அவள் இருந்திருக்க முடியும். ஆனால் அவள் ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே வாழ்வதற்குப் பழகி விட்டிருந்தாள்–ஒரு நேர் கோட்டினைப்போல. ஒருவேளை அவளின் நற்குணங்களும் அல்லது துர்குணங்களும் ஒரு பக்கத் தோற்றத்தில் பார்ப்பதற்கு முடியாதபடி இருந்திருக்கலாம். அதை நாங்கள் நிறைய வருடங்களாகவே அறிந்திருந்தோம். காலையில் எழுந்த பிறகு ஒரு நாள் நாங்கள் ஆச்சரியப்படக் கூட இல்லை–முற்றத்தில் முகம் கவிழ்ந்து, ஒரு கடினமான, அதீத சந்தோஷமான முறையில் வாயில் மண்ணை கவ்வியபடி அவள் கிடந்தாள். அப்பொழுது அவள் புன்முறுவல் செய்து மீண்டும் எங்களைப் பார்த்தாள்; இரண்டாவது மாடியின் ஜன்னலின் இருந்து முற்றத்தின் கடினமான களிமண் மீது வீழ்ந்து விட்டிருக்கிறாள்; ஈரக் களிமண் மீது இருகலாய், கான்க்ரீட்டைப் போல, வீழ்ந்த நிலையிலேயே முகம் கவிழ்ந்து கிடந்திருக்கிறாள். தூரங்களைப் பற்றிய பயம் ஒன்றினை மாத்திரமே, வெளிகளைப் பார்த்தவுடன் உண்டாகும் இயற்கையான பீதி–இதை மாத்திரமே அவள் சிதையாமல் வைத்துக்கொண்டிருந்தாள் என்பதைப் பிறகு நாங்கள் தெரிந்து கொண்டோம். அவளுடைய தோள்களைப் பற்றித் தூக்கினோம்; எங்களுக்கு முதலில் தோன்றிய அளவுக்கு அவள் இறுகலாக இருக்கவில்லை. மாறாக, அவளின் அங்கங்கள் தொளதொளவென்றும் அவளின் மனத்தீர்மானத்திலிருந்து விடுபட்டும், இன்னும் விரைக்கத் தொடங்கியிராத ஒரு அறைகுறை வெதுவெதுப்பு கொண்ட பிணத்தைப் போலவும் இருந்தன.

அவள் கண்கள் திறந்திருந்தன. அவளுக்கு அதற்குள்ளாக ஒரு சுடுகாட்டுப் படிவின் சுவையைத் தந்திருக்க வேண்டும் என்கிற மண்ணினால் அவளின் வாய் அசுத்தமாகி விட்டிருந்தது–நாங்கள் அவளைப்புரட்டி சூரியனைப்பார்த்து கிடத்தியவுடன் அது ஏதோ அவளை ஒரு நிலைக்கண்ணாடியின் முன்னால் வைத்தது போலத் தோற்றம் தந்தது.

அவள் எங்களை எல்லாம் ஒரு உயிர்ப்பற்ற, பால் பிரிவற்ற பார்வையுடன் நோக்கினாள். அவளை –இப்பொழுது என் கைகளில் தாங்கியபடி இருந்தபோது–அவளின் இன்மையின் அளவினைத் தந்தாள். யாரோ சொன்னார்கள் அவள் இறந்துவிட்டாள் என்று. மேலும் இதற்குப் பிறகு, இரவு வேளைகளில் வீட்டுக்குள்ளே தூங்காமல் நடக்கும் போது எந்த மௌனமான, உணர்ச்சிக் கலப்பற்ற முறுவலிப்புடன் இருப்பாளோ அந்தப் புன்முறுவலுடன் இருக்கத் தொடங்கினாள். அவள் எங்ஙனம் முற்றத்தை அடைந்தாள் என்று அவளுக்குத் தெரியவில்லை என்று கூறினாள். மிகவும் வெப்பமாய் உணர்ந்ததாகவும், அவளின் அறைச்சுவரையே இடித்துத் தள்ளிவிடும் எனத்தோன்றிய ஒரு வெட்டுக்கிளியின் துளைக்கும், கூர்மையான சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் சொன்னாள். மேலும் அவளின் கன்னம் சிமெண்ட்டுத் தரையில் அழுந்த, ஞாயிற்றுக்கிழமை ஜபங்களை நினைவுபடுத்திக் கொள்ள தன்னைத் தயார் செய்து கொண்டதாகவும் கூறினாள்.
எவ்வாறாயினும், அவளால் எந்த ஜபத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ள இயலாதென்று நாங்கள் அறிந்திருந்தோம். வெட்டுக்கிளி வெளிப்பக்கமிருந்து உந்தித்தள்ளிய சுவரின் உள் பக்கத்தைப் பிடித்தவாறு அவள் உறங்கிப் போனாள் என்று சொன்னபோதும், மேலும், அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது யாரோ அவளின் தோள்களைப் பற்றித் தூக்கி, சுவரை அகற்றி வைத்து விட்டு சூரியனை நோக்கி அவளை மல்லாக்கப் படுக்க வைத்தார்கள் என்று கூறியபோதும் காலப்பிரக்ஞையை அவள் இழந்து விட்டாள் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

