Brammarajan’s Polyphonic poems

A unique blog about Tamil poetry and Tamil culture, with translations in English

Archive for January, 2009

The Adventure of Life and the Death of poetry-Rimbaud/Introduced by Brammarjan

Posted by brammarajan on January 8, 2009

கவிதையின் மரணமும் வாழ்க்கையின் சாகசமும் -பிரம்மராஜன்


ஐரோப்பிய பொது வாழ்க்கையையும் அதன் கலாச்சார மதிப்பீடுகளையும் மாற்றியமைத்த மகத்தான சக்தி படைத்ததாய் அமைந்த சிம்பாலிசக் கவிதை இயக்கத்தின் பிதாமகராகக் கருதப்படுபவர் சார்ல்ஸ் பாதலெர். பாதலெரிடமிருந்துதான் பிரெஞ்சுக் கவிதை இறுதியாகத் தன் தேசீய எல்லைகளைக் கடந்து விரிந்து சென்றதென்றும் அது சகல இடங்களிலும் வாசகர்களைப் பெற்று நவீன காலத்தின் பிரத்யேகக் கவிதையாகத் தன்னை ஸ்தாபித்துக் கொண்டதென்றும் பால் வெலரி ஒரு முறை குறிப்பிட்டதை இங்கு நினைவு கூறலாம். பாதலெருடன் இணைத்தே சொல்லப்படும் பிற கவிஞர்களில் ரைம்போவும் (Rimbaud)மல்லார்மே (Mallarme)வும் சம முக்கியத்துவம் பெறுபவர்களாக இருக்கின்றனர். வெர்லெய்ன் என்ற மற்றொரு கவிஞர் இதே குழுவினைச் சேர்ந்தவராயிருந்த போதிலும் தவறான காரணங்களுக்காகப் பிரபலமானார். இருபதாம் நூற்றாண்டின் பல நவீன கவிஞர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் பாதலெரின் தாக்கத்தை ஊன்றிக் கவனிக்க முடிகிறது. அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் அவர்களின் படைப்பாக்கத்தினை வேண்டிய அளவு பாதித்து மாற்றங்களை உருவாக்கின. இதற்கு இரண்டு முக்கிய இலக்கியவாதிகளை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

1. எஸ்ரா பவுண்ட்.

பவுண்டின் பொருளாதாரக் கொள்கைகளும் அவரது நீண்ட பகுதிகள் கொண்ட கேண்ட்டோக்களும்.

2. பெர்டோல்ட் ப்ரெக்ட்.

ப்ரெக்டின் கம்யூனிசமும் அவரது செயல்படு கவிதைகளும் (functional poems).

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த இரு பெரும் சர்வதேசக் கவிஞர்களின் மூல மாதிரியாக அமைகிறார் பாதலெர். பாதலெரின் சில தேர்ந்தெடுத்த கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (பிரமிள் என்கிற தர்மு அரூப் சிவராம் மற்றும் தேவ தேவன்). மிகவும் பிரசித்த பெற்றதும் தடை செய்யப் பட்டதுமான தீவினையின் மலர்கள்(Flowers of Evil) என்ற தலைப்பிலான கவிதைகளை எழுதியவர் சார்ல்ஸ் பாதெலர். கலை கலைக்காகவே என்ற இலக்கியக் கொள்கை வலுப்பெறுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர். இந்தக் கொள்கையின் மூலம் கவிதையின் சுயாட்சியை வலுப்படுத்தி அதற்கான ஸ்தானத்தை மீட்டுப் பெற்றார் பாதலெர். மிகச் சிறந்த கலை மற்றும் ஓவிய விமர்சகராக விளங்கியவர். ஆயினும் பாதலெர் மிகவும் கலைத்துவமான சூழ்நிலைகளில் வாழ்வதாகக் குற்றம் சாட்டினார் இளைய தலை முறையைச் சேர்ந்த ஆர்தர் ரைம்போ. பாதலெர் புதிய கவிதை வடிவங்களைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார் என்றும் கண்டனம் செய்தார் ரைம்போ. எனினும் ரைம்போ அளவுக்கு பாதலெரை வேறு எந்த சக கவிஞனும் போற்றிப் புகழ்ந்திருக்க முடியாது. பாதலெரைக் குறித்து ரைம்போ சொன்னது.

“the first of seers, king of poets, a true God”.

தீர்க்க தரிசியாகக் கவிஞன் செயல்பட வேண்டுமென்கிற ரொமாண்டிசிசக் கோருதலை சிம்பலிஸ்டான ரைம்போ முன் வைப்பது சற்று ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். கவிஞன் தீர்க்கதரிசியாக இருக்கிறான் என்பதை வலியுறுத்திக் கூறியவர் ஆங்கில ரொமாண்டிக் கவியான வில்லியம் வோட்ஸ்வொர்த். அவர் கவிஞனை “a seer into the life of things” என்று வரையறுத்தார். கவிஞனை தீர்க்கதரிசியாகக் காணும் தன்மை வேறெந்த சிம்பாலிசக் கவிஞனிடம் விடவும் ரைம்போவிடம் கூடுதலாகக் காணப்படுவதை பார்க்கலாம். இதை ரைம்போவின் வார்த்தைகளிலேயே (அவரது கவிதைகள் மற்றும் கடிதங்கள் வாயிலாக) நாம் அறிய முடியும்.

The Poet makes himself a seer by a long, gigantic and rational derangement of all the senses. All forms of love, suffering, and madness. He searches himself. He exhausts all poisons in himself and keeps only their quintessences.

(Letter to Paul Demny 15 May 1871)

Illuminations (1886)என்ற தொகுப்பில் அடங்கும் ரைம்போவின் கவிதைகளைப் படிக்கும் போதும் இந்தக் கடித வரிகளில் அவர் குறிப்பிட்டதை ஒருவர் உணர முடியும். பெரும்பாலான இலக்கிய விமர்சகர்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் குமரக் கவிஞன் (boy-poet) என்று குறிப்பிடப் பட்டார் ரைம்போ. இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பதினாறு வயதில் தொடங்கிய படைப்பு வாழ்க்கையை ரைம்போ பத்தொன்பது வயதில் முடித்துக் கொண்டார். அவரது குமரப் பருவத்தில் சாத்தியமாகிய கவிதைச் சாதனைகள் எவ்விதத்திலும் சாதாரணப்படுத்தி விட முடியாதவை. ஒரு சாதாரணக் கவிஞன் (முதல் தரமில்லாதவன்) இந்தக் கவிதைகளை அவனது முதுமையிலும் சாத்தியப்படுத்த வாய்ப்பில்லை. அக்கவிதைகள் அடர்த்திச் செறிவினாலும் அவற்றின் ஸர்ரியல்தன்மைகளாலும் இன்றும் மிக நவீனமாகவே விளங்குகின்றன. (இளம் சாப்பாட்டு ராமன் என்ற தலைப்பிலான ரைம்போவின் கவிதையை ஆத்மாநாம் மொழிபெயர்த்திருக்கிறார்.) பல அம்சங்களில், விதங்களில் சர்ரியலிஸ்டுகளின் முன்னோடியாகக் கருதப்படுகிறார் ரைம்போ. ரைம்போவைப் பற்றி நவீன செக்கஸ்லோவிய கவிஞரான டேட்யூஸ் ரோஸ்விக்ஸ் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு பின் வருமாறு.

டேட்யூஸ் ரோஸ்விட்ஸ்

தீர்வுகள்

ஸ்திரமின்றி நாம் வாழ்கிறோம்

முகங்களின்

சொற்களின்

பெயர்களின்

மூடப்பட்ட ஒரு சுழல்வட்டப்பாதையில்

பிறர் நம்மை விவரிக்கின்றனர்

வகை பிரிக்கின்றனர்

நிலைப்படுத்துகின்றனர்

நமக்குத் தெரியும் நாம் அந்தப் பொய்யான வட்டத்தைக் கடக்க

உடைத்துக் கொண்டு

வெளியேற வேண்டுமென்று

ஆனால் நாம் இருக்கிறோம்

1880இல் ஏடன் நகரில்

ரைம்போ

பல் வேறு புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தார்

The Perfect Metal worker

The Pocket Carpenter

இவற்றையும் சேர்த்து

அல்லது இது போன்றவற்றுக்கு

வழிகாட்டி நூல்கள்

செங்கல் சுடுவது பற்றியும் பீங்கான் உருக்குவது பற்றியும்

மெழுகுவர்த்தி செய்வது

சுரங்க வேலை

உலோகப் பற்ற வைப்பு

செங்கல் அறுப்பது

சாக்கடை அமைப்பது

ஆம் அவர் நிஜமாகவே

விடைபெற்றுக் கொண்டார்

ஆனால் அவரும் கூட

சேமித்தார்

கவிதையின் மரணத்திற்குப் பிறகு

வீடு திரும்புவதற்கு

ஒரு நிஜமான முழுக் குடும்பத்தைத்

தொடங்கத் திட்டமிட்டார்

ஒரு மகனை ஆளாக்குவதற்குத்

தன்னை அர்ப்பணித்துக் கொள்ள

(அவன் இயல்பாகவே வீரமான புதிய தலைமுறை

மனிதனாக இருப்பான்)

அவர்

ராணுவப் பணிக்குத் தன் அணுகுமுறையை நிலைநாட்டிக் கொள்ளத்

திட்டமிட்டார்

ஒரு திடமான ஸ்திதியில்

மேலும் இப்படியாக

மேலும் இப்படியாக

அது சிறப்பானதுதான்

ஆனால் எனக்குச் சொல்

ஒரு ஐம்பது அறுபது

எண்பது வயதான

ரைம்போ

செய்ய வேண்டியது

என்ன

என்ன புத்தகங்கள்

அவர் ஆர்டர் செய்ய வேண்டும்

எங்கே அவர் செல்ல வேண்டும்

எதை அவர் எரிக்க வேண்டும்

எதைக் கைவிட வேண்டும்

(Taduesz Rosewicz: Selected Poems/Solutions / [Penguin Modern European Poets] pp.115-116)

டேட்யூஸ் ரோஸ்விட்ஸின் கவிதை மிக இறுக்கமாகவும் மிகச் சிக்கனமாகவும் ரைம்போவின் முழு வாழ்க்கையையும் அவர் தொடராமல் போய்விட்ட கவிதைப் படைப்பாக்க இருப்பினையும் அடிப்படையாக வைத்து சில உறுத்தும் கேள்விகளை முன் வைக்கிறது. ஆனால் இவை பதில்களற்ற கேள்விகள். கவிதை இல்லாத உலகில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ரைம்போவின் கவிதைக் காலத்திற்குப் பிறகான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் புரியும். கவிதை மற்றும் இலக்கியம் பற்றிய எந்தப் பின் வருத்தங்களும் இல்லாமல் வாழ்ந்தார் ரைம்போ என்று அவர் தன் வீட்டு அங்கத்தினர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்தக் கடிதங்கள் வாயிலாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும் கவிதை மூலமாக நமக்குத் தெரிய வருகிற ரைம்போவிற்கும்தான் எத்தனை வேறுபாடுகள்?

