அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின்- கான்சர் வார்டு

அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின்- கான்சர் வார்டு
ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு தொடங்கிய ‘‘சோஷலிச கட்டுமான” காலத்தின் போது கம்யூனிசத்தின் எதிரிகள் எனப் பெயரிடப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களில் சாதாரன ஜனங்களுடன் புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இருந்தனர். எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்டது ஸ்டாலின் காலத்தில்தான். நவீன ரஷ்யாவின் மிகச் சிறந்த முதிய கவிஞரான ஓசிப் மெண்டல்ஷ்டாம் [1891-1938] சிறை முகாம் ஒன்றிற்கு செல்லம் வழியில் சைபீரியாவில் இறந்து போனார். டாக்டர் ஷிவாகோ நாவலுக்கு நோபல் பரிசு தரப்பட்ட பொழுது பரிசினைப் பெற்று வர போரிஸ் பாஸ்டர்நாக் (1890-1960) அனுமதிக்கப் படவில்லை. கவிதைக்காக நோபல் பரிசு பெற்ற ஜோசப் ப்ராட்ஸ்கி ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு ‘‘சமுதாய ஒட்டுண்ணி” என்று பட்டம் தரப்பட்டு சிறை முகாம்களில் கீழ்மையான வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டார். இதே வரிசையில் தான்அலெக்ஸாண்டர் சோல்செனிட்ஸின் வருகிறார். சோல்செனிட்ஸினுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போதும் அதனை ஏற்க ரஷ்ய அரசு அனுமதி மறுத்து விட்டது. இருந்தாலும் ‘‘அதிகாரத்திற்கு” எதிராக ‘‘எழுத்து” எப்போதும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
ரஷ்ய நவீனத்துவமானது இசை, ஓவியம், பாலே நடனம், சினிமா ஆகிய துறைகளில் தடம் பதித்தது. இலக்கிய நவீனத்துவத்தில், குறிப்பாக நாவலில் பின் தங்கிவிட்டது. இசை-சினிமா ஆகிய துறைகள் சர்வதேச மொழியைப் பயன்படுத்துகின்றன. இசைத்துறையில் Stravinsky யும், ஓவியத்தில் Kandinsky யும் சினிமாவில் Eisensteinவும் சர்வதேச அளவில் தெரியவந்ததற்குக் காரணம் இத்துறைகள் அரசுத் தணிக்கையிலிருந்து தப்பிவிட்டதுதான். நவீன ரஷ்ய இலக்கியத்தின் மேல் நல்ல அபிப்ராயம் கொள்வதற்கான குறைந்த பட்ச நூல்களே கூட வெளியில் தெரியாமல் நின்று போய் விட்டன்.
1880களின் போது ரஷ்ய நாவலின் பொற்காலம் முடிந்து விட்டது. அதாவது நாவல் துறையின் விற்பன்னர்களான Gogol, Dostyovesky, Turgenev, Gonchorov, Tolstoyஆகியோர் எழுதுவதை நிறுத்து விட்டனர். அல்லது மௌனமாகி விட்டனர். இவர்களுக்கு அப்புறம் Chekov மாத்திரம் எழுதிக் கொண்டிருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷய எழுத்தாளன் நேரடியாகவும் தனது எழுத்து அனுபவத்திற்கு விசுவாசமாகவும் எழுதினான். இருபதாம் நூற்றாண்டு ரஷ்ய எழுத்தாளன் தந்திரமாகவும், நுணுக்கமாகவும், பூடகமாகவும் எழுத வேண்டியதாயிற்று. தண்டனைக்கும், தணிக்கைக்கும் ஆட்பட வேண்டியிருந்தது. நவீனத்துவத்தை(Modernism), சோவியத் அதிகாரவர்க்கம் சோஷலிச யதார்த்தத்தின்(Socialist Realism) அபாயகரமான எதிரியாகக் கருதியது. 1920களில் Acmeism, Futruism, Symbolism என்று விரிவு பெற்ற போதிலும் 1930 களில் அதன் முழுச்சக்தி தீருமுன்பே உறைந்து போயிற்று. போரிஸ் பாஸ்டர்நாக் The Child of Lurers (1915) என்ற நவீனத்துவ விவரணையை நவீனத்துவ விவரணைகளுடன் எழுதினாலும் டாக்டர் ஷிவாகோவை, எழுதும் போது ரியலிஸத்திறகுத் திரும்பி விட்டார். சோல்சேனிட்ஸின் படைப்பகள் ரியலிஸத்தைத் தொட்டு அதைப் புதுப்பிக்கின்றன.