அவள் மீண்டும் சிரிக்கப் போவதில்லை என்பதை அந்த இரவு முற்றத்தில் அமர்ந்தபடி நாங்கள் உணர்ந்திருந்தோம். அவளின் இருள் போன்ற, அவளே தேர்ந்துகொண்ட மூலையிலான வாழ்வு–அவளுடைய வெளிப்படுத்த முடியாத தீவிரத்தன்மை போன்ற யாவும் முன்கூட்டியே எங்களை வருத்தியது. இப்போது அவள் அமர்ந்திருக்கும் மூலையில் அவள் அமர்ந்த நாளில் நாங்கள் எவ்வளவு வருந்தினோமோ அதே அளவு இப்போதும் வருந்தினோம்; மேலும் வீட்டுக்கு உட்புறம் தான் இனித் திரியப்போவதில்லை என்று சொன்னதையும் கேட்டோம். முதலில் எங்களால் அவளை நம்பமுடியவில்லை. மாதங்கள் பலவாக, நாளின் எல்லா நேரங்களிலும் அறைகளின் வழியாக, அவளின் தலை திடமாகவும், தோள்பட்டைகள் தொங்கியபடியும், குனிந்துவிடாமலும், என்றும் சலிக்காமலும் அவள் நடப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். இரவுநேரத்தில், இரண்டு இருள்களுக்கிடையில் அவளின் உடலின் அடர்ந்த சப்தம், அசைந்து உராய்ந்து செல்வதைக் கேட்டிருக்கிறோம். மேலும் எங்கள் படுக்கைகளில் தூக்கம் விழித்து பல நேரங்களில் அவளுடைய ரகசியமான நடையை வீட்டின் எல்லா இடங்களிலும் எங்கள் காதுகளால் பின் தொடர்வோம். ஒருமுறை, முகம் பார்க்கும் கண்ணாடிக்குள், ஸ்தூலமான உள்ளீட்டுத் தெளிவில், புதைந்து, அழுந்திப்போன வெட்டுக்கிளியைப் பார்த்ததாக எங்களிடம் கூறினாள். அது கண்ணாடியின் மேற்பரப்பைக் கடந்து அவளை நெருங்கி வந்ததாகவும் சொன்னாள். அவள் என்ன சொல்ல முயல்கிறாள் என்பதை நிஜமாக எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு தண்ணீர்த் தொட்டிலிருந்து வெளிப்பட்டவளைப் போல உடம்போடு அவளின் ஆடைகள் எல்லாம் நனைந்துபோய் ஒட்டிக்கொண்டு இருந்தது. நிகழ் முறையை விளக்கிச் சொல்வதற்கு முடியாமல், வீட்டிலிருந்த எல்லாப் பூச்சிகளையும் ஒழிப்பதற்குத் தீர்மானித்தோம். அவளை பயப்படுத்திய பொருள்களை எல்லாம் அழிப்பது என்று முடிவு கட்டினோம். சுவர்களைச் சுத்தப்படுத்த ஏற்பாடு செய்தோம்.
முற்றத்தில் வளர்ந்து கிடந்த எல்லாத் தாவரங்களையும் வெட்டி எறியச் சொன்னோம்–ஏதோ இரவு அமைதியின் பிசிறு பிசிறான எச்சங்களை எல்லாம் சுத்தப்படுத்துவது போல. ஆனால் இதற்குப் பிறகு அவள் நடக்கும் சப்தங்களை நாங்கள் கேட்கவில்லை. மீண்டும் அவள் வெட்டுக்கிளியைப் பற்றிப் பேசவில்லை. கடைசியாக ஒருநாள் இறுதி உணவுக்குப் பிறகு எங்களைப் பார்த்தபடியே இருந்தாள். சிமெண்டுத்தரையில் உட்கார்ந்த பிறகும் எங்களைப் பார்த்தபடியே சொன்னாள்: “நான் இங்கே இருக்கப்போகிறேன், உட்கார்ந்தபடி!” நாங்கள் நடுங்கிப்போனோம்–காரணம் அவள் ஏற்கனவே முழுமையான மரணத்தைப் போன்ற ஒரு தோற்றத்தைத் கொடுக்கத் தொடங்கியிருந்தாள்.