அவர் வாழ்வின் ஒரு கட்டத்தில் ‘‘இலட்சிய வாழ்க்கையின் சாகசக்காரன் நிஜ வாழ்க்கையின் சாகசக்காரனால் பதிலி செய்யப்பட்டான்” என்பது பிரத்யட்ச உண்மை. இளமையின் ஆரம்ப கட்டத்திலேயே ரைம்போவிடம் தெரிந்த நாடோடித்தன்மையின் காரணமாக அவரது சிறிய கிராமப் பகுதியிலிருந்து (Charlesville) பாரிஸ் நகருக்கு ரயிலில் வரும்போது ரயில் கட்டணம் சரிவர செலுத்தாததால் தண்டனைக்காக இரண்டு நாட்கள் காவல் நிலையத்திலிருக்க வேண்டி வந்தது. தொடக்கதிலிருந்தே அவர் ஒரு வக்கிரத்தன்மை மிக்க கலகக்கார மேதையாக இருந்தார் என்பதை வாழ்ந்த வாழ்வும் சரி, எழுதிய எழுத்துக்களும் சரி, நிரூபிக்கின்றன. கலகத் தன்மைதான் A Season in Hell நூலின் அடிப்படையாக இருக்கிறது. கவிதைகள் எழுதாத காரணத்தால் அவரது இருபதாம் வயதிலிருந்து முப்பத்தி ஏழு வயதில் அவர் மரணம் வரையிலான வாழ்க்கையைப் படம் பிடிக்க அவர் எழுதிய கடிதங்களையே அடிப்படை ஆவணங்களாகக் கொள்ள வேண்டி இருக்கிறது. டேட்யூஸ் ரோஸ்விட்சுமே கூட மேற்காட்டிய தீர்வுகள் கவிதைக்கு அடிப்படையாக ரைம்போவின் கடிதங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். இலக்கியப் புகழ் மற்றும் படைப்பு போதை ஆகியவை என்றுமே ரைம்போவின் சிந்தையை மயக்கி விடவில்லை என்று தெரிகிறது. எனினும் இலக்கியம் குறித்தும் அவர் கவிதை எழுதாமல் விட்டுவிட்டது குறித்தும் எவ்வித பின்வருத்தங்களும் அவருக்கு இருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

அவரது இலக்கிய அல்லது இலட்சிய வாழ்வு திடீரென்று ஒரு முடிவுக்கு வந்ததற்கு அவருக்கும் கவிஞர் வெர்லெய்னுக்கும் ஏற்பட்ட நட்பும் நட்பு முறிவுமே காரணமாக இருந்தன என்று சொல்லலாம். வெர்லெய்னுக்கும் ரைம்போவிற்குமிடையில் இருந்தது நட்பு என்று குறிப்பதை விட உறவு என்று குறிப்பிடுவதே சாலப் பொருந்தும். இந்த உறவு காரணமாக வெர்லெய்னின் மணவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. ரைம்போவின் உறவு ஏற்பட்ட பிறகு வெர்லெய்ன் பெல்ஜியத்திலும் ஃபிரான்சிலும் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டார் சாக்கடைக்கும் மதுபான விடுதிக்கும் இடையிலாய் அலைக்கழிந்தபடி. ஏனென்றால் அலைக்கழிப்பு என்பதே ரைம்போவின் வாழ்க்கைக்கு ஆதார ஸ்ருதியாய் இருந்தது. அலைக்கழிக்கப்படாமல் ரைம்போ சொற்ப காலம் கூட இருக்கவில்லை. பெல்ஜியத்தில் இருந்த சமயத்தில் ரைம்போவின் பிரிவைத் தாங்கவியலாத வெர்லெய்ன் இரண்டு முறை ரைம்போவைக் கொல்ல முயன்றார். இரண்டாவது முறை ஒரு மதுபான விடுதியில் ரைம்போவைக் நோக்கி துப்பாக்கியால் சுட்ட போது இடது கையில் குண்டு பாய்ந்தது. ரைம்போவைக் கொலை செய்ய முயன்றதற்காக சில காலம் வெர்லெய்ன் சிறையிலிருந்தார். இந்தக் கசப்பான அனுபவங்கள்தான் ரைம்போவின் உரைநடை எழுத்தான A Season in Hell என்ற நூலை எழுதத் தூண்டின. இந்த உறவு முறிவிற்குப் பிறகும் கூட ரைம்போ வெர்லெய்னுக்கு இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார் பயனின்றி. இலக்கற்ற அலைதல்களும் நோக்கமற்ற பயணங்களும் ரைம்போவை எகிப்து நோக்கிப் பயணிக்க வைத்தன. இதற்கு முன் ரைம்போ ராணுவத்தில் சேர்ந்த நிகழ்ச்சி நினைவு கூறப்பட வேண்டும்.

1876ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் போது ரைம்போ டச்சு ராணுவத்தில் சேர்ந்து பாட்டாவியா என்ற பிரதேசம் வரை பயணம் செய்யவும் செய்தார். ஆயினும் ராணுவத்திலிருந்து ஓடிப்போய் ஐரோப்பாவை நோக்கி நடந்தே திரும்பினார். வியன்னாவில் 1877ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டு ஆஸ்திரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்வீடன் தேசத்தையும் டென்மார்க்கையும் பயணம் செய்து கடந்த பிறகு எகிப்து செல்ல பயனின்றி முயற்சி செய்தார். 1878இல் சைப்ரஸ் தீவில் ஒரு கல் உடைக்கும் குவாரியில் சிறிது காலம் மேஸ்திரியாக பணியாற்றினார். இத்தகைய நிலைமைகளில் வேறு விதமான இலக்கியவாதியாக இருந்திருப்பின் கழிவிரக்கம் கொண்டிருக்கும் எண்ணற்ற சாத்தியங்கள் உள்ளன.

பிறகு சைப்ரசிலிருந்து 1880ஆம் ஆண்டு எகிப்துக்குப் பயணமானார். எகிப்திலிருந்து ஏடனுக்குச் சென்றார். ஏடன் நகரில் காஃபிக் கொட்டை கொள்முதல் செய்யும் ஒரு ஏற்றுமதிக் கம்பெனியில் பணி புரிந்தார். அந்தக் கம்பெனியின் கொள்முதலாளராக சோமாலியா நாட்டிற்குச் சென்று சோமாலியாவை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பயணங்களைப் பற்றி The Geographic Society க்கு அறிக்கை எழுதி அனுப்பினார். ரைம்போவின் ஆய்வுப் பயணங்கள் மேன்மேலும் ஆபத்தானவையாக மாறின. 1887ஆம் ஆண்டு சோவா(Choa) நாட்டு அரசரான மெனலிக்கிற்கு (Menelik)பழைய துப்பாக்கிகளை ஐரோப்பாவிலிருந்து கொள் முதல் செய்து விற்றார். ஆனால் மெனிலிக் பணம் தராது ஏமாற்றியதால் பெரும் பண நஷ்டம் அடைந்தார் ரைம்போ. இது மட்டுமன்றி இந்த வியாபாரத்தில் அவரது கூட்டாளி இறந்து போனதும் அவரது நஷ்டத்திற்குக் காரணம் என்று ரைம்போ குறிப்பிட்டார்.

இந்தப் பயணக் காலங்களிலும் சரி, அரேபியப் பாலை வனங்களில் அவர் பணியாற்றிய காலத்திலும் சரி அவரது இலக்கிய மற்றும் கவிதை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. பின் வருத்தம் கொள்ளவுமில்லை. இந்த காலகட்டத்தில் அவர் எந்த வித இலக்கியப் புத்தகங்களையும் படிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. தன் குடும்பத்தினர் வழியாக அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் சகலமும் செய்முறைப் பயிற்சி விளக்க ஏடுகள். பெரும்பாலும் அவர் ஆர்டர் செய்த புத்தகங்கள் புதுவித அறிவியலையோ, தொழில் நுணுக்கத்தையோ கற்றுத் தரும் நூல்களாக இருந்தன. ஒரு சமயம் பாரிஸ் நகர தொலை பேசி புத்தகத்தை அனுப்பச் சொல்லி ஒரு கடிதத்தில் கேட்டிருக்கிறார். ஒரு முறை அவரது குடும்பத்தினர் அவருக்கு ஃபிரெஞ்சு அரசியல் பற்றி கடிதம் வாயிலாக ஏதோ செய்தியை எழுதியிருக்க ரைம்போ அதற்குப் பதில் எழுதுகிறார்.

“You write to me about political news. If you knew how indifferent I am all to that. For more than two years I haven’t touched a newspaper. All these debates are for the present without meaning for me. Like the Moslems, I know that what happens happens, and that is all.”

(6 May 1883)

1888லிருந்து 1891வரையில் மீண்டும் காஃபி ஏற்றுமதி செய்யும் வேறு ஒரு நிறுவனத்திற்காக ஹாராரில் வேலை பார்த்தார். மூட்டு வாதத்தினாலும் கால் பகுதியில் வீங்கிப் பெருத்த ரத்தக் குழாய்களினாலும் பெரும் அல்லல் பட்டார். அவர் பணியாற்றிய முஸ்லிம் நாடுகளில் நீக்ரோக்கள் வசித்த பிரதேசத்தில் மருத்துவர்கள் யாரும் இருக்கவில்லை. அரேபிய மொழி கற்றுக் கொள்வதற்கு முயன்று அதற்கான துணை நூலை வாங்கி அனுப்பும்படி தன் குடும்பத்தாரிடம் வேண்டினார். ஒரு கடித்தை அனுப்பிப் பதில் பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது என்று மற்றொரு கடிதத்தில் எழுதினார். தொடக்கத்தில் எகிப்தில் அவருக்குக் கிடைத்த குறை ஊதியங்களைப் பார்க்கையில் அவர் வாழ்வின் இறுதி வருடங்களில் சொல்லிக் கொள்ளும்படியான ஊதியம் கிடைத்ததால் சிறிது பணத்தை அவர் சேமிக்கவும் செய்தார். திருமணம் செய்து கொள்வது பற்றி அவரது தாயாருக்கு ஒரு தனிக்கடிதம் எழுதி இப்படி அலைக்கழிப்புக்கு ஆளாகும் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் முன்வருவாளா என்றும் கேட்டார். ராணுவ சேவை பற்றியும் பிறிதொரு கடிதத்தில் குறிப்பு காணப்படுகிறது..

பன்னிரண்டிலிருந்து பதிமூன்றாயிரம் ஃபிரான்க்குகளை தங்கக் காசுகளாக அவரது இடுப்பு பெல்ட்டிலேயே வைத்து சுமந்து செல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இந்த சேமிப்புப் பணமும் கூட அவருக்கு தொடர்ச்சியான இடர்களைத்தான் கொணர்கிறது என வருந்தி எழுதினார். (எட்டுக் கிலோ தங்க நாணயங்களை இடுப்பில் கட்டிச் சுமந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது) யாரையும் நம்புவதற்கில்லை என்பது ஒரு புறம், மறுபுறம் உள்ளூர் கருவூலத்தில் வட்டி இல்லாமல் மாத்திரமே பணத்தை இட்டு வைக்க முடியும் என்கிற நிலை.