அலெக்ஸாண்டர் சோல்செனிட்ஸின் 1918ஆம் ஆண்டு Rostov -on- Don என்ற இடத்தில் பிறந்தார். இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் பல்கலைக்கழகப்பட்டம் பெற்றார். 1941ஆம் ஆண்டு ராணுவப்பணிக்கு அழைக்கப்பட்டார். இதன் பிறகு ஒரு கடிதத்தில் ஸ்டாலின் பற்றி அவமரியாதையாக எழுதி விட்டார் என்ற காரணத்துக்காக சைபீரிய உழைப்பு முகாமுக்கு அனுப்பட்டார். 1956ஆம் ஆண்டு வரை நாடு கடத்தப்பட்டிருந்தார். 1957இல் அவருக்கு ‘‘புனர் வாழ்வு”ம் மன்னிப்பும் வழங்கப்பட்டது. 1962வரை கணிதம், இயற்பியல் துறைகளில் போதித்து வந்தார். ரஷ்ய இலக்கிய இதழான Novimir, இவரின் One Day in the life of lvan Denisovich என்ற நாவலை வெளியிட்டது. ஸ்டாலினிசத்தின் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்த குருஷ்சேவ், சோல்செனிட்ஸினை ஒரு இலக்கியக் கருவியாகப் பயன்படுத்தினார். சோல்செனிட்ஸினின் அடுத்தடுத்த நாவல்களான The First Circle, Cancer Ward, August 1914 போன்றவை ரஷ்யாவில் வெளியீட்டு அனுமதி மறுக்கப்பட்டதால் பாரிசில் வெளியிடப்பட்டன.
The First Circle [1968], பல குரல் நாவல் (Polyphonic) என்று சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மத்திய காலத்து இதாலிய கவியான தாந்தே (Dante)வின் காவியத்தில் இருந்து நாவல் தலைப்பு பெறப்பட்டுள்ளது. நரகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் குறிப்பிட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள் எரியூட்டபட்டு தண்டிக்கப்படுகின்றனர். கடைசி வட்டத்தில் உள்ளோரின் தண்டனையும் துன்பமும் அபரிமிதமாக இருக்கும். முதல் வட்டத்தில் இருப்போரின் துன்பம் குறைவானது. சில சலுகைக்காரரர்கள் மாத்திரமே இதில் இடம் பெறுகின்றனர். எழுத்தாளர்கள், கலைஞர்கள், போன்றோர், ஸ்டாலினால் தண்டிக்கப்பட்ட, ஆனால் ஓரளவுக்கு சலுகைகளைப் பெற்ற கைதிகள் சோல்செனிட்ஸின் பாத்திரங்களாக வருகின்றனர். மாவ்ரினோ சிறையின் பின்னணியில் லெவ் ரூபின் மற்றும் க்லெப் நெர்ஜின் ஆகிய இரு பாத்திரங்களின் கருத்து மோதல்களைச் சுற்றி நாவல் கட்டப்பட்டிருக்கிறது.
ஸ்டாலினிச எதிர்ப்பு நாவல்களில் கான்சர் வார்டு மிக வித்தியாசமான மதிப்பு பெறுகிறது. ஆர்தர் கெஸ்லர் (Arthur Koestler (1905-1983), Darkness at Noon),என்ற நாவலை 1940ஆம் ஆண்டு வெளியிட்டார். Serge என்பவர் The Case of Comrade Tulayeu என்ற நாவலை வெளியிட்டிருக்கிறார். போலிஷ் கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான Ceslaw Milosz மற்றும் ஆங்கிலக் கவிஞர் Stephen Spender ஆகியோர் தம் சுயசரித விவரணையில் ஸ்டாலினிசத்தை விமர்சித்திருக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் விட சோல்செனிட்சஸினின் நாவல்கள் கலாபூர்வமாகவும், நம்பகத்தன்மையுடன் இருப்பதற்குக் காரணம் அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்து ‘‘உள் ஆள் பார்வையில்” எழுதியிருப்பதுதான். கெஸ்லர் போன்றோர் ஒரு அணுகலைத் தேர்ந்தனர். இதற்கு மாறாக சோல்செனிட்ஸின் ஒரு சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்தார். இந்தச் சூழ்நிலையோ அதீதமானது.