இது நடந்து வெகுநாட்கள் ஆகிவிட்டிருந்தன. அவளை அங்கே பார்ப்பதற்குப் பழகிவிட்டிருந்தோம். அவளின் இயற்கையாக இருக்கும் தன்மையை இழந்துவிட்ட போதிலும், தலைப்பின்னல் பாதி முடியப்பட்டு அவள் அவ்விடத்தில் உட்கார்ந்திருப்பது எங்களுக்குப் பழகிப்போயிருந்தது. அதனால்தான் இப்போது நாங்கள் அவள் இனி என்றுமே சிரிக்கப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டோம். ஏன் என்றால் இனி என்றுமே தான் நடக்கப் போவதில்லை என எந்த ஒரு தீர்மானமான, தன்னிறைவுமிக்க தொனியில் கூறினாளோ அதே மாதிரி இதைக் கூறிவிட்டாள். அவள் எங்களிடம், “நான் இனி என்றும் பார்க்கப் போவதில்லை” என்றுமோ, அல்லது “என்றும் காதால் கேட்கப் போவதில்லை” என்றுமோ சொல்வாள் என்பது பற்றி நாங்கள் தீர்மானமாகிவிட்டது போலத் தோன்றியது. அவள் உடலின் இன்றியமையாத இயக்கங்களை தானே விரும்பி அழிப்பதற்குப் போதுமான அளவு மனிதத்தன்மை உடையவளாக இருந்தாள் என்பதை உணர்ந்திருந்தோம். மேலும் இயல்பெழுச்சியுடன் புலன் உணர்வு அடுத்து இன்னொரு புலன் உணர்வாக அழித்துக்கொண்டு போய், ஒருநாள் முதன் முதலாக உறங்கிப் போனவளைப் போல சுவரில் சாய்ந்தபடி இருப்பதைப் பார்க்கப்போகிறோம். ஒருவேளை இது நடப்பதற்கு இன்னும் நிறைய காலம் மிச்சமிருக்கலாம். ஆனால் முற்றத்தில் அமர்ந்திருந்த நாங்கள் மூவரும் அவளின் தீவிரத் தெள்ளிமை கொண்ட, திடீரென கண்ணாடிகள் உடைந்தது போல வரும் அழுகையை, அந்த இரவில் கேட்க விரும்பியிருப்போம்–ஒருவிதமான பிரமையை. . . . . ஒரு குழந்தை. . . . . ஒரு பெண் குழந்தை, இந்த வீட்டில் பிறந்துவிட்டது போன்ற பிரமையைத் தருவதற்காக, அவள் மீண்டும் மறுஉயிர்ப்படைந்து பிறந்துவிட்டாள் என்பதை நம்பும் பொருட்டு.

* * *
ஆங்கிலத்திலிருந்து தமிழில் பிரம்மராஜன்.
[Innnocent Erendira and Other Stories-Translated from Spanish by Gregory Rabassa]

Posted in translated short story | Tagged: , , , , | Comments Off