உலகிலே வேறு எந்தப் பகுதியையும் விட ஏடனில்தான் கோடை காலத்தின் கடுமை அதிகம். ஐரோப்பிய சீதோஷ்ணத்தில் வாழ்ந்து பழகிய ரைம்போ அந்தக் கோடையை எப்படி எதிர் கொண்டிருப்பார் என்று கற்பனை செய்து மாத்திரமே பார்க்க முடியும். ஒரு தீவிரமான கவிஞன் கோந்துப் பிசின், நெருப்புக் கோழியின் இறகுகள், தந்தம், பதனிடப்பட்ட தோல், கிராம்பு ஆகிய பொருள்களை ஒரு ஏற்றுமதி கம்பெனிக்காக வாங்குவதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். உலகின் வேறு பிரதேசங்களில் ஐந்து வருடங்களில் ஏற்படும் முதுமையானது ஒரு வருடத்தில் ஒருவருக்கு வந்து விடும் அளவு மோசமான சீதோஷ்ணம் ஏடனில் நிலவியது. ஆயினும் ரைம்போ தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார் அங்கே. ஒரு சமயம் அவரது வாழ்க்கை நிஜமாகவே ஒரு பீதிக்கனவாய் இருப்பதாக உணர்ந்து எழுதினார். மேலும் இவ்வளவு வெப்பத்தில் (செங்கடல் பகுதியில்) இருந்து பழகிய ஒருவர் ஐரோப்பாவிற்குத் திரும்பிச் சென்றால் ஐரோப்பாவின் கடுங்குளிர் காலத்தில் நுரையீரல் வியாதி வந்து விரைவில் இறந்து விடும் ஆபத்து இருக்கிறது. வணிகவியல் அகராதியையும் கடல் பிரயாண அகராதியையும் புனித குர்ஆனையும் 1885ஆம் ஆண்டு வாக்கில் ரைம்போ படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

1887ஆம் ஆண்டு வாக்கில் கெய்ரோ நகருக்கு வந்து சேர்ந்த ரைம்போ மூட்டு வாதத்தினால் மிகுந்து சிரமத்திற்குள்ளாகிறார். இடது கால் அவருக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நீக்ரோக்களின் மத்தியில் அவர்களின் அசுத்தமான உணவை சாப்பிட்டபடி, அவர்களின் விசுவாசமின்மையாலும் மடத்தனங்களாலும் உண்டாகும் அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டு ரைம்போ வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த நீக்ரோக்களின் நிலை மேம்பட ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால் அந்த நீக்ரோக்கள் ரைம்போவை சுரண்டப் பார்த்ததாய் எழுதினார்.

“… how wretched my life is without a family, without intellectual occupation, lost in the midst of Negroes whose fate I would like to improve, but who try to exploit you and make it impossible for you to carry out your business swiftly.”

4 August 1988

ஆறு மாதங்கள் மழை பெய்து பாக்கி ஆறு மாதங்கள் எரிக்கும் கோடை காலமாய் இருக்கக் கூடிய பிரதேசங்களுக்கெல்லாம் எவ்வித வெளிப்படையான இலக்குமின்றி பயணித்துக் கொண்டிருந்தார். நாம் போக விரும்பாத இடங்களுக்குத்தான் செல்கிறோம், நாம் செய்ய விரும்பாத காரியங்களைத்தான் செய்கிறோம், நாம் விரும்பிய விதத்தை விட வித்தியாசமாக, எந்த வித நம்பிக்கையுமின்றி, ஆறுதலுமின்றி இறக்கிறோம் என்று குறிப்பிட்டார் ரைம்போ. அது அவரின் விதியைப் பொறுத்து 100 சதவீதம் நிஜமாக இருந்தது.

வலது காலில் தொடர்ந்து உபத்திரவம் கொடுத்தது மூட்டு வலி. அவருக்கு ஏடனிலோ, ஹாராரிலோ உரிய மருத்துவ உதவி கிடைக்கவில்லை. மேலும் அவரது வலது கால் முட்டியில் ஒரு புற்றுக் கட்டி உண்டாகி அதன் காரணமாய் சொல்லொனாத் துயரத்தையும் வலியையும் அனுபவித்தார். இறுதியில் ஃபிரான்சுக்குத் திரும்பி வந்து மார்செய்லில் உள்ள கன்செப்ஷன் மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது அவரது வலது கால் வெட்டி எடுக்கப்பட வேண்டியதாயிற்று. இருப்பினும் சிறிது கால சிகிச்சைக்குப் பிறகு ரைம்போ நவம்பர் 10ஆம் தேதி 1891ஆம் ஆண்டு இறந்து போனார். அவரது முப்பத்தி ஏழாவது வயதில். சரியான உணவின்மையாலும் கால் நடையாகவும் குதிரை மீதும் தொடர்ந்து பாலை வனங்களில் பயணம் செய்ததாலும், சீதோஷ்ணத்திற்குத் தகுந்த உடைகள் இல்லாததாலும் அவரது உடல் நலம் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஃமீண்டும் ரோஸ்விட்ஸின் கவிதைக்குத் திரும்புவோம். கவிதையின் முதல் பகுதி ரைம்போ தேர்ந்தெடுத்து வாழ்ந்த அலைச்சல் மிகுந்த வாழ்க்கையைச் சிலாகித்துச் சொல்வதாகத் தெரிகிறது. நாம் வாளாவிருக்கிறோம் என்று கவிதை குற்றம் சாட்டுகிறது. ரோஸ்விட்ஸ் கவிதையின் மையப் பகுதி, கவிதையைப் புறக்கணித்து ரைம்போ வாழ்ந்த வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. மென்னுணர்வு மிகுந்த இலக்கியவாதி கவிஞனுக்கு இப்படித் தலை கீழாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை எண்ணிப் பார்க்கவே இயலாதது. கவிதையின் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை என்று ரோஸ்விக்ஸ் இதைக் குறிப்பிடுகிறார். நிறைய விஷயங்கள் ரைம்போவின் வாழ்வில் தலைகீழான மாதிரி கவிதைக்கும் மீண்டு திரும்பியிருக்க மாட்டாரா என்ன அவரது ஐம்பது வயதில்?க்ஷ

***

25-03-2003 அன்று மரபு இலக்கிய அமைப்பும் அலயன்ஸ் ஃபிரான்சேஸூம் இணைந்து பாண்டிச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் வடிவம்.

Posted in introduced by brammarajan, translated Poems | Tagged: , , , , , | 7 Comments »