இந்த வகையில் ஜெர்மன் நாவலாசிரியரான Thomas Mann எழுதிய The Magic Mountain க்கும் கான்சர் வார்டு க்கும் ஒப்புமைகள் உள்ளன. தாமஸ் மன்னின் நாவலிலும் கதாபாத்திரங்கள் தம் சமூகச் சூழல்களில் இருந்து பிரிக்கப்பட்டு Sanatourium த்தில் இருக்கின்றனர். கான்சர் வார்டில் உள்ள பாத்திரங்களும் அவ்வாறே தம் சமூகப் பின்னணியில் இருந்து பிரிக்கப்பட்டு வார்டில் இருக்கின்றனர்.
ஸ்டாலினிசத்தை விமர்சித்த காரணத்தால் கான்சர் வார்டு பிரபலமாயிற்று என்று சொல்வது அந்த நாவலின் உயர் அம்சங்களைப் புறக்கணிப்பதற்கு சமமாகிவிடும். தால்ஸ்தாயிக்கு அடுத்த மனிதத்தன்மை மிக்கப் பாத்திரங்கள் உலவுவது சோல்செனிட்ஸினின் நாவல்களில் தான்.1950களில் நிலவிய சோவியத் சமுதாயத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கான்சர் வார்டில் வெளிப்படுகிறது. ஸ்டாலினிச ஒடுக்கு முறையினால் நேரடி பாதிப்புக்கு ஆளானவர் என்பதால் அவர் தரும் தகவல்கள் நேர்மையானவை ஆகின்றன.
அநேகமாக நாவலின் பெரும்பான்மைப் பாத்திரங்கள் எக்சிஸ்டென்ஷியல் நிலைப்பாடுக் கொண்டிருக்கின்றனர். Efrem என்பவன் கான்சர் வார்டுக்கு வருவதற்கு முன் அவனது வாழ்நாளில் யந்திரங்களை இயக்குவதற்கான செயல்முறை பயிற்சி ஏடுகளைத் தவிர வேறு உருப்படியான எதையும் படித்ததே இல்லை. வார்டில் இருக்கும் போது டால்ஸ்டாயின் What Men Live by என்ற சிறுகதையை படிக்கிறான். நோயின், வலியின் தீவிரத்தினால் துன்புற்று, பிற நோயாளிகளை பேசி துன்புருத்திக் கொண்டிருக்கிற Efremஇன் வாழ்க்கைப் பார்வையே மாற்றமடைகிறது. அவன் இறுதியில் மானுட வாழ்வின் அபத்தத்தின் குறியீடாக மாறுகிறான். வார்டில் இருந்து வெளியேறி ரயில் நிலைய கவுண்ட்டரில் டிக்கட் வாங்கிக் கொண்டிருக்கும் போதே இறந்து போகிறான். காலில் புற்று வந்து அவதிப்படும் நிலவியல் நிபுணனான Vadim என்ற இளைஞன் தன் உடலானது ஒளியின் வேகத்தில் சாவினை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறான். வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் இந்தப் புற்று நோயாளிகளை வைத்து, மூன்றாம் நபர் பார்வையில் வாழ்வின் உன்னதங்கள் பற்றிச் சொல்கிறார் சோல்செனிட்ஸின்.
ரூசனோவ் என்பவன் வார்டுக்கு வந்து சேரும் போது நாவல் தொடங்குகிறது. மார்க்சியத்தை கொச்சையாகப் புரிந்து கொண்டு, சுயநலக் காரணங்களுக்காக அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவன் இவன். சகத் தொழிலாளிகளைக் காட்டிக்கொடுத்து பதவி உயர்வு பெறுகிறான். சோவியத் அதிகார வர்க்கத்தின் முன் மாதிரியாக, மோசமான உதாரணமாக விளங்குகிறான். நல்ல குடியிருப்பையும், மகனுக்கு வேலையையும், மகளுக்கு சௌகரியங் களையும் பெற்றுத் தர கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வளர்ந்தவன்.
நாவலின் பிரதான பாத்திரமான ஓலக் கோஸ்ட்டக்ளோட்டவ் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு பிறந்தவன். நாவலின் போது அவனுக்கு 35 வயது. ஸ்டாலின் ஆட்சிக்காலத்தின் போது ராணுவத்தில் சேர்ந்து, நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டு, பிரஜா உரிமை பரிக்கப்பட்டு நாடு கடத்தப் படுகிறான். கான்சர் பிடித்து வார்டுக்கு வருகிறான். வந்து சேர்கிற பொழுது சாவின் நுழைவாயிலில் இருக்கிறான். ஒரு பெண்ணின் டிரஸ்ஸிங் கவுனை அணிந்து, இடுப்பில் ராணுவ பெல்டினைக் கட்டிக் கொண்டு கடைத்தெருவில் அவன் தென்படுவது யாருக்குமே விநோதமாகப்படுவதில்லை. அன்றைய ரஷ்யாவின் ஆன்மீகச் சீரழிவினைத்தான் இது காட்டுகிறது.
டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே நோயின் தன்மை, குணமாதல் ஆகியவை குறித்து கனத்த முரண்பாடுகள் நிலவுகின்றன. ஓலக்கைப் பொருத்தவரை, அவன் முழுமையாகக் குணமாகி ஒரு வருடமோ என்னவோ வாழ்வினை அனுபவிப்பது சிறப்பாகத் தொன்றுகிறது. எனவே தான் அவனுக்கு அளிக்கப்படும் ஹார்மோன் சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான்.
சாலி என்கிற இன்னொரு நோயாளி, ரஷ்யப் பெண்கள் அவர்களின் சமூக பொருளாதார வேறுபாடுகள் கடந்து, எல்லோருமே செக்ஸ்க்குத் தயாராக இருக்கிறார்கள் என்கிறான். ஓலக்கும் இப்படி யோசிக்கிறான்:
‘‘உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பெண்ணும் உங்களிடம் சரணடையத் தயாராக இருக்கையில் நீங்கள் மட்டும் அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க முடியுமா?”
பெண்கள் மற்றும் பாலுறவு குறித்த மாறுபடும் கருத்துகளை வேறுவேறு பாத்திரங்கள் கொண்டிருக்கின்றனர். ஹார்மோன் சிகிச்சையின் பின்விளைவாக பெண்களுக்கு ஆண் அம்சங்களும், ஆண்களுக்கு பெண் அம்சங்களும் உடலியல் ரீதியாக ஏற்படும் என்பதைத் தெரிந்து கொள்கிறான் ஓலக். அவன் பெரிதும் நம்புகிற, அவனுக்குப் பிடித்தமான பெண் டாக்டர் வேகாவும் பின் விளைவுகள் இராது என்று கூறிவிடுகிறாள். அடுத்த வார்டின் தலைமை மருத்துவரான Lev Leonidovich இடம் சென்று சந்தேகத்தைக் கேட்கிறான். லியோனிடோவிச்சும் பின் விளைவுகள் இராது என்று பசப்பினாலும், உரையாடலின் இறுதியில் ஒப்புக்கொள்கிறார். 35வயதில் இருக்கும் ஓலக்கிற்குத் தன் புருஷார்த்தத்திற்கு குந்தகம் வந்து விடக்கூடாது என்ற எண்ணம் வருவது இயல்புதான். பெண்கள் தொடர்பான அவன் வாழ்வே இனிதான் தொடங்கவிருக்கிறது.
லியோனிடோவிச் ஓலிக்கிடம் கேட்கிறார்:
‘‘வாழ்வின் மலர்கள் என்று பெண்களைப் பற்றி நினைக்கிறாயா? உனக்குத் தெரியுமா, சிறிது காலத்திற்கு பின் அவர்கள் உனக்கு சலித்துப் போய்விடுவார்கள். . . அவர்கள் செய்வது எல்லாமே நீ செய்யும் தீவிரமான சாதனை எதையும் தடுப்பதுதான்!”
ஆண்கள் பெண்களை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தலைமை பெண் டாக்டர் Afnasyevna மூலம் தெரிவிக்கப்படுகிறது. எங்கே பயணம் செய்து கொண்டிருந்தாலும், அவளது எண்ணங்களை முற்றுகையிடுவது அவளது நோயாளிகளின் நலம்தான். என்றாலும், அவளுக்கு ஒரு வீடு, கணவன், மகன் எல்லாமே உண்டு. அவள் மாஸ்கோவுக்கு கருத்தரங்குகளில் பங்குப் பெறச் சென்று திரும்பும் ஒரு வார காலத்திற்கும் அவளது கணவனும் மகனும் சமைக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள் கழுவாமலேயே விட்டுவிடுகின்றனர். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை எனினும் அவளுக்கு வருத்தமாக இருக்கிறது. பெண்களின் வீட்டு வேலை ‘‘சலிப்பூட்டுகிற, முடிவற்ற வகையில் பிறப்பெடுத்துக்கொள்கிற வேலை” என்று கருதுகிறாள்.