யாசுனாரி கவாபட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம்

Posted by brammarajan on January 7, 2009

kawabatanobel1யாசுனாரி கவாபட்டாவின் தூங்கும் அழகிகளின் இல்லம்

பிரம்மராஜன்

நவீன ஜப்பானிய இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெறும் யாசுனாரி கவாபட்டா (1899-1972). ‘‘ஒரு குடும்பமோ வீடோ இன்றி” வளர்ந்தவர். இளையதலைமுறை நாவலாசிரியரான யூகியோ மிஷீமா, கவாபட்டாவை ‘‘நித்திய பயணி” என்று குறிப்பிட்டார். டோக்கியோ இம்பீரியல் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் கவாபட்டா. அவரின் நாவல் உலகு மனிதனின் தனிமைப்படுத்தலை சில்லிடும் கவித்துவத்துடன் வெளிப்படுத்துகிறது. 1968 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கவாபட்டாவுக்கு வழங்கப்பட்டது. ஐந்து நாவல்களையும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியிருக்கி றார்.
யூகியோ மிஷீமா, கவாபட்டாவின் ‘‘தூங்கும் அழகிகளின் இல்லம்” நாவலை “esoteric masterpiece” என்று சொன்னதோடன்றி, அதை நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஒப்பிடவும் செய்தார். பொய்யான கூச்சத்தையும், அசூயையும் விலக்கிவிட்டு கவாபட்டா என்ற கலைஞன் எழுதிய மிகச்சிறந்த நாவல் இது. மிக நுண்ணிய விவரணைகள், மற்றும் கச்சிதத் தன்மை ஆகியவை இந்த நாவலை கவாபட்டாவின் பிற நாவல்களில் இருந்து வேறுப்பட்டுத் தெரியவைக்கின்றன. கழுத்தை நெரிக்கும் இறுக்கத்துடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
நூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அலாதியான வாசிப்புத்தன்மை கொண்டது. தூங்கும் அழகிகளின் இல்லம் வயோதிகர்களுக்கான பிரத்யேகமான விடுதி. இதில் நிர்வாணமாய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்கள் இருப்பர். விடுதிக்கு வரும் வயோதிகர்கள், தூங்கும் பெண்களுடன் ஓர் இரவு தூங்கலாம். அவளை எழுப்புவதோ மோசமான ரசனையில் அவளை ஏதும் செய்ய முயல்வதோ கூடாது. சக்தி வாய்ந்த தூக்க மாத்திரையாலோ அல்லது போதைப் பொருளாலோ இந்தப் பெண்கள் உறங்க வைக்கப்படுகின்றனர். உறங்குவதற்கு முன் அவர்கள் என்னமாதிரி உடை அணிந்திருந்தனர் என்பதை அறிய முடியாது. எல்லோருமே கண்ணிப் பெண்கள். நீங்கள் யாருடன் உறங்குறீர்களோ அந்தப் பெண்ணை அடுத்து ஏதோ ஒரு நாளில் சந்திக்க நேர்ந்தால் அவளை அடையாளம் கண்டு பேசுவது குற்றம். அந்தப் பெண்களும் தாங்கள் எவருடன் உறங்கினர் என்பதை அறியமாட்டார்கள். உறங்க வைப்பதற்கு முன் எந்த வயோதிகனும் அவர்களைப் பார்த்ததில்லை- பார்க்கவும் கூடாது என்பது விடுதியின் சட்ட திட்டங்களில் ஒன்று. விடுதியில் எவரும் மது அருந்தக்கூடாது.
67வயதாகும் எகுச்சி இந்த விடுதியைப் பற்றி அவருடைய நண்பரான கிகோ மூலமாக அறிகிறார். விடுதிக்கு வருகை தரும் வேறு நபர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யக் கூடாது. நாவலில் எகுச்சி, கிகோ, மற்றொரு ஃபுக்குரோ தவிர வேறு எவருக்கும் பெயர் தரப்படவில்லை. எகுச்சியின் மூன்று மகள்கள், அவரது மனைவி, எகுச்சியின் காதலிகள், தூங்கும் பெண்கள் எவருக்குமே பெயரில்லை.
சாவின் அருகாமையால் உந்தப்பட்டு உருவாகும் காமத்தின் பயங்கரம் எகுச்சியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. பாலியல் தன்மைக்கும் மென்மையானதொரு கவித்துவத்தைத் தருகிறது கவாபட்டாவின் நடை. ஐந்து இரவுகளில் எகுச்சி சந்திக்கும் பெண்களை வைத்து எகுச்சியின் சிந்தனைப் பாதைகளை பதிவு செய்கிறது நாவல். ஃப்ளாஷ்பாக்கும் நனவோடையும் (stream of Conciousness) கலந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. பாலியல் தன்மை(Sexuality)மற்றும் இறப்பு பற்றிய இரட்டைத் தியானங்கள் நாவலின் கருக்களம்.
முதன் முறையாக விடுதிக்கு வருகை தரும் எகுச்சியை நாற்பது வயது மிக்க யுவதி வழிநடத்துகிறாள். தேவைக்கு அதிகமான ஆர்வத்தில் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் அவள் பதில் அளிப்பதில்லை. விடுதியின் மாடி அறையில் வெல்வெட் திரைச்சீலைகளால் சூழப்பட்டு நிர்வாணமாய் இளம் பெண் ஒருத்தி உறங்கிக் கொண்டிருக்கிறாள். அறையை அடைந்து, உடைகளைக் களைந்து அந்தப் பெண்ணின் படுக்கையில் சாய்ந்து கொள்ளும் எகுச்சிக்கு விநோதமான உணர்வு தோன்றுகிறது. தாயின் மார்பிலிருந்து பாலருந்தும் குழந்தையின் மீது வீசும் வாசம் வருவதாக அவர் உணர்கிறார். போர்வையை விலக்கிப் பார்க்கும் போது உறங்கும் அந்தப் பெண் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருக்க முடியாது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்கிறார் எகுச்சி. அவரது மூன்றாவது மகள் குழந்தையாக இருந்தபோது அவளை தூக்கி வைத்திருந்த பின், உடையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு கெய்ஷாப் பெண்ணிடம் செல்கிறார். அவரிடம் பால் வாசனையை முகர்ந்த மலட்டு கெய்ஷா எகுச்சியை மறுத்து அனுப்பி விடுகி றாள். பிஸினஸ் எக்சிகியூட்டிவ்வின் மத்திய வயது மனைவியுடன் எகுச்சி நடனமாடிக் கொண்டிருக்கிறார். தன்னை முத்திமிடக்கூடிய நெருக்கமுள்ள ஆண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிப் பார்த்தபின் அவள் உறங்குவது வழக்கம் என்று கூறுகிறாள். விரல்விட்டு எண்ணினால் மனம் அந்த ஆண்களை வடிவப் படிமமாகக் கொண்டு வராதா? வெறும் எண்ணிக்கையுடன் நின்று விடுமா என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறா.
அவருடன் உறங்கும் இந்த இளம் பெண் எகுச்சியின் நினைவுச் சங்கிலியில் அவர் சந்தித்த பிற பெண்களை பிணைத்து விடுகிறாள். விடுதிக்கு வெளியே கடல் அலைகள் மோதி உடைகின்றன. காற்று ஊளையிடுகிறது. கியோடோவில் தனது கல்லூரிப்படிப்பு முடிந்து வேலைக்குப் போகத் தொடங்கிய சமயம் இளம் பெண் ஒருத்தியுடன் ஓடிப் போக திட்டமிடு கிறார். ரயில் பாதை வழியாக தப்பித்துச் செல்லும் போது பல சின்னச் சின்ன குகைகளைக் கடந்து வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு முறை வெளியே வரும்போதும் அந்த மலைப் பகுதியில் ஒரு வானவில் தோன்றுகிறது. வானவில்களை ஒவ்வொரு முறையும் வியக்கிறாள் அந்தப் பெண். தன்னுடைய 67வருட வாழ்க்கையில் சந்தித்த பெண்களில், அந்தப் பெண்ணுடையதைப் போன்றதான மிகச்சுத்தமான உடல் உட்பாகங்களைப் பார்த்ததில்லை என்று இப்போது நினைவு கூர்கிறார். இவ்வளவு மென்மையான நினைவுகளை துவக்கி விட்ட உறங்கும் இந்தப் பெண்ணை நன்றியுடன் நோக்குகிறார். விடுதியில் தரப்படும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உறங்கப் போகிறார்.
இரண்டு வாரங்கள் கழித்து விடுதியில் இருந்து தொலைபேசியில் பேசுகிறாள் விடுதியின் மத்திய வயதுப் பெண். எகுச்சியை இரவு பதினொரு மணிக்கு மேல் வரும்படி சொல்கிறாள். அவருடைய முதல் வருகை எவ்விதமான அசிங்கமான நினைவுகளையும் உண்டாக்கவில்லை என்பதால் இரண்டாம் முறை போகத் தீர்மானிக்கிறார். உறங்கும் பெண்ணுடன் உறங்குவது மனிதத்தன்மையானதே அல்லவென்று வாதிடுகிறார். வயோதிகர்கள் இந்த விடுதியைத் தேடிவரக் காரணம் உறங்கும் இந்தப் பெண்கள் வயதே ஆகாத விடுதலையைத் தருவதுதான் என்று நினைக்கிறார் எகுச்சி. அவர்கள் உறங்கியபடி இருந்தாலும் வயோதிகர்களின் கீழ்த்தன்மையையும், இயலாமையையும் நினைவுறுத்தும் சின்னங்களாக இருக்கின்றனர். இருப்பினும் இப்பேர்பட்ட இளமை மற்றும் தூய்மையின் முன்னிலையில் வயோதிகர்கள் அடையும் அவமானத்தை அப்பெண்களால் அறிய முடியாது. வயோதிகர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. சென்ற வருடம் இதே நேரத்தில் வெள்ளை கெமிலியா கோவிலுக்கு தனது மூன்றாவது மகளுடன் சென்றார் எகுச்சி. அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. மிக புத்திசாலியான அவரது மகள் பல இளைஞர்களுடன் பழகுவதை எகுச்சியோ எகுச்சியின் மனைவியோ கண்டிப்ப தில்லை. எதிர்பாராத விதமாக அவரது மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறா ளோ அந்த இளைஞனால் அவளது கன்னித்தன்மையை இழக்கி றாள். இந்நிகழ்ச்சியினால் பெரிதும் பாதிக்கப்படுகிற தனது மகளை ஒரு மாற்றத்திற்காய் வெள்ளை கெமிலியா மரக்கோயி லுக்கு அழைத்து வருகிறார். அந்தக் கோயில் நகரின் மிக இரைச்சலான, மோசமான பகுதியில் அமைந்திருக்கிறது. நானூறு வருடம் முதிர்ந்த அந்த மரம் ஐந்து நிறங்களில் பூக்கிறது. அந்தப் புராதன மரத்திற்குள் என்னவிதமான கதகதப்பு இருக்கக்கூடும் என்று வியக்கிறார்.தேனீக்களின் கூட்டமொன்று மரத்தண்டிற்குள் இருப்பது போல மென்மை யான கர்ஜனையும் மரத்திற்குள்ளிருந்து வருவதாக அவருக்குத் தோன்றுகிறது.
எட்டே நாட்களில் மூன்றாவது வருகை தருகிறார். இம்முறை அதிகப் ‘‘பயிற்சி இல்லாத” இருபது வயதிற்கும் குறைவான பெண் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். கோபே நகரில் ஒரு இரவு விடுதியில் நடனப் பெண் ஒருத்தியை அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு வந்தது எகுச்சிக்கு ஞாபகம் வருகிறது. நிறைய குடித்து விட்டு அவர் உறங்கி விடுகிறார். குடித்தும் தூங்க முடியாத அவள் எகுச்சியின் பயன்படுத்திய அழுக்கான உள்ளாடைகளை சுத்தமாக மடித்து வைத்து விட்டு அதிகாலையில் விடைபெறுகிறாள். அவள் இரண்டு குழந்தைக்குத் தாய் என்பதை எகுச்சியால் நம்ப முடியவில்லை. கோபே நகருக்கு மீண்டும் வந்தால் தன்னைச் சந்திக்கும்படி வேண்டியவள் பிறகு சந்திக்க வேண்டாம் என்று கடிதம் எழுதி விடுகிறாள். எகுச்சியிடம் அவள் பழகும் போது குற்ற உணர்வோ மன உறுத்தலோ இன்றி நடந்து கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது. தன்னருகில் உறங்கும் தன் மகள் வயதே இருக்கும் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் ஆவள் புத்தனின் ஒரு அவதாரமாக இருக்கலாம் என்று நினைக்கிறார். ‘‘இந்தப் பெண்களுடன் உறங்குவது ஒரு ரகசிய புத்தனுடன் உறங்குவது போன்றது” என்று நண்பன் கிகோ சொல்லி இருக்கிறான்.
இதற்கிடையில் விடுதியில் தங்கிய ஃபுக்குரா என்ற ஆள் இறந்து போன செய்தியை அறிகிறார் எகுச்சி. எனினும் ஐந்தாம் முறையாக விடுதிக்கு வருகை தருகிறார். விடுதியில் ஒரு ஆள் இறந்ததால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக தனியாக உறங்க மறுக்கின்றனர் பெண்கள். எனவே எகுச்சி இன்று இரண்டு பெண்களுக்கிடையில் உறங்குகிறார். கறுப்புப் பெண் சற்று வயது முதிர்ந்தவள், சிவப்புப் பெண் இளையவள். அதிகாலை நான்கு மணிக்கு விழிப்புக் கொள்ளும் எகுச்சி, கறுப்புப் பெண் இறந்து போயிருப்பதை அறிகிறார். அவளுக்குத் தரப்பட்ட தூக்க மாத்திரையின் அளவு அதிகமாகப் போயிருக்கலாம். விடுதியின் மத்திய வயதுப் பெண் இறந்துப் போனவளை அறை யிலிருந்து அகற்றுகிறாள். இன்னொரு பெண்தான் இருக்கி றாளே அவளுடன் தொடர்ந்து உறங்கலாமே என்று மத்திய வயதுப் பெண் எகுச்சியிடம் சொல்கிறாள். எகுச்சிக்கு தூங்கு வதற்கு தூக்கமாத்திரை தரப்படுகிறது. கொஞ்ச நேரத்தில் கீழே ஒரு கார் புறப்பட்டுச் செல்கிறது.
இம்மாதிரியான கதைக் கருவை விரசத்தின் சாயல் சிறிதும் விழுந்து விடாமல் எழுத கவாபட்டா போன்ற பெரும் கலை ஞர்களால் தான் முடியும். முதற்பதிப்பு 1969ஆம் ஆண்டு வெளி வந்தது. Edward Seidensticker ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

282

Posted in introduced by brammarajan | Comments Off

தமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்

Posted by brammarajan on January 6, 2009

Perfect targetதமிழ்ச் சிற்றேடுகளும் ஏ4 அளவு ஏடுகளும்

பிரம்மராஜன்

தமிழ்ச் சிற்றேடுகள் என்று குறிப்பிடும் போது இனி அவற்றை ஏ4 அளவு மத்திய ஏடுகளிலிருந்து பிரித்தறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ”மீடியம் ஈஸ் த மெஸேஜ்’” என்று என்னதான் மக்லூஹன் சொன்னாலும் அது தமிழ்ச்சூழலில் இன்று விஷய கனம் என்பதற்கு பதிலாக மேலோட்டமான தளுக்கு என்றே அறியப்பட்டுள்ளது. குறிப்பாக எழுதுவதற்கு ஏதுமில்லாதபோது சில ”பிளாக்’”(வலைப்பூ) எழுத்தாளர்கள் செய்வது போல ”மொக்கை”ப் பதிவுகளைச் செய்து அவைதான் இன்றைக்கு இன்றியமையாத எழுத்து என்று கதைகட்டிவிட சில ஏ4 ஏடுகள் முயல்கின்றன. ஆனால் இந்த வணிக உத்தியை ஊடுருவி பார்க்கத் தெரியாத அந்தகன் அல்ல நவீன வாசகன். உற்பத்திசாதனங்களின் உபரிநன்மைகளால் அவை பார்வைக்கு மட்டுமே பளிச்சென்று தெரிகின்றன.