இரண்டு மாத மருத்துவமனை வாசத்திற்குப் பின் தனது இருப்பிடமான Ush Terek திரும்பிச் செல்லு முன் ஒரு நாளை நகரில் கழிக்கிறான் ஓலக். பிரஜா உரிமை பரிக்கப்பட்டவன் என்பதால் நகரின் எந்த ஹோட்டலிலும் தங்க அவனுக்கு அனுமதி கிடையாது. நர்ஸ் ஸோயா, டாக்டர் வேகா இருவரும் ஓர் இரவினை தங்கள் வீட்டில் தங்கிச் செல்லுமாறு ஓலக்கிற்கு அழைப்பு விடுக்கின்றனர். ஓலக், சிறை வாசத்தின் போது, கைதிகளுக்குத் தரப்படும் ரேஷன் ரொட்டியில் கூடுதலாக ஒரு துண்டு ரொட்டியை பைன் மரக்குச்சியால் குத்தி எடையைச் சரி செய்து தருவதைப் பார்த்திருக்கிறான். அதுவும் ரேஷன் ரொட்டிதான் என்றாலும் அது வேறான துண்டு. இதைப் போலத்தான் ஓலக்கின் சிகிச்சைக்குப் பிற்பட்ட வாழ்வு இருக்கிறது. தன் புதுநாளை ஒரு தேநீர் விடுதியில் தொடங்குகிறான். விடுதியில் தேநீர் அருந்துபவர்களில் ஒரு பெண்ணைக் கூட காணமுடிவதில்லை. அப்போது ஓலக் நினைக்கிறான்:
‘‘இந்த மனிதர்கள், பெண்களை விடுத்து இப்படிக் குழுமி இருக்கிற வகையில், வாழ்வின் மிக முக்கியமான பகுதி பெண்கள் சம்பந்தப்பட்டதல்ல என்று தெரிவிக்க விரும்புகிறார்களா?”
மாலை வருமுன் நகரின் பல பகுதிகளில் சுற்றித் திரிகிறான். கான்சர் வார்டில் பழகிய டயோம்கா என்ற சிறுவனின் வேண்டுகோளுக்கிணங்க மிருகக் காட்சிச் சாலைக்குச் செல்கிறான் ஓலக். குரங்கு இல்லத்தில் குரங்கு இருப்பதில்லை. அங்கிருந்த குரங்கின் கண்களில் குரூரமான எவனோ ஒருவன் புகையிலையைத் தூவிச் சென்று விட்டதாக ஒரு அறிவிப்புப் பலகை கூறுகிறது. அர்த்தமற்ற இந்த செயலை அவன் ஏன் செய்ய வேண்டும்? பதில் இல்லை.
வேகாவின் வீட்டுக்குச் செல்லுமுன் இரு கொத்து வயலட் மலர்களை வாங்கிக் கொள்கிறான். வேகா வெளியில் சென்றிருக்கிறாள். அடுத்த வீட்டில் தலையணைகளை வெயிலில் போட்டுக் கொண்டுருக்கும் பெண்மணி ஓலக்கை விரட்டுகிறாள். Sharpnel ஆல் துளைக்கப்பட்டு ஒட்டுக் கிழிசல்களுடன் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் முரட்டுக் கம்பளிப்பை, மிகப் பழைய ஓவர் கோட், கையில் வேகாவுக்கான வயலட் மலர்கள்–அவனைப் பார்த்தால் அடுத்த வீடடுக்காரிக்கு அற்பமாகத் தோன்றியிருக்கும். வழியில் பள்ளி செல்லும் சிறு பெண்களை அழைத்து வயலட் மலர்க் கொத்துக்களைத் தந்துவிட்டு அன்றிரவே தனது பயணத்திற்காக ரயில் நிலையம் செல்கிறான் ஓலக்.
1990ஆம் ஆண்டு அவருக்கு பிரஜா உரிமை மீட்டளிக்கப்பட்டது. தன் மனைவி நதாலியாவுடன் சோல்செனிட்ஸின் ரஷ்யாவுக்குத் திரும்பினார்.மகன்கள் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டனர். ரஷ்யா திரும்பிய பிறகும் ரஷ்யாவின் ஆன்மீக வீழ்ச்சியைப் பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் சோல்செனிட்ஸின். ரஷ்யாவின் மறுமலர்ச்சிக்காகப் பாடு பட்டதற்காக விளாதிமிர் புட்டினைப் பாராட்டினார். 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி சோல்செனிட்ஸின் காலமானார்

அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின் விளாதிமிர் புட்டின் சந்திப்பு
<