ஏ4 அளவு ஏடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதற்குக் காரணம் அச்சகங்களினால் ”சும்மாயிருக்க” முடிவதில்லை என்பது மட்டுமல்ல. எதை வேண்டுமானலும் எழுத வைத்து அதற்கு இலக்கிய சாயம் பூசிவிட முடியும் என்கிற துணிச்சலும் காரணம். மீண்டும் உபரி மதிப்பு குறித்து ஆழ்ந்து அலச வேண்டிய அவசியம் வந்துவிட்டது போல் தெரிகிறது. ”வெட்டி ஒட்டுதல’” மற்றும் வையக வலைத்தளம் அனைவருக்கும் கிடைக்கும்படியாகியிருக்கும் நிலையுடன் இதை வைத்து ஆய்வோமானால் இன்றைய இலக்கிய வெறுமைக்கு நிறைய பதில்கள் கிடைக்கும். ”சும்மா”வுக்காக விசைப்பலகையை நோக அடிப்பவர்கள் பீதிதரும் அளவுக்கு அதிகரித்திருக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் ஐபிஎம் சாஃப்வேர் நிறுவனம் “பொயட்’” என்றொரு கையடக்கமான கவிதை எழுதித் தரும் மென்பொருளைத் தந்தது. அதில் நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான். கவிதை யாருக்கு? ஆண்ஞிபெண் காதல், பிரிவு, போன்ற ஏதாவது ஒரு கவிதைக் கருவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெண் எங்கே வாழ்கிறாள்-மலையகமா கடற்கரைப் பகுதியா? இந்தத் தகவல்களைக் கொடுத்துவிட்டால் போதும் ஒரு நிமிடத்தில் ஒரு கவிதையை ”பொயட்’” நமக்குத் தயாரித்துக் கொடுத்துவிடும். இன்றைக்கு எழுதப்படும் பல கவிதைகள் ”பொயட்” மென்பொருளால் எழுதிவிட முடியும் அளவான தரத்தை மனதில் வைத்து எழுதப்படுவதாகத் தெரிகின்றன. எனவேதான் இன்றைக்கான கவிதைகள் ஏ4 அளவு இதழ்களின் நிரந்தர ”ஃபில்லர்’”களாகப் பங்காற்றுகின்றன. கவிஞன் என்ற உபரிப் பெயரடையை(அ)விருப்புமிக்க முள்கிரீடத்தை ஏற்க விரும்பும் கவிதை உற்பத்தியாளனும் ”மொக்கை’”அரட்டை இதழைத் தாங்கி நிற்கும் தூணாக மாறிவிடுகிறான்.

சரி. இவ்வளவு அபரிமிதமாக உரைநடை(அதிலும் தரப்படுத்தப்பட்டது-அந்த காலத்து சிற்றிதழ்(குறிப்பாக ”பிரக்ஞை’”யில் எழுதப்பட்டது போன்ற உரைநடையன்று) எழுதப்பட்டாலும் நல்ல சிறுகதைகள் கிடைப்பது அரிதாக இருக்கும் காரணம் என்ன? ”நல்ல” என்பதற்கான வரையறை கிளாசிக் என்றே நம்புவோம். நல்ல என்பதைக் கூட விட்டுவிடுவோம். சிறுகதைக்கான குறைந்தபட்ச அலகுகள் கூட வளமான மொழிக்கு தேவையில்லாமல் போய்விடுகிறதா? மயக்கமான சொல்லாடல்களும் ஜடத்துவமான கூறுமுறைகளும்தாம் இன்று சிறுகதைகளின் பண்புகளாகி இருக்கின்றன. ”சீனியர் ரைட்டர்ஸ்” என்று பிதற்றும் எழுத்தாளர்களுக்கு சிறுகதையின் விஷய கனம் புரியாமல் தடுமாறும் போது இளம் படைப்பாளிகள் நிலை பரிதாபத்திற்குரியது. அவர்களை ஏ4 அளவு இதழ்கள் காப்பாற்றாது.காரணம் இல்லாமல் இல்லை. வெறும் சிறுகதைகள் எழுதினால் பிரபலத்தின் சிகரத்தை அடைய முடியுமா?  விசைப்பலகையை சிரமப்படுத்தி, உங்களுக்கு வந்த ”சேட்’” அரட்டைகளை தமிழ்ப்படுத்தி, “வெட்டி ஒட்டி’” தலையணை சைசுக்கு செய்யப்படும் நாவலுக்குத்தானே விருதுகள் எல்லாம் தருகிறார்கள். எதைக் குறி வைத்து எழுதுவான் இன்றைய உரைநடைக்காரன்? உரைநடை எழுதுவதற்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன என்பதைக் கேட்டு உச்சி குளிர்ந்தது. படைப்பூக்கத்திற்கான பூடக வழிகளை கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர்-க்கு எழுதும் உரைநடையை வைத்து கண்டுபிடிக்க இயலாது.

Posted in Uncategorized | 2 Comments »

சேஸரே பவேசேவின் கவிதைகள்/The Poetry of Cesare Pavese

Posted by brammarajan on January 6, 2009

pavese-llarge

சேஸரே பவேசேவின் கவிதைகள்

பிரம்மராஜன்

அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த இதாலிய மொழிபெயர்ப்பாளராகவும், நவீன இதாலிய நாவலாசிரியர்களில் குறிப்பிடத் தகுந்தவராகவுமிருந்த சேஸரே பவேசே அடிப்படையில் ஒரு கவிஞர். அதிலும் இடதுசாரிக் கவிஞர். போருக்குப் பின்னான இதாலிய யதார்த்தத்தின் பிரதானமான தோற்றுவாய்களாக அவரது புனைகதைகள் கருதப்படுகின்றன. (The Moon and The Bonfire, The Devil in The Hills) சேஸரே பவேசேவைப் பொருத்தவரை யதார்த்தம் என்பது மீட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புராணிகமாக இருந்தது. அவரைப் பொருத்தவரை ஞாபகம் கொள்வதென்பதே ஒரு வஸ்துவை முதன்முதலாகப் பார்ப்பதைப் போன்றதென்றார். அதனால்தான் அவரது படைப்புகளில் திரும்பத் திரும்ப இடம் பெறும் படிமங்களான மலைகளும், நாட்டுப்புறச் சாலைகளும், வெறிச் சோடிய நகரத்து ரோடுகளும் யதார்த்தமல்லாத ஒரு இலக்கியப் பயன்பாட்டையே பெறுவதாகின்றன.

இதாலியின் பய்ட்மாண்ட் பகுதியில் பிறந்த சேஸரே பவேசேவின் தந்தை ஒரு நீதித்துறை அதிகாரி. ட்யூரின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சேஸரே பவேசே படித்தது ஆங்கிலம் மற்றும் அமெரிக்க இலக்கியம். வால்ட் விட்மேன் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். மாணவப் பருவத்திலிருந்தே தற்கொலை எண்ணங்கள் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. இதன் காரணமாக அவரால் அவர் சந்தித்த பெண்களுடன் மனநிறைவுள்ள, அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவியலாது போயிற்று. அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக் கழகத்தில் படிப்பு ஊக்கத்தொகை பெற முயன்றது வீணாய்ப் போயிற்று. பிறகு பகுதி நேர ஆசிரியர் வேலை பார்க்கத் தொடங்கி அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த பெண்ணைக் கண்டுபிடித்து விருப்பத்தையும் சொன்னார்–திரும்பத் திரும்ப. ஒரு இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி, பின் என்னவ்டி (Ennaudi) என்னும் பிரபல வெளியீட்டு நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார். பாஸிச எதிர்ப்புச் செயல்பாடுகளுக்காக 1935ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கெலாப்ரியா என்னுமிடத்தில் ஓராண்டு சிறை வைக்கப்பட்டார். சேஸரே பவேசே தனது பெரும்பான்மையான கவிதைகளையும் டயரியையும் இந்த காலகட்டத்தில்தான் எழுதினார்.

அமெரிக்க நடிகை  Constance Dowlingவுடனான உறவுச் சிக்கல்களின் விளைவாக ட்யூரின் ஹோட்டல் ஒன்றில் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னால் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணுக்கு தொலை பேசியில் பேசியது ஒரு நாடகத்தை அவர் நிறைவூட்டுவது போல நிஜவாழ்க்கையில் அமைந்து போயிற்று.

கவிதை மற்றும் புனைகதை ஆகிய இரு துறைகளிலும் இயங்கிய பலருக்கு நிகழ்ந்தது போல சேஸரே பவேசேவுக்கும் அவரின் கவிதை சார்ந்த முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அல்லது அவரது புனைகதைகள் அவரது கவிதைகளுக்கான புகழை அபகரித்துக் கொண்டன எனலாம். குறிப்பாக The Moon And The Bonfires, Among Women Only  ஆகிய இரு நாவல்களும் நவீன ஐரோப்பிய நாவல்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவர் 1935ஆம் ஆண்டிலிருந்து  அவர் தற்கொலை செய்து கொண்ட 1950ஆம் ஆண்டு வரையில்  எழுதிய டயரி இந்த நாவல்கள் அளவுக்கு பிரபலமடைந்தது.

ஆனால் சேஸரே பவேசேவின் ஆதி மற்றும் இறுதி படைப்புத் தூண்டல்கள் யாவும் கவிதை சார்ந்தவையே. இது மட்டுமின்றி கவிதைக்கலை பற்றி இரு முக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதில்  The Poet’s Craftஎன்ற கட்டுரையில் வால்ட் விட்மனின் Leaves Of Grass பற்றியும் பாதலெரின் (Baudelaire) Flowers of Evil பற்றியும் கொண்ட ஆரம்ப காலப் பொறாமைகளை மனம் விட்டு ஒப்புக் கொள்கிறார். ”ஒவ்வொரு கவிதைத் தூண்டுதலும், அது எவ்வளவு உன்னதமானதாய் இருந்த போதிலும், அறம் சார்ந்த கோரிக்கைகளை எதிர் கொள்ளும் முயற்சியே” என்று குறிப்பிட்டார். அவரது கவிதை மொழி ஒரு தெளிவான, தனித்துத் தெரிகிற வலுவான மொழி. அவர் எந்த அம்சத்திற்காக வால்ட் விட்மனைச் சிறப்பித்து எழுதினாரோ அதே அம்சம் அவர் கவிதைகளினூடாய் வெளிப்பாடு காண்கிறது இரட்டை தீர்க்கதரிசன நோக்கு. ஐரோப்பிய மறைபொருள்தன்மையான தாக்கங்களிலிருந்து தப்பிக்கவே அவர் அமெரிக்க நேச்சுரலிஸ இயக்கத்து படைப்பாளிகளுடன் தன்னைப் பிணைத்துப் பார்த்துக் கொண்டார். இயற்கையை அனுபவம் கொள்வதன் மூலமாகக் கிடைக்கும் ஒரு ஆன்மீக  உணர்வு அவருக்கு உவப்பாக இருந்தது. புராணிகமே அவரைப் பொருத்தவரை சாதாரண ஜட உலகத்திலிருந்துதான் உருவாகிறதென்ற கருத்துக் கொண்டிருந்தார் சேஸரே பவேசே. இந்த அனுபவத்தில் தனக்கு சோதனையாளர்கள் மற்றும் துணிகரச்செயல்காரர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுமில்லை என்றறிவித்தார். வியத்தலுணர்வு பெற்று ஒரு அற்புத அனுபவ கணத்தை அடைய ஒரு வஸ்துவை பயமின்றி வெறித்துப் பார்த்தலே போதுமானது என்றார்

“I have nothing in common with experimentalists, adventurers, with those who travel in strange regions. The surest, and the quickest way for us to arouse the sense of wonder is to stare, unafraid, at a single object. Suddenly-miraculously-it will look like something we have never seen before”.

இந்த மேற்கோளில் தெரிவது என்னவென்றால் சேஸரே பவேசே புனைவை விட நிஜத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதே. ஆனால் அவரது நேச்சுரலிசம் தொடக்க காலத்தியது என்றால் அவரது முதிர்ச்சிக் கட்டம் ஸிம்பலிஸம் என்பதைத் தெளிவாக்கிவிட வேண்டிய அவசியமுள்ளது. அவரது இரட்டை தீர்க்கதரிசனப் பார்வைக்கும் இந்த நேச்சுரலிஸ-ஸிம்பலிஸ இருமைக்கும் தொடர்பிருப்பதை  உணர முடியும். பெரும்பான்மைக் கவிதைகள் சேஸரே பவேசேவின் பிள்ளைப்பிராய நினைவுகளை அசைபோடுகின்றன. முதிர்ச்சிக் காலத்தவை ஒரு மனிதனின் முதிர்ச்சி பற்றிய கேள்விகளை உள்ளடக்கியவை. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும்  கிராமப் புற நேச்சுரலிஸ பின்னணியில் விவரிக் கப்பட்டிருக்கின்றன.

காலத்தின் தொடர்ச்சி பற்றிய கூர்ந்த பிரக்ஞையும் அவர் கவிதைகளில் காணப்படுகின்றன. ”காலத்தின் வெளியிலாகப் பேசுவது” பற்றிய குறிப்பொன்று அவரது டயரியில் உள்ளது.

பெண்கள் குறித்தான சேஸரே பவேசேவின் அணுகு முறை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒன்று. ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட பெண்ணியவாதிக்கு அவரது அணுகல் உவப்பானதாய் இருக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் கூட அவரது நாவலான (Among Women Only) 1931ஆம் ஆண்டு எழுதப்பட்ட கவிதையான (Fallen Women)யும் பெண்ணிய பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றிய கூர்மையான மதிப்பீடுகள் கொண்ட படைப்புகள். விலைமாதர்களைப் பற்றி அவர் எழுதிய கவிதைகள் (Deola’s Thinking, Deola’s Return) சுவைக்கேடு மிக்கவை என சில விமர்சகர்களால் அன்றைய காலகட்டத்தில் கருதப்பட்டவை. சேஸரே பவேசேவின் கவிதையில் இடம் பெறும் நபர்களும் சரி புனைகதை மாந்தர்களும் சரி தனிமையாகவே இருக்கின்றனர்.

அசிரத்தை

இந்த வெறுப்பு மலர்ந்திருக்கிறது வாழும் காதலைப் போல,

துக்கித்துக் கொண்டு, தள் களைப்பை கவனித்துபடி.

அது ஒரு முகத்தைத் தேடுகிறது, அது தசையைத் தேடுகிறது, ஏதோ அதுவே காதல் போல.

இந்த உலகியல் தசை மற்றும் பேசிய அந்தக் குரல்கள்

மரித்துவிட்டன, சகலமும் அஞ்சி நடுங்கி ஒதுங்கியாயிற்று,

சகல வாழ்வும் ஒரு குரலின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறது.

நாட்கள் செல்கின்றன ஒருவித சோகப் பெருமகிழ்வில்

அந்த துக்கக் குரலின் வருடலில் அது திரும்புகிறது

மற்றும் நமது முகங்களின் குருதியை வடித்தபடி.

இனிமை இல்லாமல் இல்லை

அந்தக் குரல் மனதிடம் வருகிறது களைத்துப் போய்

நடுக்கத்துடன். ஒரு முறை எனக்காய் நடுங்கிற்றது.

ஆனால் தசை நடுங்குவதில்லை. காதல் மாத்திரமே

அதை ஒளிப்படுத்த முடியும்,

இந்த வெறுப்பு அதைத் தேடிப்பிடிக்கிறது.

உலகின் உடமை அனைத்தும், தசைகள் யாவும், குரல்கள் யாவும்

அவ்வுடல் மற்றும் கண்களின் எரிக்கும் அணைப்புக்கு இணையாக முடியாது. அந்தக் கசந்த பெருமகிழ்வில்

அது தன்னையே மாய்க்கிறது,

இவ்வெறுப்பு இன்னும் கூட கண்டுபிடிக்கிறது

ஒவ்வொரு நாளும் ஒரு பார்வையை,

ஒரு உடைந்த வார்த்தையை.

பிறகு அவற்றைப் பற்றிக் கொள்கிறது,

பசியுடன், காதலைப் போல.

இரவு சந்தோஷங்கள்

நாங்களும் கூட இரவினை முகர்வதற்கு நிற்கிறோம்

காற்று மிகவும் மோசமாக இருக்கையில். சாலைகள்

காற்றால் ஜில்லிட்டிருக்க, ஒவ்வொரு வாசனையும் உலர்ந்து விட்டது.

எங்கள் நாசிகள் மினுங்கும் வெளிச்சத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளன.

இருளில் காத்திருக்கும் ஒரு வீடு நம் அனைவருக்கும் உண்டு திரும்புவதற்கு. இருட்டில் ஒரு பெண் நமக்காகக் காத்திருக்கிறாள் படுத்துறங்கியபடி வாசனைகளால் அறை வெதுவெதுக்கிறது.

உறங்கியபடி ஸ்வாசித்துக்கொண்டிருக்கும் பெண் காற்றினைப் பற்றி ஏதும் அறிந்திலாள், அவள் உடலின் கதகதப்பு நமக்குள் முணுமுணுக்கும் குருதியை ஒத்ததே.

காற்று நம்மைக் கழுவுகிறது, இருளில் திறந்தபடி கிடக்கும் சாலைகளின் ஆழத்திலிருந்து வருகிறது அது.

மினுங்கும் வெளிச்சங்கள் மற்றும்

நமது விடைத்த நாசிகள் ஒன்றையொன்று

நேராக எதிர்கொள்கின்றன.

ஒவ்வொரு வாசனையும் ஒரு ஞாபகம்.

அப்பால் இருளிலிருந்து காற்று நகரில் கிடக்கும் ஏதொன்றையும் இடம் மாற்றுகிறது.

கீழே வயல்கள் மற்றும் மலைகள்

அங்கே சூரியனால் எரிக்கப்பட்ட புல் மாத்திரமே உண்டு.

மற்றும் ஓதத்தால் கறுத்துப் போன மண்.

நம் ஞாபகம் ஒரு கசந்த சுவை, பிளக்கப்பட்ட பூமியால் குளிர்காலத்தில் வெளியேற்றப்படும் ஒரு சிறு இனிமை

கீழிருந்து வரும் ஒரு மூச்சு.

எல்லா வாசனையும் உலர்ந்து விட்டது இருளில்

மற்றும் நகரினுள் காற்று மாத்திரமே நம்மை அடைய முடியும்.

இன்றிரவு நாம் திரும்பிச் செல்வோம்  உறங்கும் அந்தப் பெண்ணிடம்

சில்லிடும் விரல்களால் அவளின் உடலை ஆராய்ந்தபடி,

மேலும் வெப்பம் நமது குருதியை உலுக்கும்.

பூமியின் வெப்பம்

ஓதத்தால் கறுப்பாக்கப்பட்டு வாழ்வின் ஒரு மூச்சு.

அவளும் கூட சூரியனால் வெதுவெதுப்பாக்கப்பட்டிருக்கிறாள்

மேலும் இப்போது அவளது நிர்வாணத்தில்

அவளின் உச்ச இனிமை வாழ்வு

பகலில் அது மறைந்து விடுகிறது,

அது மண் ருசியுடன் இருக்கிறது.

சந்திப்பு

அந்தக் கடினமான மலைகள் என் உடலை உருவாக்கின

அவை அதை பலவிதமான ஞாபகங்களினால் உலுக்குகின்றன, தந்தன எனக்கு

அந்தப் பெண்ணின் அற்புதத்தினை நான் சிருஷ்டிக்கிறேன் எனபதை அவள்

அறியாள், ஆனால் நான் அவளைப் புரிந்து கொள்ளவில்லை.

ஒரு நாள் மாலை அவளை நான் சந்தித்தேன்.

இரு அர்த்தம் கொண்ட நட்ஷத்திரங்களின் கீழே

அவள் ஒரு லேசான வடிவம்,

கோடையின் பனிப்படலத்தில்.

சுற்றிலுமாக இந்த மலைகளின் முணுமுணுப்பு,

நிழலை விட ஆழமாக,

ஒரே நேரத்தில் அந்த மலைகளிலிருந்து வருவது போல ஒரு ஓசை,

ஒரு குரல் ஒரே சமயம் தெளிவாகவும்  கடூரமாகவும்,

இழந்து போன காலங்களிலிருந்து வந்த ஒரு குரல்.

சில சமயங்களில் நான் காண்கிறேன் அவளை,

மேலும் அவள் என் முன்னே வாழ்கிறாள்

தெள்ளத் தெளிவாக, மாறுதலேயில்லாது,

ஒரு ஞாபகத்தைப் போல.

அவளை எப்போதும் என்னால் மறக்க முடிந்ததில்லை. அவளின் நிஜம்

எப்பொழுதுமே என்னிடமிருந்து நழுவுகிறது.

என்னை வெகு தொலைவிற்குக் கொண்டு செல்கிறது.

அவள் அழகானவளா என்று எனக்குத் தெரியாது. பெண்களுக்கிடையில் அவள் இளையவள்.

அவள் பற்றிய சிந்தனை ஒரு தூரத்து ஞாபகத்தினை நினைவு கூர்கிறது

மலைகளுக்கு இடையே வாழப்பட்ட குழந்தைப்பிராயம்,

அவள் அவ்வளவு இளையவள். அவள் விடியலைப் போலிருக்கிறாள்.

தொலைவான காலைகளின் எல்லா தூரத்து வானங்களும்

அவள் கண்களிலிருந்து எனக்கு அழைப்பு விடுக்கின்றன.

அந்தக் கண்கள் ஒரு தெளிவு கூடிய ஒளியை வெளிப்படுத்துகின்றன

இந்த மலைகளின் மீது விடியல் வெளிப்படுத்தியதை விட.

எனக்கு அத்யந்தமான இந்த விஷயங்களின் ஆழங்களிலிருந்து அவளை உருவாக்கினேன்,

நான் புரிந்து கொள்ளாத ஏதோ ஒன்றாகவே அவள் இருக்கிறாள்.

டி.க்கான இரு கவிதைகள்

ஏரி மருங்கின் மரங்கள் கண்டன

உன்னை ஒரு காலைப் போதில்

கூழாங்கற்கள் ஆடுகள் வியர்வை

எல்லாம் காலத்தின் வெளியில்,

ஏரியின் நீரைப் போல்.

நாட்களின் துக்கமும் குமுறலும்

ஏரியை அசங்குவதில்லை.

காலைப் போதுகள் கடந்து விடும்

துயரம் மறைந்து விடும்,

பிற கற்கள் வியர்வை

உன் குருதியுள் கடிக்கின்றன-

இவை நீடிக்கா மாட்டா.

நீ மீண்டும் எதையாவது கண்டுபிடிப்பாய்,

காலையொன்று வரும்

அப்போது குமுறலுக்கப்பால்

நீ தன்னந்தனியாய் ஏரி மீதிருப்பாய்

நீ காதலும் தான்

பிறரைப் போலவே குருதியாலும் மண்ணாலும்

ஆகியிருக்கிறாய்

வீட்டின் வாசலைக் கடக்காத யாரோ ஒருவரைப் போல

நீ நடக்கிறாய்

நீ காத்திருப்பது போல பார்க்கிறாய்

ஆனால் பார்ப்பதில்லை

துக்கித்து பேச்சற்றிருக்கும் பூமிதான் நீ

நொதித்தல் சோர்வு நீ அறிவாய்

உன்னிடம் சொற்களுண்டு–நீ நடக்கிறாய்

மற்றும் காத்திருக்கிறாய்.

காதல்தான் உன் குருதி–வேறெதுவுமல்ல.

வேசிப் பெண்கள்

அவர்களை அப்படி நடத்துவது சரியே.

நிச்சயமாக அவர்களுக்காகப் பரிதாபப்பட்டு

பின் படுக்கைக்கு அழைத்துச் செல்வதை விட.

”அது நம் வாழ்வனைத்திலும் மிக வலுவான தேவை”-

ஆனால் சொல்லுங்கள் பதிலாய் ”நாம் இதில் தீர்த்தொதுக்கப்பட்டுள்ளோம்

ஆயினும் தொழிலில் அந்தப் பெண் நுழைந்தால் நான் கடுங்கோபத்தால் தொண்டை அடைத்துப் போவேன் அல்லது வஞ்சந்தீர்ப்பேன்”

கருணை எப்போதும் கால வீணடிப்பு,

வாழ்க்கை பெரியது, கருணை அதை மாற்றாது,

மௌனத்தில் உங்கள் பற்களை நரநரத்துக் கடிப்பது மேல்.

ஒரு மாலைப்போதில்

பயணம் செய்தேன் ரெயிலொன்றில்

அதில் அமர்ந்திருந்தாள்

அந்த யுவதி, கௌரவமாய் உடையணிந்து, மேக்கப் செய்து,

முகத்தில் ஒரு தீவிர பார்வையுடன்.

வெளியில், வெளிர் விளக்குகளும் சாம்பல்-பச்சை பூமியும்

உலகினை தேய்த்தழித்தன. நாங்கள் தனித்திருந்தோம்

மூன்றாம் வகுப்புப் பெட்டியில், நானும் அந்தப் பெண்ணும்,

நான் இளையவனாய்.

அந்த பிராயத்தில் எப்படிப் பேசுவதென எனக்குத் தெரியவில்லை

மேலும் நானழுதேன் பெண்களைப் பற்றி எண்ணும் போது. இவ்வாறு நான்

பயணம் செய்தேன், கவனமாய் படபடப்புடன்,

மேலும் அவள்

சிலநேரம் என்னைப் பார்த்தாள் புகைத்தாள். நான் பேசவில்லை,

நிச்சயமாய் நான் எண்ணவில்லை, ஆனால் என் குருதியில்

இன்னும் உணர்கிறேன் அந்த ஊடுருவும் பார்வையை,

கடுமையாய் உழைத்து வாழ்க்கையை அது கிடைத்தவாறு ஏற்ற

யாரோ ஒருவரின் ஒரு கண நகைப்பை.

ஒரு நண்பன், சொல்ல ஏதாவது வைத்திருக்கும் ஒருவன்,

ஒரு பெண்ணைக் காப்பாற்ற விரும்புவான், அவள் கண்ணீரைத் துடைத்து,

சந்தோஷப் படுத்துவான்.

”இல்லை, நம் வாழ்நாள் அனைத்திலும் அது வலுவான தேவை

கடின இதயம்தான் நம் ஒரே வலிமை என்றால்

மேலும் பயனற்றது எனின், நாம் நாசமாய்ப் போவோம்”.

நீங்கள் ஆயிரக்கணக்கில் பெண்களைக் காப்பாற்ற இயலும்,

ஆனால் நான் பார்த்த

புகைக்கும் அந்த எல்லோரும், தற்பெருமை கொண்ட பார்வை அல்லது சலித்த புன்னகை–

என் நல்ல நண்பர்கள்–எப்போதும் இருப்பார்கள்

மௌனமாய் துன்பப்பட்டு எல்லோருக்காகவும் கடன்தீர்ப்பார்கள்

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு-

காலையிலிருந்து இரவுவரை நம்முடனிருக்கும் மரணம், உறக்கமற்று,

மூடத்தனமான தீயொழுக்கம் அல்லது

பழைய கழிவிரக்கத்தைப் போலோ. உன் கண்கள்

ஒரு வெற்றுச் சொல்லாகும்,

அமுக்கப்பட்ட ஒரு கதறலாகும்.

இப்படி ஒவ்வொரு நாள் காலையிலும்

நீ பார்க்கிறாய், நிலைக் கண்ணாடி மீது நீ சாய்கையில்.

போற்றிப் பேணிய நம்பிக்கையே,

அந்த நாளில் நாமும் கூட அறிவோம்

நீயேதான் வாழ்வும் வெறுமையும் என்பதை.

ஒவ்வொருவருக்கும் ஒரு தோற்றம் தருகிறது மரணம்.

மரணம் வரும், உன் கண்களைக் கொண்டு.

அது தீயொழுக்கத்தை நிறுத்துவது போலிருக்கும்,

கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பும்

ஒரு மரண முகத்தை கண்ணுறுவது போலிருக்கும்,

மூடிய உதடுகள் பேசுவது போலிருக்கும்.

நாம் மௌனத்தில் இறங்குவோம்.

0161

Posted in translated Poems | Tagged: , , , , , | Comments Off

அமி லோவல்/கவிதை உருவாக்கும் முறை

Posted by brammarajan on January 5, 2009

amy_lowellஅமி லோவல் (1874-1925)

1914-ல் எஸ்ரா பவுண்டினால் துவங்கப்பட்ட படிம இயக்கம் (Imagist Movement)கவிதையில் சாதாரண மொழியின் பயன்பாட் டையும் புதிய ஓசைமைகளையும் துல்லியமான படிமங்களை யும் வலியுறுத்தியது.

அமி லோவல் (1874-1925) என்ற பெண் கவிஞர் அமெரிக்க இமேஜிஸ்ட்டுகளில் மிக முதன்மையானவர். கவிஞர் என்பதை விடவும் அமெரிக்க கவிதை இயக்கத்தின் நடைமுறையாள ராகவே பிரபலமாக அறியப்பட்டிருக்கிறார். இவர் அமெரிக்கக் கவிதை இயக்கத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பு, மிக பரந்து பட்டதாகவும் குறிப்பிடத்தகுந்ததாகவும் இருந்தது. எஸ்ரா பவுண்டின் கோபத்திற்கு உள்ளாகி இவ்வியக்கம் Amygists களின் இயக்கம் என்று பவுண்டால் பரிகாசத்துடன் அழைக்கப்பட் டது. ஏனென்றால் இமேஜிஸ இயக்கத்தின் தேக்கத்தையும் எல்லைப்பாடுகளையும் ஏற்கனவே உணர்ந்தறிந்துவிட்ட பவுண்ட் வோர்ட்டிஸிஸம் என்ற இயக்கம் மிகுந்த படிமக் கவிதையை நோக்கிச் சென்றுவிட்டார். அமிலோவல் எழுதிய புத்தகங்களில் முக்கியமானவை Tendencies in Modern American Poetry மற்றும் Poetry of John Keats.

கவிதை உருவாக்கும் முறை

தமிழில் பிரம்மராஜன்

கவிதைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது என் உள்ளுணர்வு பூர்வமான பதில் ஒரு தட்டையான ‘‘எனக்குத் தெரியாது” என்பதுதான். அவை எவ்வாறு உருவாகின்றன என்று சிறிதும் தெரியாதிருப்பினும் அதே போல் மற்றவர்களின் கவிதை உருவாக்கம் பற்றித் தெரியாத போதிலும், என்னைக் கேட்கப்பட்ட கேள்வி முழுவதும் என் கவிதைகள் சம்மந்தப்பட்டது என்றாலும் அவை எந்த வேறுபாட்டினையும் ஏற்படுத்துவதில்லை. அதைப் பற்றி எனக்குத் தெரிந்திருப்பது, தெரிந்து கொள்ளப்பட வேண்டியதின் ஒரு மில்லியன் பகுதியில் ஒரு பகுதிதான். என் பிரக்ஞைநிலையைத் தொடும்பொழுதுதான் நான் கவிதைகளைச் சந்திக்கிறேன். அது அதற்குள்ளாக அதன் பரிணாமப் பாதையில் வேண்டிய தூரம் வந்துவிட்டிருக்கும்.

திருவாளர் க்ரேவ்ஸ் கூறுவது போல கவிதை எதிரிடையான கருத்தாக்கங்களின் ஒருங்கிணைப்பு என்றாலும், உணர்ச்சிகளின் உறுத்தல்களுக்கும் Tensionக்கும் வடிகால் தருவதாய் ஏற்படும் விளைவு என்று Sara Teasdaleகூறியபோதிலும், பகற்கனவின் எல்லைக் கோட்டினைத் தொடும் ஒரு மனோவியல் நிலைக்கு நம்மை உட்படுத்துதல் என்று (பேராசிரியர் ப்ரெஸ்காட்) ஒரு முழு புத்தகமே எழுதி நிரூபித்த போதிலும் இறுதியான வரையறை தருவதற்கு யாராலும் இயலாது. தன்னம்பிக்கையு டன் என்னுடைய அனுபவங்களிலிருந்து அழுத்தமாக நான் கூறுவதெல்லாம், கவிதை ஒரு பகற்கனவு அல்ல என்பதே–மாறாக மிகவும் வித்தியாசமான, தனக்கே உரித்தான ஒரு மனோவியல் நிலை.

உண்மை என்னவென்றால் ஒரு மர்மம் இங்கு இருக்கிறது. கவிஞன் அளவுக்கு இதைப்பற்றி பிரக்ஞை எவருக்கும் இருக்க முடியாது. கவிஞன் ஒரு ரேடியோ ஏரியலைப் போன்றவன் என்பதை உடனே நாம் ஒப்புக்கொள்வோம்-ஒருவித அலைவரிசைகளில் செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறது. ஆனால் அவன் ஏரியல் என்பதற்கும் மேற்பட்டவன். இது ஏனெனின் இந்தச் செய்திகளை அந்த வார்த்தைகளின் அமைவுகள் என நாம் கூறும் கவிதைகளாக  மாற்றும் சக்தி படைத்தவனாகவும் கவிஞன் இருக்கிறான்.

ஒரு கவிஞனைப் பற்றிய அறிவியல் ரீதியான வரையறையை ஏறத்தாழ நாம் இவ்வாறு கூறலாம் என்று நினைக்கிறேன்: அதீதமான உணர்வுமிக்க ஒரு மனிதன், இயக்க பூர்வமான அடிமன ஆளுமை உடையவன், எதிர்ப்பற்ற பிரக்ஞையால் போஷிக்கப்பட்டும் அதற்கு உயிரளித்தபடியும் இருப்பவன். கவிஞர்களிடையே ஒரு பொதுவான சொல் வழக்கு உண்டு. ‘‘அது என்னிடம் வந்தது” என்பார்கள். இந்தப் சொற்பிரயோகம் சீரழிக்கப்பட்டுவிட்டதால் ஒருவர் கவனத்துடன் இதைத் தவிர்க்க முயல்கிறார். ஆனால் நிஜத்தில் ஒரு கவிதையின் பிரக்ஞைபூர்வமான வரவினைப் பற்றி எனக்குத் தெரிந்ததில் இதுதான் மிகச்சிறந்த விளக்கம்.

சிலசமயங்களில் ஒரு கவிதை உருவாக்கிய புறவயத் தூண்டுதல் தெரியும் அல்லது கண்டுபிடிக்கலாம். இரு ஒரு காட்சியாகவோ, அது ஒரு சப்தமாகவோ, ஒரு சிந்தனையாகவோ அல்லது ஒரு உணர்ச்சியாகவோ இருக்கலாம். தொடக்கத் தூண்டுதலைப் பற்றி சில நேரங்களில் நினைவு மனத்திற்கு ஒரு பிரக்ஞையும் இருக்காது. இந்தத் தூண்டுதல் மறக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஆழ்ந்த அறிந்து உணரப்பட்டிராத நினைவுகளிலி ருந்து எழலாம். இது என்னவாக இருந்தபோதிலும், உணர்ச்சி அறியப்பட்டிருந்தாலும், மறைக்கப்பட்டிருந்தாலும், இது அதன் ஒரு பகுதி. ஏனெனில் உணர்ச்சி மட்டுமே அடிமனதைச் செயலுக்குத் தூண்டுவது. எவ்வளவு கவனமாகவும், கச்சிதமா கவும் அடிமனம் இயங்குகிறது என்பதற்கு நானே என் எழுத்துக் களில் ஒரு காட்சியாக இருந்திருக்கிறேன். எந்த வெளிப்படை யான காரணத்துக்காகவுமின்றி ஒரு கருத்தாக்கம் என் சிந்தனைக்குள் வரும். எடுத்துக்காட்டாக The Bronze Horsesகுதிரைகளை ஒரு கவிதைக்கான விஷயமாக நான் மனதில் புரிந்து கொண்டேன். அவற்றை அவ்வாறு பதிவு செய்த பின்னர் இந்த விஷயம் பற்றி வேறு எதையும் நான் பிரக்ஞைபூர்வமாகச் சிந்திக்கவில்லை.  ஆனால் உண்மையில் நான் செய்தது என்னவென்றால் என் கருப்பொருளை ஆழ்மனத்திற்குள் போட்டு வைத்து விட்டதுதான்-தபால் பெட்டியில் ஒருவர் கடிதத்தைப் போடுவது போல. ஆறுமாதங்களுக்குப் பிறகு, அந்தக் கவிதையின் சொற்கள் என் மண்டைக்குள் வர ஆரம்பித்தன-அந்தக் கவிதை என் தனிப்பட்ட சொற்களைப் பயன்படுத்துவோமானால் ‘‘அங்கே இருந்தது”.

சில கவிஞர்கள் ஒரு குரல் அவர்களுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். மேலும் அக்குரல் உச்சரிக்கும் வார்த்தைகளை அப்படியே எழுதுவதாகவும் கூறுகிறார்கள். இந்த முறை என்னுடையதிலிருந்து வேறுபடுவதாலோ அல்லது என் ஆரம்பகால அறிவியல் பயிற்சியின் காரணமாகவோ எனக்குத் தெரியவில்லை-எது குறைவான காட்சிபூர்வமான வார்த்தை களை பயன்படுத்துவதற்குக் காரணம் என- நான் குரல் எதையும் கேட்பதில்லை, ஆனால் வார்த்தைகள் உச்சரிக்கப்படுவதைக் கேட்கிறேன். உச்சரிப்பு மட்டுமே சப்தமற்றது. ஆனால் யாராலும் பேசப்படாமல் அவ்வார்த்தைகள் என் மண்டைக்குள் உச்சரிக்கப்படுகின்றன. இந்த விளைவு எனக்குப் பரிச்சயமான ஒன்று. ஏனென்றால் என் மனதிற்குள் நான் படிக்கும் பொழுது கூட நான் எப்போதும் வார்த்தைகளைக் கேட்கிறேன். கொஞ்சம் அதிகமாக நான் எழுதும் நேரத்தில் (இது அவசியமில்லை என்றாலும் கூட) எழுதும்போதும், பலசமயம் நான் எழுதியதை உரக்கப் படிப்பதற்கு நிறுத்தும் போதும். அவ்வளவு தெளிவாய் வார்த்தைகள் என் மண்டைக்குள் ஒலிக்கின்றன.

எனினும் இந்த ஆழ்மனம், மிகவும் தன் இஷ்டப்படி நடந்து கொள்ளும் ஒரு கூட்டாளி. நிறைய சமயங்களில் அது  தீவிரமான சூழ்நிலையில் வேலை நிறுத்தம் செய்யும். அதற்குப் பின் எந்த ஒரு சொல்லையும் அதனிடமிருந்து பெறுவதற்கு இயலாது. இங்குதான் கவிஞனின் பிரக்ஞைபூர்வமான பயிற்சி தேவையாகிறது. காரணம் ஆழ்மனம் விட்டுவிட்ட விஷயங்களை அவன் நிரப்ப வேண்டும். மற்ற வார்த்தைகளின் தன்மைக்கு ஒத்தவாறு, முடிந்தவரை நிரப்பவேண்டும். ஒவ்வொரு நீண்ட கவிதையும் இம்மாதிரியான இடைவெளிகளால் தெளிக்கப்பட்டிருக்கும். இந்தக் காரணத்தினால்தான் பெரும்பாலான கவிதைகள் எண்ணற்ற திருத்தங்களுக்கு உள்ளாகின்றன. சில நேரங்களில் இந்த கள்ளத்தனமான ஆழ்மனக் கூட்டாளி சிரமம்படும் கவிஞன் மீது கருணை கொண்டு அவனின் உதவிக்குத் திரும்பும். அந்தக் குறிப்பிட்ட பகுதியுடன் பல சமயங்களில் மீண்டும் எந்தத் தொடர்பும் இருக்காது அதற்கு. இக்காரணத்தினால்தான் ஒரு கவிஞன் என்பவன் பிறக்கவும், உருவாக்கப்படவும் வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவனுக்காக எப்போதும் உழைக்கக்கூடிய ஒரு ஆழ்மனத் தொழிற்சாலையுடன் அவன் பிறக்க வேண்டும். இல்லையென்றால் அவன் என்றும் கவிஞனாக முடியாது. திருவாளர் க்ரேவ்ஸின் வெளிப்பாட்டு முறையைப் பயன்படுத்தினால்-அவனின் ஓட்டைகளை மெழுகி அடைக்க அறிவும் திறமையும் வேண்டிய அளவுக்கு இருக்க வேண்டும். இந்த (மெழுகி) அடைக்கும் முறையை யாரும் தாழ்வாக மதிப்பிட்டுவிட வேண்டாம். நல்ல கவிதையில் ஒரு நிலை இது. கடந்த 25 ஆண்டுகளாக என் கைகளுக்கு எட்டிய பல பெரும் கவிஞர்களின் முதல் கையெழுத்துப் பிரதிகளில் நான் ஒன்றிலும் ‘‘மெழுகி அடைத்தல்” பங்கினை பார்க்காமல் இல்லை. இதில் மிகவும் அடித்து எழுதப்பட்டிருந்தது கீட்ஸின் The Eve of St.Agnes.

நீண்ட கவிதைகள் ஆழ்மனதில் உருவாக மாதங்கள் ஆகும். சிறிய கவிதைகளைப் பொறுத்தவரை ஆழ்மனதில் கருக் கொள்ளும் காலம் ஒரு நாளாகவோ, ஒரு கணமாகவோ இருக்கலாம். திடீரென்று சில சொற்கள் அங்கே இருக்கும்  ஒரு வித ராஜரீகமான வற்புறுத்தலுடன் அவை எந்த தாமதத்தையும் பொறுக்காது. அவை உடனடியாக எழுதப்பட வேண்டும் இல்லையென்றால் ஒரு தீவிரமான துன்புறுதல் நேரும்–ஒரு உடல்ரீதியான வலி அளவுக்கு இது இருக்கும். கவிதைக்கு வழி கொடுத்தால் ஒழிய இந்த வலியிலிருந்து நிவாரணம் கிடைக்காது. கவிதைகள் வரும் காலத்தில் நான் அவற்றை நிராகரிப்பது கிடையாது. நான் என்ன செய்து கொண்டிருந்தாலும், நான் என்ன எழுதிக் கொண்டிருந்தாலும் அவற்றை விலக்கி வைத்துவிட்டு கவிதையின் வரவை நான் கவனிக்கிறேன். என்னுடைய இயல்பின் காரணமாக, நான் நண்பர்களுடன் இருக்கும்போதோ, வீட்டுக்கு வெளியில் உள்ளபோதோ கவிதைகள் வருவதில்லை. ஆனால் தனியாக இருக்கும்போது, நான் பார்த்த, அல்லது செய்த ஏதோ ஒன்றின் தொடர்பான கருத்தாக்கம்–வெளியில் இருந்த பொழுது தன்னை அறிவித்துக் கொள்ளும்–ஏதோ நான் மோனத்திலும், ஏற்புத்தகுதியுடனும் இருக்கும் காலத்திற்காகக் காத்திருந்தது போல்.

என் மண்டைக்குள் நான் உருவாக்குவது குறைவு. ஒரு கவிதையின் வருகை பற்றிய பிரக்ஞையை நான் அடையும்போது நான் செய்யும் முதல் காரியம் பேப்பரையும் பென்சிலையும் தேடிப் போவதுதான். ஒரு துண்டு வெள்ளைத் தாளை வெறுமனே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததே ஆழ்மனம் பற்றிய பிரக்ஞைக்கு ஹிப்நாட்டைஸ் செய்து விடுவதுபோலத் தோன்றுகிறது. அதே காரணத்துக்காக, நான் நடந்து கொண்டிருக்கும்போதோ, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சமயத்திலோ கவிதைகளைத் திருத்தம் செய்வதில்லை. இதற்குத் தேவைப்படும் கூர்ந்த கவனம் ஒரு தியானத்தின் தன்மையதாய் இருக்கிறது. (இதற்கு இந்த வார்த்தை சற்று அதிகபட்சமானது என்றாலும் கூட) இந்தக் கூர்ந்த கவனம் (அ)தியானம் நான் எங்கே போகிறேன் அல்லது எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்பது பற்றிய அக்கறைகளால் சிதைக்கப்படுகிறது.

இந்த அரைத்தியான நிலை நாம் சிறிய கவிதைகளைப் பற்றிச் சிந்திக்கும்பொழுது ஆச்சரியப்படுத்துவதில்லை. விநோதம் என்னவெனில் இந்தத் தியானம் போன்ற நிலை நீண்ட கவிதைகளைப் பொறுத்தவரை, குறுக்கீடுகளுக்கு மேலாகத் தாக்குப் பிடிக்கக் கூடியது.  பல நாட்கள் அல்லது வாரங்கள் எழுதத் தேவைப்படும் அளவுக்கு ஒரு கவிதை நீளமாக இருக்கும் போது, அதைத் தொடர உட்காரும் ஒரு செயலே அதற்குத் தேவையான மனநிலையை உருவாக்குகிறது- இந்நிலை (நான் குறிப்பிட்ட இடைவெளிகள் தவிர) கவிதையின் திருத்தங்கள் வரை தாங்குகிறது.

அதற்கு மாறாக, ஆழ்மனநிலை மட்டும் தயாராக இல்லை என்றால் எந்த சக்தியாலும் அந்த நிலையை உருவாக்க முடியாது. எனவே சிருஷ்டி இல்லாத காலங்கள் எல்லாக் கவிஞர்களுக்கும் இருப்பது சகஜம்தான்.

கவிஞனால் முடிந்த எல்லாவற்றையும் அவன் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். எந்த துறையும் அவனுக்கு  அந்நியமானதல்ல. எந்தத் திசையிலும் அவன் அறிவு ஆழமானதாக இருந்தால், அவனுடைய கவிதைக்கும் நல்ல ஆழமிருக்கும். புதிய மற்றும் பழைய கவிதை வடிவங்களில் அவனுக்கு முழுமையான, அடிப்படையான பரிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் தீர்மானமாக என் நம்பிக்கை என்னவென்றால் பாரம்பரியத்திற்கு அவன் தன் உள்ளுணர்வின் சுயத்திற்கு மேலாக மரியாதை தரக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய சுயநேர்மை பற்றி உறுதியாக இருக்க வேண்டும். பொது அங்கீகரிப்புகளுக்கு அவன் தலை பணியக்கூடாது-எவ்வளவு கவர்ச்சிகரமான வையாக அவை இருந்தபோதிலும். அதன் பின் அவனின் ஆழ்மனம் எதை உணர்த்துகிறதோ அதை அவன் சகல தைர்யத்துடன் எழுதட்டும்.

0161


Posted in translation-Essay | Comments Off